
சரஸ்துதி
வெண்ணிற ஆடையுடுத்தி
வெண்பங்கயத்தில் அமர்ந்து
நீள்விழியால் நீ பரப்பிய
வெள்ளொளியால்
ஈர்க்கப்பட்டே உன்னிடம்
தஞ்சம் அடைந்த என்னை
இப்படி
அந்தகார இருளில்
உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி…
*
நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்
துலக்கமான ஒன்றைக் கண்டு
அதை நோக்கித் தவமிருந்த என்னை
துயரெனும் இருண்மைக்குள் உறைந்த
இன்னும் துலக்கமான இருளை
துழாவுவதற்காகவா விலகினாய் தேவி.
*
அன்பு அறிவு கல்வி
பரவசம் இன்பம் உவகை என
விண்ணில் பறப்பதற்கான அனைத்தையும்
உன் இருப்பால் அடைந்த நான்
இப்போது
பாதாளத்திற்குள் புதைவதற்கான
துயரையும் இருண்மையையும்
உன் இன்மையால் அடைந்தேன் தேவி.
*
உள்ளமெங்கும் அமைதியும்
புறமெல்லாம் மெல்லிசையுமாய்
நாட்கள் ஓடின நீயிருந்தபோது
நீ இல்லாத இப்பொழுதுகள்
அகத்தில் அல்லாட்டமும்
வெளியெங்கும் பேரிரைச்சலுமாய்
கணங்களாக நகர்கின்றன தேவி.
*
சகல தளவாடங்களுடன்
கோலமயில் மேல் அமர்ந்து
உலகைப் புரக்க
சட்டென நீ பறந்து விட்டாய்
நீயே கதியென்றிருந்த நானோ
சிறகுதிர்ந்த ஈசலென
செல்லும் திக்கறியாது
சிறு வட்டத்தில் சுற்றுகிறேன் தேவி.
*



