
தனிமை நினைவுகள்
இலையுதிர் காலமென ஒரு நிகழ்காலம்.
பற்றுதலின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக
உதிரத் தொடங்கி விடுகிறது.
கைவிடலின் துவர்ப்பு பழிவாங்க மனமில்லாமல்
சரிந்து கிடைக்கிறது.
எவ்வளவு நீள முடியுமோ
அவ்வளவு நீண்டு கொண்டிருந்த
அந்த வானவில்
தான் எப்படி மறையுமோ
அப்படியே மறைந்தும் கொண்டது.
ஒவ்வொரு அலையாய் கரை சேர்க்க முடியவில்லை
உந்தன் ஞாபகங்களை.
மொத்தக் காட்டையும் எரித்துவிட்டு
எந்த வனாந்தரத்தில்
நின்றுகொண்டு பற்ற வைப்பது நம் காதலை.
அர்த்தமற்று புழங்கித் திரிகிறேன்,
உன் நினைவுகளினால்தான்
நான் வாழ்கிறேன் என்பதறியாது…
*
எந்த மின்வெட்டிலும் காண முடியாத வெளிச்சம்
எந்த வானவில்லிலிருந்தும் பெயர்க்க முடியாத வண்ணம்
எந்தப் பூவிலும் நுகர முடியாத வாசம்
எவர் இருப்பிலும் உணர முடியாத அன்பு
எல்லாவற்றையும் ஒருசேரக் கூட்டமைத்திருக்கிறது
எந்த நிகழ்காலத்திலும் பொருத்த முடியாத கனவு
மீண்டும் அதைக் கொணர வேண்டியிருக்கிறது
இன்னொரு அதிகாலையில்…
*
நினைவுகள் சிறுகச் சிறுக
பனித்துளிகளைப் போல சேர்ந்து கொண்டாலும்
உருகி உருகி உடைவதில்லை எந்த வெளிச்சத்திலும்.
*



