
பிறந்த நாள்
வானம் கிழிந்து கொட்டி
இரவெல்லாம் மழை
ஜன்னல் கண்ணாடி சட்டம்
பழுதாகித் திறக்கவில்லை
அறைக்குள் என் தனிமையோடு
இன்னொன்றும் தவித்தது –
வெளியே பறக்க முடியாத
பட்டாம்பூச்சி
மழை இரைச்சல் ஊமையாக்கிவிட்டது
இரவில் கேட்கும் தூரத்து வீட்டு
புல்லாங்குழலிசையை.
தூங்கா கடிகாரம், “இன்றுதான் அவன் பிறந்தநாள்” என்றது.
சிநேகம்
ரயில் சிநேகிதி எனக்கு அவள்
தினமும் அதே பெட்டி
புத்தகங்களையும் புடவைகளையும்
அடிக்கடி மாற்றிக்கொள்வோம்
காதலில் விழுந்ததாக
காதில் சொன்னாள் ஒருநாள்
”உன் கருத்தைச் சொல்” என்றாள்
”மின்னல், இடி, பேரிடிக்கு
தயார் செய்” என்றேன், முறைத்தாள்.
மின்னல் – சிலநாள் தோன்றி மயக்கும் அவன் இதழ் நகை
இடி – நீ இசைந்த பின் ஆட்டி வைக்கும் சாட்டை.
பேரிடி – பிரிகையில் அவன் கண்கள் காட்டும் அலட்சியம் என்றேன்.
‘ஐயோ’ என்றாள்.
அப்புறமென்ன?
அவளொரு தொடர்கதைதான்.



