
அகாதம்
தோட்டம்
சமையலறைப்
படுக்கை
வாசல் மடி என்று
தேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்
திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்
அலைகளே வந்து வந்து
நிற்கின்றன
இக்கணம்
இவள் வேண்டி நிற்பதோ
அலைகளுக்கு
அப்பால் இருக்கும்
அகாதம்.
*
கைநிறைய
கற்கள் வைத்துக்கொண்டு
கடல் நோக்கி வீசுகிறாள்
வீசிய கற்களெல்லாம்
சிறகுகள் முளைக்கப் பறக்கின்றன
ஆழ்நெடிய அகாதத்தில்.
*
அடிவானம் ஓர் அகாதம் .
*
சொற்கள்
இதழ்கள் போன்றே
சொற்கள் வைத்திருக்கிறாள்
மடித்து மடித்து
பூவாக்குகிறாள்
மடிப்பின் ஒவ்வொரு திறப்பிலும்
ஒவ்வொரு வெளிச்சம்.
*
பகல் வந்து எழுப்பிப் போகிறது
இரவு தொட்டவுடன் மூடிக்கொள்ளும் இலைகள் மீது
ஏன் இவ்வளவு கூச்சம் படிந்துள்ளது?
இலைகள் போன்றே
சொற்கள் வைத்திருக்கும் ஒருவன்
இரவெல்லாம் எழுதுகிறான்
அவ்வளவு அமைதி.
*



