
அலுவலக வாகனத்தில் வந்த ரவி, குடியிருப்பு முகப்பில் இறங்கிய போது அடித்துப் பொழிந்து கொண்டிருந்த வானம் சற்றே ஓய்வெடுத்துத் தூவானமாகச் சொரியத் தொடங்கியிருந்தது. லேப்டாப் நனையாமல் பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு வளாக வாசலிலிருந்து தன் வீடுள்ள பகுதிக்கு வேகநடையிட்டவன் படிகளில் ஏற, மைதிலி கதவை பூட்டிக் கொண்டிருந்தாள்.
கனத்த காலடிகளின் சத்தம் கேட்டுத் திரும்பியவள், “நல்லவேளை வந்தீங்க. சாவியை விக்கிம்மாட்ட கொடுத்துட்டு போறேன்னு சொல்ல போன் பண்ணேன். நீங்க எடுக்கல. ஸ்பேர் சாவியும் இங்க தொங்குது” என்றாள் மீண்டும் கதவைத் திறந்தபடி.
“நனைஞ்சுடும்னு உள்ள வச்சுட்டேன்” ரவி சொன்னதைத் காதில் வாங்கிக் கொண்டே அறைக்குள் சென்று துண்டொன்று எடுத்து வந்தாள். “புயல் அறிகுறி வருதாம். மெழுகுவர்த்தி ஸ்டாக் இல்ல. போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றவள் மீண்டும் செருப்பணிந்து கொள்ள, “நீ இரு. நான் போறேன்” என்றான் ரவி.
“வேணாம், மழை திரும்ப பிடிக்கிற மாதிரியிருக்கு. இரண்டே நிமிஷம். வந்துடறேன். டீ இருக்கு. சூடு பண்ணி குடிங்க”
அவள் கடகடவெனக் கீழிறங்கி ஸ்கூட்டியை முடுக்கி கிளம்பும் சத்தம் கேட்க, பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்த ரவிக்குத் தொண்டையில் துக்கமாய் ஏதோவொரு உணர்வு வந்து அப்பியது.
உணர்வென்ன உணர்வு? தன் இயலாமை, அதனால் விளைந்த ஆற்றாமையைத் தவிர்த்து… எண்ணற்ற முயற்சிகளுக்குப் பின்னும் கைகூடாமல் வருடங்கள்தான் ஓடுகின்றனவே தவிர… ஏமாற்றமும் கையாலாகாத துக்கமும் பெருகியதில் மனசு தொய்ந்து போக, ‘ஓரடி கூட முன்னேறாத உனக்கு பெருமூச்சு ஒன்றுதான் கேடு’ என அவனைக் கேலி செய்வது போல மழை திரும்ப வேகம் எடுத்திருந்தது.
சாட்டையாய் இறங்கிய துளிகளைக் உள்ளங்கையில் ஏந்தியபடி அப்படியே நின்றான் ரவி. தன்னுள்ளம் துக்கிப்பது எது குறித்தென்று வெளியே சொன்னால் பிறரால் புரிந்து கொள்ளக் கூட முடியுமா? தெரியவில்லை. ‘பெரிய பதவி, சம்பளம், அழகு பொண்டாட்டி, ஒத்த பொண்ணுன்னு ரவிக்கு என்னப்பா, ராஜா’ என்ற பேச்சுதானே சுற்றத்திலும் நட்பிலும்.
‘இந்த மனதுக்கு எப்போதும் ஏதோவொரு வேலிடேஷன் தேவைப்படுகிறது. வெளியிலிருந்து வருகிற தகுதிச் சான்றிதழ் நிறைவளிக்கும்போது தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடி தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வதுதான் மனித சுபாவம்’ என்று கூடத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்ள முயல்வான். ஆனால், உள்ளுக்குள் சதா சர்வகாலமும் அரிக்கும் இந்நமைச்சல் பொறுக்க முடியாததாக உள்ளதே…
“கையோட கொஞ்சம் காய்கறியும் வாங்கிட்டேன். பிரெட்தான் எங்கயும் கிடைக்கல. ஒரு தூத்தல் போட்டுடக் கூடாது இந்த ஜனங்களுக்கு. கோதுமை மாவு வாங்கினேன் எதுக்கும் கைல இருக்கட்டும்னு” முகத்தில் தெறித்திருந்த மழைத்துளிகளை ஒற்றியபடி மைதிலி வர, ரவி முகத்தை மாற்றிக் கொண்டான். அவளுக்குச் சூட்சுமப் புத்தி அதிகம். முகமாற்றத்தை உடனே கண்டுபிடித்து விடுவாள். கொஞ்சமல்ல, இருபத்து நான்கு ஆண்டுகள் ஒன்றாய் வாழும் வாழ்வு தந்த புரிதல்.
“சௌமி பேசினாளா?”
“ம்ம். மதியம் பேசினோம். அங்கயும் நல்ல மழையாம். காலைல செம டிராபிக்னு சொன்னா”
“பேசாம வீட்டுல இருந்து வேலை செய்யலாம்ல. எதுக்கு வண்டி எடுத்துட்டு அலையுறா?”
“அவ என்ன சின்ன குழந்தையா? பார்த்துப்பா விடுங்க”
“எனக்கு அவ சின்னவதான்” ரவி சொன்ன வேகத்தில் மைதிலி கிண்டலாகப் பார்த்தாள். “அடுத்த தைக்குள்ள ஜாதகம் எடுத்துடலாம்னு உங்கம்மா சொல்லிட்டு இருக்காங்க. இவருக்குச் சின்ன குழந்தையாம்”
“முதல்ல அவ என்ன சொல்றான்னு பார்க்கலாம் மைதி. இதுதான் மாப்பிள்ளைனு காட்டி நம்ம இஷ்டத்துக்கு செய்ற காலம் இல்ல இது”
“அப்படி செஞ்சு வச்சு சாருக்கு என்ன குறைஞ்சு போச்சாம்?” தேநீரை நீட்டியவள் ரவியின் தோளை லேசாக இடித்துச் சிரித்தாள்.
“நம்ம விஷயம் வேற மைதி. இப்பல்லாம் பசங்க ரொம்ப ஸ்மார்ட். அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கணும்ல?”
“எங்க இதை தைரியமா உங்கம்மாப்பாட்ட சொல்லிடுங்க பார்க்கலாம்”
“ஏன் சொல்ல மாட்டேனா என்ன?” ரோஷமாகச் சொன்னாலும் தன் குரல் தளர்ந்து ஒலிப்பதை ரவியாலேயே உணர முடிந்தது.
அவள் சிரித்தபடி ஏதோ வெப்சீரிஸை வைத்து உட்கார, ரவி குளிக்கச் சென்றான். இளஞ்சூடான நீர்த்திவலைகள் உடலில் வழிந்தோட, அதை உணராத மரத்த தன்மையுடன் மனம் அதன் போக்கில் தனித்தியங்கி கொண்டிருந்தது.
‘யார் யாரோ என்னென்னவோ செய்றாங்க, உன்னால இந்த சின்ன விஷயம் முடியாதா ரவி? சே, உனக்கே அசிங்கமா இல்ல? எட்டு வைக்கிற குழந்தை அசால்ட்டா செய்ற காரியம், உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பயம்? சின்னதுல பயப்பட ஆரம்பிச்சது, ஏழு கழுதை வயசாகி, இதோ இப்ப கட்டை காடு போய் சேர்ற நாளே வரப்போகுது, இன்னும் நடுக்கம் குறையல. அப்படியே செத்தாதான் என்ன, இந்த குற்றவுணர்ச்சியோட வாழ்றதுக்கு நீயெல்லாம் அப்படியே ரோட்டுல அடிபட்டு சாகலாம்’
“ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” துண்டை பலகணி கொடியில் விரித்துப் போட்டுத் திரும்பியபோது மைதிலி கேட்டாள்.
“ஒன்னும் இல்லயே. நல்லாதான் இருக்கேன்”
“எனக்கு தெரியாதா உங்களை? என்ன, நாளைய பத்தின டென்ஷனா?” எழுந்து அருகே வந்தவள், அவன் தாடை தொட்டுயர்த்திக் கண்களைப் பார்த்தாள்.
எதிர்விழிகளில் தெரிந்த ஆதுரத்தில் அவன் முகம் சிவந்தது. “ப்ச். இதெல்லாம் வேணுமானு தோணுது மைதி. வெளில சொன்னா கைகொட்டி சிரிப்பாங்க. நினைக்க எனக்கே வெட்கக்கேடா அவமானமா இருக்கு” வேகமாய் வந்த வார்த்தைகளில் சொல்லொணா வலி நிரம்பி வழிய, “ரவி” என்ற மைதிலி, மேலே எதுவும் பேசாமல் அவனை அணைத்து நின்றாள்.
“சும்மா போய்தான் பார்ப்போமே” என்றாள் மெல்ல, அவனுக்கு வலித்து விடாத தொனியில்.
“ம்ம்”மென்று முனகிய ரவிக்கு ஒரு பிரதான அச்சம் இருந்தது. ‘தெனாலி’ பட கமல் மாதிரி தொட்டதற்கும் பயம் என்றளவுக்கு இல்லையென்றாலும் இன்று நேற்றல்ல, சிறு வயதில் இருந்தே தொடர்ந்து வரும் அச்சமொன்று உள்ளது. அதுவே தன்னுடைய வாழ்க்கையை அர்த்தமற்று வாழ்வது போன்ற நிறைவின்மையையும் வழங்கிக் கொண்டிருந்தது.
அது என்னவோ ரவிக்கு வண்டி ஓட்டுவது என்றாலே மரணபயம். சின்னதில் சைக்கிள் கற்றுக்கொண்டானே தவிர, சாலைகளில் எடுத்து லாகவமாக ஓட்டிப் பழகியதில்லை. பள்ளி நடைதூரம்தான் என்பதால் அப்படியே பள்ளி வாழ்க்கை கழிந்து போனது. கல்லூரி நாட்களில் கற்றுக்கொண்ட பைக் சவாரியும் மைதான பயிற்சிதான், காலி கிரவுண்டில் ஓரளவு நன்றாக ஓட்டுவது போல இருக்கும், சாலையில் ஓட்டும்போதோ தன்னையும் விஞ்சிய பயபூதம் கிளம்பி அவன் மென்னியை நெறிக்கும். நடமாட்டம் இல்லாத சாலை என்றால் ஒரு மாதிரி கை கால்கள் நடுங்கினாலும் சமாளித்து ஓட்டிவிடுவான். ஆனால், தூரத்தில் ஒற்றை நாய் தென்பட்டு விடக்கூடாது. உள்ளங்கை வியர்த்துப் போகும். மனம் நடுங்கி இதயம் முரசு கொட்டும். எக்கச்சக்க பதட்டத்தில் யார் மேலும் மோதாமல் இருக்கத் தானே சாலையில் ஓரம்கட்டி சரிவது அல்லது சட்டென்று பிரேக்கடித்து அரம்பரமாக விழுவது. இதுதான் வழக்கம்.
சரி, இரு சக்கரம்தான் பிரச்சனை, கார் என்றால் பேலன்ஸ் செய்யும் தொல்லையில்லை என்று நினைத்து காரும் கற்றுக் கொண்டான். முதல் கியரில் இருந்து இரண்டாவது கியருக்கு மாற்றுவதற்கே வராது. சாலையைப் பார்த்தால் கீழே பார்க்க முடியாது. கீழே பார்த்தால் சாலை பக்கவாட்டில் வளைந்தோடும். பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டால்? எங்கே தவறாக அழுத்தி விடுவோமோ என்ற பயத்தில் நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ளும். சரி, கியர் போடுவதுதான் சிரமம் என்று ஆட்டோமேட்டிக் கார் வாங்கி, அதையும் காலி ரோட்டில்தான் ஜோராக ஓட்டுவான். தூரத்தில் இரு வண்டிகள் தெரிந்தாலே நடுங்குபவனுக்கு எங்கே போக்குவரத்து நெரிசலில் எடுத்து ஓட்டுவது?
மனிதனுக்கு என்னென்னவோ இயலாமைகள் இருக்கும். ஆனால், வண்டி ஓட்ட முடியாத, தெரியாத ஆண் என்பது அவனது சுயத்தின் மேல் அனுதினமும் விழுந்து கொண்டிருக்கும் சம்மட்டி அடிகளாகத்தான் தோன்றியது. வாழ்வில் அடைந்திருக்கும் அத்தனை பெருமானங்களும் செல்லாகாசாகி நிற்பது போலத் தன்மீதான சுயஅவமதிப்பில் சுருங்கிப் போவான் ரவி.
அதுவும் திருமணமான புதிதில் “மைதி புருஷனுக்கு வண்டி ஓட்ட தெரியாதாம்’ என்ற கிசுகிசுப்புக் காதில் விழ கூசி நின்ற தருணம் இன்னும் ஆறவே ஆறாத ரணமாக உறைந்து போயிருக்கிறது மனதில். “அதுக்கென்ன மாப்பிள்ளை? டூவீலருக்கு டிரைவர் வச்சுட்டு போ” என்று அலுவலகத்தில், நட்பு வட்டத்தில் ஓட்டுவார்கள். அப்போதெல்லாம் அசடு வழிய சிரித்து வைத்தாலும் உள்ளுக்குள் முள் குத்தி ரத்தம் கசியும்.
மனிதர்களை அவரவர் இயலாமைகள், போதாமைகள், தகுதிக்குறைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களை அவர்களுக்காகவே ஏற்று நடத்திய காலமும் ஒன்று இருந்தது. இன்று எல்லோரும் எல்லா வித்தைகளிலும் கை தேர்ந்து சகலகலா வல்லவர்களாக இருக்க வேண்டிய சமூக எதிர்பார்ப்பு உள்ளதே. அவ்வழுத்தமே ஒவ்வொரு நாளும் ‘You are not good enough’ என்று கூர்மையான சுயவிமர்சன கத்திகளைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
ரோஷமாக பல முயற்சிகள் செய்து பார்த்தும் பலன் என்னவோ பூஜ்யம் என்றானதில் கடைசியில் மைதிலி வண்டி கற்று, தனக்காக ஸ்கூட்டி வாங்கியதுதான் நடந்தது. அவளுக்கும் வருத்தம் இருந்திருக்கும். இப்போதும் இருக்கலாம். ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள். தான் செய்த புண்ணியத்தில் பெரிய புண்ணியம் இவள் தன் மனைவியாக வாய்த்ததுதான் என்று தோன்றும் ரவிக்கு. சொல்லிக் காட்டுபவளாக இருந்திருந்தால் என்றோ மரித்திருப்பான். சில சமயம் அவள் வாய்விட்டுத் திட்டினால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றும். அபார்ட்மெண்டில், உறவில், நட்பில் என முதுகுக்குப் பின் சிரிக்கும் பார்வைகளை தானறிந்தது போல அவளும்தானே அறிந்திருப்பாள்?
ஏதோ இப்போது வசதி இருக்கும் புண்ணியத்தில் நெடும்பயணங்களுக்கு டிரைவர் வைத்துக் கொள்ள முடிகிறது. மற்றபடி மைதிலியும், சென்ற மாதம் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் மகளும்தான் சாரதிகள். முன்னிருக்கையில் அவர்கள் அருகே அமர்ந்து செல்லும்போது புழு போல அவன் தன்னை உணராத தருணங்களே இல்லை எனலாம். மனசும் உடலும் அப்படியே சுருண்டு போகும்.
வண்டி ஓட்டுவதுதான் பயம் என்றில்லாமல் ரவிக்குச் சாலை அச்சமும் உண்டு. பயணிக்கும்போது மேலே உள்ள வார்ப்பிடியை விடவே மாட்டான். எதிரே வண்டி எதுவும் தென்பட்டால் ‘பார்த்து பார்த்து’ என்று குரல் கொடுத்துக் கொண்டே வருவதில் ஓட்டுவது யாராக இருந்தாலும் எரிச்சலடைந்து முறைப்பதும் அங்கு வழக்கம்தான்.
சமீபத்தில் அலுவலகத் தோழமை ஒருவன்தான் கேட்டான். “சின்னதுல ஏதாவது ஆக்சிடென்ட் பார்த்திருக்கியா, இல்ல நீ ஓட்டி அப்படி எதுவும்?” ரவி வேகமாகத் தலையாட்டினான். “இல்லையே” இதே கேள்வியை அவனே நிறைய முறை யோசித்திருக்கிறான். ஓட்டுவதற்கு தான் திராணியில்லை. பிறர் வண்டியில் ஏறி அமர்ந்தாலும் கூட, அது பைக்கோ, காரோ, பேருந்தோ ஏன் மனசு படபடக்கிறது? இதயம் நடுங்குகிறது? தெரியவில்லை. ஆனால், இப்பயத்தினால் அடைந்த அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஒருமுறை கூடப் பணிபுரிந்தவரின் பைக்கில் வரும்போது, சாலை நெரிசலில் உடல் பதற ஆரம்பிக்க, தன் கால்கள் ஓட்டுநரை நெருங்குவதை அவன் உணரவே இல்லை. “அட, காலை கொஞ்சம் நகர்த்துப்பா. என்னமோ புது பொண்டாட்டி மாதிரி ஒட்டிட்டு” என்று அந்த நண்பன் நக்கலாகச் சொல்லிவிட, சட்டென்று காலை விலக்கிக் கொண்டவனுக்கு உயிரே போய்விட்டது. அதிலிருந்து என்னவானாலும் சரி, பிறரிடம் லிப்ட் கேட்பதில்லை. ஆட்டோ இல்லை கால்-டாக்ஸி தான். மற்றபடி மகள் பெங்களூருக்குச் சென்றபின் மைதிலிதான் எங்கே போக வேண்டும் என்றாலும் வண்டி எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவள் ஓட்டும்போதும் ‘கையாலாகாதவனே’ என்று சுயமே அவனைக் கரித்துக் கொட்டும். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.
அவனும் இத்தனை வருடங்களில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டான். டிரைவிங் ஸ்கூல், சாலை பயத்தைக் குறைக்கத் தியானம், நேர்மறை சொற்பிரயோகங்கள், தான் பிரமாதமாக வண்டி ஓட்டுவதாகக் கற்பனை செய்யும் விஷுவலைசேஷன் பயிற்சிகள், சிபிடி என்று என்னென்னவோ.
வண்டி ஓட்டுவதாகக் கற்பனை செய்யும்போதே நான்கு அடி எடுத்து நகர்வதற்குள் நெரிசலான சாலையும், தாறுமாறான வாகனங்களும் மனக்கண்ணில் விரிய, தான் வேகமாக ஓட்டுவது போலவும், இடித்துக் கவிழ்ந்து ஏதோவொரு வண்டிக்கடியில் தானோ இல்லை மற்றவரோ ரத்த வெள்ளத்தில் கோரமாகக் கிடப்பது போலவும் காட்சிகள் தோன்றுவதில் வியர்த்து வழிந்து விழித்துக் கொள்வான்.
‘மனதுக்குப் பொய் எது. நிஜம் எதுவெனத் தெரியாது, நீங்க கற்பனையில் தைரியமாக ஓட்டுவது போல நம்புங்கள். அதுவே பலனளிக்கும்’ என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் கற்பனை செய்யக்கூட இயலாத அளவிற்கு அப்படியென்ன கருமம் பிடித்த பயமோ?
“சௌமிக்கு கல்யாணமானா அடுத்த வருஷம் தாத்தாவாக்கும்” என்று நேற்று எதற்கோ மைதிலி கிண்டலடிக்க, “சௌமி குழந்தையா இருக்குறப்பதான் முடியல. அவ குழந்தையை வச்சாவது வண்டி ஓட்டுவேனா?” என்றிருந்தான்.
“எந்நேரமும் இந்த நினைப்புதானா? எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சுடணுமா?”
அவள் என்ன சொன்னாலும் இவ்வியலாமை தரும் தாழ்வுணர்விலிருந்து என்றாவது தனக்கு விடுதலை கிடைக்குமா என்று ஏக்கமாக இருந்தது ரவிக்கு.
“டிரைவிங் ஆங்க்சைட்டின்றது டிரைவ் பண்றதால வர்றதில்ல. அதுக்கு பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்கலாம். நீயேன் ஒரு டாக்டரை பார்க்கக் கூடாது?” என்று அந்நண்பன் சொன்னது யோசிக்கக்கூடியதாக இருந்தது.
எத்தனையோ முயற்சிகளை, மனப்பயிற்சிகளைக் கடந்தும் தொடர் தோல்விகளையே தழுவியிருந்தவனுக்கு மனோதத்துவ ரீதியான அணுகுமுறை பயனளிக்குமோ என்று தோன்ற, அதன் நிமித்தம்தான் அத்துறை நிபுணரான மதனைச் சந்தித்தது. முதலிரண்டு முறைகள் சாதாரணமாக அமர வைத்துப் பேசியவர், நாளை ‘ஸ்லீப் ஹிப்னோசிஸ்’ செய்து பார்க்கலாம் என்று சொல்ல, தான் என்ன உளறி வைப்போமோ என்று அது வேறு பயம்.
“உளர்றதுக்கு என்ன இருக்கு? உங்களுக்கே தெரியாம ஆழ்மனசுல ஏதாவது பயம் பதட்டம் இருக்கலாம். அது என்னனு தெரிஞ்சா நிம்மதில்ல? நானும்தானே கூட இருக்கப்போறேன்” மைதிலி தேற்றினாலும் அன்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை ரவிக்கு. அடுத்த நாள் மாலை மதனைச் சந்தித்தபோது அவர் அறிதுயில்நிலை பற்றிய விளக்கங்கள் தந்து, தளர்வாக அமர வைத்தார்.
பதட்டத்துடன் கண்கள் மூடி அமர்ந்த ரவிக்கு மதனின் மென்பேச்சில் சுவாசம் மெல்ல நிதானத்துக்கு வர, கதை போல அவர் சொன்னவற்றை உருவங்களாக மனது காட்சிப்படுத்த ஆரம்பித்தது.
“தூரத்துல பச்சைப் பசேல்னு தோட்டம். அங்க நிறைய பறவைகள். சின்ன குருவிகள், மைனாக்கள் புல்வெளில தேங்கியிருக்கிற தண்ணியை குடிச்சிட்டு இருக்குங்க. ஒவ்வொன்னையும் கண்ணகல பார்த்துட்டே உங்க வீட்ல இருந்து ஒவ்வொரு படியா இறங்கி வரீங்க. ஒவ்வொரு படியா இறங்கும்போது ஒவ்வொரு வயசா குறைஞ்சு உங்க மனசு பால்யத்தை நோக்கி போயிட்டே இருக்கு” மூச்சு ஆழமாய் சென்று வர, அவரது குரலின் வசத்துக்குள் சிறிது சிறிதாக இழுபட்டு முற்றிலும் ஆழ்ந்து அமிழ்ந்து போனான் ரவி.
மதன் மெல்லமாய்க் கேள்விகள் கேட்க, ரவி சன்னமாய், குழறலாக பதில் சொல்ல ஆரம்பித்து பிறகு நீளமாக பேசத் தொடங்கினான்.
“அப்ப எனக்கு ஆறேழு வயசு இருக்கும். அன்னைக்கு நல்ல மழை. பேய்க்காத்து. எங்க வீட்டு மேல இருந்த தகரக் கொட்டகைல மழை கொட்டுற சத்தம் பயங்கரமா கேட்குது. அதுக்கு கொஞ்சமும் சளைக்காம வீட்டுக்குள்ளயும் பெரிய சண்டை. நானும் என் தங்கச்சியும் ஒடுங்கி உட்கார்ந்து அழுதுட்டுருந்தோம்” சொல்லச் சொல்ல அந்நாட்களின் நினைவுகள் வளர்ந்தன.
“எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவும் ஏழாம்பொருத்தம்தான். ‘எந்த பரதேசி பொருத்தம் பார்த்து கட்டி வச்சானோ அவன் நாசமாதான் போவான்’னு அம்மா சபிக்கும். அப்பாவும் சளைச்ச ஆளில்ல”
சுறுசுறுப்பின்மை., ஊதாரித்தனம், ஊர் சுற்றுவது என பொறுப்பற்ற ஆள். கட்டுசெட்டாக வளர்ந்த அம்மாவால் அப்பாவின் தடித்தனத்தை பொறுத்துக் கொள்ளவே முடிந்ததில்லை. வாய்ப்பேச்சு சில நேரங்களில் கைப்பேச்சாக மாறி ஆணென்ற ஆதிக்கமும் காட்ட, அந்நேரங்களில் அம்மா உக்கிரமேறிய யட்சியாக மாறிப்போவாள். தடித்த வார்த்தைகள் இருபுறமும் தாட்சண்யமின்றி பரிமாறிக் கொள்ளப்படும். கேட்பதற்கே பயங்கரமாக இருக்கும் அச்சொற்களுக்கு அவ்வயதில் பாதிக்குப் பாதி அர்த்தம் புரியாது. புரிந்த வார்த்தைகள் மனதில் இன்னும் கலக்கமேற்றும்.
“அன்னிக்கு என்ன காரணமோ பயங்கர சண்டை. ‘வாயை மூடுடி, வாயை மூடு’னு சொல்லிட்டே அப்பா தேங்காய் வெட்ட வச்சிருந்த அருவாளை எடுக்க, நான் அவரு இடுப்பை பிடிச்சிட்டு ‘வேணாம்பா, வேணாம்’னு கதறுறேன். பாப்பாவும் பயந்து அழுகுது. அவளைத் தூக்கிட்டே ‘அம்மா வேண்டாம்மா பேசாம இரும்மா’னு அழறேன்”
“‘வெட்டி போட்டுடுவியா நீ? வெட்டுடா வெட்டு’னு அம்மா ஆக்ரோஷமும் அழுகையுமாக விரிஞ்சு கிடந்த முடியை அள்ளி முடிஞ்சுட்டு முன்னாடி வருது”
“அப்பா வேண்டாம்பா. அருவாளை குடுப்பா. பாப்பாவும் அழுதுப்பா. பயமா இருக்குப்பா” அவனது சிறிய பிடிக்குள் வெறி கொண்ட களிறின் ஆவேசத்தை அடக்க முடியவில்லை. “அடச்சே நீயுமொரு பொம்பளையாடி? வாயா அது, சாக்கடை சாக்கடை!”
“ஏன், நீ கண்டமேனிக்கு பேசுறப்ப நான் மட்டும் வாயை மூடிக்கணுமா? எங்க கிளம்புற? வெங்காயமே போச்சுன்னு வண்டி எடுத்துட்டு கிளம்பிடு. உன் இஷ்டம் போலத்தான் திரிவேன்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணி உசுரை வாங்குற?”
“சீ.. நகரு_”
“விட்டெறிஞ்சுட்டா போற. ஊரை சுத்தி வர்ற நாய்க்கு குடும்பம், புள்ளக்குட்டி ஒரு கேடா? அப்படியே போ… ஒரேயடியா போயிடு. சனியனே…. யார் யாருக்கோ சாவு வருது, உனக்கு வந்து தொலைக்குதா பாரு. செத்து தொலைஞ்சா அறுத்து போட்டுட்டு, ஒரு பொழுது அழுது தீர்த்துட்டு, நிம்மதியா இருந்துடுவேன். போ… அப்படியே போற வழியில லாரிலயோ பஸ்லயோ மோதி ஒரேயடியா போய்டு. நாசமா போறவனே. உன்னை கூடையில் அள்ளிட்டு போக…” அம்மா விரலை நெரித்து சபித்தபடி இருக்க, ரவி அழுது கொண்டே விசும்பும் தங்கையை அணைத்துக் கொண்டான்.
மெல்லிய இருட்டில் அவ்வறை மூலையில் அமர்ந்திருந்த மைதிலி புறங்கையை வாயில் வைத்துத் துளிர்த்து வரும் கண்ணீரை விழுங்கிக் கொண்டாள். அவள் முற்றிலும் எதிர்பார்த்திராத கோணம். ‘திருமணமாகி இத்தனை வருடங்களாகியும் நான் அறியாத காயம் ஒன்று உள்ளதா? உள்ளே வெம்பி வெடித்து, சீழ் கோர்த்து…’
அவள் ஆந்து போன அதே நேரம், மூன்றாகப் பெருக்கிப் போட்ட தாலியின் சிடுக்கு விடுவித்து ஜாக்கெட்டுக்கு மேலே போட்டபடி திரும்பிய சிவகாமி தன்னெதிரே கோழிக்குஞ்சு போல அமர்ந்திருந்த மல்லிகாவையும், அவள் அம்மாவையும் பார்த்தாள்.
“அப்படி என்ன வீராப்பு உனக்கு? சண்டை போட்டுட்டு பிள்ளைகளை இழுத்துட்டு அம்மா வீட்டுக்கு வந்திருக்க? குடும்பம்னா நாலும்தான் இருக்கும். உங்க ஐயாவுக்கு இல்லாத கோபமா? அந்த காலத்துல மனுஷன் நாக்குல கத்தியை வைச்சிட்டு பேசுவாரு. நானா இருக்க போய் அவரோட பொழச்சேன். அப்படி பொழைச்சதாலதான் இன்னைக்கு எம்புள்ளைங்க ரெண்டும் சந்தோஷமா இருக்குதுங்க. இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அந்த பொறுமை ஏது?”
தான் இங்குப் பேசிக்கொண்டிருக்கும்போதே நல்லப்பன் வண்டி சாவியை எடுத்துக் கிளம்புவது தெரிய, “இந்தா வரேன்” என்றெழுந்தவள், முந்தானையை இழுத்துச் சொருகிக்கொண்டு எழுபது தொட்ட முதுமையின் தள்ளாமையைப் புறந்தள்ளி வாசலுக்கு விரைந்தாள். “என்ன ஐயா கிளம்பியாச்சா ஊர்கோலம் போக? சாயங்காலம் சூரியன் இறங்கிடக்கூடாது, ஊர் சுத்தக் கிளம்பிடணும். அப்புறம் நேரங்கெட்ட நேரத்துல வந்து ‘சோறு போடு’ன்னு என் உசுரை வாங்கணும்”
“கத்த ஆரம்பிச்சுட்டா கிழவி. இந்த கண்றாவிக்குதான் வெளில போய் ஒழியுறது” வேகமாகச் சட்டையைப் போட்டுக்கொண்ட நல்லப்பன் சென்ற மாதம் மகன் மகள் குடும்பங்கள் சகிதம் திருக்கடையூரில் எண்பது கல்யாணம் செய்து கொண்ட மனிதர். வயதுக்கேற்ப நடை தளர்ந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாத திமிருடன் வேகமாக வெளியேறி, தன் பஜாஜை முடுக்கிக் கிளம்ப, “வயசானாலும் அடங்குதா பாரு, என் காலை கட்டின பாம்புக்கயிறு இது” முனகலாகத் திட்டிக்கொண்டே உள்ளே வந்த சிவகாமி, “நாளைக்கு முதல் பஸ்ல உன் வீட்டுக்கு கிளம்புற புரியுதா? எடுத்தோம் கவிழ்த்தோம்னு புருஷனை விட்டுட்டு வர வேலையெல்லாம் வேணாம். அப்படி விட்டுட்டு வந்து இரண்டையும் தனியா வளர்த்துடுவியா நீ? அதுங்கதான் சந்தோசமா இருந்துடுமா? யோசி. விட்டுக் கொடுத்துப் போனாதான் கண்ணு வாழ்க்கை. அடியோ புடியோ புள்ளைங்களுக்கு தாய் தகப்பன் இரண்டும் வேணும்” என்று உபதேசித்துக்கொண்டு அமர…
இங்கு ஏழு வயது ரவி, பேயாய்க் கொட்டும் மழையை ஜன்னல் வழி சிறு வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கத்தி திட்டி ஓய்ந்திருக்க, அவனால் உறங்கவே முடியவில்லை.
அகாலத்தில் கிளம்பிச் சென்ற தகப்பன் திரும்பி வந்து, தான் உறங்கும் நேரம் அருவாள் எடுத்து வெட்டி விட்டால்…
அச்சோ.. தூங்க கூடாது. தூங்கவே கூடாது… ‘அப்பா எங்கப்பா இருக்க? இரண்டு பேரும் சண்டை போடாதீங்கம்மா. எங்களுக்கு பயமா இருக்கு’
நடுநிசி தாண்டியும் அப்பா இன்னும் வரவில்லையே. அம்மா சொன்னமாதிரி ஏதாவது வண்டிக்கு அடியில் நசுங்கி…
அச்சத்தில் உறைந்தபடி கண்களை விரித்து தெருவையே பார்த்திருந்தவன் ஒருகட்டத்தில் தன்னையுமறியாமல் அசந்துவிட, ஏதோ சக்கரத்துக்கு அடியில் சிவப்பு சகதியாய் காட்சி விரிந்ததில் “அச்சோ… ரத்தம்… ரத்தம்…” அச்சிறுவன் இன்னும் கண்விழிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.



