Uncategorizedஇணைய இதழ் 119சிறுகதைகள்

10 A+ – மலேசியா ஸ்ரீகாந்தன்

சிறுகதை | வாசகசாலை

1

ட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுது தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுது தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?. நீங்க இல்லாம நா எப்படி இருப்பன்?’ என்று கணவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் பிராது கொடுத்துக் கொண்டிருந்தாள் போல!. உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வலது கை, நெஞ்சக் கூட்டில் கிடந்தது. ‘மனச தொட்டு சொல்லுங்க. நீங்க செஞ்சது நாயமா?.’ -நீதி கேட்டாளோ!. அவ்வப்போது கன்னங்களில் வழிந்தோடிய நினைவுகளின் ஈரத்தில் கலந்திருந்த துயரம் ருசித்ததோ என்னவோ, எவ்வளவு விரட்டியும் போகாமல் ஈக்கள், மீண்டும் மீண்டும் பறந்து வந்து கண்ணீரில் மொய்த்தன. புதிதாக வந்து லட்சுமியின் பக்கத்தில் அமர்ந்த பெண்களோ, அவர்களின் பங்கிற்கு அவளின் பிரிவாற்றாமையை மேலும் ஒரு சுற்று புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

சவப்பெட்டியின் தலைமாட்டில் மனோகரனின் போட்டோ சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. நெற்றியில் சந்தனமும் குங்குமமும் பச்சையாய் மணந்து கொண்டிருந்தன. ‘எனக்கு இப்படியொரு அகால மரணம் சாத்தியமே இல்லை’ என்பதுபோல் அவர் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால், மனித உயிருக்கு அப்படிப்பட்ட உத்தரவாதமெல்லாம் கிடையாது என்று போட்டோவின் அருகே ஏற்றி வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கு தள்ளாடிக் கொண்டிருந்தது.

சவப்பெட்டியில் குவிந்திருந்த மலர்களின் வாசனைக் கலவை, தமது சுகந்தத்தை இழந்து, ஒரு வித நீர்த்துப் போன நெடியில் தலைவலியைத் தூண்டி விட்டது. பன்னீர் மற்றும் ஊதுவத்திகளின் மணம் அதற்கு மேலும் தூபம் போட்டதால் மரணத்தின் வீச்சமாய் அது, நாசியை நெருடியது.

பந்தலில் குழுமியிருந்த பலரும் துக்கம் விசாரிக்க வந்த பெயரில் உற்சாகமாக உரையாடிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

பிரதாப்பிற்கு அம்மாவைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஸ்தம்பித்துப்போய் நின்றான்!. அப்பா, அம்மாவிற்கு வெறும் துணையில்லை, பிடிமானம்!. ஒற்றைத் தனி மனுசியாய் அம்மாவை நினைக்கவே கலக்கமாய் இருந்தது. இந்தப் பிரிவை அம்மா தாங்கிக்கொள்ளும் அவகாசம் எவ்வளவு காலமோ என்று பயந்தான். தனது பணியில் எத்தனையோ மரணங்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றியவன்தான்!. அம்மாவைத் தேற்ற வார்த்தைகளில்லாமல் தவித்தான். அங்கே நிற்க, மிகவும் தர்மசங்கடமாய் இருந்தது.

தந்தையின் மரணத்தைப் பதிவு செய்து, சவ அடக்கத்திற்குப் பெர்மிட் எடுக்க காஜாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்த சாக்கில், உடனே அங்கிருந்து விலகிச் சென்றான்.

வழியெல்லாம் தந்தையின் நினைவுகள் அலைக்கழித்தன. நேற்று வரை அவை தன்னிடமிருந்த எந்தத் தடயத்தையும் அவன் உணர்ந்ததே இல்லை!. வீட்டிலிருக்கும்போது சோபா செட், டெலிவிஷன், அலமாரி, காற்றாடி, சாப்பாட்டு மேசை போன்ற பொருட்களுக்கு மத்தியில் அப்பா!. அவ்வளவுதான்!. நெஞ்சு நிறைய பாசம் இருந்தது. ஆனால், வார்த்தைகளில் காட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்ததில்லை.

அப்பாவின் மரணம் எல்லாவற்றையுமே ஒரு நொடியில் மாற்றிப் போட்டது. ஒன்றன் பின் ஒன்றாக எத்தனை நினைவுகள்!.

பள்ளிச் செல்லத் தொடங்கியக் காலத்திலிருந்தே கல்வியில் பெற வேண்டிய தேர்ச்சியே அவரின் அன்றாடப் பேச்சாக இருந்தது. தன்னால் படிக்க இயலாத படிப்பையும் சேர்த்து இவனே படித்துவிட வேண்டும்போல் அக்கறைக் காட்டினார். தனது ஆறாம் வகுப்புத் தமிழ்க் கல்வியால் மகனின் இடைநிலை ஆங்கிலம் மற்றும் மலாய்க் கல்விக்கு உதவ முடியாமல் போன போது, தனது ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் மன்றாடி, மகனுக்கு டியுஷன் ஏற்பாடு செய்தார். வாரத்தில் நான்கு நாட்கள் அவரின் வீட்டிற்கே அவனை அழைத்துக்கொண்டு போய், இரண்டு மணி நேரம் காத்திருந்து அழைத்து வந்தார். இதனால் தனது காவலாளி வேலைக்கு 1 மணி நேரம் தாமதமாகவே போக நேர்ந்ததால் மற்ற மூன்று நாட்களும் சக காவலாளிக்கு கெந்திக்கு ஒரு மணி நேரம் இனாமாக வேலை செய்துக் கொடுக்க வேண்டிய சிரமத்தையும் மகனுக்காக ஏற்றுக்கொண்டார்.

SPM (10)-ம் வகுப்பிலிருந்த அரசாங்கத் தேர்வே பல்கலைக்கழக நுழைவைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பரீட்சையில் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற வேண்டிய அவசியத்தை அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். பிரதாப்பிற்கு அப்பாவின் கவலைப் புரிந்தது. அவரிடம் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாமென்று சொல்ல நினைத்ததை அம்மாவிடம் சொல்லி வைத்தான்.

மே மாதத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகின!.

பிரதாப், தேர்வு எழுதிய 10 பாடங்களிலும் A+ பெற்று, பள்ளியில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களில் ஒரே இந்திய மாணவனாக இருந்தான். மற்ற இருவரும் சீன மாணவர்கள்!. பள்ளியின் பெருமிதமாக அறிவிப்புப் பலகையிலும், இனத்தின் பெருமிதமாக நாட்டில் வெளிவந்த எல்லாத் தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் முதல் பக்கத்தில் அவனுடைய படம் பிரசூரமானது. அப்பாவிற்குப் பெருமைப் பிடிபடவில்லை. மகனின் படம் பிரசூரமான எல்லா மொழிப் பத்திரிக்கைகளையும் வாங்கி வந்து அம்மாவிடம் காட்டி மகிழ்ந்த அந்தத் தருணம், இப்போதும் அவன் கண்களில் கண்ணீரைத் துளிர்வித்தது.

அப்பாவின் ஆனந்தம் அதிக நாள் நீடிக்கவில்லை!. தன் காலத்தைப் போன்று சிறந்த மதிப்பெண்கள் மட்டுமே பல்கலைக்கழக நுழைவிற்கு உத்தரவாதம் என்று நம்பிக்கொண்டிருந்த அப்பா, பிரதாப் மனு எழுதிப்போட்ட 19 அரசாங்க பல்கலைக்கழகங்களிலிருந்தும் அவன் தேர்வு செய்திருந்த மருத்துவம் அல்லது கணக்கியல் துறையில் படிக்க இடமில்லையென்று பதில் வந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அந்தப் புறக்கணிப்பு அவருக்குப் புரியவில்லை.

அப்பா, மிகுந்த பதற்றத்திற்குள்ளாகித் தவித்தார். திரெங்கானுவிலிருந்த ஒரு பல்கலைக்கழகம் மட்டும் ‘Tarian Zapin’ என்ற மலாய் பாரம்பரிய நடனத்தில் டிப்ளோமா செய்ய இடம் கொடுத்தது. அந்த அவமானம் அவரை மிகவும் ஆத்திரம் கொள்ள வைத்தது. பிற பல்கலைக்கழகங்களைப் போல் இங்கும் இடமில்லை என்று சொல்லியிருந்தால் அவமானமாவது மிஞ்சியிருக்குமென்று எண்ணினார்.

“பிரதாப், நீ ஒன்னுத்துக்கும் கவல படாதப்பா. எனக்கு தெரிஞ்ச மலாய்க்கார டத்தோ ஒருத்தர் இருக்காரு. அரசியல் செல்வாக்கு உள்ளவரு. உன்னோட ரிசால்ட காட்டி, என்ன செஞ்ஜாவது உனக்கொரு மெடிக்கல் சீட்ட வாங்கிக் கொடுத்துருவன். அதுக்கு நா கேரண்டீ!.”

ஒரு வாரத்திற்கு அப்பா சற்று பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருந்தவர் பின்னர் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். கூடிய விரைவில் மருத்துவ சீட் கிடைத்துவிடும் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாகவும் நம்பிக்கையூட்டினார். ஆனால், பல்கலைகழகக் கல்வியாண்டு ஆரம்பித்தப் பின்னரும் கடிதம் வராததைக் கண்டதும் மிகவும் தளர்ந்து போனார். திடீரென்று, இயல்புக்கு மாறாக எரிந்து விழுந்து, நிம்மதி இழந்து தவித்தார். யார் மீதோ ஊமைக் கோபம் கொண்டு கொந்தளித்தார். அதே நிலைக்கு அம்மாவும் ஆளாகி சதா நேரமும் எதையோ யோசித்தபடி முகம் வெளிறிப் போனாள். ஒரு வாரமாக தினமும் எங்கெங்கோ அழைந்து திரிந்த அப்பா, ஒரு நாள் இவனை இந்தோனீசியாவில் மருத்துவம் படிக்க எழுதிப் போடச் சொன்னார். பிரதாப், வெளியூரில் மருத்துவம் படிப்பதில் இருக்கும் பொருளாதாரச் சிரமத்தை எடுத்துச் சொல்லி, சில வருடங்கள் வேலை செய்து காசு சேர்த்துக்கொண்டு பிறகு மேற்படிப்பதைப் பற்றி யோசிக்கலாமென்று இவன் சொன்னதைக் கேட்டதும் அப்பா கொதித்துப் போனார். இதுநாள் வரை கண்டிராத ஓர் அப்பாவை அவன் அன்று கண்டான். பணத்தைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட தேவையில்லையென்றும் நன்றாகப் படித்து டாக்டரானால் போதும் என்று சொல்லி வாயை அடைத்து, அவனைப், பிடிவாதமாக இந்தோனீசியாவிற்கு அனுப்பிவைத்தார், தன்னை டாக்டராக்கிப் பார்த்த அந்த வைராக்கியத்தை இப்போது நினைத்தபோதும் பிரதாப்பிற்கு மெய் சிலிர்த்தது

2

 பிரதாப், அப்பாவின் அடையாள அட்டையையும், இறப்புப் பத்திரத்தையும் அதிகாரியிடம் கொடுத்தான். அதிகாரி, அடையாள அட்டையின் எண்ணைக் கணினியில் சொடுக்கிய அடுத்தக் கணமே நெற்றிச் சுருங்க பிரதாப்பின் அடையாள அட்டையையும் கேட்டதோடு இவனுடைய உத்தியோகத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இவனுடைய உத்தியோகம் அதிகாரியின் கண்டிப்பைச் சற்றுத் தளர்த்தியது.

“இது பழைய அடையாளக் கார்ட்டு ஆயிற்றே. இது ஏன் இன்னும் அவரிடமிருக்கிறது. அவருடைய புதிய அடையாள அட்டை எங்கே டாக்டர்?.” என்று கேட்டார்.

பிரதாப் குழப்பத்துடன் அதிகாரியைப் பார்த்தான். அவர் தொடர்ந்து சொன்னத் தகவல் அவனை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. அப்பாவின் மரணத்தைக் காட்டிலும் அதிக அதிர்ச்சியைத் தந்த அந்தச் செய்தியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை!. நிலைக் குழைந்து போனான். அதிகாரி தவறான எண்ணைப் பார்த்திருப்பாரோ என்று சந்தேகித்து, மீண்டும் ஒரு தடவை சரி பார்க்கும்படி வேண்டினான்.

அதிகாரி, கடுப்புடன் எதையோ நகல் எடுத்து அவனிடம் நீட்டினார்.

பிரதாப், பற்றத்துடன் அதைப் பார்த்தான்.

அப்பாவின் புதிய அடையாள அட்டை!. சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மன்றம் வழங்கியது!. ‘இஸ்லாத்திற்கு மதம் மாறிய வாக்குமூல அட்டை’ என்பது மலாய் மொழியில் எழுதியிருந்தது. அதற்குக் கீழே அப்பாவின் இயற்பெயரான, மனோகரன் த/பெ ஆதிமூலம் மற்றும் அடையாளக்கார்டு எண் இருந்தது. அதற்கடுத்த வரியில், அவரின் இஸ்லாமிய பெயர்!.

‘சலீம் பின் அப்துல்லா!..’ பக்கத்திலேயே அப்பாவின் படம்!.

பிரதாப்பின் பார்வை ‘சலீம் பின் அப்துல்லா’வில் நிலைக்குத்தி நின்றது!. அப்பா, இப்போது அவன் கண்ணெதிரிலேயே ஒரு முறைச் செத்துப் போனார்!. இந்த மரணம், அழுகைக்குப் பதில் ஆவேசத்தையே தூண்டியது. அடுத்த வரிகள் எதுவும் மூளையில் பதியவில்லை!. கைகள் நடுங்கின. சற்று முன்னர், அலட்சியத்துடன் அதிகாரி சொன்னத் தகவல், நாராம்சமாய் காதில் ஒலித்தது.

‘யாராவது முஸ்லீம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்போது ‘JAIS’(1) அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டிருப்பார். வேறு வழியில்லை!. மதம் மாற வேண்டியதாகிவிட்டது. வழக்கமாக முஸ்லீம் அல்லாதவர்கள் மார்க்கத்திற்கு மதம் மாறுவது இப்பிடித்தான் டாக்டர்.’

பிரதாப்பிற்கு உடனடியாக அப்பா காவலாளியாக பணிபுரிந்த கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்கூடந்தான் ஞாபகத்திற்கு வந்தது. அங்கே, நிறைய மலாய்க்காரப் பெண்கள் வேலை செய்வதும், அவர்களில் கைம்பெண்கள் அதிகமிருப்பதும் நினைவுக்கு வந்தது.

‘அப்பாவா?.’

‘ஆதாரம் கையிலேயே இருக்கிறது. இன்னும் என்ன?. பிரேதத்தை அம்மணமாக்கிப் பார்த்தப் பிறகுதான் நம்ப வேண்டுமா என்ன?.’ -குதர்க்கமாய் எண்ணி, அருவெறுப்படைந்தான்.. கூடவே, அம்மாவை நினைத்துக் கொண்டான். எப்படிப்பட்ட துரோகமிது?. ரத்தம் கொதித்தது!.

உடனே, ‘JAIS’ அதிகாரிகள் வீட்டிற்குப் போய், அப்பா மதம் மாறிவிட்ட அத்தாட்சியைக் அம்மாவிடம் காட்டி, இந்து முறைப்படி சாங்கியம் செய்து, அடக்கம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சொல்லி உடலை அபகரித்துக்கொண்டு போகும் அட்டூழியத்தை எண்ணிப் பார்த்தான். தானும் அருகில் இல்லாத நிலையில் அம்மா அந்தத் துரோகத்தை / அபகரிப்பை எப்படித் தாங்கிக்கொள்வாரோ என்று பரிதவித்துப் போனான். ஊரே வேடிக்கைப் பார்க்கப் போகிற அவமானம் வேறு!. பிரதாப், பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

 அப்பாவை நினைக்கப் பற்றிக்கொண்டு வந்தது. அவர் மட்டும் உயிரோடிருந்தால் தானே அவர் முகத்தில் காறித் துப்பிவிடக்கூடும் என்று நினைத்துக்கொண்டான். யாரந்த ரெண்டாவது மனைவி?. மலாய்ப் பெண்ணா?., இந்திய முஸ்லீமா?. பிள்ளைகள் யாரும் இருப்பார்களோ?. இந்த வசதிக்குதான் இவர் நிரந்தரமாக இரவு வேளை செய்தாரோ? அம்மாகூட இதே வேலையை பகலில் செய்யும்படி பலமுறை வற்புறுத்தியும், பகலில் பெரிய அதிகாரிகளின் தொந்தரவு அதிகம் என்று சமாளித்தாரே?. இந்த மனுஷன், அப்பாவி அம்மாவை எவ்வளவு தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார்?.

‘ச்சீ!.. நீ செத்துப் போனதக் கேட்டு நா அப்பிடி அழுது துடிச்சேனேய்யா? பாவி மனுஷா!. நல்லா இருப்பியா நீ?. இந்த துரோகத்துனாலதான் உசுரு போறப்ப எந்த குடும்பமுமே பக்கத்துல இல்லாம இப்பிடி அநாத பொணமா செத்துத் தொலைச்சியா?. நா உனக்கு என்ன பாவத்த செஞ்சன்?. கடசீல ஊரே என்ன பாத்து சிரிப்பா சிரிக்க வெச்சிட்டியேய்யா?. வேவுமா உம் பொணம்?.’ – அம்மா சபித்துக் கொட்டி, மண்னை வாரியடிப்பாரோ?.

பிரதாப், வீடு வந்தடைந்தபோது சமய அதிகாரிகள் அம்மா கதற, கதற பிரேதத்தை சவ ஊர்தியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இறப்பின் வேதனைக்கு ஆறுதல் சொல்ல வந்த கூட்டமோ இப்போது அதிர்ச்சியில் உறைந்து போய் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. அம்மாவைச் சுற்றியிருந்த பெண்கள், இரக்கத்துடன் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். அதிகாரிகள், அத்தாட்சியைக் காட்டும்வரை அவளுக்கே அது மறந்துதான் போயிருந்தது. பத்து வருடங்கள் இருக்குமா?. நினைத்துப் பார்க்கவே விரும்பாமல் மறதிக்குள் புதைத்துப் போட்டு, மறந்துவிட்ட நம்பிக்கைத் துரோகம் அல்லவா அது!.

பிரதாப்பைப் பார்த்ததும் கட்டிப் பிடித்துக்கொண்ட அம்மா,

“பிரதாப், எவ்ளோ கெஞ்சியும் கேக்காம இந்த பாவிங்க அப்பாவோட பிரேதத்த தூக்கிட்டு போறாங்கடா. ஏதாவது செஞ்சி அவிங்கள போவ உடாம செய்யேன்.” என்று மன்றாடி அழுதார்.

அவன் அம்மாவைப் பார்த்தான். அவனால் அந்த அழுகையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.

‘ச்சே!. இந்த அம்மாவுக்கு கொஞ்சங்கூட வெக்கமே இல்லியா?. எப்பிடி இவ்ளோ பெரிய துரோகத்த தாங்கிக்கிட்டு உன்னும் இப்பிடி அழுவ வேற முடியிது?. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷனா?’

பிரதாப், ஆத்திரத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான். .

‘நல்ல காலம்டா!.. நீ வர்றதுக்குள்ளார அந்த சனியன வண்டீல ஏத்திட்டாங்க. இல்லாட்டி அந்தப் பாவி செஞ்ச துரோகத்துக்கு நீயே அந்த மூஞ்சில காறி துப்பியிருப்ப.. என்னால அப்பிடி செய்ய முடியிலியேடா..’ என்று அம்மா கதறியழுதிருந்தால் மனசு எவ்வளவோ ஆறியிருக்குமே என்று அவனுக்குத் தோன்றியது.

 பிணத்தைப் புதைக்கப்போகும் இஸ்லாமிய மயானத்தைக் கேட்டறிந்து அந்த ரெண்டாவது குடும்பம் யாரென்பதைத் தெரிந்துக்கொள்ள மனசு துடித்தது!.

பிரேதத்தைப் பறிகொடுத்த அம்மா, கணவனின் போட்டோவிடம் போய் சரணடைந்தாள். அவரையே இமைக்காமல் பார்க்கும் வசதியில் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். உடல், சுவரில் சரிந்து துவண்டது. உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது!. காமாட்சி விளக்கோ, தன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தது.

பிரதாப்பால் அம்மாவின் அஞ்சலியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியெல்லாமோ அழுது, ஆர்ப்பரித்துப் பத்தினிச் சாபம் விடுவாரென்று எதிர்ப்பார்க்கப்பட்டவள், அமைதியாக இருந்ததைப் பார்க்க அவனுக்கு வெறி பிடித்துக்கொண்டது. காமாட்சி விளக்கை ஓங்கி தட்டி விட்டு, அப்பாவின் படத்தை எடுத்து அஞ்ஜடியில் வீசியெறிந்தான். அதிர்ச்சியுடன் எழுந்து நின்ற அம்மாவைப் பார்த்துக் கத்தினான்.

“அம்மா, உங்களுக்கின்னா புத்தி கலங்கி போச்சி?. அந்த ஆளு என்ன காரியம் செஞ்சி வச்சிருக்காருன்னு உங்களுக்கு புரியிதா இல்லியா?. எந்த மலாய்க்கார்ச்சிக்கிட்ட போய் மாட்டிக்கிட்டு இப்பிடி திருட்டுத்தனமா மதம் மாறுனாரோ தெரியியல?. நீங்க என்னடான்னா இன்னும் போட்டோவ பாத்து ஊள வுட்டுக்கிட்டு இருக்கீங்க?. ச்சீ.. உங்களுக்கு வெக்கமா இல்ல?.”

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தைப் பார்த்து அம்மா பதறிப் போனாள். தன் கணவனின் மரணத்திற்கு இணையான அதிர்ச்சியை மகனின் வெறியாட்டம் கொடுத்ததைத் தாங்க முடியாமல் துடித்தாள்.

“ஐயோ!..” என்று அலறிக்கொண்டே வாசலுக்கு ஓடி, நொறுங்கிக் கிடந்த கணவனின் போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கண்ணாடித் துண்டுகள் சில தரையில் விழுந்து சிதறின. ‘பாவி!.. என்ன காரியம்டா செஞ்ச?.’ என்று முனகிக்கொண்டே தனது முந்தானையால் போட்டோவைத் துடைத்தபோது, சில கண்ணாடித் துணுக்குகள் விரல்களில் குத்திக் கொண்டன. ரத்தம் கொப்பளித்துச் சொட்டியது. கண்களில் திரண்ட ரத்தம், தன் நிறத்தை இழந்து வடிந்தது.

வெறிப் பிடித்துக்கிடந்த மகனைப் பார்த்து அம்மா, வேதனைப் பொங்கச் சொன்னாள்.

“டாக்டர் பிரதாப்?. அடச் சீ, நன்றி கெட்ட சனியனே!. எல்லாம் உன்னால வந்ததுடா!.”

மகன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் போட்டோவைப் பார்த்து அழுதபடியே அம்மா வீட்டிற்குள் சென்றாள்.

பிரதாப், அப்பாவின் போட்டோவை மார்போடு அணைத்துக் கொண்டு போகும் அம்மாவைக் குழப்பத்துடன் பார்த்தான்!.

[ வட்டாரச் சொல் – ‘JAIS’(1) – Jabatan Agama Islam Selangor (சிலாங்கூர் இஸ்லாமிய துறை) ]

ramjees.sa@gmail.com

    மேலும் வாசிக்க

    தொடர்புடைய பதிவுகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button