
1973
“ஏன் பைய்யா! எதுக்கு இப்புடி குட்டிபோட்ட பூனையாட்ட ஊட்டுக்குள்ளயே சுத்திகிட்டு கெடக்கிற? சைக்கிள எடுத்துகிட்டு சித்த நேரம் எங்கயாவுது வெளிய கிளிய போயிட்டு வாவேன்!”
புதிதாக புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவனோட ஒத்த வயதுப் பையன்கள் யாருமில்லை! அம்மாவும் அவனும் பழைய கதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் அம்மாவும் அவனும் நண்பர்கள் போல நிறைய விசயங்களை மனத்தடையின்றி பரிமாறிக் கொள்வார்கள். கடன் தொல்லை காரணமாக காட்டூரில் வாழ்ந்த சொந்த வீட்டை விற்றுவிட்டு, காலம் காலமாக வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறி காந்திபுரத்திற்கு வாடகை வீட்டுக்கு வந்த கொடுமையைப் பற்றி அம்மா புலம்பத் தொடங்கினார்!
“என்ன இருந்தாலும் சொந்த வீட்ல வாழற சந்தோசமும், சுதந்தரமும் வாடகை வூட்ல இல்லப்பா. அந்த வசதியும் சவுகரியமும் இனி வராதுப்பா. ரோட்டு மேல ஊடு, இருவத்திநாலு மணி நேரமும் மில்லுக்கு வேலைக்குப் போற ஜனங்க நடந்தும், சைக்கிள்லயும் போயிட்டும் வந்துட்டும் எப்பவும் ஜே ஜேன்னு இருக்கும். எதுக்கால இருந்த ஜார்ஜ் டீக்கடையில வெடிய வெடிய பாட்டைல டீ ஆத்தற சத்தம் ‘டர்ர்ர்ர்ர்ருன்னு’ நம்ம ஊட்டுக்குக் கேக்கும். பெருசா காசு பணம் இல்லீன்னாலும் ஊருக்குள்ள ஒரு மரியாதை, அக்கம் பக்கமெல்லாம் சுத்திச் சுத்தி வருசக்கணக்கா பழகுன சனங்க, அத்தனை அணுசரணையான மனுசங்க, நாலெட்டுல மார்க்கெட்டு, ஒரு பக்கம் புள்ளாரு கோயிலு, உன்னொரு பக்கம் மாரியாத்தா கோயிலு, இப்பப் பாரு இந்த வாடகை வீட்ல எத்தனையோ எடஞ்சலு” என்று பெருமூச்சு விட்டார் அம்மா!
அம்மாவின் புலம்பலை திசை திருப்புவதற்காக அவன் பேச்சை மாற்றுகிறான்.
“சொல்லு சொல்லு! தெனமும் வர்ற கீரைக்காரப் பாட்டி, நம்ம வாசலையொட்டிப் போடற நொங்குக் கடை, வெத்தலைக் கடை, புதன்கிழமையானா தவறாம வர்ற பொரிக்காரப் பெரியம்மா! அவங்க கொண்டார ருசியான சம்பாப் பொரியும், கடலை உருண்டையும், இப்ப நெனச்சாலும் நாக்குல எச்சையூறுதும்மா, அந்த ருசி வேற எங்க வாங்குனாலும் கெடைக்காது, அதையெல்லாம் நெனச்சுப் பாத்தா ஆசையா இருக்குதும்மா”.
“அது மட்டுமில்ல சாமி, அந்தக்காவ நீங்கெல்லாம் பெரியம்மான்னுதான கூப்புடுவீங்க. பொரி விக்க வந்த மனுசி தாயும் புள்ளயுமாப் பழகி, கூடப்பொறந்த பொறப்பு மாதிரி ஆயிருச்சு. பல நாளும் காலைல கொண்டாற சோத்தை நம்ம ஊட்லதான் வெச்சுட்டுப் போகும், மூனு மணிக்கு வந்து சாப்புடும். வேண்டாம் வேண்டாங்க உடாம நம்ம ஊட்டு கொழம்பு, காயெல்லாம் வெப்பேன் நானு. சாப்புட்டுட்டு சித்த நேரம் உக்காந்து சொந்தக்கதை சோகக்கதையெல்லாம் பேசிட்டு போகும். எது வாங்குனாலும் நான் காசு குடுத்துத்தான் எல்லாம் வாங்குவேன், அப்புடியும் பொறப்படரப்போ பொரி மூட்டைய இடுப்புல வெச்சுகிட்டு, கூடையத் தூக்கி தலைல வெக்கையில உங்கையில தனியா ஏதாவுது குடுத்துட்டுத்தான் போகும்… அப்புடியொரு பசக்காரப் பாவி. ஆமா, உனக்குப் புடிச்ச மணியக்காளோட இட்லியையும் கத்திரிக்கா பஜ்ஜியையும்… மறந்திட்டயேப்பா?”
“அதெப்புடிம்மா மறப்பேன், நல்ல நாவகமிருக்குதும்மா, அந்தக்காவோட இட்லியையும் சட்னியையும் மறந்தாலும் அந்தக்காவையும் அவங்கம்மா பாப்பம்மா பாட்டியையும் மறக்க முடியுமா? அவங்க ரெண்டு பேரும் தங்கமான மனுசிக இல்லையாம்மா? ரெண்டு பேருக்குமே எம்மேல கொள்ளை பிரியம். அந்தப் பாட்டியும், அந்தக்காவும் பேச்சுக்குப் பேச்சு சாமீ.. சாமீம்பாங்க, ஒரு நாளுகூட என்னைய பேரு சொல்லிக் கூப்புட்டதேயில்ல.. ஏம்மா, ஒரு வருசமாச்சுல்ல அந்தக்காவைப் பார்த்து?”
“ஆமாப்பா! நேத்து வந்த மாதிரி இருக்குது, வாற அமாவாசை வந்தா ஒரு வருசமாகப் போகுது. அந்தக்காவைப்[r91] பத்தி உனக்குக் கொஞ்சந்தான் தெரியும், நீ பொறந்தப்பத்தான் அந்தக்கா கல்யாணம் மூச்சிட்டு இங்க வந்தாங்க. அப்ப இருந்து எனக்கு பழக்கம், எந்த அவசர ஆத்தரமுன்னாலும் எங்கிட்டதான் ஓடி வருவா. ஒரு நல்லது கெட்டதுன்னா யோசனை கேக்கறதோ, ஒரு கைமாத்தோ, தேவையோ என்ன வேணுமின்னாலும் ‘அக்கா, உங்களைத்தான் நம்பீட்டிருக்கறே’ன்னு வருவா. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அவளுக்கு நெறைய்யா ஒதவி பண்ணிருக்கறேன்! ஏன்னா? அவளோட கையும் மனசும் அத்தனை சுத்தம். அல்லாரும் நல்லா இருக்கோணுமின்னு நெனைக்கற ஒரு மகராசி! நான்கூட ஒரு நேரம் இல்லேன்னாலும் ஒரு நேரம் ஏதோ சலிப்புல ஆரைப் பத்தியாவுது ஏதாவுது கொறை சொல்லிப் பொலம்புவன், அதுக்கு, ‘உட்டுத் தள்ளுங்கக்கா, அஞ்சு வெரலும் ஒரே மாதரையாவா இருக்குது? அதையெல்லாம் பெருசு பண்ணி ஓசனை பண்ணுனா நமக்குத்தான் மண்டையிடி, ஆகற வேலையப் பாருங்க’ன்னு சமாதானஞ் சொல்லுவாளே ஒழிய, ‘ஆமாக்கா அவிங்க அப்புடித்தா’ன்னு சொல்லி எனக்கு தூபம் போட மாட்டா. அதே மாதிரி அவளும் ஆரைப்பத்தியும் ஒரு நாளு, ஒரு பொழுது நாக்குமேல பல்லுப்போட்டு ஒரு பொல்லாப்பு பேச மாட்டா, அக்கம்பக்கம் ஆருக்கு என்னன்னாலும் ஓடிப்போயி உதவி செய்வா. கையில காசு பணமில்லேன்னாலும் ஒடம்பால ஒழைப்பா! தங்கமான மனுசி! தான் எத்தனையோ கஷ்டப்பட்டாலும் நல்லாப் பொழைக்கறவங்களைப் பாத்து ஒரு பொறாமை பொச்செரிப்பு இல்லாத மனசு அவளுக்கு, அவ புருசனும் அதே மாதிரிதான். அவிங்களை மாதிரி ஒரு புருசன் பொண்டாட்டிய ஒலகத்துல எங்கயுமே பாக்க முடியாது. அத்தனை ஒத்துமை. ரெண்டு பேருமே ஒருத்தரு ஒன்னை சொன்னா அதை அப்படியே கண்ணை மூடீட்டு செஞ்சிருவாங்க. மாரக்கா லைன்ல அவங்களுக்கு நாந்தான வாடகைக்கு ஊடு புடிச்சிக் குடுத்தன்”.
“ஓ! அப்படியா? இத எங்கிட்ட சொல்லவேயில்ல?”
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு கோதுமை புடைத்துக் கொண்டிருந்த அம்மா தொடர்ந்தார்…
“ஒரு நாளு பொழுதோட நேரம், நானும் தேவகியக்காவும் திண்ணையில உக்காந்து பேசிட்டிருந்தோம். நல்ல சாயங்கால நேரம், பாக்க லச்சனமா செவப்பா வாட்ட சாட்டமா வயசுப்பையன் ஒருத்தன் வந்து வாசல்ல நின்னுட்டு ‘அக்கா அக்கா’ன்னு கூப்புட்டான். ஆரப்பா அதுன்னு போயிக் கேட்டா, ‘அக்கா எம் பேரு சாமினாதனுங்க, என்ர சொந்த ஊரு மேட்டுப்பாளையமுங்க. பொன்னம்மக்காவுங்களைப் பாக்கணுமுங்க’ ன்னான்! ‘அட, அது நாந்தாஞ்சாமி. என்ன விசயம் இப்புடி திண்ணைல வந்து உக்காருன்னேன்’, ‘ஊரில ராஜம்மாக்காதான் உங்க ஊட்டு அடையாளஞ் சொல்லியனுப்பிச்சாங்க. எனக்கு கலியாணமாயி ஒரு மாசந்தாங்காச்சு. அங்க ஒரு உருளைக் கெழங்கு மணிடியிலதான் வேலைக்குப் போயிட்டிருக்கறன்! இங்க அக்ராரத்துல ஒரு வக்கீலூட்ல கார் டைவரு வேலை கெடைச்சிருக்குதுங்க. இங்க பக்கத்துல வாடகைக்கு சின்னதா ஒரு ஊடு கெடைச்சா பொண்டாட்டியையும் கூட்டீட்டு குடி வந்தரலாமுன்னுங்க. முன்னப்பின்ன தெரியாம போயி வாடகைக்கு ஊடு கேட்டா ஆருங்க குடுப்பாங்க? மேட்டுப்பாளையத்துல ராஜம்மாக்கா ஊட்டுக்கு பக்கத்தாலதாங்க இப்ப குடியிருக்கறம். இப்புடி இங்க குடி மாத்தி வரோணுமின்னு அவங்ககிட்ட சொன்னப்ப, என்ற தங்கச்சி அங்கதானிருக்கறா, நாஞ்சொன்னேன்னு போயி சொல்லுன்னு உங்க ஊட்டு அடையாளஞ் சொல்லி அனுப்பிச்சாங்க’ ன்னான். நம்ம ஊட்டுக்கு பக்கத்துல மாரக்கா லைன்ல ஒரு வாரத்துக்கு மின்னதான் ஒரு ஊடு காலியாச்சுங்கறது நாவகம் வந்துச்சு. ஒடனே கையோட கூட்டீட்டுப் போயி பேசி ஏற்பாடு பண்ணியுட்டுட்டு வந்தன். அடுத்த வாரமே குடி வந்தாங்க. அவன் பொண்டாட்டி மணி அவனை விடத் தங்கம். அப்பப்ப இங்க வந்து சித்த நேரம் எங்கிட்ட பேசீட்டிருப்பா. அந்த சித்த நேரங்கூட சும்மா இருக்க மாட்டா, எனக்கு ஏதாவது கை வேலை செஞ்சு குடுப்பா. கீரை ஆஞ்சு குடுப்பா, வெங்காயம் தொலிச்சுக் குடுப்பா. அப்ப உனக்கு ஒரு வயசிருக்கும் வந்த ஒடனே உன்னையத் தூக்கி இடுப்பில வெச்சுகிட்டுப்போயி கடையில ஏதாவது வாங்கிக் குடுப்பா. கொழந்தைகன்னா அத்தனை பிரியம் அவுளுக்கு. ஆனா, கலியாணமாயி ரெண்டு வருசமா குழந்தையே பொறக்கலேன்னு புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் தீராத வெசனம். கோயில் கோயிலாப் போனாங்க. அப்புடி ஒருக்கா மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலுக்குப் போனப்ப, அங்கதான் பாப்பம்மாளைப் பாத்திருக்காங்க. புருசன் பொண்டாட்டி கட்டுச்சோத்தை அவுத்து சாப்படப்போன நேரத்துல மண்டபத்துல உக்காந்துட்டிருந்துதாமா அந்தம்மா. பிறவியிலயே ரெண்டு கண்ணும் இல்லாத பொம்பளை. ஐயோ பாவமேன்னு ‘அம்மா புளிசோறு கொஞ்சம் சாப்புடுங்க’ன்னு ஆன வரைக்கும் சொல்லிப் பாத்துருக்காங்க! ‘இல்ல சாமி நான் ஆருகிட்டயும் கையேந்தி வாங்கி சாப்படறதில்ல. இங்க கோயில்ல கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணுவன், தட்டம் சொம்பு மணியெல்லாம் வெளக்கிக் குடுப்பன். சாமிக்கு படைக்கறதுல எனக்கு ரண்டு வாயி சோறு குடுப்பாங்க, அதே எனக்கு தாராளம்’னு சொல்லுச்சாம். அப்படியே உக்காந்து ரொம்ப நேரம் பேசிருக்காங்க! அது தன்ற கொடுமைய சொல்லீருக்குது. பொறந்தபோதே ரெண்டு கண்ணும் இல்லை. கண்ணு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டு குழிகதானிருந்துச்சு! புள்ளையே பெறாம மலடியாயிருந்தக் கூட பரவால்ல, இப்புடி கண்ணில்லாத குருட்டுப்புள்ளைய, அதுவும் பொட்டப்புள்ளையப் பெத்துட்டயேடி கழுத முண்டையின்னு சொல்லி, அவங்கப்பங்காரன் பொண்டாட்டியையும் புள்ளையையும் அம்போன்னு உட்டுப்போட்டுப் சொல்லாமக் கொள்ளாம எங்கயோ போயிட்டானாம். அம்மாவும் மகளும் ஏதோ கூலி வேலை செஞ்சு பொழச்சிட்டிருந்திருக்காங்க! இதுக்கு பதனாறு வயிசிருக்கும்போது அந்த அம்மாளுக்கு ஏதோ சீக்கு வந்து புள்ளைய அனாதையா உட்டுப்போட்டு செத்துப்போச்சாம். சொந்த பந்தம் எல்லாமிருந்தும் ஆரும் கண்டுக்கலயாம். கண்ணில்லேங்கறதோட பொம்பளை புள்ளையாச்சே. அதுனால கோயில்ல இருந்தா ஒரு பாதுகாப்புன்னு சொல்லி அங்க வந்து சேந்து காலத்தை ஓட்டிருக்குது”.
“அப்ப பாப்பம்மா பாட்டி மணியக்காவோட சொந்த அம்மா இல்லையா?. மணியக்கா அம்மா அம்மான்னு பாசமா பாத்துக்கறதும், அந்தக்காவோட புள்ளைக ரெண்டும் பாட்டி பாட்டின்னு அவங்க மடியிலயே கெடந்ததயெல்லாம் பாத்துட்டு நான் அந்தக்காவோட சொந்த அம்மான்னு நெனச்சிருந்தேம்மா!”
“ஆமாப்பா, இவங்க ரண்டுபேரும் அந்தம்மாவை கோயில்ல பாத்தப்போ என்ன நெனச்சாங்களோ என்னமோ… ‘பேசாம, நீங்க பொறப்பட்டு எங்ககூட வந்திருங்கம்மா! நாங்க ரெண்டுபேருமே அப்பா அம்மா இல்லாத அனாதைகதான். நீங்க எங்குளுக்கு ஆதரவா இருங்க, நாங்க உங்களுக்கு ஆதரவா இருக்கறோம்னு கூப்பிட்டிருக்கறாங்க. நானே பூமிக்கு பாரமா இருக்கறேன் சாமி, இதுல நான் உங்ககூட வந்தா உங்குளுக்கும் தொந்தரவு, நான் எங்கயும் வருல சாமின்னு மொதல்ல மாட்டவே மாட்டன்னு சொல்லிருக்குது. நாங்க உங்குளுக்கு ஒதவி பண்ணக் கூப்புடுலம்மா, நீங்க எங்களோட இருந்தா எங்குளுக்கு ஒரு ஆதரவா இருப்பீங்கன்னுதான் கூப்படறோம்னு சொல்லிருக்காங்க. மொதல்ல, இவங்க குடுத்த ஒரு வாயி சோத்தைகூட வாங்கித் திங்க மாட்டேன்னு சொன்ன பொம்பளை பொறகு என்ன நெனச்சுதோ என்னமோ தெரியில, அனாதைக்கு, அனாதைகதான ஆதரவுன்னு நெனச்சுதோ? என்னமோ? இவங்களோடயே பொறப்புட்டு வந்திருச்சு. பதனேழு பதனெட்டு வருசமிருக்கும். நல்லா தெடமா இருக்கற அப்பனாத்தாளையே ஊட்ல வெச்சுக்க யோசனை பன்ற காலத்துல யாரு எவருன்னு தெரியாம கோயில்ல பாத்த கண்ணு தெரியாத ஒரு பொம்பளையக் கூட்டீட்டு வந்து இத்தனை வருசமா பெத்த தாயி மாதிரி பாக்கற மனசு யாருக்கு வரும்? அதுனாலதான் நானெப்பவஞ் சொல்லுவேன், காசு பணமில்லேன்னாலும் மனுசருகிட்ட பிரியங்காட்டறதில மணியும் சாமிநாதனும் ரண்டுபேரும் கோடீஸ்வரங்கோன்னு!”
“அது செரி, அதென்ன இட்லிக்கார மணியக்கா?”
“கல்யாணமாயி ரண்டு வருசமா கொழந்தையில்லாம இருந்த மணிக்கு, பாப்பம்மா வந்த ராசியோ என்னமோ வருசையா ரெண்டு புள்ளைக பொறந்துச்சு. ஒரு ஆளு வருமானத்துல ஊட்டு வாடகை குடுத்து அஞ்சு பேரு பொழைக்க வேண்டாமா? எங்கிட்ட வந்து அப்பப்ப பொலம்புவா. எங்கயாவுது ஊட்டு வேலைக்குப் போறேன்னா. புருசன் டிரைவரா இருக்கற அய்யிரூட்லயே கேக்கலாமான்னு இருக்கறேன்னா! இல்லாதப்பட்டவ, படிக்காத பொம்பளைக்கு என்ன வேலை தெரியும்? ஊட்ல செய்யற வேலையை நாலு ஊடு செஞ்சா ஏதோ கொஞ்சம் காசு கெடைக்கும்னு பாத்தா. நாந்தான் சொன்னன் ‘மணி! ஊட்டு வேலைக்குப் போறதுன்னா காலைல ஆறு மணிக்கெல்லாம் வரோணும்பாங்க, ஊட்ல சின்னச் சின்ன புள்ளைகளை வெச்சுகிட்டு காலலைல அதுகளுக்கு ஏதாவது செஞ்சு குடுத்து பள்ளிக்கோடத்துக்குத் தாட்டியுடோணும். நானொரு யோசனை சொல்றேன், ஊட்லயே ஒரு இட்லிக்கடையப் போடு. இந்த ஏரியாவுலயே ஆருமே ஊட்ல இட்லி சுட்டு விக்கறதில்ல. நல்ல வேவாரமாகும், ஊட்டு வாசப் படியைத் தாண்டாம உக்காந்த எடத்துலயே கவருதையா நாலு காசு சம்பாரிக்கலாம். உங்களுக்கும் காலைல அல்லாத்துக்கும் வயித்துப் பாட்டுக்கு ஆச்சு. பெரிய மொதல் போடற தொழிலும் இல்லையிது. ஒடம்பால கஷ்டப்பட்டு ஒழைக்கோணும்னு சொன்னதுக்கு, ‘அதுக்கென்னக்கா? நம்ம குடும்பத்துக்கு பாடுபடறதுக்கென்ன’ன்னா. அடுத்த நாளே ஊட்டுக்காரம்மாகிட்ட கூட்டீட்டுப் போயி கேட்டன். அந்த மகராசியும் தாராளமா நடத்து, இந்த ஊட்டை நானென்ன தலையிலயா கட்டீட்டு கொண்டு போகப் போறன்னு சொல்லுச்சு. அதோட தாடிக்காரன் மளிகைக்கடையில சொல்லி ஒரு மூட்டை இட்லி அரிசியும், பத்துப்படி உளுந்துப் பருப்பும் நம்மூட்டுக் கணக்குல கடனுக்கு வாங்கிக் குடுத்தேன்! மார்க்கெட்டுக்குக் கூட்டிட்டுப் போயி பெரிய இட்லிப் பாத்தரம், மாவு கரைச்சு வைக்க பாத்தர பண்டமெல்லாம் வாங்கிட்டு வந்தோம்.” அம்மா சொல்லச் சொல்ல அவன் கண்முன்னே காட்சிகள் விரிந்தன!
காட்டூரில் அவர்கள் வசித்த வீட்டினருகே ஒரு காம்பவுண்டு வீடு. மாரக்கா வூடு. சின்னதும், பெருசுமாக திட்டமில்லாமல் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள். சின்னச் சின்னதாக இருக்கும் சில ஒற்றை அறைகள், அநியாயத்துக்கு ஒரு ஆள் நீட்டிப்படுக்கும் அளவிற்குத்தான் இருக்கும். மாத வாடகையாக பத்து ரூபாய்.
அந்தக் காம்பவுண்டு வீட்டில்தான் ‘மணியக்கா’ இட்லி வியாபாரம். காலை நேரங்களில், வியாபாரம் தூள் பறக்கும். ஆனால், மணியக்கா கடைசி வரையில் இட்லிக்கடையில் சம்பாதித்து எந்தக் கோட்டையையும் கட்டவில்லை! சிவந்த, பூசினாற்போன்ற உடல், எப்போதும் புன்னகை மாறாத சிரித்த வட்ட முகம், பெரிய குங்குமப் பொட்டு, காதில் எண்ணையிறங்கின ஒரு தோடு, வலது மூக்கில் ஒரு மூக்குத்தி, வெளுத்துப்போன நூல் சேலை, கழுத்தில் அழுக்குப் படிந்த தாலிக்கயிறோடு…..எப்போதும் வியர்வை வழியும் முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டே வேலை செய்யும் மின்னல் வேகம்…
அவரையடுத்து… எப்போதும் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கைகளால் ஏதாவதொரு வேலையைச் செய்தபடியே இருக்கும் அமைதியே உருவான பார்வையற்ற பாப்பம்மா!
வீட்டுக்காரம்மாவே கொடுத்த அனுமதியால் குடியிருந்த வீட்டுத் திண்ணையிலேயே ஒரு ஒத்தையடுப்பும், ஒரு ஓவிலியடுப்பும் பதித்து இட்லிப்பானையை வைத்தபோது அதுவே கடையாச்சு! நாலுபடி அரிசியும், ஒரு படி உளுந்தும் ஊரப்போட்டு மத்தியாணம் மூனு மணிக்கு கொழவியப் புடிச்சா அஞ்சு மணியாகும் மாவாட்டி முடிக்க. ஆட்டிய மாவை கரைச்சு வெச்சிட்டுப்படுத்து காலைல ஆறு மணிக்கு அடுப்பைப் பத்த வெச்சு திண்ணைல உக்கார்ற மணி!. பத்து மணி வரைக்கும் ஒரு சர்க்கஸ்காரிதான்! சுத்திச்சுத்தி மில்லுக்கு வேலைக்குப்போற ஜனங்கதான் எல்லாம். காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு ஏதோ ஒரு சோத்தை ஆக்கி புள்ளைகளுக்கு வெச்சுட்டு ஆம்பளை பொம்பளைக மத்தியானத்துக்கு சாப்படறதுக்கு தூக்குபோசில போட்டெடுத்துட்டு காலைல ஆறேமுக்காலுக்கு மில்லு சங்கு ஊதும்போது ஓட்டமா ஓடுற ஜனங்க, சாயந்தரம் நாலரை மணிக்கு கண்ணு காது மூக்கு தலையெல்லாம் பஞ்சோட சக்கையா ஊட்டுக்கு வருவாங்க. அதுக்குப்பொறகு அரிசி உளுந்து ஊறப் போட்டு, ஆட்டி இட்டிலி தோசையெல்லாம் எங்க செய்வாங்க! எல்லா வீட்டுலயும் வருசா வருசம் தீவாளிக்கு காலைல இட்லி சுட்டுக் கறிக்கொழம்பு வெக்கறதுதான் வழக்கம். வருசம் பூரா கொழந்தைகளுக்கு வேணுமின்னா இட்லி வாங்கிக் குடுப்பாங்க. அக்கம் பக்கம் நாலு வீதில ஆருமே இட்டிலி சுடறதில்ல. அதுனால இந்த வேவாரம் தொடங்குனதால மணியக்காவுக்கு ஊட்டுச் செலவுக்கு காசுமாச்சு. அவங்க அஞ்சு ஜீவனுக்கு ஒரு நேர வகுத்துப் பாடும் ஆச்சு!
அவர்கள் வீட்டில் காலை நேரத்தில் டிபன் செய்யாதபோது இட்லி வாங்க அவன்தான் போவான்! எப்போதும் சிறிதுநேரம் காத்திருந்தே தீர வேண்டும்.. அவன்மீது எப்போதும் தனி பாசம் காட்டும் மணியக்கா கெஞ்சும் குரலில், ‘அஞ்சு நிமுசம் கண்ணு, இந்த அடசல்ல எடுத்துக்குடுக்கறன் இப்புடித் திண்ணைல உக்காரு சாமீ’ என்பார்கள்! அந்த சூழல் ஒரு காட்சியாக இப்போதும் கண்களுக்குள்..
திகு திகுவென எரியும் விறகு அடுப்புகள். ஐந்து நிமிடத்திற்கொருமுறை விறகைக் கலைத்து உள்ளே தள்ளிவிட வேண்டும். இடையிடையே புகையும் அடுப்பை ஊதாங்குழல் (புல்லாங்குழல் போல) கொண்டு கண்கள் எரிய, கண்ணீர் வழிய.. ஊத வேண்டும். ஒரு அடுப்பில் வெந்த இட்லியை வெறும் விரலால் குத்திப் பார்த்து, வெறும் கையாலேயே வெடுக்கென எடுத்து பராக்குத் தட்டில் கவிழ்த்துக் கொட்டிவிட்டு அது ஆறுவதற்குள் மளமளவென அடுத்த தட்டிற்கு துணிவிரித்து அளவளவாக மாவு ஊற்றப்படும். குப்புறப் படுத்துக் கொண்டிருக்கும் இட்லிகளுக்கு முதுகில் இருக்கும் வேட்டித் துணியின் மீது அளவாகத் தண்ணீர் தெளித்து பதனமாக பிய்ந்து போகாமல் ஒவ்வொன்றாக எடுத்து குண்டாவில் அடுக்கவேண்டும். டக் கென இட்லி பாத்திரத்தில் ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றி வேகவைக்க வேண்டிய இல்லித் தட்டை உள்ளே வைத்து பக்கென மூடி வைத்து வாடிக்கையாளர்களின் தேவையைத் தெரிந்து அவர்கள் கொண்டுவரும் பாத்திரங்களில் கேட்கும் இட்லிகளை எண்ணி வைத்து விட்டு, சிறு கிண்ணங்களில் சட்னியைப் போட்டுக் கொடுத்து சில்லரையை வாங்கி காலடியில் கிடக்கும் பிசுக்குப் பிடித்த ‘சாக்லேட்’ டப்பாவுக்குள் போட்டுவிட்டு அடுப்பை ஊதுவார்! வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குதான் மூச்சு வாங்கும்…சில நாட்களில் கையில் காசில்லாமல் கடனுக்கு இட்லி கேட்டுக் கொண்டு வரும் பிள்ளைகளிடம் ஒரு நாளும் இல்லையென்று மணியக்கா சொன்னதில்லை. அவர்கள் கேட்பதை முகம் சுளிக்காமல் தூக்குபோசியில் போட்டுக் கொடுத்து விடும். அதற்கு கணக்கு எழுதவும் மாட்டார், அடுத்தமுறை வரும்போது அவர்களாகக் கொடுத்தால் உண்டு. அது போக வயசான பெருசுக ஒன்னு ரெண்டு அழையா விருந்தாளிகளா வந்து வாசல்ல உட்கார்ந்திருக்கும். அவர்களிடமும் காலணா காசு வாங்காது. ஆமாம், அந்த மகராசி மணியக்கா எப்போதும் மாறாத இன்முகத்தோடுதான்……
பக்கத்திலேயே சற்றுத்தள்ளி சுவரோடு சாய்ந்து ‘பாப்பம்மா’ உட்கார்ந்திருப்பார்! ஐம்பது வயதிருக்கும். குள்ளமான உருவம், கன்னங்கள் இரண்டும் ஒட்டிப்போய் ஒல்லியான உருவம், இருநிறம், நரைத்தமுடி, சின்ன குடுமி, வெளுத்த நூல் சேலை. ஆனால், கண்கள் இருக்கும் இடங்களில் இரண்டு குழிகள் மட்டும்!
அவர் எப்போதுமே அப்படி சிலைபோல அதே இடத்தில்தான் உட்கார்ந்திருப்பாரோ என்று பல நேரங்களிலும் தோன்றும். ஆனால், மற்ற யாருக்கும் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வுதான் காரணம் என்று பிறகு தெரிந்தது.. சுற்றிலும் எந்த விதமான அரவங்களும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நேரங்களில் மட்டுமே இருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று தனது காரியங்களை செய்து கொள்வார். மற்றபடி அந்த சுவரோடு சுவராக சாய்ந்து அவர் உட்காரும் இடம்தான். குழந்தைகள் கூட அந்த இடத்தில் போய் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஏதாவது செய்து கொண்டிருப்பார். வெங்காயம் உரிப்பது, காய் கறிகள் நறுக்குவது, தேங்காய் சிரவுவது, துவைத்த துணிகளை மடித்து வைப்பது, மணியக்காவின் பெண்களுக்கோ, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கோ தலை சீவி, சடை பின்னி விடுவது.. எந்தக் குழந்தையையும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்! எல்லாருமே அவருக்கு சாமி, கண்ணூ, தங்கம் தான்.. அந்தக் காம்பவுண்டு வீட்டில் இருக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர் ‘பாட்டி’ ! பெரியவர்களுக்கு அவர் பாப்பக்கா!
அவனுக்கென்னவோ அவர் ஒரு அசாதாரணமான மனுஷியாக தோன்றினார். பிறவியிலிருந்தே பார்வையில்லை, ஆனால், சின்ன சலனத்தைக் கூட துல்லியமாக கவனித்து விடுவார். யாரோடும் எதற்காகவும் முகம் சுழிப்பதைப் பார்க்க முடியாது, தள்ளி நிற்கின்ற மனிதருக்குக் கூடக் கேட்காததுபோல அமைதியான பேச்சு. ஆனால், .தனது எல்லா வேலைகளையும் தானே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் உதவி செய்து…யாரோடும் அதிர்ந்து பேசாமல் தேடிப்போகும் எல்லாக் குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான அன்போடு உரையாடுகின்ற காட்சியே நெகிழ்ச்சியாக இருக்கும்! அம்மாவிடம் அடி வாங்கும் குழந்தைகள் ஓடி வந்து தஞ்சம் புகுவது அவரிடம்தான். அழுதுகொண்டே ஓடி வரும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டு, ‘ ‘போச்சாது… சாமீ போச்சாது சாமீ’ என்று அவர் அந்தக் குழந்தையை சமாதானம் செய்வதே அத்தனை அழகு. அதைப் பார்க்கும் அம்மாக்கள், கோபத்தோடு கையில் கொண்டு வந்த விசிறிக்காம்பை மறைத்துக் கொண்டு வீட்டிற்குள் போய் விடுவார்கள். எல்லா நாட்களிலும் இரவு நேரத்தில் தாய்க் கோழியினை சுற்றியிருக்கும் குஞ்சுக் கோழிகளைப் போல அவரிடம் கதை கேட்பதற்காக குழந்தைகள் எல்லாம் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு நாள், ஒரு பொழுது தனது குறை பற்றி யாரோடும் புலம்பவே மாட்டார். அருகில் யாரும் இல்லாத நேரங்களில் இரண்டு கைகளையும் கோர்த்து தன் மடியில் வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி தன்னுடைய இருண்ட உலகத்தில் தனித்து உட்கார்ந்திருப்பார்.
பழைய கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்த அவனுக்கு ‘பாப்பம்மா பாட்டி’யையும் ‘மணியக்காவையும்’ ஒரு நடை போய்ப் பார்த்து வரலாமே? எனத் தோன்றியது. ஆனால், இவ்வளவு நாட்கள் போகாமல் இப்போது போவதற்கு கொஞ்சம் தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. போனால், ‘இப்பத்தான் வழி தெரிஞ்சுதா சாமீ?’ என்று கேட்டால் என்ன சொல்வதென்று சின்னதாக ஒரு கூச்சம், யோசித்தான். அம்மாவிடம் கேட்டபோது, ‘போயிட்டு வாப்பா, ரெண்டு பேத்தையும் நான் ரம்பக் கேட்டேன்னு சொல்லு, நீ போனீன்னா அவங்க ரண்டுபேரும் அத்தனை சந்தோசப்படுவாங்க’ என்றார். அவன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்கினான்! முக்கால் மணி நேர பயணத்திற்குப்பிறகு நீண்டு கிடந்த ரங்கக் கோனார் வீதியைக் கடந்து நஞ்சக் கோனார் வீதிக்குள் நுழையும் முன்னரே உள்ளே போனால் என்ன பேசுவதென்று மனதிற்குள் சிறிதாக ஒத்திகை பார்த்துக் கொண்டான். மணியக்கா வீட்டின் முன் சைக்கிளை ஸ்டேண்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே போனான்! கடை முடிந்து ஜலதாரை நிறைய பாத்திரங்களைப்போட்டு விளக்கிக் கொண்டிருந்தார் மணியக்கா!
“அக்கா.. நல்லாருக்கீங்ளா..?”
நிமிர்ந்து பார்த்த மணியக்கா ஒரு நிமிசம் திகைத்தார்.
“அக்கா.. தெரிலீங்ளா? பொன்னம்மக்கா மகன்..!”
“அய்யோ! அதென்ன சாமீ அப்புடிச் கேட்டுட்ட?” என்று கூறியபடியே கையிலிருந்த பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு அவசரமாக அவசரமாக கையைக் கழுவிக் கொண்டு ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி..மலர்ந்த முகத்துடன், “அய்யோ! கண்ணூ! சத்தியமா ஒரு நிமிசம் எனக்கு அடையாளமே தெரில சாமி. அப்பறம் ‘அக்கா தெரிலீங்களான்ன உன்ற கொரலக் கேட்டுத்தான்… நல்லா மளமளன்னு வளந்துட்ட. வா வா! அம்மா நல்லாருக்கறாங்களா சாமீ?”
“நல்லாருக்காங்கக்கா.. இந்த வழியா வந்தனா…ரொம்ப நாளாச்சே, அப்படியே உங்களையெல்லாம் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன். நீங்க எப்படியிருக்கீங்க? கோகிலா, அமுதா எல்லாம் நல்லா இருக்காங்களா?“
“இத்தன நாளு கழிச்சு, இப்பவாவுவது வழி தெரிஞ்சுதே உனக்கு. அல்லாரும் நல்லா இருக்கறம் சாமி, உக்காரு இப்படி. நீயெப்புடி இருக்கற? அம்மா அப்பாவெல்லாம் நல்லா இருக்கறாங்களா? எங்களையெல்லாம் ஒரேயடியா மறந்துட்டீங்க இல்ல?” என்று எதிர்பாராத சந்தோஷத்தால் ஏற்பட்ட பரபரப்பில் பேசிக் கொண்டே அவசரமாக வீட்டிற்குள் ஓடிப்போய் ஒரு பாயை எடுத்துக்கொண்டு வந்து திண்ணையில் விரித்தார்!
“பாயெல்லாம் ஒன்னும் வேண்டாங்க்கா நானென்ன ஒரம்பரையா?“ என்று சொல்லி திண்ணையில் வெறும் தரையிலேயே உட்கார்ந்து கொண்டான். மணியக்கா உள்ளே போய் ஒரு செம்பில் தண்ணீரும் காலி டம்ளரும் கொண்டு வந்து டம்ளரில் தண்ணீரை ஊற்றி அவனிடம் நீட்டிக்கொண்டே, “இத்தன நாள் கழிச்சு ஒரம்பரையாட்ட வந்திருக்கற உனக்கு சாப்படறதுக்குக் குடுக்ககூட ஊட்ல ஒன்னுமில்லயே…. இரு சாமி, காப்பி போட்டுட்டு வாறேன்”. என்று சொல்லி கையை ஊன்றி எழப் போனவரிடம்….
“அக்கா உக்காருங்க ஒரு நிமிசம். பாட்டியை எங்கக்கா காணோம்? எங்க போனாங்க? பாட்டி எப்டிக்கா இருக்காங்க?.” என்றபடி பாப்பம்மா பாட்டி எப்போதும் உட்கார்ந்திருக்கும் சுவர் ஓரத்தைப் பார்த்தான். அவர் எப்போதும் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து அந்த இடம் மழமழவென்று பழுப்பு நிறத்தில் ஏற்பட்ட சுவர் அடையாளம் ஒரு ஆள் உட்கார்ந்து இருப்பதைப் போலவே இருந்தது.
உள்ளே நுழைந்த மணியக்கா தயங்கி நின்று அவனைத் திரும்பிப் பார்த்து அவனருகே வந்தார். ஒரு சிறு மெளனம். கண்கள் கலங்க நின்ற மணியக்கா, “பாட்டி போயி மூனு மாசம் ஆச்சு கண்ணு. ஒரு காச்சலுன்னு சொல்லி ரெண்டு நாளு பல்லுல பச்சத்தண்ணி படாம படுத்துக்குச்சு. டாக்டர் கிட்டப் போலாமுன்னு ஆன வரைக்கும் கூப்புட்டுப் பாத்தம், வர மாட்டேன்ருச்சு. ஒன்னும் வேண்டாஞ்சாமி ரண்டு நாளைக்கு ஒன்னும் சாப்பிடாம வயிறு காஞ்சா செரியாப் போகும்னு சொல்லிச்சு. ரெண்டா நாளு காலைல மூச்சுப்பேச்சு இல்ல. மகராசி ஆருக்கும் எந்த தொந்தரவும் குடுக்கல.. போயி சேந்துருச்சு. இப்ப நாந்தான் ஆருமில்லாத அநாதையாப் போயிட்டன்… எங்களையெல்லாம் இப்புடி பொசுக்குன்னு உட்டுட்டுப் போயிருச்சுப்பா”. இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு ஓவென அழுத அவரை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி தவிப்போடு எழுந்து நின்றான். ஒரு நிமிடம் போனதும் தானே சுதாரித்துக் கொண்டு, ”ஆருமில்லாத தனி பொம்பளையா இருக்குதே, நாம அதுக்கு ஆதரவு குடுக்கலாமின்னுதான் கூட்டீட்டு வந்தன்! ஆனா, அதுதான் கடைசி வரைக்கும் எனக்கும் எங்குடும்பத்துக்கும் ஆதரவா இருந்துச்சுப்பா. என்னைப் பெத்தவ உசுரோட இருந்திருந்தாக்கூட என்னையும் என் குடும்பத்தையும் இத்தனை பாசமாப் பாத்துருக்க மாட்டா. வயித்துக்கு சோத்தைத் தவுர அதுக்கு நான் எதுவுமே செய்யுல சாமி. நல்லால்லைன்னு படுத்தப்பக்கூட ஆன வரைக்கும் கெஞ்சிப் பாத்தன், ஆசுபத்திரிக்குப் போலாம் வாம்மான்னு. எனக்கொன்னுமில்ல சாமீன்னு சொல்லீட்டு தலையோட போத்திப்படுத்த மகராசிக்கு…. அப்புடியே தூக்கத்துலயே உசுரு போயிருச்சு…….ஒரு நாளு ஒரு பொழுது ஒரு சலிப்பு சங்கடமிருந்ததில்ல, ஒரு கோபம் தாபம் இருந்ததில்ல, அக்கம்பக்கம் ஆருகிட்டயும் நாக்குமேல பல்லுப்போட்டு என்னப்பத்தி ஒரு வாத்தை கொறை சொன்னதில்லை. ஆசைப்பட்டு ஒருநாக்கூட எனக்கு இது வேணும், அது வேணுமின்னு கேட்டதில்லப்பா. நீ சின்னப் பையன் உனக்கு சொன்னாப் புரியாது. ஒரு பொம்பளையாப் பொறந்து வாழ்க்கைல எந்த சொகத்தையுமே அனுபவிச்சதில்லப்பா அது. ஆனா, ஒரு நாளு கூட நான் இப்புடிப் பொறந்துட்டனேன்னு ஆருகிட்டயும் ஒரு வாத்த ஒரு சொல்லு சொல்லிப் பொலம்புனதில்ல,” சொல்லச் சொல்ல தேம்பியழுதபடி முந்தானையால் கண்களையும், மூக்கையும் துடைத்துக் கொண்டார்! நம்மை நேசிப்பவர்களையும், நமது மீது பாசமானவர்களையும் பார்க்கும் போதுதானே துக்கம் பீரிட்டுக் கொண்டு வருகிறது.
எப்போது கலகலவென்று பேசுகிற அவனால் என்ன பேசி அவருக்கு ஆறுதல் சொல்வதென்று புரியாமல், ஒன்றுமே பேசத் தோன்றாமல் குழம்பிப் போய் அமைதியாக உட்கார்ந்திருந்தான், கனத்த மௌனம்தான் அந்த இடத்தை இட்டு நிறைத்தது. என்ன வாழ்க்கை இது? சிலருக்கு மட்டும் வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடுமையும், வேதனையும் இழப்பும் நிறைந்ததாக அமைகிறது என்று யோசித்தபோது மிகுந்த மனச் சோர்வாக இருந்தது அவனுக்கு.
“செரிக்கா….இன்னொரு நாளைக்கு அம்மாவையும் கூட்டீட்டு வரேன்க்கா…!” என்று சொல்லி எழுந்தான்.
“அய்யோ இரு கண்ணூ…. இத்தனை நாளு கழிச்சு வூட்டுக்கு வந்த பையன் ஒரு வாய் காப்பிகூட குடிக்காமப் போறயே உக்காரு சாமி..!” என்று அவன் கைகளை பற்றிக் கொண்டு நின்றார்.
சுவரில் இருந்த அந்தப் பழுப்பு நிற அடையாளம் அவனை பார்த்து இரண்டு கைகளையும் தூக்கி அவனை ஆசீர்வதிப்பதுபோல ஒரு பிரம்மை ஏற்பட்டது அவனுக்கு. அவனையறியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்காக மணியக்காவின் கைகளை விடுவித்துக் கொண்டான். ”அக்கா, அண்ணனையும் புள்ளைகளையும் கேட்டேன்னு சொல்லுங்க, இன்னொரு நாளைக்கு வர்றேன்” என்று சொல்லி விட்டு மெல்ல வெளியேறினான்… “அம்மாவை ரொம்பக் கேட்டேன்னு சொல்லு சாமி! இந்த நேரத்துல அம்மா இங்க இருந்திருந்தா எனக்கு எத்தனையோ ஆறுதலா இருந்திருக்கும்” என்று உடைந்துபோன சப்தத்தில் அந்த ‘அன்னபூரணியின் குரல்’ அவன் பின்னால் கேட்டது!
சைக்கிளில் ஏறி அமர்ந்து மிதிக்கத் தொடங்கியபோது தோன்றியது. இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ? இருந்திருந்தால், அந்த அன்பு தெய்வம் பாப்பம்மா பாட்டி தனது நினைவுகளிலாவது வாழ்ந்து கொண்டிருந்திருப்பாரே என்று தோன்றியது அவனுக்கு.



