
மண்டபத்தின் முன் வந்து அப்பொழுதுதான் நிறுத்தப்பட்ட விசையுந்தின் பின்னிருக்கையிலிருந்து இறங்கினான் பரத். யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனின் ஒரு கை காதுடன் அழுந்த அலைபேசியைப் பிடித்திருக்க, இறங்கி விடாமலிருக்கும் பொருட்டு மடித்துக் கட்டியிருந்த தன் வேட்டியின் முடிச்சை மறுகையில் பிடித்தபடி படிகளில் ஏறத் தொடங்கினான். படிகள் முடிந்து சமதளம் வந்தவுடன், நுழைவின் இடது ஓரத்தில் வரவேற்புக்காக நின்றிருந்த சௌண்டம்மாளும், கோகிலாவும் அவன் எதிரில் வந்து நிற்க,
“ம்ம்.. ஒரு நிமிசம் லைன்ல இரு …”, என்றவனாய் காதிலிருந்து அலைபேசியை விலக்கினான்.
“எங்கிட்ட சொல்லாம எங்கடா போன இவ்ளோ நேரமா? விடியங்காத்தால கல்யாணத்த வெச்சிக்கிட்டு… இன்னுங் கொஞ்ச நேரத்துல இருட்டவே போவுது. பாக்கறவுங்கெல்லாங் கண்ணா பிண்ணானுத் திட்றாங்க.. லாவண்யா வீட்ல என்ன நெனைப்பாங்க?”
“ஆஃபீஸ்ல கூட வேல பாக்கற பசங்கெல்லாம் வந்திருக்காங்கம்மா. ரூம்ல தங்க வெச்சிட்டு வர்றன். அதா போனவொடனே வந்துட்டனே …”
“அதுக்கு நீ ஏம்போன? சௌரிய அனுப்ப வேண்டியதானு. சேரி ஷிஃபானாவுமா வந்திருக்கா?”, கோகிலா அக்கா கேட்டாள்.
“இல்ல அவ காலைல வராலா. அவதா லைன்ல. இந்தா நீயே என்னன்னு கேளு” என பரத் அலைபேசியை கோகிலாவிடம் கை மாற்றி விட்டான்.
“ஏன்டி உனக்கு இன்னைக்கு நைட்டே வரதுக்கு என்ன?” என்று கோகிலா அலைபேசியைக் காதில் வைத்தவுடனேயே கேட்டதற்கு எதிர்முனையிலிருந்த ஷிஃபானா ஏதோ சொல்லியிருக்க வேண்டும்.
“உம்… பரவால… சேரி … நாளைக்குக் காலைல அஞ்சி மணிக்கு கோயில்ல கல்யாணத்தப் பாக்கற மாரி வந்துரு. நேரா ரிசெப்ஷனுக்கு பத்து பதினோரு மணிக்கு வந்தன்னு வையி…” என்று அவளுக்கு ஒரு தளர்வளித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தாள் கோகிலா.
அலைபேசியில் மேலும் ஷிஃபானா ஏதோ கேட்க கோகிலா தலை அசைத்துக் கொண்டே அவர்களிருவரையும் விட்டுச் சற்றுத் தள்ளிப் போய் நின்று பேசினாள்.
“என்ன கிஃப்ட்டு வாங்கப் போறீங்கனு சொன்ன? டயப்பரு, பவுடர் டப்பா, ஃபீடிங் பாட்டிலா? ஏன்டி படிச்ச பிள்ளைங்க வாங்கற கிஃப்ட்டா இது?” மனநிறைவற்ற கோகிலாவின் இந்தக் குரல் காற்றில் பரிமாறப்பட்டது.
“அதுதான் தமாசா மறக்காம இருக்குமா? எனக்கொன்னுந் தமாசா இருக்கும்னு தோனல. கல்யாணமாயி கொஞ்ச நாள்ல இந்த பெருசுங்கல்லாங் கேக்குமே விசேசமிருக்கா? எழவிருக்கானு. அதத்தா ரொம்ப நாகரீகமா கல்யாணம் முடிஞ்ச கையோட மேடையிலயே வெச்சி உங்களுக்கு நாங்க அஸைன் பண்ற அடுத்த டாஸ்க் அதுதான்னு சொல்ற மாரி இருக்கு. அதுக்கு பேசாம பழய ஐடியாவா இருந்தாலும் நல்ல ஆர்ட் வொர்க் இருக்க வால் க்ளாக்கே வாங்கிக் குடுத்துருங்க”, இப்படி கோகிலா வேகவேகமாகப் பேசினாள். நிச்சயமாக ஷிஃபானா பேசி முடிக்கும் முன்பாகவே கோகிலா இடைமறித்துத்தான் இப்படி பேசியிருக்க வேண்டும்.
“ம்ம்… ஆமா… அத தா நானுங் சொல்ற.. அப்பிடியா… சேரி பாரு நா வெக்கறன்”, அழைப்பைத் துண்டித்து விட்டு கோகிலா பரத்தும், சௌண்டம்மாளும் நின்றிருந்த பழைய இடத்துக்கே திரும்பியிருந்தாள்.
கோகிலா வருவதற்காகவே காத்திருந்தவரைப் போல சௌண்டம்மாள் பரத்திடம்,”உங்கிட்ட ஒரு விசியம் பேசனும் வா” எனவழைக்க மூவரும் எறும்பு வரிசை மாதிரி சீராக அந்தக் கல்யாணத்திற்கு முந்தைய நாள் கூட்டத்தை ஊடுருவி மணமகனறைக்குப் பக்கத்தில் போய் ஓரமாக நின்று கொண்டனர்.
“உன் ஃப்ரெண்டு, அந்தப் பிள்ள இப்பத்தா வந்தா… வந்ததும் உன்னயத்தாக் கேட்டா. உன்னயக் காணன்னதும் லாவண்யாவப் பாக்க போயிருக்கா” என்று அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே வேகமாகக் குறிக்கிட்ட கோகிலா மெல்ல, ”இப்டியொரு ஃபிரெண்டு இருக்கறதா இதுவரைக்குஞ் சொன்னதேயில்லியே நீ?” என்று சந்தேகக் குரலில் கேட்டாள்.
“பிள்ள நல்லா கிளி மாரி இருக்கா” சௌண்டம்மாள் இதைச் சொல்லுகையில் அவர் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் முன்பே சொல்லியிருந்தால் அந்தக் கிளியையே உனக்கு கட்டியிருக்கலாமே என்று பரத்தை பார்த்துத் தன் வருத்ததை தெரிவிப்பது மாதிரி இருந்தது அவனுக்கு.
“யாரு?” என்று அவன் கேட்க எத்தனித்த போது, ”உங்கப்பமூடு வர்ராங்க, அங்க வந்து வரவேற்புக்கு நிக்காம இங்க என்ன வெட்டி நேயம் பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று பரத்தின் அப்பா போட்ட சத்தத்தில் சௌண்டம்மாள் எதுவும் பேசாமல் நகர்ந்து செல்ல, “இங்கயே இரு அவள வரச் சொல்றன்” என்று விட்டு கோகிலா எதிரிலிருந்த மணமகளறைக்குள்ளேப் போனவள், போன வேகத்தில் வெளியே வந்து இவனிடம் வராமல் புடவையை சரி செய்த படி வரவேற்புக்குத் திரும்பி விட்டாள். இப்போது வரை அது யாரென்ற குழப்பத்திலேயே இருந்த பரத் அந்தக் கிளிக்காகக் காத்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் மணமகளறைக்குள்ளிருந்து முகம் முழுக்க புன்னகையோடு ஒருத்தி வெளியே வந்தாள். அவள் தலை தெரிந்ததுமே அவன் நெஞ்சில் எழுந்து உடலின் மற்ற பாகங்களையும் விரைவில் பிடித்து விடும் குறிக்கோளுடன் பரவத் தொடங்கியிருந்தது பீதி. அந்தக் கல்யாணம் நிச்சயமாக நின்று விடப்போவதாகத்தான் அவன் மூளைக்குத் தகவல் போயிருக்க வேண்டும்; அடுத்ததாக அது அவனுக்குத் திரையிட்டுக் காட்டிய காட்சிகளில் அழுதுகொண்டிருக்கும் லாவண்யாவைத் தன் தோளில் சாய்த்தபடி லாவாண்யாவின் அம்மா அவனைச் சபித்துக் கொண்டிருந்தார்; அவனம்மா சௌண்டம்மாள் அழுகிறார்; அக்கா கோகிலா ஓங்கி அவன் வலது கன்னத்தில் அறைகிறாள்; அவனப்பா லாவண்யாவின் அப்பாவிடம் கைக்கூப்பியபடி குலுங்கும் உடலுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்; ஆனால், அவள்; அந்தக் கிளி, உலகின் மிக முக்கியமானக் குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த பெருமித முகபாவனையுடன் எல்லாவற்றையும் ஓரத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணமகளறையிலிருந்து பரத்திடம் வந்தவள் வெட்கத்துடனேயே,
“வாழ்த்துகள்” எனக் கையை நீட்டிய போதுதான் அவன் மூளைக் காட்டிக் கொண்டிருந்த பிரம்மையிலிருந்து மீண்டான். அவளைப் பார்த்த அதிர்விலிருந்தே வெளிவராத அவன் அவள் கூறிய வாழ்த்தையோ நீட்டியிருந்த கையையோ பொருட்படுத்தாமல் அச்சமேறிய கண்களுடன் மண்டபம் முழுக்க நிறைந்திருந்த அந்தக் கல்யாணக் கூட்டத்தைப் பார்த்தான். எப்படியாவது யார் பார்வைக்கும் தெரியாதவளாக அவளை ஆக்கிவிட முடியாதாவென்றிருந்தது அவனுக்கு.
“நீ இங்க என்ன பண்ற?”
அவன் படும் இன்னல்கள் அத்தனையும் புரிந்தவளாய்க் குறும்பாய்ப் புன்னகைத்துக் கொண்டே, ”நீ தான கல்யாணப் பத்திரிக்க அனுப்புன?”, என்றாள். ஆமாம். அவன்தான் அனுப்பினான். ஐயோ எவ்வளவு பெரும்பிழை!
“உனக்கு என்ன வேணும் இப்ப?”
“எனக்கு எதுவும் வேணாமே. அதுதா எனக்கு குடுக்க வேண்டியத நீ அன்னைக்கே குடுத்துட்டயே”
“உன்னக் கெஞ்சிக் கேக்குறன். தயவு செஞ்சி யாருக்குந் தெரியாமக் கெளம்பிப் போயிரு”. அழுகையே வந்துவிடும் போலிருந்தது அவனுக்கு.
கைக்குழந்தையின் அழுகையை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”கல்யாணத்துக்குக் கூப்டுட்டு இப்டி சாப்டாமக் கூட போகச் சொல்றியே?”, என்றாள்.
“உனக்கென்ன பயித்தியமா? நீ எப்பிடி இங்க இருக்க முடியும்? உன்னத் தெரிஞ்சவங்க யாராச்சும் பாத்தா என்னாவறது? உனக்கிப்ப என்ன பிரச்சனனு எனக்கொன்னுமே புரியல”
“மொதல்ல இப்பிடி பதட்டப்பட்றத நிறுத்து. நீ பயப்பட்ற மாதிரி என்னத் தெரிஞ்சவங்க இந்தக் கூட்டத்துல இருந்தா அது அதிசயந்தா. அப்டியே இருந்தாலும் உன்னக் காட்டிக் குடுக்க மாட்டன். எனக்கு சமாளிச்சிக்கத் தெரியும். உங்கல்யாணத்தக் கெடுக்க நா வரல. அத மொதல்ல புரிஞ்சிக்கோ. இங்க இருக்க எல்லாரும் எப்பிடிக் கல்யாணத்துக்குக் கூப்டதால வந்திருக்காங்களோ அதே மாரி தா நானும். நீ பத்திரிக்க வெச்ச, நா வந்திருக்கன். ஒரம்பரையோட ஒரு ஒரம்பர அவ்ளோ தா. ரெண்டு வருசங்களிச்சி இப்பிடி நெறைய சொந்தக்காரங்களுக்கு மத்தியில இருக்க வாய்ப்பு கெடச்சிருக்கு. இது எம்மனசுக்கு ஒரு மருந்து மாரி; அத நீ புரிஞ்சிக்கறது கஷ்டம். கடைசியா இப்ப நா கட்டியிருக்கற மாரி அடக்கமா பொடவக் கட்டி ரெண்டு வருசமாவுது தெரியுமா உனக்கு? இன்னைக்கு நைட்டு இருந்துட்டு காலைல கோவில்ல கல்யாணத்தப் பாத்துட்டு, அதோ அங்க நிக்குதே ஐஸ்கிரீம் வண்டி, அதுல ரெண்டு ஐஸ்கிரீம் அப்பறம் முக்கியமா கல்யாணச் சாப்பாடு சாப்டுட்டு, சுவீட் கேசரி தா வைப்பாங்கன்னு உள்ள பேசிக்கிட்டாங்க எனக்கும் அதா புடிக்கும் அது ஒரு ரெண்டு வாட்டி வாங்கனும். அப்பறம் ரிசெப்ஷன் கொஞ்ச நேரம் பாத்துட்டு, உன்னோடயும் லாவண்யாவோடையும் கிஃட்டோட ஒரு ஃபோட்டோ எடுத்துட்டுத் திருப்பி பாக்காம போய்ருவ. அவ்ளோதா…”
அவன் உணர்ச்சிகள் சற்றுத் தணிந்திருந்ததை அவள் கவனித்தாள். இந்நேரத்திற்கு அவர்களிருந்த இடத்திற்கு ஒரு பெண்பிள்ளை ஓடி வந்து,
“மொழியக்கா, லாவண்யா அத்த உங்களக் கூப்பட்றாங்க” எனச் சொல்ல
“மாமாக்கிட்டதா பேசீட்டு இருக்காங்க, அஞ்சி நிமிசத்துல வராங்கலாம்னு சொல்லு” என்று செல்லமாகக் கன்னங்கிள்ளி அனுப்பி வைத்தாள். அவனுக்கு கோபம் மீண்டெழுந்திருக்க வேண்டும்.
“உன்ன அடிச்சேக் கொல்லனும்போல ஆத்தரம் வருது எனக்கு. லாவண்யாவோட நீ என்ன பண்ற? அம்மா அக்காக்கிட்டெல்லாம் என்ன சொல்லி வெச்சிருக்க?”
“ஃபிரெண்டுன்னு தா. வேற எப்பிடியாச்சும் சொல்லீற முடியுமா? அன்னைக்கு நீ எங்கிட்ட சொன்ன ஸ்கூல், காலேஜ் பேரெல்லாம் எனக்கு ஞாபகமிருக்கு. ஸ்கூல் ஃப்ரெண்டுன்னு சொன்ன. நம்பீட்டாங்கன்னு தா நெனைக்கறன். துருவி துருவியெல்லா யாரும் எதுவுங் கேட்டுக்கல. யாருக்கும் நேரமுமில்ல. என்ன மிஞ்சிப் போனா, என்ன உன் முன்னால் காதலினு நெனைச்சிப்பாங்க. நெனைச்சிக்கிட்டுப் போவுட்டும். அதனால என்ன?”
அவன் எதுவும் பேசாதிருப்பது கண்டு மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“அன்னிக்கு வந்த உன்ன நெனச்சா இப்பக் கூட சிரிப்பு வருது எனக்கு. எதோ இன்டர்வியூக்கு வந்திருந்தவனாட்டம் பேரென்ன ஊரென்ன ஸ்கூலு காலேஜ்னு நா கேட்டதுக்கெல்லாம் பதில் சொன்ன. எதுக்கு வந்தனு கேட்டதுக்கு வெக்கப்பட்டுக்கிட்டே அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் அதா ஒரு எக்ஸ்பீரியன்ஸ்காக வந்தனு சொன்னல்ல… வந்த வேல முடிஞ்சவொடன போகாம நா பத்திரிக்கக் கேட்டப்போ நீ அனுப்புன”
தோன்றி வளர்ந்துவரும்போதே அதை வெட்டிவிட்டு இன்னொன்று, பின் அதை வெட்டி அடுத்தொன்று என அவன் மனத்தை எண்ணங்கள் போர்க்களமாக மாற்றியிருந்தது அவன் முகத்தில் தெரிந்தது. அவனும் அவளைச் சந்தித்த அந்த நாளை நினைவூட்டிக் கொண்டான்; எதுவும் பேசவில்லை.
“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தேவன்னு ஒருத்தன். உன்ன மாரி எங்கிட்ட கல்யாண ஒத்திக பாக்க வந்தான். அவனுக்கு ஏந்தா அப்பிடி தோனிச்சோ எனக்குத் தெரியல… எல்லா முடிஞ்சதுக்கப்பறம் பத்திரிக்கய அனுப்பி நீ கண்டீப்பா கல்யாணத்துக்கு வரனும்னா. போயிருந்தன். பிரண்டுன்னு அவந்தா எல்லார்கிட்டயும் சொன்னான். அப்பறம் அது இப்ப வரைக்கும் அப்பிடியே தா இருக்கு. அவனுக்கடுத்து நீதா. என்ன உங்கிட்ட நானா பத்திரிக்கயக் கேட்டு வாங்கிக்கிட்டன். உனக்குத் தெரிஞ்சி நீ இப்ப வரைக்கும் எத்தனக் கல்யாணத்துக்குப் போயிருப்ப. ஆனா, உங்கல்யாணந்தா எனக்கு ரெண்டாவது கல்யாணந் தெரியுமா?”
அவன் இன்னமும் மௌனமாகவே இருந்தான். அவன் மௌனத்தைக் கலைப்பதற்காகவேச் சொன்னாள்.
“கொஞ்ச ஆழமா யோசிச்சம்னா நாந்தா உனக்கு மொதப் பொண்டாட்டி. அப்ப உனக்குங்கூட இது ரெண்டாவது கல்யாணந்தாயில்ல?”
“வாய மூட்றி தேவுடியா முண்ட” கோபத்தில் கத்தக்கூட முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாகத் திட்டிய அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் அவள். அந்நேரம் மீண்டும் அந்தப் பிள்ளை வந்து இவளை அழைக்க இம்முறை, ”சேரி, காலைல கல்யாணத்துல பாக்கலாம் போய் தூங்கு” என்றுவிட்டு பிள்ளை கையைப் பிடித்துக் கொண்டு மணமகளறைக்கே போய்விட்டாள்.
***
விடியற்காலையில் கோவிலில் கல்யாணம் முடிந்திருந்தது. பரத் இப்பொழுது திருமண வரவேற்புக்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். நண்பன் சௌரி மட்டும் மணமகனறையில் அவனுடனிருந்தான். மற்றவன்கள் எவனும் இப்போதுவரை வந்து சேர்ந்தபாடில்லை. பரத்தும் அதுகுறித்தெல்லாம் அக்கறை காட்டும் மனோநிலையிலில்லை. இப்போதுவரை அவள் பரத்தை எவ்வகையிலும் அச்சுறுத்தாத போதிலுங்கூட, நடு இரவின் திகில்கனவு ஒன்றைப் போல் அவனை அவளே இன்னமும் ஆக்கிரமித்திருந்தாள். அவள்தான்; அந்த மொழி; நேற்று அந்தப் பிள்ளைக் கூப்பிட்டது போல் மொழியென்பதுதான் உண்மையிலேயே அவள் பெயராவென்று கூட அவனுக்குத் தெரியாது. ரவிக்கையையும், சேலை மடிப்பையும் சேர்த்து வலது தோள்பட்டையில் குத்திய ஊக்கி, மூன்றாய்ப் பகுத்துப் பிண்ணப்பட்டுப் பிட்டம் வரைத் தொங்கும் சிகை, அச்சிகையில் அரைமுதுகுக்குத் தொங்கும் மல்லிச்சரம், மார்புடன் கூடவே தானும் முடிந்து போகும் நீண்ட தங்கப்போலி அணிகலன், களி வழியும் விழிகள், பெரிய பெரிய சிரிப்புகள், குட்டி குட்டி வேக நடைகள் என நேற்றிலிருந்து அந்த ஒரு விலைமகளுக்குள்தான் எத்தனை எத்தனை கல்யாண வீட்டுக் குடும்பப் பெண்கள்!! பரத்தாகவே வழியப்போய் அவளொரு விலைமகளெனக் கூச்சலிட்டால் கூட அங்கு யாரும் நம்பப் போவதில்லை. அப்படித்தான் அவள் வந்ததிலிருந்து நடந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவன் நிம்மதியாய் ஒரு பெருமூச்செடுப்பதற்கு அது மட்டும் போதுமானதாயிருக்கவில்லை. அவனுக்கு அவள் அம்மண்டபத்தை விட்டே போய்விட வேண்டுமாயிருந்தது.
தன்னை முழுவதும் தயார்ப்படுத்தியவனாய் கண்ணாடி முன் பரத் நின்றிருக்கையில், தாழிடாமலிருந்தக் கதவைத் திறந்து, ”மாமா, மொழியக்கா உங்கள மண்டபத்து வாசலுக்கு வரச் சொன்னாங்க” என்று, ஒரு பொடுசு சொல்லிவிட்டு ஓடிற்று. நேற்று மொழி அங்கிருந்து போய்விட்ட பிறகும் கூட பலமுறை அவளை பரத் பார்த்து விட்டான். விடிகாலை கோவிலுக்குக் கல்யாணத்தைப் பார்க்கச் சென்ற முக்கிய உறவினர் குழுவுடன் அவளும்தான் போயிருந்தாள். பரத்தைப் பார்த்த போதெல்லாம் சிரித்தாள்; ஏற்ற தோழி வேடத்திற்கு பொருத்தமாக அவனிடம் அடிக்கடி வேடிக்கையாய் எதையாவது பேசினாள். ஆனால், அவ்வேடிக்கைகளைத்தான் பரத்தால்தான் இரசிக்க முடியவில்லை. தான் கொன்று புதைத்த பிணமொன்று நீதிமன்றத்திற்கே சாட்சி சொல்ல வருமாயின் ஒரு கொலையாளி எப்படி உணர்வானோ, அதே உணர்வைச் சுமந்தபடிதான் நேற்று மொழியைப் பார்த்ததிலிருந்து பரத் இயங்கிக் கொண்டிருக்கிறான். அதே பீதியும், குழப்பமும், கோபமும் உடன் நடக்க தானும் நடந்து மண்டபத்தின் நுழைவுக்குப் போனான்.
அங்கு இடது ஓரத்தில் மொழி இருந்தாள். நீல வண்ணப் பரிசுக் காகிதம் சுற்றப்பட்டப் பெட்டியுடன் ஒருவன் அவள் பக்கத்தில் நின்றிருந்தான். தான் இதுவரை நேரில் பார்த்த அத்தனைப் பேரிலும் அழகில் முதன்மையானவன் அவனாகத்தான் இருக்க வேண்டுமென பரத் நினைத்துக் கொண்டான்; பெண்களுட்பட. பரத் என்றுமட்டுமல்ல மொழியினருகில் நின்றிருக்கும் அவனுருவம் விழிகளில் விழுந்த எவரும் ஒரு நிமிடமாவது தாழ்த்தாமல் பார்வையை விலக்குவது சாத்தியப்படாதவொன்று. அவனைக் கண்ட மறுகணம் தன் அழகின் போதாமை அவனுக்குள் ஊன்றிய பொறாமை வித்து நெடு நெடுவென அவனுள் வளரத் தொடங்கி, அது பிற எல்லா உணர்ச்சிகளின் மேலும் கிளர்ந்து அவற்றை நெருக்கி அழித்து உயர்ந்து வருவதைப் பூரணமாக உணர்ந்தவனாய், மெல்ல மொழியும் அந்த அழகனும் நின்றிருந்த இடத்தை அடைந்தான்.
“இவந்தா பரத். நா சொல்லல உனக்கப்பறம் ஒருத்தன்னு. இவந்தா”,
“இது தேவன். என் ஃபிரெண்டு. நா நேத்து உங்கிட்ட சொன்னன்ல”, என்று பரத்தை தேவனுக்கும், தேவனை பரத்துக்கும் அறிமுகப்படுத்தினாள் மொழி.
“எனக்கென்னமோ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரவொருத்தர் பாத்துக்கனும்னு தோனிச்சி. அதா தேவன வர சொன்ன”, என்று சொன்னவள் நெடுநேரமாய் நினைவிலிருந்து தப்பியிருந்தது திடீரென அகப்பட்டுவிட்ட விரைவில், ”சேரி, நீங்க பேசீட்டிருங்க. நா உள்ள போற” என்றுவிட்டு தேவன் கையிலிருந்த பரிசுப்பெட்டியையும் வாங்கிக் கொண்டு மண்டபத்திற்குள் போய்விட்டாள்.
பரத்தின் எதிரிலிருந்த தேவனின் கழுத்தோடு அவன் உயரம் முடிந்து விட்டதால், தேவனின் முகத்தைப் பார்க்க பரத் சற்றுத் தலையை உயர்த்த வேண்டியிருந்தது. முகம் என்று மட்டுமல்ல காண்போரின் வறண்ட தொண்டையில் உமிழ்நீரைச் சுரப்பித்து கூட்டி விழுங்கச் செய்யும் நிமிர்ந்து இறுகியக் கட்டான காந்த உடல் தேவனுக்கு. தேவனின் மொத்த ஆணழகு உசுப்பிய பொறாமையை முகத்தசைகளை இறுக்கி மறைக்க பரத் மிக முயல்வது தேவனுக்கும் தெரிந்தது.
அவனுக்குள் எதையோ துழாவுவதைப் போல தேவனின் பார்வை பரத்தின் முகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பின் மீதும் விழுந்து நகர்ந்து மீண்டும் விழுந்து நகர்ந்து அப்படியே சுழன்று கொண்டிருந்தது. தன்னிடம் அவனுக்குச் சொல்லவோ கேட்கவோ ஏதோவொன்று இருப்பது மாதிரியான அதே முகத்துடன், ”வாழ்த்துகள் பரத்” என தொங்கிக் கொண்டிருந்த பரத்தின் வலது கையைத் தானாகப் பிடித்துக் குலுக்கி தேவனே முதலில் அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தான்.
தேவனின் வசீகரமானக் குரல் ஏற்கனவே பரத்தினுள் எரிந்து கொண்டிருக்கும் பொறாமைத் தீயில் துளிர்த்ததில் வளர்ந்த தீயின் நாவுகள் அவனுக்குள் எங்கோ தீண்டி முடுக்கியக் கோபத்தில் தேவனின் கையை உதறி விட்டு, ”அறிவில்ல? அவளோட சேந்துகிட்டு நீயும் வந்திருக்க. ஒழுக்கமா ரெண்டு பேரும் கெளம்பீருங்க” என தேவனுக்கு மட்டும் கேட்கும்படி உரத்துக் கத்தினான்.
“இதப்பாரு பரத் உங்கோவம் எனக்குப் புரியுது. ஆனா, மொழி இங்க வந்து கிட்டத்தட்ட அர நாளே முடியப் போகுது. இன்னமும் நீ அவளப் புரிஞ்சிக்கலைன்னு நெனச்சாத்தா வருத்தமாருக்கு. அவளால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு உனக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்னு எனக்குத் தெரியும். அப்டியிருக்கறப்ப நீ ஏன் இவ்ளோ பயப்படனும்? அவ இங்க வந்திருக்கறதுக்கு காரணம் அவளுக்குள்ள இருக்கற கொழந்ததா. அந்தக் கொழந்தய பாக்க நமக்குள்ளயும் ஒரு கொழந்த இருக்கனும். ஆனா, ரொம்ப மெச்சூர்டா நடந்துக்கறம்கறப் பேர்ல நமக்குள்ளயிருக்கற அந்தக் கொழந்தய நம்ம அழிச்சட்றம். அதனாலதா நீ இப்பிடிக் கத்திக்கிட்டிருக்க”
“வாய மூட்றா. ஆளையும் மூஞ்சையும் பாரு. கொழந்தயாங் கொழந்த”
“நீ இருக்கற நெலமையில யாராயிருந்தாலும் இதையெல்லாம் புரிஞ்சிக்க முடியாதுனு எனக்குத் தெரியும். உன்ன அதிகம் பதட்டப்பட வெக்க வேண்டாம் முடிஞ்ச வர சீக்கரம் மொழிய மண்டபத்திலருந்து கூட்டீட்டுப் போயிரலாம்னுதா இங்க வர வரைக்கும் நெனச்சிட்டிருந்தன். ஆனா..”
இடைவெளி விட்ட தேவன் அனுதாபப் பார்வையொன்றை பரத்தை நோக்கி வீசினான். மண்டபத்தின் வெளி கேட்டையொட்டி நிறுத்தப்பட்டிருந்த திருமண விழா வரவேற்புப் பதாகையை ஒரு முறை பார்த்துக் கொண்டவனாக மீண்டும் பரத்திடம் திரும்பி பேசத் தொடங்கினான்.
“ஆனா, என்னால உள்ள வர முடியாதுன்னு இங்க வந்தப்பறம்தா தெரிஞ்சிது.” தேவன் வார்த்தைகளை சுங்கச்சாவடி வாகனங்கள் மாதிரி தேக்கி தேக்கி விடுவித்துக் கொண்டிருந்ததை பரத் கவனித்தான்.
“இத உங்கிட்ட சொல்லாமப் போகலாம்னுதா நெனச்ச. ஆனா, மொழிய தெரிஞ்சி வெச்சிருக்க உங்கிட்ட சொன்னாத் தப்பில்லன்னு இப்பத் தோணுது. தோ அந்தக் கல்யாண பேனர்லதா உன்ன மொத மொறப் பாத்த. ஆனா, அந்தப் பொண்ணு… அதா உன் வொய்ஃப்… பேரு லாவண்யானு இப்பதா தெரியும், ஆனா, அந்தப் பொண்ண எனக்கு ஏற்கனவே தெரியும். நாலு வருசம் முன்ன நா சென்னைல வேலைல இருந்தப்போ ஒரு மால்ல வெச்சிப் பாத்ருக்க. அன்னிக்கு அந்த மால்ல கூட்டம் ஒன்னும் அதிகமாயில்ல. நானும் அந்தப் பொண்ணும் மட்டும் தியேட்டர் இருந்த டாப் ஃபுளோர்லருந்து கிரவ்ண்ட் ஃபுளோருக்கு ஒன்னா லிஃப்ட்ல வந்தம். தல குனிஞ்சி மூலைல நின்னிட்டிருந்தப் பொண்ணு திடீர்னு என் பக்கத்துல வந்து எனக்கு ஒதட்டுல ஒரு முத்தம் தர்ரியானு கேட்டா. தயக்கமில்ல; பயமில்ல; தலய மட்டும் தரயப் பாத்த மாரி வெச்சிக்கிட்டிருந்தா. முடியாதுன்னு சொல்ல எங்கிட்ட அப்ப எந்தக் காரணமுமில்லாததால நா குடுத்தன்; ஒதட்டுல முத்தம். கண்ணக் கூட மூடிக்காம என் பிடறி முடிக்குள்ள ரெண்டு கையையும் விட்டு இறுக்கிக்கிட்டு அவ்ளோ ஆசையா முத்தம் வாங்குன அவ மொகம் எனக்கு இப்ப வரைக்கும் ஞாபகமிருக்கு; அவளும் மறந்திருக்க முடியாது. லிஃட் கீழ வந்ததும் ஏ ஒதட்டோடத் தடயத்த அவ உள்ளங்கையால அழுத்தித் தொடச்சிக்கிட்டு திரும்பிக் கூட பாக்காம போனவள மறுபடியும் இந்த பேனர்லதா பாத்தன். ஆனா, இப்ப அவ என்னப் பாக்க வேணாம்.”
கடுகளவும் எதிர்பார்த்திராத துரோகத்தால் வீழ்த்தப்பட்டு மண்ணில் சரிந்து கொண்டிருக்கும் ஒரு போர் வீரனின் இறுதி நிமிடங்களையொத்த மனநிலையிலிருந்த பரத்தின் புயத்தைத் தொட்டு,
“நா முன்ன சொன்ன மாரி நீ ரொம்ப மெச்சூர்ட். புரிஞ்சிப்பீன்னு நெனைக்கறன். மொழிக்கிட்ட நா சொல்லிக்கறன். இப்பக் கெளம்பறன். நியாயமா யோசி…” என்று சொன்ன தேவன் அங்கிருந்து போய்விட்டான்.
“டே பரத்து, டைம் ஆச்சி உன்ன ஸ்டேஜுக்குக் கூப்பட்றாங்க”, ஷிஃபானாவின் குரல் கேட்டுத் திரும்பினான். அவள் கையிலும் ஒரு நீல நிறப் பரிசுப்பெட்டி. தன் கண்ணிற்படாமல் எப்படி, எப்போது அவள் உள்ளே போனாளென்பதையெல்லாம் விடுத்து பரத்தும், ஷிஃபானாவும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக ஆவதற்கு முன்பு, அவர்களுக்குள் நட்பு அரும்பத் தொடங்கியிருந்த சமயம் அலுவலகத்தின் மாலை நேரமொன்றில் அவர்களிருவரைத் தவிர யாருமற்ற அறையின் தனிமையில் அவள் மேல் பொங்கிய காமத்தைத் தன் சுண்டுவிரலில் திரட்டி அவளறியாமல் அவள் கையைத் தொட்டுப் பார்த்த அந்த உண்மை அவனுக்கு ஏன் நினைவிலெழுகிறது?
மேடையை நோக்கி பரத் நடந்தான். திருமண ஒப்பந்தத்தில் சிக்கிக் கொள்ளும் இந்நாள் வரையிலும் அவன் தாண்டியும், விழுந்தும் வந்த சபலக் குழிகளின் நினைவுகளையெல்லாம் மனதில் அசைப்போட்ட படியே கூட்டத்தைப் பார்த்தவாறு மேடையில் ஏறி நின்றான். லாவண்யா இன்னும் வரவில்லை.
“அவள் மெல்ல வரட்டும். எனக்கொரு ஷிஃபானா மாதிரி அவளுக்கொரு தேவன் இருந்திருக்கிறான். பரவாயில்லை அவள் வரட்டும். பரவாயில்லையா? இந்தப் பரவாயில்லை என்ன அவளுக்கான மன்னிப்பா? எதற்கு? எனில் எனக்கு மன்னிப்பு? ஒரு தொடுதலில் என்ன? அவளுக்கும் ஒரு முத்தம்தானே. அதில்தான் என்ன? நியாயமாக… மொழிக்கு மாதிரி, அவள் சொன்னபடி ஆழ யோசித்தால் எனக்கு மாதிரி லாவண்யாவுக்கும் இது ரெண்டாவது கல்யாணமாயிருந்தால்தான் என்ன இப்போ?” பரத் தனக்குள் பேசியபடியே லாவண்யா வருவதற்காக அம்மேடையில் காத்திருந்தான்.



