இணைய இதழ் 120கட்டுரைகள்

வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி

கட்டுரை | வாசகசாலை

ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC பஸ்லதான் வந்தேன். பாடி ஃபுல்லா சிகப்பு கலர்லயும், கண்ணாடி கருப்பு கலர்லயும் இருந்தது. அதனால DMK பஸ்னு சொன்னேன்.”

அவரது வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு நினைவில் வந்தது — சில வாரங்களுக்கு முன்பு அவர் தன் மகளின் பெங்களூரு வீட்டிற்குச் சென்று வந்தவுடன் “BJP ட்ரெயின்” என்று சொன்னதை. காரணம் — வந்தே பாரத் ட்ரெயின் ஆரஞ்சு நிறத்தில் பூசப்பட்டிருந்தது. இந்த இரண்டு சம்பவங்களும்தான் இந்தக் கட்டுரைக்கான காரணம்.

நம்மிடம் ஒரு கேள்வி எழுகிறது!

“நம் மனதில் எப்போது இருந்து இந்த நிறங்களுக்கும் கட்சிகளுக்கும் சம்பந்தம் உருவாகி விட்டது? வண்ணங்கள் எப்படி கட்சிகளின் அடையாளமாக மாறின? ஏன் இந்த நிறமென்றால் இவையிவை என்று உருவகப்படுத்திக் கொள்கிறோம்?” — என்று இந்தக் கேள்விகள் விரிவாகிக் கொண்டே இருந்தது.

நம் அன்றாட வாழ்வில் வண்ணங்களின் தாக்கம் நாம் நினைப்பதை விட ஆழமானது. அவை வெறும் காட்சிப் பொருட்களாக மட்டுமின்றி, நம் உணர்வுகளையும், எண்ணங்களையும், முடிவுகளையும் கூட பாதிக்கின்றன.

நிறங்கள் வெறும் பார்வைக்கு அழகு தருபவை மட்டுமல்ல. ஒவ்வொரு நிறமும் மனித மனதில் ஓர் உணர்வையும், அடையாளத்தையும், சிந்தனையையும் உருவாக்குகிறது.

வண்ணங்கள் தனித்துவமான குறியீட்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இது நம் கலாச்சார, சமூக மற்றும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து உருவாகிறது. இதுவும் ஒரு வகையில் முன்னோர்களால் திணிக்கப்பட்டதுதான்.

பொதுவாக, சிவப்பு நிறம் சக்தி, தைரியம், காதல் மற்றும் கோபத்தைக் குறிக்கிறது. அரசியல் ரீதியாக, இது பெரும்பாலும் சோசலிச, கம்யூனிச மற்றும் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடையது.

ஆரஞ்சு நிறம் உற்சாகம், ஆற்றல் மற்றும் புதுமையைக் குறிக்கிறது. அரசியல் அரங்கில், சில நாடுகளில் இது ஜனநாயக அல்லது தேசியவாதக் கட்சிகளை அடையாளப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

நீலம் அமைதி, நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது பல நாடுகளில் உள்ள பழமைவாதக் கட்சிகளுடன் தொடர்புடையது.

பச்சை நிறம் இயல்பு, வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் அமைதியைக் குறிக்கிறது. சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களும், சில இஸ்லாமிய கட்சிகளும் இந்த நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

இந்த வண்ணங்களின் குறியீடுகள் பள்ளிப் பருவத்திலிருந்தே நம் மனதிற்குள் பதியத் தொடங்குகின்றன. புவியியல் வகுப்புகளில், பல்வேறு நாடுகளும் மாநிலங்களும் வெவ்வேறு வண்ணங்களால் குறிக்கப்படுகின்றன. இது நம் மனதிற்குள் நிறம் — அடையாளம் என்ற தொடர்பை உருவாக்குகிறது. வரலாற்று நிகழ்வுகள், புரட்சிகள் மற்றும் இயக்கங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட வண்ணக் கொடிகளுடன் இணைத்து கற்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, ரஷ்யப் புரட்சியின் சிவப்பு நிறம், வெள்ளைத் துணிகளின் அமைதிப் போராட்டம் போன்றவற்றை நாம் படித்திருக்கிறோம்.

ஓவியம், நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு துயரமான காட்சியில் நீல நிறமும், ஒரு கோபமான காட்சியில் சிவப்பு நிறமும் பயன்படுத்தப்படுவது நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.

வண்ணங்களின் குறியீடுகள் தற்செயலாக உருவாவதில்லை. அவை சில குறிப்பிட்ட வழிகளில் நம் மனதில் திணிக்கப்படுகின்றன. வயல் என்றால் பச்சை, கடல் என்றால் நீலம் என்று. எங்காவது நீலமாய் கடலை நாம் பார்க்கிறோமா? ஓரளவிற்கு பச்சையாய்தான் இருக்கிறது. அதேபோன்று கடவுளர்களுக்கும் இராமர் என்றால் பச்சை, கிருஷ்ணர் என்றால் நீலம், காளி என்றால் கருப்பு, அம்மன் என்றால் சிவப்பு, அனுமன் என்றால் செந்தூரம் என்று இவை நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், அரசியல் விளம்பரங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது நபரின் பெயரைச் சொல்லாமலேயே, அவர்களின் வண்ணங்களைப் பயன்படுத்தி ஒரு செய்தியை உணர்த்த முடியும். இது மக்கள் மனதில் அந்தக் கட்சியையோ அல்லது நபரைப் பற்றிய ஒரு நிரந்தரமான தொடர்பை ஏற்படுத்துகிறது.

அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள், அலுவலகங்கள் ஆகியவை பெரும்பாலும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ற வண்ணங்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இது கட்சிக்கான ஒரு காட்சி அடையாளத்தை உருவாக்குகிறது.

போராட்டங்கள், பேரணிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட வண்ண ஆடைகளை அணிந்து செல்வது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துகிறது. இது அந்த வண்ணத்திற்கும், அந்தக் குழுவின் நோக்கத்திற்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குகிறது. சமீபத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அனைவரும் பச்சை நிறத்துண்டை அனிந்திருந்ததை பார்த்தோம்.

வண்ணங்கள் வெறும் அழகியல் கூறுகளல்ல. அவை தகவல் தொடர்புக்கான சக்தி வாய்ந்த கருவிகள். அவை நம் உணர்வுகளைத் தூண்டவும், நம் அடையாளங்களை வெளிப்படுத்தவும், ஒரு குறிப்பிட்ட இலக்கை, பார்வையைக் கடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறத்தைப் பார்க்கும்போது, அது உங்கள் மனதில் எந்த எண்ணங்களைத் தூண்டுகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அது ஒருவேளை நம் சமூகத்தில் ஆழ்ந்திருக்கும் சில குறியீடுகளின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.

“DMK பஸ்” மற்றும் “BJP ரயில்” போன்ற வார்த்தைகள் எப்படி நம் அன்றாட பேச்சுவழக்கில் கலந்திருக்கின்றன என்பது வண்ண அரசியலின் ஆழமான தாக்கத்தை காட்டுகிறது. இந்த வண்ண அடையாளங்கள் நல்லதோ கெட்டதோ அல்ல — அவை வெறும் கருவிகள். முக்கியமானது அவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான். வண்ணங்கள் நம்மை பிரித்து வைக்கவோ அல்லது நம் பண்பாட்டின் வளமையை காட்டவோ பயன்படும் என்பதும் நம் கையில்தான் உள்ளது.

அடுத்த முறை சிவப்பு பேருந்தோ, காவி ரயிலோ பார்க்கும்போது, அந்த வண்ணத்தின் அரசியல் அர்த்தத்தையும் மீறி, அதன் இயல்பான அழகையும் அனுபவிக்க கற்றுக் கொள்வோம். வண்ணங்கள் வெறும் வண்ணங்களாக இருக்கட்டும் — அவற்றை அரசியல் கருவிகளாக்கும் நம் மனப்பான்மையை மாற்றிக்கொள்வோம்.

நினைவில் கொள்ள வேண்டியது: வண்ணங்களில் அரசியல் இல்லை, அரசியலில்தான் வண்ணங்கள் இருக்கின்றன.

sbalajisun@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button