
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும்.
எல்லோருக்குமே வானத்தில் இருந்து ஒளியொன்று உள்நுழைந்து கவிதைகளாக பரிணமிப்பது அல்ல. ஆனால், தொடர் வாசிப்பின் மூலமும் உரையாடல் மூலமும் எங்கெல்லாம் கவிதைகள் உள்ளதென கண்டுகொள்ளவும் அதனை எழுத்துகளாய்ப் பதியவும் சாத்தியமாகிறது.
அப்படியிருந்தும் இங்கு நடப்பது என்ன; கவிதையோ கதையோ எழுதுகின்றவர்களுக்கு விமர்சனம் எழுதுகிறவர்கள்தான் முதற்கட்ட எதிரியாக மாறிவிடுகின்றார்கள். மாற்றப்படுகின்றார்கள். இது எவ்வளவு பெரிய பின்னடைவைக் கொண்டு வரும் என அறிய தவறி விடுகின்றார்கள். காலம் தாழ்த்தி அறிந்த பலரும் எழுத்துலகில் இருந்து ஏதேதோ காரணங்களால் காணாமல் போயிருக்கிறார்கள்.
நாங்கள் நண்பர்களுடன் இணைத்து ‘சிறகுகளின் கதை நேரம்’ என்னும் வாராந்திர இணைய சந்திப்புகளை நடத்தினோம். மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியில் அதிகமே இங்குள்ள இளம் எழுத்தாளர்கள் பங்கெடுத்தார்கள்.
அதில் ஒருவரின் சிறுகதையை வாசித்து ஒவ்வொருவரும் விமர்சனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் சிலர் அந்தச் சிறுகதையில் இருக்கும் குறைகளையும் அதனை எப்படி அடுத்தடுத்த கதைகளில் சரி செய்யக்கூடும் எனவும் பேசினார்கள். இணையம் வழி நிகழ்ச்சி என்பதால் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் அவர்களின் முகமோ யாரென்ற அடையாளமோ நமக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படித்தான் ஒருவர் உரையாடலுக்குள் நுழைந்தார். பேசினார். அது அந்த எழுத்தாளரின் சிறுகதையை ஒட்டிய விமர்சனமாக இல்லாமல்; இதுவரை விமர்சனம் செய்தவர்களின் மீதான விமர்சனமாக அமைந்து. குறிப்பாக; ‘சொல்கிறவர்கள் இப்படித்தான் சொல்வார்கள் எதனையும் காதில் வாங்கி கொள்ளாதீர்கள் உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள்…’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் மற்றவர் பேசும் எதையும் காதில் வாங்காமல் தன் விருப்பப்படி எழுதுவதை ஏன் நாங்கள் நேரம் எடுத்து வாசித்து அது குறித்துப் பேச வேண்டும். நான் சட்டென பேசியவரிடம் அந்தச் சிறுகதையை வாசித்தாரா என கேட்கவும் தான் இனிதான் முழுமையாக மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு புரிந்துவிட்டது அவர் அச்சிறுகதையை இன்னும் பாதிகூட வாசிக்கவில்லை.
அவர் சொன்னதில் எனக்கு முழுமையாக மறுப்பு இல்லை. அப்படியெல்லாம் சொல்லவே கூடாதா என்று வாதிடவில்லை. ஆனால், எழுத ஆர்வம் உள்ள ஒருவரிடம் தான் எழுதியுள்ளது சரியாக இருக்கிறதா, அதனை வேறெப்படி இன்னமும் நேர்த்தியாக எழுதலாம் எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவரிடம் இப்படி பேசுவது ஒருபோது சரியாகாது. அவ்வாறு கருத்து சொன்னவர் அதன் பின் நிகழ்ச்சிக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட எழுத்தாளரைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் தன் சிறுகதைக்கு கிடைத்த விமர்சனம் மூலம் அந்த இளம் எழுத்தாளர் மேலும் சில கதைகளை எழுதி அது சில இணைய இதழ்களிலும் பிரசுரம் ஆனது. அதுமட்டுமல்லாது அன்று விமர்சனம் செய்தவர்கள் தொடர்ந்து அந்த இளம் எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தும் வருகிறார்கள். இங்கு தேவை என்பது இதுதான். நாம் வரவேற்க வேண்டியதும் இதைதான்.
நமக்கும் இதுதான் வேண்டும். எழுதுகிறவர்களைத் தொடர்ந்து எழுத வைக்க வேண்டும். விமர்சனத்திற்கு காது கொடுத்தோ புறக்கணித்தோ ஆனால் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களை சோர்ந்திடாது எழுத வைப்பதுதான் நம் வேலையாக இருக்க வேண்டும்.
ஒரு படைப்பிற்கு வரும் விமர்சனமோ அறிமுகமோ அதனை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது என நான் நம்புகிறேன். விமர்சனங்கள் எழுதப்படுகின்றவர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்குமே வாசிப்பின் பல்வேறு அடுக்குகளை அறிமுகம் செய்து வைக்கத் தவறுவதில்லை.
சமீபத்தில் ந.பெரியசாமியின் ‘கணப் பிறை’ கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன். ஓர் எழுத்தாளனாகவும் கவிதை எழுதுகிறவனாகவும் வாசகனாகவும் எனக்கு பல திறப்புகளை பல அறிமுகங்களை கொடுத்திருந்தார்.
தேநீர் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியீடு செய்திருந்தார்கள். 24 கட்டுரைகள் அடங்கிய புத்தகம் இது.
கவிதைகள் குறித்து விமர்சனமும் பார்வையும் அடங்கிய இந்தத் தொகுப்பில்; பாலகுமார் விஜயராமனின் ‘நஞ்சுக் கொடி’ சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு கட்டுரையும், கமலாலயன் மொழிபெயர்த்திருக்கும் ‘பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர்’ குறித்து ஒரு கட்டுரையும், ஷோபா சக்தியின் ‘ஸலாம் அலைக்’, நாராயணி கண்ணகியின் ‘வாதி’, தேவிபாரதியின் ‘நொய்யல்’, சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’, எஸ்.தேவியின் ‘பற் சக்கரம்’ என ஐந்து நாவல்கள் குறித்த அறிமுகங்களையும் இணைத்திருந்தார்.
நாவல்கள் குறித்த கட்டுரைகளை வாசிக்கவும் நாவல்களின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது. நாவலில் முழு கதையையும் எடுத்து வாசகர்களின் முன் வைக்காமல் அந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறார். இதனை விமர்சனம் என சொல்லாமல் அறிமுகம் என்றே சொல்லத் தோன்றுகிறது. பெரும் வாழ்வை சுமந்திருக்கும் நாவல்களில் அதன் சில தெறிப்புகள் வழி அதன் மீது ஆர்வம் வரும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அந்தந்த நாவல்கள் குறித்து நல் அறிமுகங்களைக் கொடுத்திருக்கின்றன எனலாம்.
இத்தொகுப்பின் முக்கியமான பகுதியாக இருக்கும் கவிதைகள் குறித்து கட்டுரைகளில், கவிஞர் ஶ்ரீநேசன் தொடங்கி க.மோகனரங்கன், வினையன், வேல் கண்ணன், நந்தன் கனகராஜ், சம்பு, மலர்விழி, தபசி, சூர்ய நிலா, எம்.டி.முத்துக்குமாரசாமி, மகிழ் ஆதன், ஆசை, வெய்யில், கண்டாரதித்தன், வெ.மாதவன் அதிகன், கௌரிப்ரியா, தி.பரமேசுவரி என பதினேழு கவிஞர்களில் கவிதைப்தொகுப்புகளைக் குறித்து எழுதியிருக்கின்றார்.
ஒவ்வொரு கவிஞரின் கவிதையுலகை அவர்களின் கவிதைத் தொகுப்புகள் வழி வாசகர் முன் எடுத்து வைக்கின்றார். இந்தக் கவிதைகளை எப்படி புரிந்து கொள்ளலாம் என சொல்லும் போது அதற்குரிய தனது கவிதைகள் குறித்த பார்வையையும் தன் அனுபவங்களை அழகாய்க் கோர்க்கின்றார்.
கட்டுரையாசிரியர் ஓரிடத்தில் ‘கவிதையின் முதல் பத்தி தவறான புரிதலையும் கொடுக்கக் கூடிய தன்மையிலும் இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம்….’ என சொல்லும் அதே சமயம் இன்னொரு கட்டுரையில்; ‘கவி்தையின் தொடக்க வரியைத் தலைப்பாக வைத்துள்ளார். சரி தவறெனச் சொல்லத் தெரியவில்லை. ஏதாவது காரணம் இருக்கக் கூடும்…..’ என்றும் சொல்கின்றார். இந்த வெளிப்படைத் தன்மையை இக்கட்டுரைகள் முழுக்கவும் நாம் பார்க்கலாம். எந்தவித பாசாங்கு தன்மையும் இல்லாமல் நெடுநாள் தன் வாழிப்பின் வழி கவிதையுலகம் தனக்கு திறந்து வைத்திருக்கும் கதவை நமக்கும் காட்டுகின்றார். நுழைய விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக நுழைந்து அவரவருக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நிறைவாக, கவிஞர் ந.பெரியசாமியின் ‘கணப் பிறை’ என்னும் இப்புத்தகம் கவிதைகளை விரும்பி வாசிக்கின்றவர்கள் தவறவிடக்கூடாத புத்தகங்களில் ஒன்று. பலவேறு கவிஞர்களின் அறிமுகமும் அவர்களின் கவியுலகினுள் நுழைவதற்கான வாசலையும் இக்கட்டுரைகள் நமக்குத் திறந்து வைக்கின்றன. இதனை ஒரு தொடக்கமாகக் கொண்டு நாம் நமக்கான கவிஞர்களையும் நமக்கான கவிதைகளையும் அடையாளம் கண்டு; கவிதையென்னும் மாய உலகில் சஞ்சரிக்கலாம்.
இக்கட்டுரைகளை வாசித்தப்பின் நாம் எழுதும் கவிதைகளை நாமே தைரியமாக சீர்தூக்கி பார்த்துக்கொள்ளலாம்.



