
சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார்.
“ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண்.
“அது உனக்காக வெக்கலப்பா. வேற ஒரு விஷயத்திற்கு… உனக்கு ஜிபே பண்றேன்“ ரூபாயை பர்சின் கங்காரு வயிற்றிற்குள் நன்றாகத் தள்ளி வைத்தார். யார் கண்ணிலும் படக் கூடாதென்றாலும், குட்டி அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. அதை இதுவரை பார்த்தவர்கள் என்றால், ஸ்டேஷன் ரோடு பூக்காரி, காய்கறி விக்கிறவர் என்று ஒரு பெரிய லிஸ்ட் .
‘இவர்கள் எல்லார் கண்ணிலேயும் படுகிறது. பிள்ளையாரப்பா. உன் கண்ணில் படவில்லையா?’
பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்தார். எழுபது வயதில், அதுவும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிற மாம்பலம் வீதிகளில், நடப்பதே பிரம்ம பிரயத்தனம். அதனால், அவசரமாக என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.. வேறு வழியில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி, அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு மேல் நேரம் ஆகிவிட்டால், அவரது மனைவி டென்ஷன் ஆகிவிடுவாள். அவருக்காக இல்லை. 95 வயதில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் மோகனின் அப்பாவைப் பார்த்துக் கொள்வதில் அவளுக்கு அப்படி ஒரு படபடப்பு வந்து விடும்.
‘இதோ வந்துவிடுகிறேன் அமுதா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே நடந்தாலும், போகிற வழியில் வல்லப வினாயகர் கோவிலில் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போகத்தான் வேண்டும். தினசரி வேண்டுதல் ஒருக்காலும் நின்று போய் விடக்கூடாது.
அவர், அவனாக இருந்த காலத்திலிருந்தே, ஆர்ய கௌடா ரோடு வல்லப வினாயகர் அவருடைய வேண்டுதல்களை நிராகரித்ததே இல்லை. இருபத்தைந்து பைசாவிலிருந்து தொடங்கி இப்போது அவருடைய பீஸ் பத்து ரூபாய் வரைக்கும் உயர்ந்திருக்கிறது. வேறென்ன..? எல்லாம் தேங்காயின் விலைதான்.
இப்போது தேங்காயின் விலை பத்து ரூபாய் இல்லை. அப்படியென்றால், ஏன் பத்து ரூபாய் என்று எழுகிற கேள்விக்கு பதில் அவசியம். . ஏனென்றால், அவர் வேண்டிக் கொண்டிந்த காலத்தில், தேங்காய் பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். மன்மோகன் சிங் கையெழுத்து போட்ட ரூபாய்த் தாளின் பின்னால், அமர்ந்த நிலையில் இருக்கும் காந்தி, இப்போது மடங்கி அவரது பர்சில் இருப்பதே அதற்கு சாட்சி.
இப்போது விலை ஏறிப் போய், இருபது ரூபாயிலிருந்து தொடங்கி, முப்பது, முப்பத்தைந்து என்று குடுவை, குடுவையாக வெவ்வேறு சைசுகளில் கடைகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. இப்படி விலைவாசி உயர்ந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் பிள்ளையாரப்பன் அவரது பிரார்த்தனையை நிறைவேற்றாமல் காலத்தைக் கடத்திக் கொண்டு வருகிறார்.
பத்து வருடம் முன்பாகவே அவரது அப்பாவிற்கு டிமென்ஷியா நோய் தொடங்கியிருந்தது. முற்றும் மறந்தவரானார் சிறிது சிறிதாகத் தொடங்கிய நினைவுகளின் தேய்மானம், ஒரு வருடத்திற்குள், சட்டென்று மூளையின் மடிப்புகளில் தேங்கியிருந்த ஞாபகம் முழுவதும் வடிந்த நிலைக்குச் சென்று குழந்தையாய் நின்றார். முற்றும் துறந்தவராகவும் ஆனார்.
பேசுவது நின்று போயிற்று. சாப்பிடத் தெரியவில்லை. பாத்ரூம் படுக்கையிலே.. மோகன் அப்போதுதான் ரிட்டயர் ஆகியிருந்ததால், அப்பாவை முழுநேரமும் பார்த்து கொள்ள முடிந்தது. வீட்டிற்கு ஒரே பிள்ளை வேறு.
துவக்கத்தில் சமாளிக்க முடிந்தாலும் அதுவே காலப்போக்கில், தினசரிக் கடமையாக உணர்ந்தபோது மோகனுக்கு சலிப்பு தட்டத் தொடங்கியது. எந்த நல்லது கெட்டதிற்கும் வீட்டை விட்டு வெளியில் போக முடியாத நிலை வேறு.
முதலில், மோகன் மட்டும் விசேஷங்களுக்கு போய் வந்து கொண்டிருந்தார். மனைவியால், மாமனாரைச் சமாளிக்க முடியவில்லை என்றானவுடன், அவர் வீட்டோடு இருந்து பார்த்துக் கொள்ள, மனைவி குடும்பத்தின் பிரதிநிதியாக கல்யாணம் காட்சிகளுக்குச் சென்று வருகிறாள். ரிட்டயர் ஆன பிறகு, சார்தாம், முக்திநாத் என்று ஒன்று விடாமல் மனைவியோடு சென்று வரவேண்டும் போன்ற பல ஆசைகள் அவருக்கு நிராசையாகி விட்டது.
வருடங்கள் செல்லச் செல்ல, மோகனுக்கும் தள்ளாமை வந்துவிட்டது. என்றாவது ஒரு நாள், பெரியவர் கால் மடங்கி தரையில் உட்கார்ந்தால், கையைப் பிடித்து தூக்கி எழுப்பி வைக்கிற தெம்பும் அவருக்கில்லை.
‘பிள்ளையாரப்பா, தினமும் இவ்வளவு சிரமங்களோடு என்னால் வாழ முடியவில்லை. நான் நினைச்சபடி ரிடயர் ஆன வாழ்க்கையை வாழ முடியலை. இப்ப உள்ள பிரச்சனைகளிலிருந்து சீக்கிரம் விடுதலை கொடுப்பா’ என்று வேண்டிக் கொண்டார். என் அப்பாவை சீக்கிரம் உன்னோடு கூட்டிக் கொண்டு போய் விடு என்பதை, இதை விட வேறு எப்படித்தான் சொல்வது என்பதில் அவருக்கு தயக்கம் இருக்கத்தான் செய்தது.
அப்படி வேண்டிக்கொண்டு பத்து வருடங்கள் ஆயிற்று. அதையே தினமும் வேண்டிக் கொண்டபடி இருக்கிறார். அந்த மறைமுக வேண்டுதல் பிள்ளையாருக்குப் புரியவில்லையோ என்னவோ? காலம் கடந்து கொண்டே இருக்கிறது.
அப்பாவிற்காக வேண்டியபோது, பிள்ளையாரின் படத்தின் முன் வைத்த பத்து ரூபாய் நோட்டுதான் இப்போது பர்சில் அவரோடு உலா வந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களில், அந்த ரூபாய் நோட்டைப் போலவே மோகனும் நைந்து உருக்குலைந்து போய் விட்டார்.
இத்தனை வருடங்களாய் அவருக்கு ஒரே விதமான கால அட்டவணைப்படி டியூட்டி. காலையில் எழுந்ததுமே, அப்பாவிற்கு டயபரை மாற்றவேண்டும். மல ஜலமாயிருந்தால், அதையும் துடைத்துப் போட்டு விட்டு , பெரியவரின் இடுப்புத் துணியை மாற்ற வேண்டும். உடனேயே, ஈர டவல் பாத். இரவில் அவ்வப்போது எழுந்து பார்ப்பதை தனிக் கணக்கில் எழுதிக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் தனக்கில்லை என்பது போல், அவரது மனைவி தனி அறையில் படுத்துக் கொள்கிறாள்.
அதற்கப்புறம், எட்டு மணிக்கு, கஞ்சி, மதியம் சிறிதளவு சாதம் – நன்றாக மாவு போல் குழைத்து, ஸ்பூனால் ஊட்டவேண்டும். கையைக் காலை அசைத்து உடற்பயிற்சி. இரவில் இட்லியை சிறு விள்ளல்களாக வாயில் போடவேண்டும்.
சில சமயங்களில், எதுவும் புரியாத மாதிரி கின்னர மொழியில் பேசுவார். அதற்கு அவர் ‘ஆமாம், ஆமாம்’ என்று பலமாகத் தலையை ஆட்ட வேண்டும். மோகனைக் கூப்பிடுவதற்கு மட்டும், “ஏய். ஏய்” என்று ஏதோ கத்துவார். தனது தேவைக்கெல்லாம் மகனைக் கூப்பிட வேண்டும் என்பது மட்டும் எங்கோ மூளையில், கல்வெட்டாய்ப் பதிந்து கிடக்கிறது போல.
விரைவிலேயே, இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கையில், பிள்ளையாரின் அற்புதத் திருவிளையாடல் ஒன்றிற்காக காத்துக் கொண்டிருந்தார்.
கோவில் வந்தாயிற்று. உள்ளே நுழையாமல், செருப்பைக் காலிலிருந்து பேருக்காக விடுவித்து, சாலையில் நின்றபடி பிள்ளையாரிடம் எப்போதும் போல் வேண்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். செருப்பை மறுபடி மாட்டிக் கொள்ளும் போது கால் இடறிற்று.
“பாத்துப் போ பெரியவரே.. விழுந்து கிழுந்து வைக்காதே” என்று கோவில் பூக்காரி அவரை உரிமையுடன் கடிந்து கொண்டாள்.
அரை மணி நேரக் கெடுவிற்கும் கூடுதலாக பத்து நிமிடங்கள் ஆகியிருக்குமா? ஆனாலும், வீட்டிற்கு நுழையும் போதே, மனைவி எனும் புயல் வரவேற்பு அறையில் மையம் கொண்டிருந்தது. மோகன் உள்ளே நுழைந்த உடனேயே, சூறைக்காற்று மணிக்கு 160 கிமீ வேகத்தில் அவரைச் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. அறையைக் கடக்க குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகும்.
“பழம் வாங்கப் போன மனுசருக்கு இவ்வளவு நேரமா.? மெயின் ரோடுல இல்லாத கடையா? வாசல்ல, தெனமும் சாயாங்காலம் நாலு மணிக்கு தள்ளு வண்டில வித்துக்கிட்டுப் போறான். உங்க பையன் கிட்ட சொன்னால், அப்பாவை ஆப் மூலமாக வாங்கச் சொல்லுன்னு சொல்றான். ஜென்மம் எதையும் கேக்கறது கிடையாது. இந்த வயசுல எதுக்கு வெளியில போணும்? போற வழியில, சூடா பஜ்ஜி, போண்டான்னு எதையாவது திங்கணும். கிழ ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வம்படிக்கணும். பேப்பர் கடை வாசல்ல நின்னு, வால் போஸ்டரைப் படிக்கணும். இங்க, நான் உங்க அப்பாவோட மாரடிக்கணும் அதானே உங்க ஆசை?”
அவர் தளர்ந்து போய் சேரில் அமர்ந்தார்.
“ஒரு கல்யாணம் காட்சின்னு எங்கயும் போக முடியறதில்ல.. வீட்டோட, உங்க அப்பாவைப் பாத்துக்கிறதுக்கு ஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணுங்கன்னா,, அதான் நான் இருக்கேனேன்னு சொல்றீங்க.. நான் அவரைக் குத்தமே சொல்ல மாட்டேன்.. பாவம், அவருக்கு என்ன தெரியும்?.. அதனால்தான் சொல்றேன். வயசானவங்களுக்கு, ஏதோ பாலியேட்டிவ் கிளினிக் ஒண்ணு இருக்காமே.. அங்க கொண்டு விடுங்க. அவங்க பாத்துப்பாங்கன்னு சொல்றாங்க. நீங்க கேக்க மாட்டேங்கறீங்க.“ பெருமூச்சு அடங்க, புயல் ஆசுவாசம் கொண்டது.
அந்த மாதிரி இடங்களில் என்ன செய்வார்கள் என்று மோகனுக்கே தெரியும். வருங்காலத்தில் ஒரு தேதியிடாத குறையாக, அப்பாவின் மரண ஓலையை எழுதித் தந்து விடுவார்கள். வலியைக் குறைப்பதாகச் சொல்லி, மார்பின் ஊசி. கிராமங்களில் நடைபெறுகிற தலைக்கூத்தலின் நகர வடிவம்.
மோகன் சட்டையைக் கழட்டி வைத்து விட்டு, அப்பாவை பார்க்கப் போனார். அவரின் இட்லி நேரம் அது.
மோகனுக்கே பசியில் தலை சுற்றுவது போல் இருந்தது. ஆனாலும், அப்பாவிற்கு முதலில் இட்லி ஊட்டியாகவேண்டும். இல்லாவிட்டால், தூங்கப் போய்விடுவார்.
அவரை எழுப்பி உட்காரவைத்தார். பத்து நாள் தாடி, பெரியவரை இன்னும் பெரிய வியாதிக்காரராய்க் காட்டியது. அடுத்த நாள் அப்பு சலூனுக்கு போன் பண்ணிச் சொன்னால், யாரையாவது அனுப்பி வைப்பார்கள்.
இட்லி ஊட்டத் தொடங்கினார்.
“தெனமும் பிள்ளையாரை வேண்டிக்கிட்டுத்தான் இருக்கேன்.. உன்னை அழைச்சுண்டு போறதுக்கு.. நீ கிளம்பிப் போன்னு உங்ககிட்ட சொல்ல முடியாதுல்ல..” துக்கத்தில் தொண்டை அடைத்தது.
“ நீங்க உங்க பிள்ளையோட இருக்கணும் ரொம்ப ஆசைப்படற மாதிரி, எனக்கும் எம் புள்ளயோட இருக்கணும்னு ஆசை இருக்காதா.. சீக்கிரம் விடுதலை கொடுப்பா.. என்னால முடியல..“ என்று புலம்பியபடி அப்பாவிற்கு உணவைக் கொடுத்து முடித்தார்.
அவரது வாயை டவலால் துடைத்து விடுகையில் எப்போதும் இல்லாத மாதிரி அவர் தன்னைப் பார்ப்பதாகத் தோன்றியது மோகனுக்கு..
“ஆச்சா.. நீங்களும் சாப்பிட வாங்க” என்றபடி, அமுதா நான்கைந்து இட்லிகளை ஒரு தட்டில் நிரப்பி எடுத்து வந்து அவர் முன்னால் வைத்தாள்.
டின்னரை முடித்த கையோடு, மாத்திரைகளை முழுங்கிவிட்டுப் படுத்தார்.
தூங்குகிற வரைக்கும் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பவர் அமைதியாக விட்டத்தை நோக்கியபடி இருந்தார் பெரியவர்.
“நாளைய பொழுது தனக்கு நல்லதாக விடியட்டும்” என்று வேண்டிக் கொண்டு கண்ணை மூடினார் மோகன்.
மறுநாள் காலை. பெரியவர் எப்போதும் போல், “ஏய்.ஏய்.” என்று கூப்பிட்டபடி இருந்தார்.
அவரது தொடர் விளிப்பில் மோகன் இல்லையா என்ற சந்தேகத்துடன், அமுதா மோகனின் அறைக்குள் ஓடி வந்தாள்.
இரவில் என்ன மரணப் போராட்டமோ, மோகனின் கட்டிலில் இருந்த மருந்து பாட்டில்கள் கீழே இறைந்து கிடந்தன.
அவரது தலைமாட்டிலிருந்த பர்ஸ் திறந்தபடி இருக்க, அதன் வயிற்றிலிருந்து வெளிவந்திருந்த அந்த பத்து ரூபாய்த் தாள் தரையில் விழுந்து கிடந்தது.



