இணைய இதழ் 120சிறுகதைகள்

வேலை – கே. ஆனந்தன்

சிறுகதை | வாசகசாலை

ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென குலதெய்வத்தை கும்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். வீட்டில் அப்பா, அம்மா, இவனுக்கு வேலை கிடைத்தால் தன் வாழ்வு விடிந்துவிடும் என்ன கனவில் அக்கா தங்கையோ இருக்க கூடும்.

 இந்த நாட்களில் முன்பை போல வேலை இல்லா திண்டாட்டமோ, வேலைக்கு அலையும் பிரசினையோ அவ்வளவாக இல்லைதான். பெரும்பாலானவர்களுக்கு கேம்பஸிலேயே கிடைத்து விடுகிறதுதான். ஆனால், கேம்பஸில் கிடைக்காதவர்கள் துரதிருஷ்டம் செய்தவர்கள்.

  ப்ரவீனும் அப்படிப்பட்ட துரதிருஷ்டசாலிகளில் ஒருவன். எம்காம். பேங்கிங் அன்ட் அக்கவுன்ட்ஸ். அவன் படித்த போதே நிறைய கம்பெனிகள் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வந்தன. மாணவர்களை தேர்ந்தெடுக்கவும் செய்தன. ஆனால், அப்படியும் பாதிக்கு மேல் வேலை கிடைக்காமல் தங்கி விட்டார்கள். இவன் கூட படித்த இவன் நண்பர்களே பாதிக்கு மேல் கேம்பஸில் தேர்வாகி வேலைக்கு போய்விட்டார்கள்.

 இவன் கேம்பஸில் தோற்றுப் போகும் ஒவ்வொரு சமயமும் அப்பா மாணிக்கவாசகம் தேற்றுவார்.

 “விடுப்பா. இந்த கம்பெனி இல்லாட்டி இன்னொரு கம்பெனி. இது ஒரே ஒரு கம்பெனியா என்ன?” என்பார். அது அவனை மட்டுமல்ல. தன்னைத்தானே தேற்றிக் கொள்ளவும்,தைரியம் சொல்லிக் கொள்ளவுமான வார்த்தைகள் என்பது அவனுக்குத் தெரியாது.

 ஒவ்வொரு கம்பெனியாக வந்ததென்னவோ உண்மை. ஆனால், ஒவ்வொன்றிலும் இவன் கூட இருந்தவர்கள்தான் தேர்வானார்களே தவிர இவன் தேர்வாகவில்லை.

 படிப்பும் முடிந்தது. இனி வெளியில் நாமேதான் வேலை தேடிக் கொள்ள வேண்டுமென்ற நிதர்சனம் உறைத்தது.

 தேட ஆரம்பித்தான். சொல்லி வைத்தது போல எல்லா இன்டர்வியூவிலும் ‘வீ வில் இன்ஃபார்ம் யூ ‘ என்றார்கள். அப்போதே முடிவு தெரிந்து விடும்.

 “கார்த்திக் வாங்க.” அலுவலக உதவியாளரின் குரல் கேட்டு சிந்தனையில் இருந்து வெளியே வந்தான் ப்ரவீன். அவன் உள்ளே போக அவனுக்கு பின் இன்னும் மூன்று பேருக்கு பின் இவன் போக வேண்டும்.

 தனது முதல் இன்டர்வியூ ஞாபகத்துக்கு வந்தது ப்ரவீனுக்கு. அவன் கூட படித்த நண்பன் நவீன்தான் ரெஃபர் பண்ணி இருந்தான். பெரிய கம்பெனிதான் அது. “ப்ரவீன். தைரியமா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு. நான் ரெகமன்ட் பண்ணிருக்கேன். வேலை உனக்குதான். ஆல் த பெஸ்ட். ” தைரியமும் வாழ்த்தும் சொல்லி அனுப்பினான்.

 இவனும் அந்த இன்டர்வியூவை நன்றாகவே அட்டென்ட் செய்தான். கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில், பக்காவாக செல்ஃப் இன்ட்ரடக்ஷன், தைரியமான அணுகுமுறை, என தான் சரியாகவே செய்ததாக தோன்றியது அவனுக்கு. கூடவே நவீனின் ரெக்கமென்டேஷன். தன்னை இன்டர்வியூ செய்தவர்களின் திருப்தியான முகம் என்று அந்த வேலையை உறுதியாக நம்பினான் ப்ரவீன்.

ஆனால், பதினைந்து நாள் கழித்து வந்த நவீனின் ஃபோன் கால் அந்த நம்பிக்கையை உடைத்தது.

 மிகவும் நம்பிக்கையுடன்தான் எடுத்தான் ப்ரவீன்.

 “சொல்லுப்பா. . “

 “ப்ரவீன். ஸாரிடா.. நான் உனக்கு ரெக்கமன்ட் பண்ண அந்த வேலை உனக்கு கிடைக்காது போல தெரியுதுப்பா.. ” அவன் சொன்னதும் அதிர்ந்து போனவன், “ஏம்பா..என்னாச்சு? ” என்றான்.

 “கம்பெனி ஜி. எம். மோட ரெக்கமென்டேஷன் ஒருத்தனுக்கு இருக்குடா. அதை தாண்டி என்னால ஒண்ணும் பண்ண முடியல.. “

 “பரவால்ல விடுப்பா. நீ என்ன பண்ணுவ? ஸாரிலாம் எதுக்கு கேக்குற?” என்றான் தளர்ந்து போய்.

 “அடுத்த முறை ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்றேன்பா..” என்று அவன் காலை கட் செய்ய, வாடிய அவன் முகம் கண்டு கேட்ட அப்பா மாணிக்கவாசகத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் அவனுக்கு ஆறுதல் கூறினார்.

 “பரவால்ல விடுப்பா. இது கிடைக்கலைனா என்ன.. வேற கிடைக்கும். ” என்றார்.

 அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை விட மகனின் மனம் எவ்வளவு கவலை அடையும் என்பதுதான் வேதனையாக இருந்தது. ஏனெனில் அந்த வேலை கிடைத்துவிடும் என்று அவன் எவ்வளவு உறுதியாக இருந்தான் என்பது அவருக்கு தெரியும்.

 மூன்று மாதங்கள் ஓடி இருக்க நவீனே இன்னொரு கம்பெனிக்கு ப்ரவீனை அனுப்பி வைத்தான்.

 “கண்டிப்பா இந்த வேலை கிடைக்கும். தைரியமா போய்ட்டு வா.” மகனை தைரியப்படுத்தி அனுப்பினார்.

 இன்டர்வியூ முடிவில், “ரெண்டு வாரத்துல சொல்றோம்” என்றார்கள். ரெண்டு மாதம் ஆகியும் எந்த தகவலும் வரவில்லை.

 திடீர் சலசலப்பு கேட்டது. இன்டர்வியூ முடிந்து அந்த கார்த்திக் வெளியே வந்தான். அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டு, “எப்படி இருந்துச்சு? என்ன கேட்டாங்க?” என்றார்கள்.

 அவன் நம்பிக்கையே இல்லாமல்,” வழக்கம்போலதான் ப்ரோ. பரவாயில்லாம இருந்துச்சி. எல்லா கேள்விகளுக்கும் சரியாதான் பதில் சொல்லிருக்கேன். பார்ப்போம்”

 அடுத்து “சுரேந்தர் வாங்க” என ஆபீஸ் அசிஸ்டன்ட் கூப்பிட அவன் எழுந்து

உள்ளே போனான். இவன் முறைக்கு இன்னும் இரண்டு பேர்.

 அதற்கப்புறம் நான்கைத்து இன்டர்வியூக்கள். ‘அனுபவம் இல்லை. எதிர்பார்த்த நாலேட்ஜ் இல்லை. எதிர்பார்க்கும் சம்பளம் இல்லை’ என எதுவும் செட்டாகவில்லை.

 அதற்குள் ஒன்றரை வருடங்கள் ஓடி விட ப்ரவீனுக்கு தனது எதிர்காலம் பற்றி ஒரு பயம் லேசாக மனதில் ஓட ஆரம்பித்தது.

 அப்போதெல்லாம் அப்பாதான் ஆறுதல் சொல்லுவார். .

 “அவனவன் படிச்சுட்டு நாலைஞ்சு வருஷம் சும்மா சுத்திட்டு வேலைக்குப் போறான். நீ ஒன்னரை வருஷத்துலயே மனசு ஒடைஞ்சி போயிட்டா எப்படி? இப்பதான் நீ தைரியமா இருக்கணும். எதுக்கு கவலைப்படற? முகத்துல எதுக்கு இவ்வளவு வாட்டம்? கவலைய விடு. அப்பா நான் இருக்கற வரைக்கும் என்ன கவலை உனக்கு? எங்க சிரி பார்ப்போம்” என்பார் மாணிக்கவாசகம்.

 உண்மையில் அவருக்கும் மனதில் கவலையும், பயமும் ஓடிக் கொண்டுதான் இருக்கும். ஆனால், தானே அதை வெளிக்காட்டினால் எப்படி?

 “இந்த பயலுக்கு ஒரு வேலை அமைஞ்சுட்டா போதும். என் கவலைலாம் தீர்ந்துடும்” என்று அடிக்கடி ப்ரவீன் இல்லாத நேரங்களில் சொல்லுவார் மனைவி மல்லிகாவிடம்.

 அந்த சுரேந்தர் போய் விட்டு வந்து அடுத்த ஆள் உள்ளே போனதும் இன்னும் ஒரு ஆள் போனதும் தான் போக வேண்டும் என்பது ஞாபகத்துக்கு வந்ததும் படபடப்பு இன்னும் அதிகமானது ப்ரவீனுக்கு. உள்ளங்கைகள் ஈரமானது.

 இது அவனது பன்னிரெண்டாவது இன்டர்வியூ. இந்த வேலையாவது அவனுக்கு கிடைத்தே ஆக வேண்டும். அப்போதுதான் அப்பாவின் முகத்தில் சிரிப்பையும் மனதில் மகிழ்ச்சியையும் பார்க்க முடியும். தனக்காக இல்லாவிட்டாலும் அப்பாவுக்காகவாவது கிடைக்க வேண்டும்.

 மாணிக்கவாசகம் ஒரு கம்பெனியில் சீனியர் எலெக்ட்ரிசியன். முப்பத்தைந்து வருட சர்வீஸ் அவருக்கு. நிரந்தர தொழிலாளி. எல்லா பிடிப்பும் போய் நாற்பத்தி ஐயாயிரம் சொச்சம் கைக்கு வருகிறது.

 இன்னும் ஐந்து வருட சர்வீஸ் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஷிப்டுக்குப் போய்விட்டு வந்து உடல் வலிக்குதென அம்மாவிடம் சொல்லும்போது பாவமாக இருக்கும். தானும் சீக்கிரம் வேலைக்குப் போய் அவர் பாரத்தை குறைக்க வேண்டுமென இருக்கும். உடல்வலியை விட அவருக்கு தன்னை பற்றின மன வலிதான் அதிகமென தெரியும் அவனுக்கு.

 அடுத்த அரை மணி நேரத்தில் இவன் கூப்பிடப்பட்டான்.

 உள்ளே போனவனுக்கு வழக்கமான இன்டர்வியூ நடைமுறைகள் நடந்தேறின. வழக்கம் போல “தகவல் சொல்றோம்” என்ற பதில் தரப்பட்டது. தளர்ந்து போனவனாக வெளியே வந்தான்.

 பதினைந்து நாட்கள் ஓடியும் எந்த தகவலும் இல்லை. ப்ரவீனுக்கு புரிந்து போனது. இந்த இன்டர்வியூவிலும் வேலை இல்லை.

 இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மதியம். ப்ரவீன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மாணிக்கவாசகம் வந்தார். பக்கத்தில் மல்லிகா இருந்தாள்.

 “என்ன ப்ரவீன். இந்த வேலையும் கிடைக்காது போல” அவன் எதுவும்

சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 “நல்லா சாப்பிடு நேரம் தவறாம. இதுக்குதான் நீ லாயக்கு”

 அவர் வாயிலிருந்து அவரையும் அறியாமல் வந்துவிட்டன அந்த வார்த்தைகள். சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டார். அந்த வார்த்தைகளின் வீரியம் தாமதமாய் அவருக்கு உறைத்தது.

 ‘என்ன.. என்ன வார்த்தை நான் சொல்லிவிட்டேன்? எப்படி நான் நிலை தடுமாறிப் போனேன். ஏற்கனவே வேலை இல்லாத வேதனையில் இருக்கும் அவனுக்கு இது இன்னும் வலியையும்,வேதனையையும் இல்ல தரும்? காலத்துக்கும் இந்த சொல்லும் வார்த்தையும் அவன் மனசை கொன்னுட்டு இல்ல இருக்கும்?’

 உண்மையில் வார்த்தைகள் கத்தியைவிட மோசமானவை. நெருப்பை விட வேதனை தருபவை. வார்த்தைகளின் வீரியம் அது நல்லதோ கெட்டதோ, சந்தோஷமோ, துக்கமோ, கோபமோ, வெறுப்போ.. அதை சொல்பவரை விட வாங்குபவருக்குதான் அதிகம் பாதிக்கும். ஒருவரின் மனதை, வாழ்வை வார்த்தைகள் உயர்த்தவும் செய்யும்.. கருவறுக்கவும் செய்யும். எவ்வளவு பெரிய வலிமை கொண்டவராக இருப்பினும் ஒருவரை வீழ்த்தும் வல்லமை நாவு, நோவு இரண்டுக்கும் மட்டுமே உண்டு.

 ப்ரவீனை அதிகம் பாதித்தது அந்த வார்த்தைகள். அவர் எப்போதும் அப்படிப் பேசுபவரல்ல. எப்போதும் இல்லாமல் புதிதாக ஒன்று சந்தோஷமோ, துக்கமோ, கவலையோ, கோபமோ வரும்போது அதை தாங்குவது அவ்வளவு எளிதாய் இருக்காது. அதற்கான வீரியம், வலி இரண்டுமே அதிகமாய் இருக்கும். .

 அன்று முழுவதும் ஒரு வெறுமையும், யாருமே விரும்பாத வெற்று அமைதியும் இருளைப் போல அந்த வீடெங்கும், வீட்டில் இருந்த மனிதர்களின் உள்ளம் முழுவதும் விரவி கிடந்தது. வார்த்தைகள் அற்ற பொழுதுகளில் என்ன ஒரு நிறைவு இருந்துவிடப் போகிறது?

 மாணிக்கவாசகத்தின் மனசாட்சி உறுத்திக் கொண்டே இருந்தது. மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான, திருப்தியான பதில்கள் இல்லாதபோது ஏற்படும் குற்ற உணர்ச்சி கொடுமையானது. சகிக்க இயலாதது. அப்படித்தான் இருந்தார் மாணிக்கவாசகம்.

 ப்ரவீன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

 “பையன் சாப்பிடறப்ப எதுக்கு அப்படி சொன்னீங்க? கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு? ” மல்லிகா கோபமாக கேட்டாள். “அப்படி என்ன கோபம் உங்களுக்கு? “

அவளை சில நொடிகள் வெற்றுப் பார்வை பார்த்தார் . ‘இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்துட்டு நீ கூட என்னை புரிஞ்சுக்கலியே..!’ என்பதான ஆதங்கம் அது.

 “கோவமா? யார் சொன்னது மல்லிகா எனக்கு கோவம்னு? அது கோவமில்ல. ஆதங்கம். என் வேதனை. உள்ள வலி. நான் வெளிப்படுத்துன நேரம், முறை, வார்த்தைகள் தப்பா இருக்கலாம். ஆனா, என் ஆதங்கம் தப்பில்ல. . “

 அவர்கள் மெதுவாகதான் பேசினார்கள். ஆனால் பக்கத்து அறையில் இருந்த ப்ரவீனுக்கு எல்லாம் கேட்டது.

 “என் கூட வேலை செய்யற மகாலிங்கம் தன் பையனுக்கு வேலை கிடைச்சிடுச்சுனு ஸ்வீட் கொடுக்கறான். போன வாரம் பரசுராமன் தன் மகனுக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்குனு சந்தோஷமா சொல்றான். அப்போ ஒரு தகப்பனா என் மனசு என் மகனை நினைச்சு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? ‘இவ்வளவு படிச்சும் என் மகனுக்கு எதுவும் அமையலையே’-ன்னு எவ்வளவு ஆதங்கமா இருந்திருக்கும்? ஆறு மாசமா அவன் முகத்தை பார்த்தியா மல்லிகா? அதுல சிரிப்பில்லை. சந்தோஷமில்லை. மலர்ச்சி இல்லை. அப்போ என் மகனை நினைச்சு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பேன்? அதோட ஆதங்கம்தான் அது “

 “அந்த வார்த்தைகளை நான் சொல்லி இருக்கக் கூடாதுதான். ஆனா, என் ஆதங்கம், வேதனை என்னை மீறி வார்த்தைகளை வர வச்சிடுச்சி. தப்புதான்”

 மல்லிகாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

 அந்த இரவு அப்படியே நீண்டது. எந்த ஒரு நீட்சியும் முடிவை நோக்கிதானே? விடிந்தது.

 அடுத்த நாள் காலை. பத்து மணி. கம்பெனியில் ஒரு எலெக்ட்ரிகல் ப்ராப்ளத்தை பார்த்து சரி செய்துவிட்டு கேபினுக்கு வந்து கொண்டிருந்த மாணிக்கவாசகத்தை கூப்பிட்டான் சூப்பர்வைசர் பரமசிவம். அவன் பக்கத்தில் இருபத்தி ஐந்து வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞன்.

“மாணிக்கவாசகம். இவரை புதுசா கம்பெனில சூப்பர்வைசரா போட்ருக்காங்க. பேரு கணேஷ்குமார். இவரு யார் சொல்லு பார்ப்போம்..?”

 அந்த இளைஞனுக்கு வணக்கம் வைத்த மாணிக்கவாசகம், “தெரியலையே சார். . “என்றார்.

 “ஆறு மாசம் முன்னால நம்ம கம்பெனில ஆக்சிடென்ட்ல இறந்து போனாரே வேலாயுதம்.. அவர் பையன்தான்”

 வேலாயுதம் பெயரைக் கேட்டதும் கண்கள் கலங்கின மாணிக்கவாசகத்துக்கு. வேலாயுதம் அவரின் நண்பர்தான்.

 பரமசிவம் தொடர்ந்தான் “வேலாயுதம் டூட்டி டைம்ல ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டார்ல. அதுனால கம்பெனி ரூல்ஸ்படி அவரோட பையனுக்கு படிப்புக்கேத்த வேலை நம்ம கம்பெனி குடுத்துருக்கு. இன்னிக்குதான் ஜாயின் பண்ணார். ஹெச்.ஆர் எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வைக்க சொன்னார். “

 “ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் தம்பி. . ” கை குலுக்கியவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் பேசி இருந்துவிட்டு கிளம்பினார்.

 வேலாயுதம் மெஷின் ஆப்பரேட்டராக இருந்தவர். ஆறு மாதம் முன்பு ஒரு நாள் மெஷினை ஓட்டிவிட்டு கீழே குனிந்து வேலை பார்த்தபோது போட்டிருந்த ஷர்ட் மெஷினில் மாட்டி மெஷினால் இழுக்கப்பட்டு உள்ளே விழுந்தார். பதறிப்போய் மெஷினை நிறுத்தும்போது சக்கையாகத்தான் உடல் வெளியே வந்தது. .

  அப்பாடா. . கோரம். இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கியது . .

 இரவு. சாப்பிட உட்கார்ந்தார் மாணிக்கவாசகம்.

 “ப்ரவீன் சாப்ட்டானா?”

  “இல்ல. அவன் நேத்துல இருந்தே சாப்பிடல. . ” மல்லிகா சொன்னதும் திடுக்கிட்டுப் போய் கையை உதறிக் கொண்டு எழுந்தார். என்ன காரணம் என்று புத்தி சொல்ல, மனசாட்சி திட்டியது.

 அவன் ரூமுக்குள் நுழைந்தவர் கூப்பிட்டார். “ப்ரவீன்..”. அவன் மௌனமாக இருக்க, மறுபடியும் கூப்பிட்டார் “ப்ரவீன்..”. அப்போதும் அவன் மௌனமாகவே இருந்தான். .

சில மௌனங்கள் இயல்பானவை

சில மௌனங்கள் அழகானவை. .

சில மௌனங்கள் ரசிக்கத் தக்கவை. .

சில மௌனங்கள்தேவையானவை . .

சில மௌனங்கள் குரூரமானவை. .

சில மௌனங்கள் நமக்கு தண்டனை தருபவை. நம்மை, நம் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்க கூடியவை.

 ப்ரவீனின் அந்த மௌனம் அவருக்கு தண்டனையாகத்தான் இருந்தது.

 அவன் பக்கம் போய் உட்கார்ந்து தலை கோதினார். . “ப்ரவீன். உன்னை அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். என்னை மீறி வந்துடுச்சி வார்த்தைகள். நீ இப்படி மனசு வேதனைப்படவா இத்தனை கஷ்டப்படுறேன்? உன் முகத்துல சந்தோஷத்தை பார்க்கதானே? அப்பா நான் இருக்கேன் உனக்கு. நீ கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருப்பேனா என்ன? உன்னை என் தோள்ல தூக்கி சுமப்பேன் கண்ணா. உன் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். ஸாரி ப்ரவீன். அப்படி பேசனதுக்கு என்னை மன்னிச்சுடு. வா சாப்ட போலாம். . “

 பெற்றவர் அப்படி சொன்னதும் துடித்துப் போனான் ப்ரவீன். . “என்னப்பா பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க? வாங்க போலாம்..” என்றபடியே எழுந்தான் .

 மூன்று மாதம் ஓடி இருக்க அன்றும் ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போனவன் ஃபோன் செய்தான். .

 “என்னப்பா ஆச்சு ரிசல்ட்? “

 “ப்ச்..” அவன் குரலில் இருந்த விரக்தி, நம்பிக்கை இன்மை, சலிப்பு, வேதனை எல்லாம் அவரை உலுக்கியது.

 எதுவும் பேசாமல் ஃபோனை வைத்தவரிடம் வந்தான் புது சூப்பர்வைசர் கணேஷ்குமார்.

 “அண்ணே. . மூணாவது மாடியில ஏதோ எலெக்ட்ரிகல் ப்ராப்ளமாம். அட்டென்ட் பண்றீங்களா?”

 “சரி தம்பி.. ” சொன்னவர் மேலே ஏற ஆரம்பித்தார்.

 அப்போதும் அவர் மனம் முழுவதும் மகன் ப்ரவீன் முகமும், அவனின் விரக்தியான, வேதனை நிரம்பிய குரலும் சேர்ந்து அவரை கலங்கடித்துக் கொண்டிருந்தது. மனம் அழுது கொண்டிருக்க தளர்ச்சியாய் ஏற ஆரம்பித்தார்.

 எதிரில் வந்த ஆபரேட்டர் நரேந்திரன் சொன்னான்.. “மேல போறீங்களா? பார்த்து போங்க”

 மேலே ஏறினார். பிராப்ளம் அட்டென்ட் பண்ணிவிட்டு இறங்க படிக்கு வந்தார்.

 கீழே கணேஷ்குமார் நின்றிருந்தான். அப்பா இறந்ததால் வாரிசு வேலை மூலம் வேலைக்கு வந்தவன். .

 திடீரென அவருக்கு அவன் முகம் மறைந்து அங்கு ப்ரவீன் முகம் தோன்றியது.

 இறங்கப் போனவர் சட்டென்று நின்றார். மனதை உறுதியாக்கிக் கொண்டு கண்ணை மூடினார்.

 தயக்கம் கொஞ்சமும் இல்லை. அங்கிருந்து வேகமாக குதித்தார். ‘இனி உனக்கு வேலை கிடைச்சுடும் மகனே. . ‘

கீழே ரத்த ஆறு.

 “ஐயோ. மாணிக்கவாசகம் மூணாவது மாடில இறந்து தவறி விழுந்து இறந்துட்டார். . வாங்க. . வாங்க. . “

 அதிர்ச்சியுடன் கத்தியபடி ஓட ஆரம்பித்திருந்தார்கள் கணேஷ்குமாரும், நரேந்திரனும்.

anandkanandan@gmail. com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button