இணைய இதழ் 122

அஜ்வா – சரவணன் சந்திரன்; ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

“பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்”. சிறுவயதில் சாமியாடுபவர்களைக் கண்டால் ஒரு பயம் பரவும். ஏன் இப்பொழுதும்கூட வேஷம் கட்டி வருபவர்களைக் காண்கையில் ஒருவிதப் பயபக்தியுடன் ஓர் அடி தள்ளியே நிற்பேன். இசக்கியம்மன் கோவில் விழாக்களுக்குச் சிறுவயதில் சென்றதே இல்லை. பலிகொடுப்பதைக் கண்டு பயந்து விடக்கூடுமென என ஆச்சி அழைத்துச் செல்லாமல் இருந்திருக்கலாம். துடியான தெய்வங்களின் மீதான பயம் இப்பொழுதும் மக்களுக்கு உண்டு.  இன்னமும் எனக்குப் பதின்மத்தில் பார்த்த காட்சியான வேட்டைக்குச் செல்லும் சுடலைமாடன் அங்கி சல்லாடையோடு ஆடிய ஆட்டம் கண்ணில் நிற்கிறது. ஆசிரியர் இங்கே தலைப்பில் பயத்திலிருந்து விடுவிப்பதுதான் கடவுள் என்கிறார். உண்மைதானே. ‘தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்’ என்ற ஆச்சிதான், ‘பயமாக இருந்தால் சஷ்டி கவசம் சொல்லு’ என்பாள். பூரானோ, பாம்போ கண்களில் பட்டால்,  யாரேனும் பொறாமை கொண்டு பொறுமினால், ‘கண்திருஷ்டி’ என்றுவிட்டு சஷ்டி கவசம் சொல்லப் பணிப்பாள். நம் பயத்தைப் போக்கும் யாருமே யாவருமே சாமிதான், எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்லும் என் ஆச்சியைப் போல. அஜ்வாவின் கதைநாயகன் பயத்தைச் சுமந்துகொண்டே அலைகிறான். அவன் அம்மைதான் அவனை வீட்டைவிட்டுப் போகச் சொல்கிறாள். பிள்ளைப்பாசம் பிரிவையும் பொறுத்துக்கொள்ளும். உயிரோடு இருப்பதே பிரதானமாகிப் போகிறது.

அஜ்வாவில் கதைநாயகனின் பெயர் என்ன? வாசித்து முடித்தபின்தான் யோசிக்கத் தோன்றியது. எங்காவது சொல்லி நான்தான் கதைப்போக்கில் மறந்துவிட்டேனா தெரியவில்லை. அஜ்வா என்ற சொல்லிற்கான  விளக்கம் கடைசியில்தான் வருகிறது. பொறுமை இல்லாமல் அஜ்வா என்றால் என்ன என்று தேடிப்பார்த்துவிட்டேன். பேரீச்சம் பழத்திற்கு இப்படி ஒரு பெயரா என்று ஆச்சரியமாக இருந்தது. கஞ்சா, போதை, குடி, பெண், கடவுள், நட்பு, அம்மா, அத்தை, வழிப்போக்கன், அவன், அவள் இப்படிக் கதை தன் போக்கில் போகிறது. கதைசொல்லியின் நினைவுகளில் தங்கியவை எல்லாம் போதையை மீறிய வார்த்தைகளாக வந்து விழுகின்றன. பேசும்பொழுது ஒன்றைத்தொட்டு ஒன்றென நம் ஓர்மைகள் தாவிச் செல்லுமே அதுபோல, தன் வாழ்க்கை கதையைச் சொல்லிச் செல்லும் மனிதனின் வழித்தடங்களில் முளைத்த பச்சையம்தான் அஜ்வா. போதை வகைகள், வழிமுறைகள்(ஹாட் பாக்ஸ்- என்ன கன்றாவிடா எனப் பதற வைத்த வார்த்தை), வேளாண்மை, உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை, சேவை, அறியாத மனிதர்களுக்கும் இரங்கும் உள்ளங்கள், மன்னிப்பு, பொறுமை, நாகரிகம் என நிறைய விஷயங்களை நாவலின் நெடுகிலும் உணரலாம்.  

பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையால் வீழ்ந்தோர் ஏராளம். இப்பொழுதும் உறவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சொத்திற்காக நீதிமன்றத்தை நாடும் சொந்தங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உடன்பிறப்புகளோடு சரிசமமாகப் பிரிக்க மனம் வருவதில்லை. பூர்வீக வீட்டில் பங்கு கேட்கும்போது, தாய் போலத் தூக்கி வளர்த்த அக்காள் அன்னியமாகிப் போகிறாள். மண் ஆசையால் எத்தனை கொலைகள் நடக்கின்றன? தாய்க்கு நிகராய் இருக்க வேண்டிய தாய்மாமனின் அடிகள் ஏற்படுத்திய காயத்தின் பயங்களைச் சுமந்தலைகிறான் அவன். போதை என்ன செய்கிறது? அவனுக்குப் பயத்திலிருந்து தற்காலிக விடுதலையை அளிக்கிறது, அவனையும் அழித்துக்கொண்டேதான். பயத்தைப் புறந்தள்ளும் பயணத்தின் சகபயணிகளை நாமும் காண்கிறோம். பழனியில் மோட்சம் கிட்டக்கூடும் என நம்பும் மனதிற்கு வின்ச்சில் செல்லும் தைரியத்தைக் கொடுக்கத் தெரியவில்லை. சிலர் தானாக ஒரு காரியத்தைச் செய்வார்கள். சிலருக்கு யாரேனும் ஒருவர் சொல்ல வேண்டும், ஓர் உந்து சக்தி தேவையாய் இருக்கிறது. வேறு சிலருக்கோ கூடவே ஓர் ஆள் துணையாக வரவேண்டும். எல்லா விடயங்களுக்கும் யாரையாவது துணை தேடுவார்கள். கண்ணுக்குத் தெரியாத சக்தியை அவனுக்கு அஜ்வா பரிசளிக்கிறது. அந்தக் கைகளின் பலம்கொண்டு பாதையை மாற்றிக்கொள்கிறான். அஜ்வா தரும் நம்பிக்கையில் அவன் நன்றாகத்தான் இருப்பான் என்று நம் மனமும் நம்புகிறது.

ஒருவன் திருடிவிட்டால், தவறு செய்தால் என்னவெல்லாம் சபிக்கத்தோன்றும். இங்கே அப்படி ஜார்ஜ் சபிக்கவில்லை, அடிக்கவில்லை, அணைத்துக்கொள்கிறான்; அந்த வலியை உணரச்செய்கிறான். ஏசுநாதரைப்போல வலிகளுக்குப் பின்னரும் மீண்டும் அன்பைப் பொழிகிறான். இருப்பினும் மீண்டும் தவறு செய்யும் மனிதனை என்ன சொல்வது? அவனின் மனக்கிலேசங்களை அவன் வாயால் சொல்லக் கேட்கிறோம். வேறுவழியில்லாமல்தான் திருடுகிறேன்,  என் நண்பன்தானே, அவன் நல்லவன்-என்னை மன்னிப்பான் என்ற அவன் நம்பிக்கைகளைப் பகிர்ந்து தன் செயலை நியாயப்படுத்தும் கயவாளித்தனத்தைத்தான் அவன் செய்கிறான். பப்புவா நியு கினியாவில் நான் கண்ட ஒரு விடயம், திருடுவதைத் தவறு என்று சிலர் உணர்வதேயில்லை. ‘என்னிடம் இல்லை; உன்னிடம் இருக்கிறது; எடுத்துக்கொள்கிறேன்.’ என்பதாகவே இருக்கும் அவர்களின் நியாயம். நிற்க… திருடவில்லை,  எடுத்துக்கொண்டேன். அப்படித்தான் இவனும் யோசிக்கிறான்.  ஜார்ஜ் போன்ற மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கிறார்கள். எங்காவது அவர்களின் நல்ல மனதை உணரச் செய்து நம்மைக் கடந்து போவார்கள். அப்படியான கதாப்பாத்திரங்கள் சிலர் இந்தக் கதையிலும் வருகின்றார்கள். கதை என்று சொல்லலாமா? இல்லை தன் பயங்களுடன் மனதால் தனியே சுற்றியலையும் ஒருவனின் புலம்பலா? இல்லை, கதைதான் அவனின் கதை, அவன் சொல்லும் பல கிளைக் கதைகள். கோவையற்ற சம்பவங்கள். யாரையும் ஞாபகம் வைத்துக்கொள்ள எந்தப் பிரயத்தனமும் செய்ய வேண்டாம், அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் – போவார்கள். நாமும் அவனோடு அவர்களைக் கவனித்தவாறே கடப்போம். சிலர் மீண்டும் திரும்பி வருவார்கள் டெய்ஸியைப் போல. இல்லாவிட்டால் இவன் போவான் ஜார்ஜை தேடிப் போவதைப்போல. அவனுக்கே மறந்துபோகும் அளவுக்கு மனிதர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். கதையை முடித்தபின் பாதிப் பேர் நமக்கு ஞாபகத்தில்கூட இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் கதை நம் மனதின் ஓரத்தில் எங்கோ ஒட்டிக்கொள்கிறது.

யாரோ இவனை நம்பிக் கொடுத்த பத்திரத்தின் பாரம் அவனை அழுத்திக்கொண்டே இருக்கிறது. கிழித்து வீசி இருக்கலாம்; விற்க முயலலாம்; ஆகப்பட்டவர்களிடம் ஒப்படைத்து காசு பார்த்திருக்கலாம்; இல்லாவிட்டால் அவன் ஆத்ம சாந்தியை நினைத்து அவன் இறுதி விருப்பத்தை நிறைவேற்றலாம். அலைக்கழிக்கும் எண்ணங்களை ஓரமாய் வைத்துவிட்டு அவன் போதையிலிருந்து விழித்துக்கொண்ட மனிதனாக இருக்கிறான் சம்பத் விசயத்தில்.  

சதா போதையில் அழியும் ஒருவன் மீண்டு வருவானா? பலர் மரிக்கிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், பைத்தியமாய் திரிகிறார்கள். ஆம், அந்த உலகம் அப்படித்தான் என அவன் சொல்கிறான். ஒரு விஷயத்தை மட்டும் யோசிப்பவனைப் பைத்தியக்காரன் என்று உலகம் சொல்லும். போதையில் விழுந்தவன் அப்படித் தீர்க்கமாய் ஒரு விஷயத்தை யோசிக்கிறான். ஆசைகள் நிறைந்த உலகம்தான், ஆனால் போதை எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது. ‘சரி போ’ எனச் சமாதானப்படுத்துகிறது. டெய்ஸியின் முடிவு இப்படித்தான் என மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. முதல் அத்தியாயத்தில் வந்த பங்களாதான் கடைசியிலும் வருகிறது என நினைக்கிறேன்.

ஏன் ஜார்ஜ் மூன்றாவது முறையாக மன்னிக்க வேண்டும் இரண்டு திருட்டுகளுக்கு? ஒருவேளை சிங்குடன் ஆன பிரச்சனை ஒன்றோ? அந்தப் பாட்டி ஏன் பழனியில் போய் சிவன் சொத்து குலநாசம் என்றது? கோர்வையாய் படித்துப் புரிந்துகொள்ள இது நெடுங்கதை அல்ல. அவன் கதையில் அவன் கடந்த மனிதர்களின் கதைகளையும் அவனையறியாமல் வந்து பக்கத்தில் அமர்த்திக்கொள்கிறான். அவர்கள் அவனோடு தங்கள் கதைகளைப் பகிர்ந்தவர்கள். அவன் வாழ்க்கையில் அவனால் கடக்கப்பட்டவர்கள். ஆகையால் அவன் நமக்கு அதைச் சொல்லவேண்டிய கட்டாயம்.  சராசரியாக ஒரு மனிதன் எத்தனை மனிதர்களைத் தன் வாழ்வில் சந்திப்பான்? மனிதனுக்கு மனிதன் சூழ்நிலை பொருத்தும், சுற்றுப்புறம், வாழ்வுநிலை கொண்டும் இது மாறுபடும். இதில் தன் வாழ்நாளின் சிறு பகுதியில் வந்து போனவர்களே சுற்றவிடப்பட்டிருக்கிறார்கள். அம்மா, அப்பா அவர் பயம், அத்தை அவள் கணவன், மாமன், சிறுவயதில் பார்த்த சண்டியர்கள், அவர்கள் செய்த கொலை, போதையில் இணைந்தவர்கள், பெண்கள், தோழிகள், தங்கை போலப் பழகியவர்கள், நண்பர்கள் என எல்லோர் வாழ்விலும் இப்படியான கதாபாத்திரங்கள் நிறைய இருக்கும். நம் ஓர்மையிலிருந்து சிலர் உதிர்ந்து விடுவார்கள். அவர்களை நாம் மீண்டும் தரிசிப்பதில்லை; நினைப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு கதையை வாசிக்கையில் யாரோ ஒருவரின் ஞாபகம் நமக்கு வரும். அப்படித்தான் இவன் வாழ்க்கையில் இவர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதை அவன் நம்முடன் பகிர்கின்றான்.

அதலைக்காய் குறித்து எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி. டவுன் போத்திஸில் வெடிக்காத அதலைக்காயாகப் பார்த்து எடுத்துக் கொண்டு இருந்தேன். அம்மா வயதை ஒத்த ஒரு பெண்மணி “இது என்ன காய், எப்படிச் சமைக்க வேண்டும்?” எனக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் காட்டிலிருந்து தாத்தா கொண்டு வருவார். உடனடியாக ஆச்சி காம்பை கையால் ஒடித்து வெங்காயம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டுப் பொரித்துக் கொடுப்பாள். எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லை எனினும் ஆச்சிக்காகக் கொஞ்சம் சாப்பிடுவேன். ஆனால் இப்பொழுது ஆச்சிக்காகவே அதலைக்காய் பிடிக்கிறது. அதுபோல கொடுங்கலூர் கண்ணகி தெறி பாடும் கதை அதனைச் சார்ந்த பழக்கவழக்கம் புதிய செய்தி. தீப்பெட்டி ஒட்டும் மாவைக்குறித்த செய்தியும் துத்தநாகமும்கூட. கோவில்பட்டியில் பசையைத் தடவி தீப்பெட்டி ஒட்டுவதைக் கண்டிருக்கிறேன்; ஒட்டிப்பார்த்திருக்கிறேன். தீக்குச்சிகளைக் கட்டையில் அடுக்கி பெரிய சாகசம் செய்ததைப் போல வியந்திருக்கிறேன். அந்தப் பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்த விட்டது அந்தப் பசை. இப்படி சில எல்லோரும் அறிந்திராத தகவல்களைத் தெளித்திருப்பது சிறப்பு.

அவன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறான். பயத்தைக் கலைய அவன் பெரிதாய் மெனக்கெடவில்லை. அவன் மனமே அவன் நம்பிக்கையேதான் பயத்தை விரட்டுகிறது. ஹிப்னாடிசம் வேலை செய்யவில்லை. முன்ஜென்ம ஞாபகங்கள் துளிர்க்கவில்லை. ஆனாலும் ராஜ கோலத்தில் முருகனைக் காண அவன் மனம் ஏங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அப்பாவின் பயத்தைப்போல அப்பாவின் ஆசையும் ஒட்டிக்கொண்டது அவனுக்கு. அவனுள்ளே இருந்த கடவுளைப் பேரீச்சையின் – அஜ்வாவின் பொருட்டே அவன் உணர்கிறான். அவன் மனதிலிருந்து தோன்றிய கைகள் இனி அவனைக் கைவிடாது என்ற நம்பிக்கைதான் இந்த நாவலை மனம் ஒப்புக்கொள்ள ஒரு காரணமென நம்புகிறேன். கஞ்சா குறித்த சகலமும் விலாவாரியாக வாசிக்கக் கிடைக்கிறது. கதையோடு அந்தரங்கக் காட்சிகளும் அதன் போக்கில் நீந்திப் போகிறது. திணிக்கப்படாத காமம் இயல்பாய் கதையோடு இயைகிறது. சதா போதையில் இருப்பவன், தன் கதையை எழுதுபவன், உள்ளபடிக்குத்தானே எழுதுவான்? நாகரிகம் கருதினால் பாதிக் கதை ஒளிந்துகொள்ளும்.

விறுவிறுவென கதையெழுதும் சரவணன் சந்திரனின் கதைநாயகனும் அவர் வேகத்தில்தான் தன் வாழ்வின் சாகசங்களைக் கடந்திருக்கிறான். எந்த முன்யோசனையும் இல்லாமல் வாசித்த புத்தகம். அவர் பாட்டிற்கு எழுதி இருக்கிறார். எந்த ஒரு குறிப்பிட்ட நடை, பாங்கு இல்லாமல் தனக்குத் தோன்றியது போலவே, பேசிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதனின் சொற்களைப் போலவே இருக்கிறது இந்நாவல். இலக்கணம் இல்லாமல், இந்த மாதிரியான வாசகர்களுக்குத்தான் பிடிக்கும் என்ற முத்திரையில்லாமல், எந்த மெனக்கெடலும் இல்லாமல் இயல்பாய் ஒரு கரிசல்காட்டுக்காரனின் வரிகள் நாவலாய் தன்னை வரித்துக்கொள்கிறது. ஆனாலும் இத்தனை மனிதர்கள், மையக் கதைக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ அத்தனை பேரையும் இழுத்து அமர்த்தி இருப்பது கொஞ்சம் அயர்ச்சியைக் கொடுக்கக்கூடும். சில பெயர்கள் மறந்தும்போகும். வாசிக்கும்போது யோசித்த விடயங்கள் அவனுக்கு மறப்பதைப் போல நம்மிடம் இருந்து மறைந்தும் போகிறது. அஜ்வா – இது ஒரு மனிதனின் பயம் இழைத்த கதை. குறைந்த சமயத்தில் கதிர் அறுக்கும் வேகத்தில் நாவல்களை எழுதிக் கடாசுகிறார் மனிதர். லகுடு, அஜ்வா, ரமலோ இப்படி அறிந்திராத வார்த்தைகளைத் தலைப்பாய் எப்படி எடுக்கிறார் என்ற யோசனை வராமல் இல்லை.  வாழ்த்துக்கள் ஆசிரியர் சரவணன் சந்திரன். இன்னும் நிறைய எழுதுங்கள் உங்களுக்கான நேரத்தை ஏற்படுத்த உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. நன்றி!

 ஆசிரியரின் பிறநூல்கள்:

1.ஐந்து முதலைகளின் கதை 2.ரோலக்ஸ் வாட்ச் 3.பார்பி 4.சுபிட்ச முருகன் 5.அன்பும் அறமும் 6. வெண்ணிற ஆடை 7.பாவத்தின் சம்பளம் 8.எக்ஸ்டஸி 9.மதிகெட்டான் சோலை 10.கடலும் மகனும் 11.லகுடு 12.ஓங்கல் 13.மறிக்குட்டி 14.ஜிலேபி 15.தானச் சோறு 16.கேரை 17.அசோகர் 18.தற்செயல்களை விரட்டுகிறவன் 19.அத்தாரோ 20.வையிலைவேற் காலை 21.சல்பாஸ் 22.பரிபூரண கம்யூனிஸ்ட் 23.வயிற்றுக் கணக்கு 24.ரமலோ.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button