இணைய இதழ் 122கட்டுரைகள்

மூதாய் குமரியின் மறுவடிவம்-கொற்றவை; அய்யனார் ஈடாடி

கட்டுரை | வாசகசாலை

தமிழ் நிலத்திற்குக் கிடைத்திருக்கும் புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன்.  இவரது முகநூல் பதிவுகளையும் நேர்காணல்களையும் கண்டு லயித்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் எழுத்து பாணியில் வாசகர்களைத் தன் எழுத்தின் பால் ஈர்க்கும் மின்காந்தச் சக்தி கொண்டவர் என்பதை நான் அறிவேன். கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் ஏர் இதழின் முதன்மை ஆசிரியர் திரு.ஏர் மகாராசன் அவர்கள் நூல் கொடையாக அளித்த நூல்களில் எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை மற்றும் எழுதுக அடங்கும். சிலப்பதிகாரத்தின் சாயலைக் காவியமாக்கிப் படைத்திருப்பதைக் காண முடிந்தது.  மொழிநடை தேனும் தினைமாவும் கலந்துண்டதாய்  எனது  நாவு ருசி கண்டு இன்பத்தில் திளைக்கத் திளைக்கச் சுவைத்தது.  தொல்குடி மூதன்னையின்  தினை நிலங்களை ஐம்பூதங்களோடு ஒப்பிட்டு நிலம், காற்று, நீர், நெருப்பு மற்றும் வானோடு ஒப்பிட்டுத் தழுவி  அடையாளப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. தாய்வழிச் சமூகத்தின் மரபார்ந்த மூதாதையர்களின் தெய்வ வழிபாடுகளைக் கண்ணகி வானேறும்வரை   விவரிக்கின்றன. 

குமரியன்னையே தமிழ் நிலத்தின் மூதாய் என்றும், குமரிக்கடல் பொங்கியெழுந்து ஆழிப்பேரழிவில் அழிந்தபின்பும் வடக்கு நோக்கிச் சென்ற மக்கள் தங்கள் குலதெய்வங்களாக வணங்கி வந்திருக்கின்றனர் என்றும் பழம்பாடலில் குறிப்பிடுகிறார். பாண்டிய நாட்டையும் இங்கு நடைபெற்ற வணிகத்தையும் பதிவு செய்திருக்கிறார். திக்கெட்டும் திசையில் ஆலயங்களை எழுப்பி, தங்களின் தொல் மூதாதைக்கு நீரும் மலரும் காட்டி, செங்குருதி அள்ளிப் படைத்து  குலம் காக்க பூசெய் செய்திருப்பதைக் குறிப்பிடுகின்றன. 

பூம்புகார் நகரிலிருந்து கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டிற்குச் சிலம்பு வணிகத்திற்கு வருதலையும் அவர்களிருவருக்கிடையே நடக்கும் உரையாடல்கள், காதல், உறவுகள் பற்றி  சித்தரிக்கிறது.கோவலன் கண்ணகியைத் தீண்டும்போது கரும்பாறை போன்று உணர்வதும் இரவிலே கொஞ்சுவதும், அதிகாலைத் தோற்றத்தில் இயற்கையின் கொடையையும் காற்றையும் அந்த அழகியல் காட்சிகளைப் பண்பாட்டின் அழகியல் கூறுகளோடு காட்சிப்படுத்துகிறார். 

கார் திரண்டு புகார் மீது பெருமழை பொழிந்தது 

சந்தனமும் குங்குமமும் சேறாகிக் கலங்கிய நீரில்

மலரும் நறுங்கலமணிகளும் மிதக்க

செம்பளிங்கு நீரோடைகள் துள்ளிச்

சுழன்று கடலுக்குச் சென்று கலந்தன 

என்ற இயற்கையின் ரம்மியமான வருணனைகள் அழகு சேர்க்கின்றன.

ஐவகை நிலத்தின் எண்பெரும் குலத்தைக் கதைகளில் கூறுகிறார். நீலக்கடலிலிருந்து பிறந்து வந்ததுதான் நீலி எனத் தோன்றுகிறது. கோவலன் கண்ணுக்குத் தெரியாமல் கண்ணகிக்கு மட்டுமே உற்ற துணையாக வந்துகொண்டிருக்கிறாள் நீலி.  இடைச்சியர் குலத்திலிருந்து வரும் நீலி சொல்லும் காதையும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.

முலைகளை அறுத்து வீசப்பட்டப் பெண்களைத் தெய்வமாக்கியிருக்கின்றனர். வற்றாத பால் வந்துகொண்டிருந்த வெண்ணி முலையை மன்னன் அறுத்து வீசவும், பின்பு அம்முலைகளைத் தெய்வத்திற்குப் படையலிட்டிருக்கிறான். அப்படையலில் வைத்திருந்த முலைகளிலிருந்து பால் சொரிந்து ஊற்றாய் வந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். பின் தெய்வமாக வணங்கியதும் பிற்காலத்தில் இத்தெய்வங்கள் முத்தாரம்மனாக்கப்பட்டன என்றும் காதையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். 

மருதம் பற்றிய குலக்கதையானது மருதநிலத்தின் வாழ்வியலையும் தொல் தெய்வங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. முதுமள்ளர்களின் பண்பாட்டுக் கூறுகளை அசைபோட்டுச் செல்கின்றன. தினை விதைத்து வேளாண்மை செய்து ஆரம்பித்தவர்கள் பின் சேற்றைப் பண்படுத்தி நெல் பயிரிட்டு பல்கிப் பெருக்கி உணவளித்ததைப் பற்றிப் பாடுகின்றன சித்திரங்கள். கோவலனும் கண்ணகியும் முல்லை நிலத்திலிருந்து மருதநிலத்திற்கு வந்து மள்ளன் மூதாதையின் வீட்டில் தங்கி அங்கு ஊனும் மீனும் உண்டு கதைப் பாடியதைப் பற்றிக் கூறுகிறது. சாணிப்பால் மெழுகிய முது ஊரனின் வீட்டில் அமர்ந்த கோவலனும் கண்ணகியும் மருதநிலத் தொல்குடி தெய்வங்களின் காதைகளைக் கேட்பதை விளக்குகின்றன. 

நீலிக் காதையில் நாகர்களும் பாண்டியர்களும் சேர்ந்து வாழ்ந்ததைப் புலப்படுத்துகிறார்.  நாகர்கள் குடியாக உருப்பெற்றதையும் நாகங்கள் எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து புணர்ந்து காமத்தில்  திளைக்குமோ அதைப்போலவே மனிதர்களும் காமத்தில் கூடியதும் பற்றி குறிப்பிடுகின்றன. நாகங்களைத் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்திருப்பதைக் காணலாம்.  காமத்தின்பால் திளைத்து குறவர்களையும் பெண்களையும் புணர்ந்து, பாண்டியர்களைத் தோற்கடித்தாக காண்பித்திருக்கின்றன.   இறுதியில் நாகர்கள் பாண்டியர் குலப் பெண்களை மணங்கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாய் நீலிக் காதையில் அமைந்திருக்கின்றன. 

எண்பெருங்குடிகளாக காப்பியம் கூறும் பரதர், நுளையர், உமணர், குறவர், மள்ளர், வேளார், ஆயர் மற்றும் வணிகர் பற்றிய குடிகள் சார்ந்த தினை மரபினைப் புலப்படுத்துகின்றன. தங்களுக்கு அளித்த நெல்மணிகள் பற்றாது என்றும், எட்டிலொரு பங்கு நெல் மணிகள் கொடுத்தும் நெல்மணிகளைக் கைப்பற்றிச் செல்லும் மறவர்களும், இதனை எதிர்த்து முதுமள்ளரும், வேளாரும், பாண்டிய மன்னனிடம் முறையிட்டுச் சினங்கொண்டு மன்றுசூழ் கொள்கின்றனர். படகுகளில் திரையைக் கடலில் கைப்பற்றும் மறவர்களுக்கு எதிராக பரதவர்களும் கடுஞ்சினம் கொண்டு மறவர்களைக் குற்றம் சாட்டி பாண்டிய மன்னனின் அவைக்கு வந்து சூளுரைப்பதை மன்றுசூழ் காதையில் எழுத்தாளர் ஜெயமோகன்  விவரிக்கிறார். 

புகார் நகரிலிருந்து சிலம்பு விற்க மதுரை மூதூருக்கு வரும் கோவலனும் கண்ணகியும் அவர்கிளிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலும் காதலும் வாசகனாக வாசிக்கையில் இதயத்தை மென்மையாக்குகின்றன. மாமதுரையில் வலசிலம்பு விற்றுவிட்டு பூம்புகார் செல்வோம் என்று ‘விடை கொள்க’ காதையில் பேசுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணகியிடம் மன்னிப்பு கேட்ட கோவலனைப் போலவே இன்றும் ஒவ்வொரு ஆணும் தனது தோழியிடம், காதலியிடம் மன்னிப்பு கேட்டு அன்புகொண்டு காதல் செய்யும் ஈரமான காதல் ஒருவகையான அதீதப் போதையாகக்கூட இருக்கலாம். 

கோவலனைக் கள்வன் என்று அரச மறவர்கள் கொலை செய்ததை ஆய்ச்சியர் மகள் பார்த்துவிட்டு ஓடோடி வந்து கண்ணகியிடம் சொல்வதை வாசிக்கும்போது என் கண்கள் இரண்டும் கலுங்கு மடை நீராய்ப் பெருக்கெடுத்தோடியது. மொழிநடையில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆத்மார்த்தமான நடையைக் கையாண்டிருக்கிறார். 

செய்தியறிக காதையில் கண்ணகி தனது காற்சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டிய மன்னனிடம் செல்வதைக் குறிப்பிடுகின்றன.

ஊர்மன்றின்முன் தன் கையிலிருந்த இடச்சிலம்பைத் தூக்கி இடியொத்த குரலில்,

வானகமே ! மண்ணகமே!

விரிசுடரே சொல்க!

என் கொழுநன் குற்றமுடையவனா? என்று கேட்க 

இல்லை! இல்லை! என மக்கள் திரண்டு சொல்ல 

அன்னையரே ,கன்னியரே,சொல்க!

நான் பிழையுடையவளா ?

இல்லை! இல்லை !

என்றதும் ஐந்நிலமும் கண்ணகியின் குரலில் ஒலித்தது தென்புலத் தெய்வங்களின் தொல்மொழி என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன். மதுராம்பதியன்னையுக்கு பூசெய் செய்து மணியெழுப்பிய பிறகே மீன்விழியன்னை  வையை நீரும் எண்மலரும் வைத்து வணங்கியிருப்பதைக் கூறுகின்றன காதைகள்.

தொல்மதுரை முழுவதும் எரிந்து கரியபுகை சூழ்ந்து இருண்ட பிறகு நீரும் மலரும் காட்டி பூசெய் செய்த  மதுராம்பதிகையன்னையின் பீடத்தையும் பெயர்த்தெடுத்து யானையின்மீது அப்பீடத்தை வைத்துக் கிளம்பியபோது மூதூர் மக்கள் கண்ணீர் விட்டதை எரிகொள் காதையில் காட்சிப்படுத்திக் கூறப்பட்டிருக்கின்றன. உருக்குலைந்த போன மக்களின் கதறலும் கண்ணீரும்  ஊடறுத்துச்செல்கின்றன. 

மதுரை எரிந்த செய்தியறிந்த புகார் மக்கள் தெருக்களில் கூவி இறங்கியோடி  ஆலயங்களில் தெய்வங்களை வணங்கியதும் ‘திருமா பத்தினி வாழ்க! மங்கல மடந்தை வாழ்க!’ என்ற முரசுத்தோல் ஒலிகளில் நகரமே என அதிர்ந்ததும் கண்ணகியின் இல்லத்தைச் சூழ்ந்த மக்கள் அவள் கால் நடந்த மண்ணை அள்ளி முடிந்துகொண்டு செல்வதும் பெண்டிர் கண்ணீர் விட்டு அழுவதையும் எடுத்துரைக்கின்றன. 

நான்மாடக்கூடல் நகரம் முழுவதும் எரிந்த பின் தங்கள் ஊர்களுக்கு மீண்ட மக்கள் அவ்வூர்களிலெல்லாம் ஒருமுலைக் கன்னியின் சிலையை அமைத்துக் குலக்காவல் அன்னையாக வணங்கப்பட்டிருப்பதை உரைவகுத்துச் சொல்கிறது. 

வெங்காற்று அலையும் பாலையும் செந்நெல் செழித்த மருதத்திலும் கோடுயர் குறிஞ்சியிலும் கான்செரி முல்லையிலும் கடலெழு நெய்தலிலும் கண்ணகியின் பல்லாயிரம் சிலைகள் எழுப்பியும் கடா பலியிட்டு குருதி படைத்து பூசெய் செய்திருப்பதை இந்நாவலில் அறிய முடிகிறது. 

திரள் திரளாய் கூடிய மக்கள் ஆலயங்களில் திரியெடுத்து பந்தம் ஏந்தி நகரெங்கும் விளக்கேற்றியதை வஞ்சி நகரத்தைப் பற்றி  கூறும் பாங்கில்  பரணிப் பாடல்கள் அமைந்துள்ளது.

தானான தனானா தக

தானான தானான …

கொடுங்கலூர் அம்மைக்கு பூறு சொறியுவான்

கொடுங்கவாளல்லே எடுத்திடேணம் 

தானான தனானா தக

தானான தானான …

கொடுங்கலூர் அம்மைக்கு பூற்றிலு 

கோற்றுவான்

கொடிமரம் போலல்லே கோப்பு வேணும் 

தானான தனானா தக

தானான தானான …

 நீலக்கடல் சூழ்ந்த குமிரியன்னை புன்னகைத்துக்கொண்டிருப்பதைப் பண்பாட்டுக் கூறுகளின் பின்னணியில் கொற்றவை நாவலைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இன்றும் ஆழிக்கடலைத் தொல் தெய்வமாகத் தத்தமது மூதன்னையாக வணங்குகின்றன தமிழ்ச்சமூகங்கள். 

பெரிய அகலத் தூண்களில் மீன் சின்னம் வடித்திருப்பதால் பரதவர்களே பாண்டியர்கள் என்று வகைப்படுத்துகிறார் நாவலாசிரியர் ஜெயமோகன். மீன்கொடி பறக்கும் பாண்டியநாட்டில் மதுரை மீன்விழியன்னை (மீனாட்சியும்) குமரியின் குலக்குறிகளாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சிலப்பதிகாரம் தமிழின் மிகப் பெருங்காப்பியம் என்றால் கொற்றவை மற்றொரு காப்பியம் என்பேன். 

நூல் குறிப்பு:
கொற்றவை (நாவல்),
ஆசிரியர்: ஜெயமோகன்,
பக்கங்கள் : 656,
வெளியீடு: விஷ்ணுபுரம்,
விலை: ரூ.900

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button