இணைய இதழ் 122கட்டுரைகள்

மிகைத் தமிழ் கம்பனின் அருஞ்செயல் – முத்துகிருஷ்ணன் வே

கட்டுரை | வாசகசாலை

கலை என்பது மனம் சம்பந்தப்பட்டது ரசனை பூர்வமானது. தோட்டிமை, சமச்சீர்மை, இளமை ஒருங்கமைந்ததே அழகு. அழகனுபவம் பெற்று நீடிக்க, உணர்வும் அறிவும் ஒருசேரச் செயல்பட வேண்டும். ஓர் அழகான காட்சியையோ, கவிதையையோ ரசித்து அதன் ரசனையை  நினைவில் தக்க வைத்துக் கொண்டு, வெளியில் பகிர்ந்துகொள்ளச் சரியான பொருள் படும் சொற்களில் அமைந்த எண்ணங்களாக வெளிப்பட வேண்டும்.

காவியத்தில் நவரசங்கள் வெளிப்படும் இடங்கள்  ஒன்றே போல் இருக்க முடியாது. அதை ரசிக்கவும்  முடியாது. ரசிப்பதற்கு மாறுபாடு அவசியம், ஆகவே, மிகையான வெளிப்பாடுகள் அவசியம். மிகை என்பதே ஓர் ஒழுங்கீனமான ஒன்று. அது பற்பல சமயங்களில் ரசிக்கத்தக்கது, மற்ற சமயங்களில்  அருவருக்கத்தக்க ரசனை ஆகிவிடும்.

நேரடிப் புலன் வழி அறிதல் என்பது மிகவும் சுருக்கமானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. அவர்களது அறிவுப் பின்புலமும் கலா ரசனை அனுபவமும் சேர்ந்தது.

கவி அனுபவமும் கருத்து அனுபவமும்

வாசிப்பு முறையாலும் மொழியில் பயிற்சி மற்றும் அறிவுத் திறனாலும் பழக்கத்தாலும் முன் அனுபவத்தாலும் ரசனை மிகுந்ததாக ஆகிறது.

எதார்த்தத்தில் இயற்கையில் அந்த அந்தக் காலகட்டங்களின்  பண்பாட்டுச் சூழலில் எல்லோர் மனத்தாலும்  ஒத்துக்கொண்ட வரையறுக்கப்பட்ட சொல், செயல், பொருள், உணர்வு, எண்ணம், கருத்து ஆகியவற்றின் அடிப்படைகளை அலகாகக்கொண்டு ‘மிகை’ வரையறுக்கப் படுகிறது.

மேற்கண்ட கருத்துக்கு மிகுதியாக, சிறந்ததாக, மேன்மையாக, பெருமையாக, அனாவசியமாக அதிகப்படியாகத் தீது,  குற்றம், செருக்கு, வருத்தம், துன்பம், கேடு நிறைந்ததாக ஆக்கப்படுவதே மிகையாகும்.

ஒன்றின் தன்மையைக் கூட்டி, நீட்டி, பெருக்கி, கழித்து, சிதைத்து, அதன் பரந்த பொருளையும் திரித்து, பிரித்து, பின்னம் ஆக்கி, அணி பூட்டி,  ரசனைக் கூட்டுவதும் மிகையாகும்.

பரதநாட்டியச் சாஸ்திரத்திலும் தண்டியலங்காரத்திலும் தொல்காப்பியத்திலும் வரையறுக்கப்பட்ட சொல், பொருள், அணி, அலங்காரமும் மெய்ப்பாடுகளும் முக்கிய ரசனைகளும் இடை உப ரசனைகளும் அதனுடைய மிகைப்படுத்துதலும் வெளிப்பாடுகளுமே செவ்வியல் கலைகளில் கையாளப்படுகிறது.

காப்பியத்தை அதற்குரிய இலக்கணப்படி வடிவமைத்து அதில் இயற்கையழகு, களம், தலம், அழகு, கதாபாத்திரங்களின் வடிவழகு குணநலன்களின் அழகு, வீரம், காதல், மோதல், கூடல், ஊடல், இணைவு, பிரிவு, பகை, போர், துயரம், வருத்தம், மரணம் ஆகிய தருணங்களின் அழகு அல்லது அவலம்.

காப்பியத்தின் கரு அழகு, கருத்தழகு, தொடக்கம் கொண்டு இடையில் நாடகத் தருணங்களை மிகைப்படுத்தி, நவரசங்களை ஏற்றி, இறக்கி, மிகைப்படுத்திய அழகு, அறத்தின் அழகினை மிகையேற்றியும்  மறத்தின் பாங்கினைக் கீழிறக்கியும், காவியம் முன்னெடுத்துக்கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு முடிவுரை எழுவதாகும். இவ்வாறே கம்பன் கம்பராமாயணத்தை இயற்றியுள்ளார்.

எழுத்தில் ஏறுவதெல்லாம் கற்பனை கலந்தே இருக்கும். கதை கவிதை போன்றவற்றில் மிகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ அல்லது மிக மிக உணர்ச்சி அற்றதோ வாசகர்  மனதில் நிற்கும். மனதில் நிற்பதற்கான காரணம் அதை மிகைப்படுத்தியதால் ஏற்றப்பட்ட அழகுணர்ச்சியும் தூண்டப்பட்ட ரசனை நயம் அனுபவமும் ஆகும். இவற்றை எண்ணத்தில் வடித்து நினைவில் நிலைநிறுத்திக்கொள்வது அதை அசைபோடவும் வெளிக்கொணரவும் செய்யும்.

எதார்த்தத்தில் காணப்படும் ஒன்று எல்லோருக்கும் அதுவாகவே புலப்படுவதில்லை. எனவே, அதுவே கூட்டிக்  குறைத்து மிகையாகவே புலப்படுகிறது. அறியும் தோறும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகவே அறியப்படுகிறது.

எனவே எதார்த்தம் என்பது எதார்த்தமாகவே காணப்படுவதோ உணரப்படுவதோ அறியப்படுவதில்லை.

அடிப்படையில், எதார்த்தம் என்பது ஒவ்வொருவரின் அகத்தினால் கட்டமைக்கப்படுவது தான். எதார்த்தம் ஒன்றல்ல, பல. கவி கம்பர் கட்டமைத்தது அவர் அகம்  அமைத்துக்கொண்டதுதான்.

கம்பர்  தன் இலக்கிய ஆக்கத்திற்காக தம் அகம் கொண்ட பற்பல எதார்த்த உலகங்களைச் சிருஷ்டிக்கிறார்.

எதார்த்த உலகைப் பதிவு செய்ய ஆரம்பித்தாலே அதனுடன் மிகை கூடிவிடும். மிகையின்றிக் காப்பியங்களை எழுத முடியாது. அவ்வாறு எழுதத் துணிந்தால் அது ஒரு வரலாறு ஆகிவிடும்.

இதுவரை கம்பன் மிகை என்று கட்டமைத்த இலக்கியக்  கட்டுமானத்தின் பரந்த விரிந்த பொருளின் அழகு ரசனை ஆகியவற்றைக் கண்டோம். இனி ‘மிகை’ என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்தினார் என்பதைப் பார்ப்போம்.

கம்பன் சுட்டும் ‘மிகை’ இது என்ப:

மன்னுயிர்களின் அகப்புற இருளை நீக்கும் தசரதனின் மதி போன்ற  வெண்கொற்றக்குடை இருக்க, புற இருளை மட்டுமே நீக்கும் விண்ணிடைத்  தோன்றும் மதியை  ‘மிகை இது’  என்ப என உரைக்கிறார். இங்கே  இம்மதியை வேண்டப்படாத அனாவசியமான ஒன்றை  மிகையெனக் குறிப்பிடுகிறார். இங்கே அமைதியான சாந்த ரசத்தை நிலவுகிறார்.

அகலிகை படலத்தில் துர்வாச முனிவர்  “அசனியும் திகைப்ப மிகை எழுந்திடு சதமக! கேள் என வெகுண்டான்” என்கிறார். கோபமடைந்த துர்வாச முனிவர் இந்திரனை நோக்கி மிகுந்த புகையை வெளிப்படுத்தும் இந்திரனே கேள் என்றார். இங்கே மிகை என்பதை மிகுதி, அதிகம் என்ற பொருளில் குறிப்பிடுகிறார். இவ்விடத்தே ரௌத்திர ரசம் சீற்றம் கொள்ளுகிறது.

அயோத்தி அரசன் பொன்னுலகம் புகுந்தான் என்றதுமே நகரினர் நெஞ்சம் உடைந்து உயிர் சிந்தினர். “தக்கான் போனான்  வனம் என்னும் தகையும் உணர்ந்தனர்; -மிகை ஆவி காலத்தே அகலுமோ, அவதி என்று ஒன்று உளதானால்?” ராமன் வனம் போனான் என்ற உடனேயே அகல வேண்டிய மிஞ்சிய உயிரும் விதிக்கு உட்பட்டு அகலவில்லை. இவ்விடத்தே மிகை என்பதை மிஞ்சிய, மீதமான என்ற பொருளில் குறிப்பிடுகிறார். மித மிஞ்சிய சோக ரசத்தை மீட்டுகிறார்.

குகன்  “உளர் ஆனார் மருவலர் எனின், முன்னே மாள்குவென்; மிகை அல்லேன் “ராமனிடம் தீயப் பகைவர்கள் வரின் உங்களுக்கு முன்பாகவே அவர்களிடம் போர் செய்து அவர்களை வீழ்த்தி நானும் மாண்டு விடுவேன். இது எனது அதிகப்படியான மிகுந்த செயல்பாடு அல்ல என்கிறான். இவ்விடத்தில் ‘மிகை’யானது அதிகப்படி மிகுதியான என்ற பொருளில் சுட்டப்படுகிறது. வீர ரசம் மிகுகிறது.

சூர்ப்பனகை “மேற்கு உயரும் நெடு மூக்கு மடந்தையர்க்கு மிகையன்றோ?” பெரிதும் உயர்ந்துள்ள நீண்ட மூக்கு பெண்களுக்கு ஒரு குற்றம்தானே. எனவேதான் இலக்குவன் என் மூக்கை அறுத்தானோ என்கின்றாள். இங்கே மிகை என்பது குற்றம் என்ற பொருளில் தொனிக்கிறது. எனினும், தர்மத் தலைவன் இம்மிகையைக் களைந்ததனால் கோரம் கொண்டாள், அருவருப்பு ரசனை  அனுபவிக்கப்பட்டது.

இராமன் வெகுண்டு அரக்கர் குலம் முழுவதும் அழிப்பேன் என வீர உரை எழுப்பியபோதும் சூர்ப்பனகை, “காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர், என்னினும், யான் மிகையோ?” மூங்கில் போலும் தோளை உடைய உன் மனைவி சீதையை துறக்க மாட்டீர் என்றாலும், நான் உம்மோடு சேர்ந்திருப்பது அனாவசியமானதா? இல்லையென காமரசம் தெறிக்கிறது.

சிந்தனைச் செல்வன் இலக்குவன் மாயமான் என உறுதிகொண்டு ஆராய்ந்து வேட்டையாடவும் என வேண்ட, ராமன்  அதை மறுத்து “பகை உடைய அக்கர் என்றும், பலர் என்றும், பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுவதும் என்றல் நகை உடைத்து ஆகும் அன்றே?”  என மறுமொழி கூறி அரக்கரை ஒழிப்பேன் என்று கொண்டுள்ள விரதத்திற்கு ஏற்றதே அம்மானை நான் பிடிப்பது என்றான். இங்கே மிகை என்பதை கேடு  என்ற பொருளில் ‘அரக்கர்கள் நிகழ்த்தும் வஞ்சகத் தந்திரங்கள் அழிவை உண்டாக்கும்’ என்கிறார் கம்பர்.  ராமனின் செயல் சோக ரசத்தைக் கடத்தும் இடமாயிற்று.

கபட வேடதாரி இராவணத் துறவியுடன் கொண்ட வாக்குவாதத்தில் சீதை ’உடலமும் மிகை என்று  எண்ணுவீர்!’ ஆன தவசீலரே ஏன் படுபாதகச் செயலைச் செய்யும் நரமாமிசம் உண்ணும் அரக்கர்களின் நகரில் தங்கிய உள்ளீர் என கபடமற சாந்தமாக வினவுகிறாள். இங்கே மிகை என்னும் சொல், ‘அனாவசியமானது’ உடல்  என்ற பொருளைக் குறிக்கிறது.

சுக்ரீவனுக்கு முடி சூட்டி வழங்கும் வாழ்த்துரையில் ராமன், “‘புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு’ என்று உன்னும் மிகை உடைத்து உலகம்” என்கிறார்.  உலகம் புகை வரும் இடத்தில் கிளர்ந்தெழும் நெருப்பு உண்டு என்று  யூகித்தறியும் அதிகப்படியான சிறப்பறிவு கொண்டுள்ளது என்கிறார். இவ்விடத்தே மிகை என்ற சொல் ‘அதிகப்படியாக’ அறிந்து  உணர்வதைக் குறிக்கிறது.

சாம்பவான் அனுமனின் வீரத்தைப் புகழும் முகத்தான் “மேலை விரிஞ்சன்  வீயினும் வீயா ‘மிகை’ நாளீர்” எனத் துதித்தான். பிரம்மன் அழியினும், அழியா அனுமனின் சிரஞ்சீவித் தன்மையைப் புகழும் பொருட்டு ‘எண்ணிலா’ வாழ்நாட்களை உடையவரே என வந்தனம் செய்கின்றான்.

அனுமன் இலங்கை நகரை முதன் முதலில் முழுமையாகக் கண்டபோது எல்லா இருளையும் அகற்றும் ஒளி மிகுந்த மணிக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாடமாடங்கள் உமிழும் ஒளியைக் கண்டுணர்ந்து “நாண ‘மிகை’ என விலங்கிப் போனான்” வெயில் கதிர் வேந்தன் சூரியன் என்கிறான். இவ்விடத்தே  சூரியன்தான் ‘அதிகப்படி’ என்றெண்ணி இலங்கையை விட்டே விலகிப் போனானாம்.

இலங்கேஸ்வரனைத் தழுவ முடியாதபடி அமர உரிமை மகளிர் தடுப்பதால்  அரக்கியர் துன்புறுத்துவதை  “யானர்ப் பலிங்குடைச் சீதப்பள்ளி மிகை ஒடுங்காத காம விம்மலின் வெதும்புவாரும்” என்கிறார். அரக்கியர் அழகிய புதுமையான குளிர்ந்த பளிங்கு படுக்கையில் ‘மிகுதல்’ குறையாத காம ஏக்கத்தால் வெப்பம் அடைந்தனர்.

அனுமன் உறங்கும் மண்டோதரியை இரவில் பார்த்த போது இவள்

சீதாபிராட்டியோ என்று மருளி பின் தெளிந்து “நினைந்து’மிகை’என்றான்”. அனுமன் தான் நினைத்தது ‘குற்றம்’ என்கின்றான்.

இந்திரஜித்தும் அனுமனும் பொருந்தும்போது, இந்திரஜித்து “சிகை எழும் சுடர் வாளிகள்  மிகை எழும் சினத்து அனுமன்மேல் விட்டான்” என்கிறார். மிகை என்பதை ‘பொங்கி’ என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

விபீடணன் தூதனாய் வந்த அனுமனைக் கொள்ளலாகாது என்று கூறும் முகத்தான் “மிகைப்புலன் அடக்கி, மெய்மை விளம்புதல்” தூதரின் தன்மைகளில் ஒன்றெனக் கூறப்படுகிறது. பகைவர்கள் கொள்ளும் ‘கோப’ உணர்ச்சியைத்  தன் சொல்லாற்றலால் அடக்கி, அனுப்பியவர் சொன்ன செய்தியை உள்ளபடியே  சொல்வதாகும். இவ்விடத்தே மிகை உள்ளடக்கிய மிதமிஞ்சிய கோபத்தைச் சுட்டுகிறது.

அனுமன் தன் வாலில் பற்றிய  தீயை இலங்கை முழுவதும் பரவும்படி   “‘மிகை’த்து  எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய’ செலுத்தினார். செருக்கு எழுந்து தீயச்  செயல் புரியும் அரக்கர்களின் பரந்த நகர் அழியும்படி சென்றார். இங்கே மிகை ‘செருக்கு‘ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தன் இன்னுயிரை இழக்காத வண்ணம் வரங்கள் பல வாங்கி வந்த இரணியனை  நரசிங்க பெருமான் வதைத்தபோது  “‘மிகை’ செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செய்யும் வினையம் வல்லான்“ என்கிறார் கம்பர்.  ‘தீங்கு’ செய்பவர்களின் தீயத் தந்திரச் செயல்களை மீறிய வஞ்சகம் செய்ய வல்லவன் பெருமான் என்கிறார். மிகை தீங்கு என்ற பொருளில் எடுத்தாளப்படுகிறது.

ராமன் விபீடணனுக்கு அடைக்கலம் கொடுப்பதைப்  பற்றி நண்பர் சுக்ரீவனிடம் ஆலோசித்தபோது சுக்ரீவனின் கூற்றாக விபீடணன் தன் முன்னோனையும் தாய் தந்தையரையும் ”‘மிகை’ உற குரவரை, உலகின் வேந்தனை,” பகைத்துக்கொண்டு வருதல் நகைப்புக்கு இடம்கொடுக்கும் விரும்பத்தகாத செயலாகமே என்கிறார் கம்பர். மிகை இவ்விடத்தே ‘சிறப்புடைய’ என்ற பொருளில் சான்றோர்களைச் சுட்டுகிறது.

மேலும் சுக்ரீவன் கூறுகையில், ”‘மிகைப்’ புலம் தருமமே வேட்டபோது”  என்று  வீபிடணின் ‘மேலான’ அறிவு அறத்தையே விரும்பியபோது தன் குல அறத்துக்கு மாறுபட்டு அவர்களைப் பிரிந்து வருவது பழிப்புக்கும் நகைப்புக்கும் இடம்கொடுக்குமே என்கிறார். எனவே, மிகைத்தமிழ் கம்பன் செய்த அருஞ்சாதனை என்பது மிகையாகாது!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button