
களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பற்றிய பேச்சுகளும் மண் வினைஞர்கள் குறித்த விவாதங்களும் வரும்பொழுது, மண் பானை மட்டுமே பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. வழிவழியாக வரும் பொருட்களில் பானைக்கு எவ்வளவு மௌசு இருக்கின்றதோ, நவீனச் சமூகத்திலும் இருக்கின்றது. இந்த ‘மௌசு’ என்பது சில தொழிலாளர்கள் மத்தியில் சலிப்பும் மக்கள் மத்தியில் வியப்பும் நிறைந்ததாக இருக்கிறது என்றால் மிகையல்ல.
அதேசமயம், கடந்த ஆண்டு பானையைத் தாண்டிப் பேசப்படாத பாரம்பரியப் பொருட்களைப் பட்டியலிட்டு எழுதியபோது, “அரசாங்கத்திற்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் அமைவதில் எப்பொழுதும் சுணக்கமே மிஞ்சுகின்றது” என்பதை அரசாங்கத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் அந்தக் கட்டுரையின்மீது கருத்தாகத் தெரிவித்தார். மேலும் அவருடன் விவாதிக்கையில், மண்பாண்டத் தொழிலாளர்களின் உண்மை நிலையை மாவட்டவாரியாக எடுத்துப் பேசும் பொழுதுதான் தக்க மாற்றங்கள் நடைபெறும் என்பதை ஆணித்தரமாக அந்த உரையாடலின் பதிலாகக் கிடைத்தது.
வேறெந்த பொருளை வாங்கினாலும் பானையே பிரதானமானது என்ற இந்தப் பிரதான மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் என்பது சமீபத்தில் சென்னையின் நடைபெற்ற செம்பொழில் கிராமியத் திருவிழா உருவாக்கியது. தமிழின் பாரம்பரிய இசை வாத்தியங்களைக் கண்காட்சியாக அமைத்திருந்த கூடம் பலரை ஈர்த்தது. மேளம், நாதசுரம், உடுக்கை, தவண்டை என விரல்விட்டு எண்ணும் அளவில் நமக்குத் தெரியும் இசைக்கருவிகள் போல, களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்துவதும் காலத்தின் தேவையை உணர்த்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். மேலும், இத்தொகுப்பில் புதுமைகளை மண்பாண்டக் கலைக்குள் கட்டிடக்கலையில் துவங்கி, வீட்டு அலங்காரம், வீட்டு உபயோகம் மற்றும் சமையல் பொருட்கள் என இன்றைய சந்தைகளில் விற்பனையாவது குறித்த தொகுப்புதான் இது.
அடை சட்டிகளில் ஆரம்பித்து, பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலான களிமண் பாட்டில்களை மக்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர். இதில் உச்சபட்ச வெற்றி என்பது விஷேசங்களில் அன்பளிப்பாக வழங்கும் டின்னர் செட் வரை களிமண்ணாலான பொருட்களை வைத்து முன்னெடுக்கத் துவங்கியுள்ளனர். சமையற்கலையில் களிமண் பொருட்கள் கண்ட மாபெரும் புதுமை என்பது, மின்சாரத்தை அடிப்படையாக இல்லாமல், களிமண்ணில் ஃபிரிட்ஜ் வரை நீண்டுள்ளது.
ஜிகர்தண்டா தூதை வடிவேலு குடித்த மண் கப்புகள், தற்சமயம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதியதாக நிறுவப்பட்ட தேநீர், காபி கடைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களை அதிகப்படியாகக் கவர வேண்டும் என்ற எண்ணத்துடன் புதுமையான காபி, டீ மக்குகளில் பரிமாறப்படுகின்றது. மேலும் ஹோட்டல் நிறுவனங்களில் தண்ணீர் பருகுவதற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணடி ஜார்கள், செம்பாக மாற்றம் பெற்று தற்போது களிமண் ஜார் எனும் வடிவில் சாப்பிடும் மேசைகளை அலங்கரிப்பது நம்மால் பார்க்க முடிகின்றது.
வட இந்தியர்கள் தீபாவளி என்றால், தமிழர்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவது போலத் தீபம் ஏற்றுவார்கள். காலச் சுழற்சியில் அகல் விளக்கு என்பது ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் விற்பனையாகும் பிரதானப் பொருளாக உத்தேசிக்கப்படுகின்றது. வெள்ளி, பித்தளைகளில் விளக்குகள் இருந்தாலும், அழகையும் அலங்காரத்தையும் அடிப்படையாகக்கொண்டு பீங்கான் விளக்குகள் தொடர்ந்து தனது இடத்தினைத் தக்க வைத்திருக்கின்றது. இதனை 2025ஆம் ஆண்டில், புது வடிவிலான களிமண் விளக்குகளைத் தயாரித்ததையொட்டி, கணிசமான வாடிக்கையாளர்கள் கவனமும் விற்பனையும் இந்த புதிய வடிவ விளக்குகள் பக்கம் திரும்பியுள்ளது. பிற உலோகங்களை ஒப்பிடும்போது, ‘எண்ணெய் கீழே கசியும் தன்மை அதிகமாக இருக்கின்றது’ என்ற பொதுமக்கள் கருத்தை மண் வினைஞர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாக விளக்கு உற்பத்தியாளர்களுக்கு ஒரு நன்மை பயக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பானைகள் என்பது சமைக்கும் பண்டமாக வாங்கி, இறுதியில் செடிகள் வைக்கும் பூந்தொட்டிகளாக மாற்றம் பெற்றது. ஆனால் இன்றைய காலங்களில் ஒவ்வொரு நகரங்களுக்குள் இருக்கும் நர்சரிகள் துவங்கி, மண்பாண்டக் கடைகள் வரை பல வடிவங்களில், அலங்காரங்களுடன் பூந்தொட்டிகள் விமர்சையாக விற்பனை ஆகின்றது.
சிறு தெய்வ வழிபாடுகளில் பிரதானமாக விளங்கும் நேர்த்திக் கடன் தீர்க்கும் நிகழ்வுகளில், அலங்கரிக்கப்படும் உருவ பொம்மைகள் மற்றும் புரவி எடுக்கும் நிகழ்வுகளில் முக்கிய பங்கான உருவங்களும் பொம்மைகளும் இன்றைய காலக் கட்டங்களில் பெரு தெய்வ வழிபாடாகவும் அழகியலாகவும் பரிணாமத்துடன் பார்க்கப்படுகின்றது. இதில் நவராத்திரி காலங்களில் அடுக்கி வைக்கப்படும் களிமண் கடவுள் உருவங்கள் மற்றும் டெரகோட்டா விக்கிரகங்கள் என ஒரு பட்டியல் நீண்டிருக்கின்றது. மற்றொருபுறம், களிமண்ணால் செய்யப்பட்ட யானை, குதிரை, முகம் வடிவிலான பொம்மைகள், சுவர் சித்திரங்கள், செவிக்கு இதமான ஓசை எழுப்பும் தோரணங்கள் என வரிசைக்கட்டும் அளவிற்கு இந்தப் பட்டியல் நீண்டுள்ளது. அத்துடன் இல்லாமல், கலைஞர்களுக்கு வரும் கற்பனைகளுள் சில சந்தைகளைக் கட்டிப்போடச் செய்கின்றது.
ஜல்லி பிளாக்குகள் வைத்து அமைக்கப்பெறும் சில வீடுகளின் அழகுகள் கூடுதலாக எடுத்துக்காட்டும் நிலை என்பது கட்டிடக் கலையில் களிமண்ணின் மறு முனைப்பைக் காட்டுகின்றது. அதில் பல வடிவங்கள் சில எண்ணவோட்டங்களைப் பிரதிபலிக்கும் சின்னமாக விளங்குகின்றது என்றால் மிகையல்ல.
தற்காலத்தில் களிமண் பொருட்களில் உச்சமாகவும் சந்தை விலையில் உச்சமாகவும் விளங்கும் களிமண் நகைகள் குறித்துப் பேச வேண்டும் என்றால் தனியொரு கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். நுண்கலையும் கலைநுட்பத்துடன் மதிநுட்பமும் இணைந்து செயல்படும் வகையில் நகைகள் இருக்கின்றன. மேலும், களிமண் நகைகளைத் தமிழ்நாட்டில் சரியாக மார்க்கெட்டிங் செய்யும் பட்சத்தில், இதன் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சுழற்சி என்பது அதிகமாக விளங்கும்.
களிமண் பொருட்கள் இன்றைய சூழலில் புழக்கத்திற்கு வந்தாலும், இக்கலை என்பது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றது. ‘ஆர்கானிக்’ என்ற பெயரால், பாரம்பரிய மண்பாண்டங்கள் தொடங்கி இன்றுவரை கைவினையாக்கப்படும் களிமண் அணிகலன், பொம்மைகள், ஷோ பீஸ்-கள் முதலியன காலச் சூழலுக்கு ஏற்றவாறு ஒரு கலை உயிர்ப்புடன் இருக்கின்றது என்பது சிறப்பான விசயமாக இருக்கும். இதுபோன்ற பொருட்களின் உற்பத்தியானது மானாமதுரை, வில்லியனூர், புதுக்கோட்டை மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் நவீனக் காலத்திற்கு ஏற்ற பயிற்சியும் தொழிலும் தொடங்கும்பட்சத்தில், இக்கலையும் விளிம்பிற்குச் செல்லாமல் இருப்பதுடன், மண்பாண்டத் தொழிலாளர்களும் களிமண் வினைஞர்களும் பெரும் ஆர்வமுடன் இத்தொழிலை முன்னெடுப்பார்கள்.



