கமல்ஹாசன்-சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணியின் சோதனை முயற்சிகளில் ஒன்றான மைக்கேல் மதன காமராஜன் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் விதிகளுக்குட்பட்டு சரியான விகிதத்தில் மசாலாவும் தொழில்நுட்பமும் கலந்து கொடுக்கப்பட்ட கலைப் படைப்பு என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு புதுமையைப் புகுத்தும் கமல்ஹாசன் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்திராத காலத்தில் செய்த புதுமைகள் இன்றும் இந்தப் படத்தைக் கொண்டாடும்படியாகச் செய்துள்ளது. குள்ள மனிதர் உட்பட மூன்று கதாபாத்திரங்களில் நடித்து பெருவெற்றி பெற்ற அபூர்வசகோதரர்கள் திரைப்படத்திற்கு அடுத்த கட்டமாக நான்கு கதாபாத்திரங்களில் நடித்த கமல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு உடல்மொழி, வட்டார வழக்கு என மேலும் சில வித்தியாசங்களைக் காட்டியிருந்தார்.
இளையராஜா டைட்டில் பாடல் பாடினால் படம் வெற்றிபெரும் என்கிற நம்பிக்கையிருந்த காலம் அது. எனவேதான் படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வரிகளில் ‘கதைகேளு கதைகேளு’ என்று இளையராஜா குரலில் கதை விளக்கப்படுவதாய் படம் துவங்கும். கதாநாயகனின் கதாபாத்திரத்தின் பெயரில் படத்தின் டைட்டில் வைத்தால் வெற்றிபெரும் என்றிருந்த நம்பிக்கையின் அடையாளமாய் நான்கு கதாபாத்திரங்களின் பெயரையும் உள்ளடக்கியது படத்தின் டைட்டில்.
கிரேஸி மோகன் மறைவின்போது கமல்-கிரேஸி கூட்டணியின் வெற்றிக்கு காரணம் கமலா கிரேஸியா என்று பட்டிமன்றங்கள் நடந்தன. உண்மையில் மோகனின் வார்த்தை விளையாட்டுகளுக்கு ஸ்கோர் செய்ய இடம் கொடுக்கும் கமலின் திரைக்கதையும், வசனத்தை உடல்மொழி மற்றும் உச்சரிப்பில் கொண்டு வரும் கமலின் நடிப்புமே இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு காரணம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தத் திரைப்படம். இந்தப் படத்தின் ஹிட் வசனங்களுக்கு தனிப் புத்தகமே போடலாம்.
குஷ்பு, ரூபினி தவிர ஊர்வசி, நாசர், நாகேஷ், மனோரம்மா, டெல்லி கணேஷ், எஸ் என் லக்ஷ்மி, சந்தானபாரதி என அனைவருமே ராஜ்கமல் ட்ரூப். கமல் தனது படங்களில் மற்ற நடிகர்களுக்கு ஸ்கோர் செய்ய இடம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்த பிறகு இந்த விமர்சனம் அதிகமானது. டெல்லி கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கமல் படத்துல நடிச்ச கேரக்டர் எல்லாம் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. ரஜினி படங்கள்லயும் நடிச்சு இருக்கேன். ஆனா அந்த அளவு ரீச் ஆகல”, என்று கூறியதிலேயே இதற்கான பதில் இருக்கிறது. நாசரோ ஊர்வசியோ எஸ்என் லக்ஷ்மியோ டெல்லி கணேஷோ காகா ராதாகிருஷ்ணனோ நடித்த படங்களில் நினைவில் வரும் ஒரு ஐந்து படங்களை யோசித்துப் பாருங்கள். கமல் படங்களைத் தவிர்த்து பட்டியலிட முடியாது என்பதே உண்மை.
இளையராஜா இசையில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ க்ளாஸ் என்றால் ‘ரம் பம் பம்’ ‘சிவராத்திரி’ ‘பேரு வச்சாலும் ‘ என மற்ற பாடல்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கான பக்கா கமர்சியல் மெட்டீரியல்ஸ். ‘சுந்தரி நீயும்’ பாடல் பதிவின் போது எஸ்பிபியின் வெர்ஷனை மட்டுமே கேட்டிருந்ததாகவும் படம் வெளியானபோது கமலின் குரலில் வெளியானதாகவும் ஜானகி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். தெலுங்கில் எஸ்பிபியின் குரலிலேயே வெளியானது. தமிழில் கேட்டுப் பழகியவர்களுக்கு தெலுங்கு வெர்ஷன் பிடிக்க வாய்ப்பில்லை. குறைவான வாத்தியங்கள் பயன்படுத்தியதால் என்னவோ ராஜாவின் எந்தக் கச்சேரியிலும் இந்தப் பாடலைக் கேட்க முடிவதில்லை.
ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்ட பாடலின் காட்சி அமைப்பு பாடலை இன்னும் பசுமையாகவே வைத்திருக்கிறது. ஒளிப்பதிவைப் பார்த்தவுடன் பிசி ஸ்ரீராம் என்று நினைக்கத் தோன்றினாலும் பிசி கௌரி ஷங்கர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். கமல்-ராவ் கூட்டணியின் பேசும்படம் திரைப்படத்திற்கும் இவரே ஒளிப்பதிவாளர்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காமேஷ்வரன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘லண்டனில் காமேஷ்வரன்’ என்றொரு படத்தை எடுக்க நினைத்தாராம் கமல். பின்னாளில் அந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து மாதவன் நடிப்பில் ‘நளதமயந்தி’ என்றொரு திரைப்படம் வெளிவந்தது.
இந்திய சினிமாவில் அதிகம் பேசப்படாத இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். அவரது கடைசி காலம்வரை புதுப்புது முயற்சிகளை பரிசோதித்துக் கொண்டே இருந்தார். கமலைத் தவிர அவருக்கு யாரும் பெரிதாக அங்கீகாரம் கொடுத்ததாகத் தெரியவில்லை. அவரது முயற்சிகளும் பெரும்பாலும் கமல் பெயரிலேயே எழுதப்பட்டுவிட்டன என்பதால் இந்தத் தலைமுறையில் பலருக்கு அவரது பெயரே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கமல்-சிங்கீதம், கமல்-கிரேஸி மோகன், கமல் – இளையராஜா கூட்டணிகளுக்கு தனித்தனியாக ரசிக வட்டாரங்கள் உண்டு. இந்த மூன்று கூட்டணியும் ஒருங்கே அமைந்த இந்தத் திரைப்படத்திற்கு, தமிழ் சினிமாவின் தலைசிறந்த முழுநீள நகைச்சுவை திரைப்படங்களைப் பட்டியலிட்டால் முக்கிய இடம் உண்டு.