கவிதைகள்
Trending

கவிதை – கமலதேவி

கவிதை | வாசகசாலை

என்ற ஒருவன்

கூச்சம்…தயக்கம்
திடுக்கிடல்…
அவனை ஏற்பதில்.

இதுவரை பகிராத
அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்…
துயிலெழுந்து
குஞ்சாமணி ஆட்டி
ஓடிவரும் அதிகாலை அவன்.

அன்பின் அவசரத்தில்
அவள் கண்ணாடியை சுழற்றி வீசி
முகத்தில் அடிக்கும் மயூரன்.

புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்
தலையணைக்கருகில் மஞ்சள் வாத்தும்
பிள்ளையார் பக்கத்தில் கரடியும்
ஔித்து வைக்கும் கள்ளன்.

யாருக்கும் அனுமதியில்லாத
அவள் காட்டன்புடவையில்
படுத்துறங்கும் கோபாலன்.
தெய்வ மொழியில் அழைப்பவனை
மறுப்பது எந்த மொழியில்…
தயங்காமல் முத்தம் தருவதன்
இனிமையை சொல்லித்தர வந்த மதனன்.

ஆசையாய் மடியில் வந்தமர்ந்து
சிறுநீர் கழித்த உடனே
தரையில் படுத்துக்கொள்ளும் நீசன்.

அவள் நேரத்தையெல்லாம்
சுருட்டி கால்களில் மிதித்து
குட்டித்தோகையை விரிக்கும்
கலாபன்…

அவள் கதைகளென கவிதைகளென கிறுக்கி வைக்கும் தாள்களை
கிழித்து வீசும் முரளிமனோகரன்…
புத்தகங்களை எடுத்து கசக்கி
கோபம் கொள்ள வைத்தப்பின்
மலர்முகை முகம் காட்டி
தலைசாய்த்து சிரிக்கும் ராதேயன்.

அவனுடைய அனைத்து அழகையும் காட்டி
சிரிக்கிறான்…என்னதான் செய்வாள்…
புத்தகங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

காக்கவைத்துவிட்டு
அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்
மகனென்று வந்த ஒருவன்…
உள்ளிருக்கும் கன்னியை
பழித்து சிரிக்கும் அமிர்தன் அவன்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button