![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/03/PicsArt_03-17-08.01.13-780x405.jpg)
உன் மீதான காதலை துதிப்பாடல்களை இசைக்கின்றோம்.
1.
பிரகாசிக்கும் நிலவையும்,
மின்னுகின்ற நட்சத்திரத்தையும்
காணும் போதெல்லாம்
என் மெய்விதிர்த்து தன்னிலை மறந்து போகிறேன்.
மாருதமாய் என்னைத் தழுவிச் செல்கிறாய்.
ப்ரக்ஞையற்றிருக்கும் என்னை
சுழன்றாடச் செய்கிறாய்.
இப்போது நான் முணுமுணுக்கின்ற பாடல்
நிலவைப் பற்றியதா?
அல்லது நட்சத்திரங்களைப் பற்றியதா?
உனது வசத்தில் தான் எப்போதுமிருக்கின்றன
பிரபஞ்சத்தின் அத்தனை அற்புதங்களும்.
2.
குப்பிகளில் அடைக்கப்பட்ட
மலர்களின் வாசனையை
சுகந்தம் அளிக்கும் அத்தரென
மேனியெங்கும் பூசிக் கொள்கிறேன்.
உனது மணம் எப்படியிருக்கும்?
ரோஜாவைப் போலவா?
மல்லிகையைப் போலவா?
அல்லது
மகிழ்ச்சியோ, துன்பமோ எதுவாயினும்
நான் அருந்தும் மதுவைப் போலவா?
சுழன்றாடுகிறேன்,
ஒவ்வொரு மலரின் பெயர்களும்
உன்னுடைய பெயர்கள் தானே!
அவற்றின் மணம்
இப்பூமியெங்கும் சுகந்தம் கமழச் செய்கின்றன.
3.
பொன்னிற மாலையைப் பார்.
உனது மூங்கில் குழலில் தளும்பிக் கொண்டிருக்கும்
மௌனம் உடைபடும் தருணம் இது.
உனது இசையும்,
எனது நடனமும் ஒன்றென கலக்க வேண்டிய நேரம்.
பிறைநிலவின் வெளிச்சத்தில்
சுழன்றாடுகிறேன்,
இசையும், நடனமும் ஒன்றெனக் கலக்கும் தருணத்தில்,
உனது இசையை ஒருபோதும் நிறுத்தாதே
உச்ச இன்பம்
விடிவெள்ளி வேளையில்தான் கிடைக்கும்
மறந்துவிடாதே.
4.
உன் மீதான காதலை
துதிப் பாடல்களாய் இசைக்கின்றோம்.
உனது மகத்துவமும், காதலும்
உருவமற்றிருப்பது தான் தனித்துவமானதாக இருக்கிறது
எந்தக் காதலையும் விட.
வானை நோக்கிக் கைகளை நீட்டுகிற போதெல்லாம்
அளவற்ற காதலை மட்டுமே தருகிறாய்
நாங்களோ அதன் மகத்துவத்தை அறியாமல் இருக்கிறோம்.
சுழன்றாடுகிறோம்,
எல்லையற்ற உனது காதல்
இந்தப் பூமியில் எப்போதும் மலர்ந்து கொண்டிருக்க.
***