கட்டுரைகள்

“மொழியின் நிழலில் இளைப்பாறுதல்” – கு.ஜெயபிரகாஷ்

கட்டுரை | வாசகசாலை

புத்தகங்களை நாமாகத் தேர்வு செய்து படிப்பது அல்லது நம் நண்பர்கள் பரிந்துரைத்த நூல்களை வாசிப்பது அல்லது ஏற்கனவே படித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றிப் பேசியதன் ஈர்ப்பில் அவற்றை தேடிப்படிப்பது இப்படியாக ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதும் அதைத் தொடர்ந்து  ஒரு தேநீரோடு விவாதிப்பதையும் வழக்கமாகச் செய்து வருகிறோம். அப்படியானதொரு உரையாடல் முடிந்தபின் அந்தப் புத்தகங்களை நண்பர்கள் அனைவரும் வாசித்துவிட்டு பின் மீண்டும் விவாதிப்போம். அத்தகைய  மனநிலையினை ஏற்படுத்தியிருக்கிறது கவிஞர் ந.பெரியசாமியின் “மொழியின் நிழல்”

யார் எந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கிறார்கள் என்பதற்கு பின்னே ஒரு அரசியல் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ புத்தகங்களை எரிப்பதும்,  தடைசெய்வதுமாக, தன் அதிகாரத்தை வெறுப்புணர்வை  புத்தகத்தின் மீது கொட்டியதை  இந்த உலகம் கண்டிருக்கிறது. ஆனால் ஒரு பிரதி தனக்கான வாசகனை எப்படியும் சென்றடைந்துவிடுகிறது. அதற்கான பங்களிப்பை  இந்தப் பிரதி நிகழ்த்துகிறது.

கவிதைகள், கட்டுரைகள், நாடகம், கதைகள் எனப் பல்வடிவம் கொண்ட  40 நூல்களினுள்ளும் தன் கவிமனதுடனும் எளிய வாசகனாகவும் இலக்கிய திறனாய்வாளனாகவும் அணுகி  முள் நீக்கி மீனின்  சதையை மட்டும் குழைத்துக் குழைத்து   குழந்தைக்கு ஊட்டும் தாயின் லாவகத்துடன் தந்திருக்கிறார்.

ருசி கண்ட குழந்தை பின் முள்ளுடனே மீனை சுவைக்க வரும். அப்படியாக 40 நூல்களையும் தேடிப் படிக்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறார். குறைந்தது அதிலிருந்து  20 புத்தகங்களையாவது வாங்கிப் படிக்கத் தோன்றிடும்.

தற்போதைய சூழலில் வாசிப்புக்கு பெரும் உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. கைபேசியும் வேலையும் தாண்டி நம் நேரத்தை புத்தக வாசிப்பிற்கு கொடுப்பதே அரிதாகிவிட்ட சூழலில் தலையணை வடிவத்தில் இருக்கும் புத்தகம் நம்மை இன்னும் தயக்கத்திற்குள் தள்ளிவிடுகின்றன.

பலாப்பழத்தை வாங்கும் முன் அதன் சுளைகளை சுவைக்கக் கொடுத்து அதன் சுவை பிடித்த பின் பெரும் பழத்தை வாங்குவதைப் போல பல சுவை கொண்ட சுளைகளை வைத்திருக்கிறது இந்த மொழியின் நிழல்.

வெகு இயல்பாகவே கவிஞர் ந.பெரியசாமி புதியவர்களையும் அவர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பூனை தன் குட்டியை வாயில் பல் படாமல் கவ்விக் கொண்டு வளர்ப்பதைப் போல  புதிதாக இலக்கியத்திற்கு வருபவர்களை  அன்போடு வளர்க்கிறார். விமர்சனத்தினூடே அவர்களை செழுமையாக்கவும் செய்கிறார். அவரின் விமர்சனம் உடலில் நோய்பட்ட கட்டியை மட்டும் வெட்டி நீக்குகிறது. ஒரு போதும் உடலைச் சிதைப்பதில்லை.

கன்னத்தில் கைவைத்து யாவற்றையும் கவனித்துக் கொண்டு மொழியின் நிழலில் தொடர்ந்து அவரும் நம்மோடு கோப்பை தேநீரை பகிர்ந்து கொண்டு  இளைப்பாறுவார். இன்னொரு பிரதியின் உரையாடலுடன்.

புத்தகம் ; மொழியின் நிழல்

ஆசிரியர் ; ந.பெரியசாமி

வெளியீடு ; தேநீர் பதிப்பகம்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button