Uncategorizedசிறுகதைகள்

ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்

சிறுகதை | வாசகசாலை

மிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடினாள். ஆனால், சட்டென்று இப்படி ஒரு முடிவை எடுத்தாள். எத்தனையோ வேலை வாய்ப்புகள் தேடிவந்தன. அனைத்தையும் மறுத்துவிட்டாள். பழனியில் பழைய இரயில்வே குடியிருப்பு பக்கத்திலிருக்கும் ஒரு சிறிய வீட்டில் தன் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவிற்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவு இப்படியொரு வேலையை அவள் தேடிக்கொண்டதற்கு அவள் கண்டுபிடித்த வலுவான காரணம். சிறிய தோல்பையை தோளில் தொங்கவிட்டவாறு இரயில் பெட்டிகளினுள்ளே நடக்க ஆரம்பித்தாள். பழனி முருகன் கோயிலை நோக்கிக் கும்பிட்டுவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள். 

“படார்” என்று தன் இரு கைகளையும் வலுவாக அடித்து ஓசை எழுப்பி வலது பக்கம் திரும்பினாள். அந்தக் கம்பார்ட்மெண்டில் எட்டுப் பயணிகள் இருந்தனர். சந்திரா எழுப்பிய சத்தத்தில் ஒரு பெண் பயணி உலுக்கியேவிழுந்தாள். ஒரு வயதான மூதாட்டி சந்திராவை மேலும் கீழும் பாரத்துவிட்டு தன்னுடைய பெரிய பையிலிருந்து ஒரு சின்னத் துணிப்பையை எடுத்தார். அதிலிருந்து ஒரு இரண்டு ரூபாய் காசை சந்திராவிடம் நீட்டினார். சந்திரா ஒன்றும் சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டார். “உன் மகன்களில் ஒருவன்கூட உன் சாவுக்கு வரமாட்டானுங்க! கொடுக்குறா பாரு!” என்று வார்த்தைகள் அவள் மனதில் தோன்றி வெளியில் வராமல் உள்ளேயே கிடந்தது. இடதுபக்கம் திரும்பினாள். ஒரு வாலிபன் நீல நிற டி-சர்ட்டில் கையில் கைபேசியுடன் காதுகளில் ஹெட்போனுடன் ஜன்னல்வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரா அவனருகில் சென்று மீண்டும் ஒரு “படார்.” அந்த வாலிபன் அதிர்ந்தவனாய் திருப்பி “என்ன?” என்றான். அவனுடைய எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் “தம்பி! ஏதாவது கொடுங்க!” என்றார். அந்த வாலிபனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன்னுடைய பேண்டின் பின்பாக்கெட்டிலிருந்து தனது பர்ஸை எடுத்தான். அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். மீண்டும் “ஒரு படார்.” அந்த வாலிபனைத் தொடாமல் அவனது முகத்தை தன்னுடைய கைகளால் வழித்துத் தழுவுவதுபோல் காற்றில் தழுவிப் பணத்தை பெற்றுக்கொண்டாள். “இவனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும். நல்ல மனைவி கிடைக்கட்டும்.” என்ற வார்த்தைகள் சந்திராவின் மனதில் ஒலித்து மெதுவாக மறைந்தது. சில வினாடிகள் அங்கிருந்துவிட்டு யாரும் இனி எதுவும் தரமாட்டார்கள் என்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு நகர்ந்தாள். 

மீண்டும் ஒரு ”படார்.” ஐந்து பயணிகள் அங்கிருந்தனர். இருவர் மட்டுமே அந்த ஒசைக்கு அசைந்தனர். மொத்தத்தில் ஐந்து ரூபாய் கிடைத்தது. அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு நகர்ந்தாள். “படார்” என்ற ஓசை மீண்டும் ஒலிக்கச் செய்தாள் சந்திரா. எட்டுப் பயணிகள் அங்கிருந்தனர். நடுத்தர வயதுடைய ஒருவர் தன் மனைவியிடம் கையை நீட்டினார். “கொஞ்சம் சும்மா இருங்க! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்!” என்றாள். அடங்கிப்போனார். “உன் புருஷன் உன்னைவிட்டு சீக்கிரம் ஓடிவிடுவான்டி. சேர்த்து வைத்து எங்கே கொண்டுபோகப்போகிறாயோ? கொரோனா புடுங்கிகிட்டுப்போகுமடி!” சந்திராவின் மனதின் ஓசை சற்று கோரமாக இருந்தது. இடது பக்கம் திரும்பினாள். கண்ணாடி அணிந்திருந்தான் அந்த வாலிபன். சந்திரா எப்போது தன் பக்கம் திரும்புவாள் எனக் காத்திருந்தவன்போல், எழுந்து நின்றான். காலில் கிடந்த தனது செருப்புகளைக் கழற்றினான். தன் இரு கைகளைச் சேர்த்து சந்திராவை வணங்கி நின்றான். சந்திரா அவனுடைய கன்னங்களைத் தொட்டும் தொடாமலும் தன் இரு கைகளால் தழுவி தன் தலையின் இருபுறங்களில் தனது கைவிரல்களை மடக்கி அழுத்தினாள். இரண்டு மூன்று சொடக்குகள் சத்தம் கேட்டது. தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான். “ராசா! நீ நாடாளுவாய்!”என்ற ஓசையை ஆசையாய் சந்திராவின் மனது ஒலித்தது. அந்த வாலிபனுடைய பவ்யமும் பக்தியும் சந்திரா போன்றவர்களின் மீதிருந்த “சிவசக்தி” நம்பிக்கையைச் சற்று உறுதிப்படுத்தி, சந்திராவிற்கு உள்ளூர ஒருவித கூச்சத்தை ஏற்படுத்தியது.

அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு நகருவதற்குமுன் தன் எதிரில் பயணச்சீட்டு பரிசோதகர் சிபி வந்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். அங்கேயே ஏதாவது காலியாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து அவரது பார்வையிலிருந்து தப்பித்துவிடலாமா அல்லது அப்படியே திரும்பி வந்த பக்கமே போயிவிடலாமா என்று எண்ணுவதற்குள் சிபி அவள் அருகில் வந்து சேர்ந்தார்.“ஸ்டேசன் மாஸ்டரை இன்ன போயி நோக்கு… எந்தின பிடிவாதம் நினக்கு! ஈ… நல்ல ஜீவிதமா? என்றார் சிபி. அவருடைய வார்த்தைகளில் கோபமும் ஈரமும் ஒருசேரக் கலந்திருந்தது. திண்டுக்கல் ஸ்டேசன் மாஸ்டர் நல்லதம்பி பல நாட்களாக சந்திராவுக்கான ஒரு வேலையை ஒதுக்கிவைத்திருந்தார். ஆனால், சந்திரா எதையாவது சொல்லி,தட்டிக் கழித்துவந்தாள். அவளுடைய அம்மா அவளுக்கு ஒரு காரணம்.. “இன்று எப்படியும் அவரைச் சந்தித்து விடுகிறேன், சார்” என்றாள் சந்திரா. குறுக்கே நின்றுகொண்டிருந்த சந்திராவைத் தன்னுடைய கறுப்புநிற கோர்ட்கூடப் படாமல் கவனமாக சந்திராவைக் கடந்து சென்றார். இப்படிச் செல்வதை சந்திரா பலமுறை கவனித்திருக்கிறாள். சந்திரா ஏதும் தீண்டத்தகாதவளாக நினைத்து அதைச் செய்கிறார் என்ற எண்ணம் சந்திராவிற்கு என்றுமே வந்ததில்லை. அதை ஒரு கண்ணியத்தின் வெளிப்பாடாகவேப் பார்த்திருந்தாள். அவளுடைய மனதின் ஓசை அவளையும் மீறி ஒலித்தது “நல்ல வாழ்க்கை, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், உங்களுக்குக் கட்டாயம் அமையும்.”  சில வினாடிகள் சிபியைப் பார்த்துக்கொண்டிரு்நதுவிட்டு அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு நகர்ந்தாள்.

இரயில் திண்டுக்கல் ஸ்டேசனை 8.45 மணிக்கு நெருங்கியது. ஐந்து நிமிடங்கள்தான் தாமதம். தனது வேகத்தை முற்றிலும் குறைத்து மூன்றாவது நடைமேடையை நோக்கி அசைந்து அசைந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. சந்திரா ஜன்னல் வழியாக சற்று குனிந்து வெளியே எதையோ யாரையோ தேடுவதுபோல் தான் இருந்த கம்பார்ட்மெண்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஸ்டேசன் மாஸ்டர் நல்லதம்பியின் பார்வையில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணம்மட்டும் அவளுக்குள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் இருந்த பெட்டி நடைமேடையில் தனது அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த நல்லதம்பியைக் கடந்தது, சுமார் ஒரு ஐம்பது அடி தூரத்தில் நின்றது. தனியாக இறங்கிச் சென்றால் அவருடைய பார்வையில் அகப்பட்டுவிடுவோம் என்ற பீதியில் ஒரு வாசலில் நான்கு பேர் இறங்குவதற்குத் தயாராக நின்றுகொண்டிருந்தவர்களோடு சந்திரா சேர்ந்துகொண்டாள். இரயில் நின்றதும் அவர்களுடனேயே இறங்கி அவர்களில் ஒருவராக ஸ்டேசனைவிட்டு வெளியேறினாள். நல்லவேளை நல்லதம்பியிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்துக்கொண்டே அங்கே நின்றுகொண்டிருந்த சிற்றுந்தில் ஏறி திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் சென்றாள். அங்கேயும் படார்… படார் ஓசைகள்….மொத்தம் ரூபாய் 220 தேர்ந்தது. 

மாலை 6.30 மணிக்கு மீண்டும் திண்டுக்கல் ஸ்டேனுக்குத் திருப்பினாள். நல்லதம்பியிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற கவனத்தோடு உள்ளே நுழைந்தாள். முதல் நடைமேடையில் அவருடைய அறை எதுவென்று அவளுக்குத் தெரியும். அதை சற்று வேகமாகக் கடந்து அந்த நடைமேடையில் கடைசியாக அமைக்கப்பட்டிருந்த சிமிண்ட் இருக்கைக்கு செல்வதுதான் அவளது வழக்கம். அன்றும் அவ்வாறு அவரது அறையைக் கடந்தாள். “சந்திரா!” என்ற உரத்த குரல் அந்த அறையிலிருந்து வெளிவந்தது. சந்திரா உறைந்து அங்கேயே நின்றாள். நல்லதம்பி அறையைவிட்டு வெளியே வந்தார். சந்திராவும் திரும்பி அவரை நோக்கி வந்தாள். “சிபி எதுவும் சொன்னாரா? ஏன் இப்படி இருக்க! சொன்னா கேட்கமாட்டாயா?” நல்ல டீசன்டான வேலை. சொன்னா கேளு. உங்களமாதிரியான ஆட்களுக்கான ஒதுக்கீடு அது. மிஸ் பண்ணிடாத! என்ற அவருடைய வார்த்தைகளில் கண்டிப்பைவிட இரக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அம்மாவிடம் கேட்டுவிட்டு கட்டாயம் இரண்டு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லுவதாகச் சொல்லி மெல்ல அங்கிருந்து சந்திரா நகர்ந்தாள்.

மாலை 07.05 மணிக்கு சரியான நேரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் பழனி மார்க்கமாக திருவனந்தபுரம் செல்ல திண்டுக்கல் இரயில்நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்தது. பெட்டி எண் எட்டு சந்திரா அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிராக வந்து நின்றது. பயணிகள் ஏறிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக சந்திரா அந்தப் பெட்டியில் ஏறினாள். இரயில் புறப்பட்டது. சந்திரா ஆரம்பித்தாள். “படார்”…  “படார்…” முதல் கம்பார்ட்மெண்ட் முடிந்தது. அடுத்ததிற்குச் சென்றாள். இருவர் மட்டுமே அங்கே இருந்தார்கள். அங்கே ஒரு “படார்.” ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி திரும்பினாள். சந்திராவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. பத்மாவதி. தனது அம்மாவின் நெருங்கிய தோழி. சித்தி என்றுதான் சந்திரா அவளை அழைப்பாள். பத்மாவதிக்கும் சந்திராவை மிக நன்றாகத் தெரியும். ஒருகணம் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். சந்திரா மெதுவாகச் சென்று பத்மாவதியின் பக்கத்தில் அமர்ந்தாள். “எப்படி சித்தி இருக்கீங்க?” என்றாள். அதற்குப் பதில் எதுவும் பத்மாவதியிடமிருந்து வரவில்லை. “எங்க அக்கா எப்படியிருக்கு?” என்றாள். “நல்லா இருக்கு, சித்தி! இப்ப வேலைக்கெல்லாம் போவதில்லை” என்றாள் மெல்லிய குரலில். பின் மெதுவாகத் தயங்கியவாறு ஆரம்பித்தாள் சந்திரா. “சித்தி, அம்மாவுக்கு இது எதுவும் தெரியாது. நான் ஏதோ வேலைக்கு போயிகிட்டு இருக்கேனுதான் அது நினைச்சுக்கிட்டு இருக்கு. நீ எதுவும் சொல்லிடாத! என்று தழுதழுத்த குரலில் கெஞ்சினாள். “இதுதான் எனக்கு வேலையா? நான் ஏன் சொல்லப்போகிறேன்?” என்று கடிந்தாள். பத்மாவதியின் குணம் சந்திராவிற்கு நன்றாகத் தெரிந்திருந்ததால்தான், அவளிடம் அப்படிக் கெஞ்சினாள். சிலவினாடிகளில் அங்கிருந்துவிட்டு சந்திரா கிளம்பினாள். அடுத்த பெட்டிக்குப் போகும்வரைக்கும் அந்தப்பெட்டியில் எந்தவித “படார்” சத்தமும் ஒலிக்கவில்லை.

மறுநாள் மாலை 07.10 மணிக்கு திண்டுக்கலிருந்து பழனி மார்க்கமாக இரயில் புறப்பட்டது. நேற்று பத்மாவதியைச் சந்தித்ததிலிருந்து சந்திராவிற்கு ஒருவித கலக்கம் இருந்துகொண்டேயிருந்தது. கம்பார்ட்மெண்ட்களில் சென்று “படார் ”ஒலி எழுப்புவதற்கு முன் அங்கே இருக்கும் அனைத்து பயணிகளையும் ஒரு முறை நோட்டமிட்டுக்கொண்டாள். அன்று முழுவதும் பார்ப்பவர்கள் அனைவருமே பத்மாவதியைப் போலவே சந்திராவிற்குத் தோன்றியது. எப்படியோ அந்த நாள் ஒரு முடிவுக்கு வந்தது. மொத்தம் 420 ரூபாய். 06.05 மணிக்கு இரயில் பழனியை நெருங்கியது. திடீரென்று பழனி இரயில் நிலையத்திற்கு முன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வண்டி நின்றது. என்னவென்று தெரியவில்லை. சிபி ஒருவித பதற்றத்துடன் கடந்துசென்றார். சுமார் ஒரு மணிநேரமாகியும் இரயில் நகரவில்லை. யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள சந்திராவிற்கு ஆர்வமில்லை. சிக்னல் பிரச்சினையாகத்தான் இருக்கும். சற்றுநேரத்தில் கிளம்பிவிடும் என்ற எண்ணத்திலிருந்த சந்திராவிற்கு நேரமாக ஆக அம்மா தனியாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பாளே என்ற எண்ணம் ஒருவித கலக்கத்தை உண்டாக்கியது. “இறங்கி அங்கிருந்து மெதுவாகச் சென்று பிரதான சாலையை அடைந்துவிட்டாலும்கூட, வீட்டிற்கு பக்கம்தான். சென்றுவிடலாம்” என்று யோசித்தாள். மெதுவாக இறங்க முயற்சித்தாள். இரயில் ஒலிப்பானின் நெடிய ஓசை ஒன்று கேட்டது. இரயில் புறப்படத் தயாரானது. சந்திரா இறங்கவில்லை. வாசலிலேயே வெளியே பார்த்துக்கொண்டு நின்றாள். இரயில் நகர்ந்து, ஊர்ந்துசெல்ல ஆரம்பித்தது. எந்தக் காரணத்திற்காக இரயில் அவ்வளவு நேரம் அங்கிருந்தது என்பது அவள் பார்த்த அந்தக் காட்சியை கடக்கும்போதுதான் தெரியவந்தது. நான்கு ஐந்து காவல்துறை பணியாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டுமூன்று இடங்களில் துணியை வைத்து குவியலாக இருந்த எதையோ மூடிவைத்திருந்தார்கள். பக்கத்தில் ஒரு வெள்ளைநிற இரும்பாலான தூக்குப் படுக்கை இருந்தது. சந்திராவிற்கு சட்டென்று புரிந்துவிட்டது. யாரோ இரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறார்கள் என்று. எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இரயில் பழனி இரயில் நிலையத்தை அடைந்தது. சந்திரா இறங்கி பழைய இரயில்வே குடியிருப்பு அருகிலிருக்கும் தனது வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். தான் பார்த்த காட்சி அவளை ஒருவித கலக்கத்திலேயே வைத்திருந்தது. வீடுவந்து சேர்ந்தாள். கதவு வெளியில் தாளிடப்பட்டிருந்தது.

நான்கு நாட்களுக்குப்பின் காலை 07.00 மணிக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் பழனி இரயில்நிலையத்தில் திண்டுக்கல் மார்க்கமாக மதுரை செல்ல ஊர்ந்து நுழைந்துகொண்டிருந்தது. சரியாக ஐந்து நிமிடத்திற்குப் பின் புறப்பட்டது. சிபி உள்ளே பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதித்துக் கொண்டிருந்தார். அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு வந்தார். “சீட் நம்பர் 11… நின்னலானோ? ஐடீ கொடுக்குகா…” என்றார். தனது சிறிய பையிலிருந்து தனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினாள் சந்திரா.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருண் பாண்டியனின் ஜெஸ்ஸி சிறுகதை படித்தேன். நன்றாக உள்ளது. கழிப்பறை விஷயம் குறித்து அழகாக எழுதியுள்ளார். இருந்தாலும் நடை இன்னும் நன்றாக இருக்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button