சிறுகதைகள்

சிநேகி – தனசேகர் ஏசுபாதம்

சிறுகதை | வாசகசாலை

சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும் என்று எண்ணும்போதுதான் வலிப்புக்காரன் இரும்புத் துண்டைத் தேடுவதுபோலத் தூரிகையைத் தேடுவாள்.

அட்டைத் தாள் முன்னே சென்றுவிட்டால் போதும், தன் மனதில் இருக்கும் கோபம், சிரிப்பு, அழுகை, ஏளனம், இழிவு இன்னும் இண்டு இடுக்குகளில் இருக்கும் உணர்வுகளெல்லாம் உயிர்தெழுந்து வரும். இதுவரைக் கண்டுகொள்ளப்படாத சிறு அசைவுகள்கூட அவளின் வண்ணங்களோடு கலந்து அட்டைத்தாளில் ஒட்டிக்கொள்ளும். ஆவேசமாய்த் தொடங்கும் அந்த சர்ப பின்னல். வண்ணங்களைக் காணக் காண அவள் மனம், இரவை மெல்ல மீறிக்கொண்டு வரும் காலைபொழுதில், சிறிது திறந்த ஜன்னல் வழியே நுழையும் வெயிலில் கவலையில்லாமல் மிதக்கும் தூசுபோல் லேசாக எங்கோ சஞ்சாரம் செய்யத் தொடங்கும். அந்த நிலைக்கு வந்துவிட்டால் அவளுடைய மனப்பாத்திரம், எல்லாவற்றையும் கவிழ்த்துக்கொட்டிவிட்டு அப்படியே மிதக்கும். வெற்றுப்பாத்திரத்தில் சிறுதுளை விழுந்து ஆண்டாண்டு காலமாகப் புதைத்து வைக்கப்பட்ட  ஒயின் கொப்பளித்துக்கொண்டே சுரக்கும். கவிழ்க்கப்பட்ட உணர்வுகள் வரிசையாய் ஒவ்வொன்றாய் அவள் தோள்மீது ஏறிக் கை வழியே வழிந்து தூரிகைக்குள் நுழைந்து அட்டைத்தாளில் தங்களைத் தாங்களே வரைந்துகொண்டிருக்கும். இந்த நிகழ்விற்கும், உடலுக்கும் சம்மந்தமில்லாததுபோல் மனம் போதையில் எங்கோ நிம்மதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கும்.

வண்ணங்களுக்கும் தூரிகைக்கும் இருக்கும் நெருக்கம், குழைவு, அட்டைத்தாளோடு இல்லாததுபோல் தோன்றும். எந்தத் தூரி மயிர்த் தாளில் விழுக்கிறது என்பதே தெரியாது. அவ்வளவு மென்மையான தீண்டல்கள். புதிதாய்ப் பிறந்த நாய்குட்டியைப் பரிவோடு தொட்டுத்தூக்குவது போல… முதல் காதல் கடிதத்தின் முதல் எழுத்தை வரைவதுபோல்… அந்த எழுத்தின் புள்ளிக் கோடு எல்லாம் உணர்வுகள் மட்டும்தான்.  சுபா ஓவிய அறைக்குள் நுழைந்துவிட்டால் உடல் ஓவியம் வரையும், மனம் தன்னுடைய உணர்வுகளையெல்லாம் வண்ணங்களில் முக்கி, உருட்டி  முன்னே நிற்கும் காகிதச் சுவற்றில் கண்கள் சிவக்க கோபமாகத் தூக்கி எறிந்துக்கொண்டிருக்கும்.

குண்டுகள் காலியானயுடன் திமிங்கலத்தின் உருவில் அண்டத்தைத் தாண்டிய வெளியில் நீந்தி இளைபாறிவிட்டுக் குட்டித்தங்கமீனாய் மீண்டும் வந்து உடலுக்குள் புகுந்துக்கொள்ளும். இதற்கு இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட ஆகலாம். முடிந்தவுடன் அவள் பிணம்போல் கிடப்பாள். அந்த ஒயின் வத்திபோகும் மட்டும் உறக்கம், உறக்கம், உறக்கம்தான்.

கண்விழிக்கும்போது எதிரே ‘இயேசுவின் கை’ படம் தெரிந்தால் அவளை யாரோ கட்டிலில் கிடத்திவிட்டார்கள். வெண்ணிற மரக்கதவு தெரிந்தால் இன்னும் தன்னுடைய ஓவிய அறையில்தான் இருக்கிறாள் என்று அறிந்துகொள்ளுவாள். இன்று அவள் கட்டிலில்தான் இருக்கின்றாள். வழக்கத்தைவிட இன்று அந்தக் கை அழகாக இருந்தது. சுபா தன்னுடைய ஓவியத்தைச் சிலாகித்துக்கொள்ளமாட்டாள். சமீப காலங்களில் அவளுக்கு ஓவியம் மாதவிடாய்க் குருதிபோல… வலியோடு தொடங்கி எரிச்சல்களோடு ஆறி அடங்கும். வரைந்தவுடன் ஒரு பார்வை பிறகு சுருட்டி வைத்துவிடுவாள். அவள் கண்ணாடி சட்டகமிட்டுச் சுவற்றில் மாட்டி வைத்த படம் அதுமட்டும்தான்.

தன்னுடைய ஓவியத்தைப் பற்றி யாரிடமும் பேசிக்கொள்ளமாட்டாள். யாராவது பாராட்டினாள் தன்னையல்ல என்பதுபோல் இருந்துவிடுவாள். தன் ஓவியத்தைப் பற்றிப் பேசும் தகுதியை மேரிக்கு மட்டுமே சுபா அளித்திருந்தாள். சுபா அம்மா பெண். பொதுவாகப் பெண் பிள்ளைகள் எல்லாம் அப்பாவின் மகளாக இருப்பார்கள் என்பதன் விதிவிலக்குகளில் ஒன்று சுபா. இத்தனைக்கும் சுபா கேட்பது அத்தனையும் வாங்கிக் கொடுப்பார். நினைவு தெரிந்து அவளை அதட்டியதுகூட இல்லை. என்றாலும் அப்பாவிடம் தள்ளியும் அம்மாவிடம் ஒட்டியும் இருப்பாள்.

அம்மா அழகு. சுருட்டை முடி ஆலமர விழுதுபோல்… அதில் எப்போதும் முக்காடு இருக்கும். புருவம் அடர்த்தி. காட்டு அடர்த்தியில்லை மென்மை அடர்த்தியும் இல்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து தெரியும் சுபாவிற்கு. முதல் ஓவிய வகுப்பில் முதல்நிலை வண்ணங்கள் (primary colours) என்று வெண்மை, நீலம், சிகப்பு, மஞ்சள் என்று நான்கை மட்டுமே கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு you should have draw atleast 50 paintings in this colour combination என்றார்கள். அன்று அவள் வரைந்தது எல்லாமே அம்மாவின் முகம்தான். அவள் அம்மாவின் முகத்திற்கு நீலத்தையும் சிகப்பையும் கலந்து ஊதா நிறத்தைக் கொடுத்தாள், பின்பு சிகப்பையும் மஞ்சளையும் குழைத்து ஆரஞ்சு நிறத்தைக் கொடுத்தாள்,

கடைசியாக நீலத்தையும் மஞ்சளையும் கலந்து கிளிப்பச்சை நிறத்தைக் கொடுத்தாள். நீலத்தில் அதிகமா மஞ்சள் கலந்தவுடன் எலும்பிச்சை நிறம் வரவே இதுதான் ஒரு அளவுக்கு ஒத்துபோகிறது என்று நினைத்தாள். சுபாவின் ஓவியங்களில் எலும்பிச்சை நிறம் வந்தாலே அது அவள் அம்மாதான் என்று புரிந்துகொள்ளலாம். கலங்கமில்லாத முகக்கலை, அவளின் உதடு குழந்தை பிங்க் நிறத்தில் இருக்கும். சிறுவயதில் கண்ணத்திலெல்லாம் முத்தம் வைக்கமால் நேராக இதழில்தான் முத்தம் கொடுப்பாள் என்று சொல்லிச் சிரிப்பாள் மேரி.

அம்மாவைத் தவிர வேறெதுவும் பெரிதில்லை அவளுக்கு. ஓவியத்தை எழுதும் தாளில் எந்த நிறத்தில் எழுதுகிறேன் என்பது முதற்கொண்டு எந்த வண்ணம் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறது, தான் எதற்காக அந்த வண்ணத்தைப் பயன்படுத்தியுள்ளேன், எந்தத் தூரிகை எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் தன்னுடைய அம்மாவிற்குச் சொல்லி விளக்குவாள். ஆனாலும் ஒவ்வொரு புது ஓவியத்திற்கும் பரிதாபமாக முதலில் இருந்து கதை கேட்பாள். சுபாவும் சலிக்காமல் முதலில் இருந்து பாடம் நடத்தித் தன்னுடைய ஓவியத்தை விளக்கிச் சொல்லுவாள். சுபாவிற்குத் தன்னுடைய தாயோடு அதிகநேரம் இருக்கவேண்டும் என்ற ஆசையே அவளுக்குச் சலிப்பு வராமல் இருக்கக் காரணம். ‘இயேசுவின் கை’ படத்தைப் பற்றிச் சொன்னத்தை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டாள் சுபா.

“ஏக்குட்டி இத எப்போ வரைஞ்ச, என்கிட்ட சொல்லவே இல்ல”

என்று பிரேம் செய்த ஓவியத்தைத் தூக்கிக்கொண்டு சுபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

விடியல் தூக்கத்தின் உச்சத்தில் இருந்தவள் ‘மிச்’ என்ற சத்தத்தோடு சினுங்கிக் கொண்டே ஒரு கண்களைத் திறந்து பார்த்தாள். உச்சந்தலையில் இருந்து எந்நேரமும் விழக்காத்திருக்கும் முக்காட்டுடன் கையிலிருக்கும் ஓவியத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேரி. கண்களை மூடிக்கொண்டு புரண்டு படுத்துக்கொண்டே.

“ம்மா போ மா , எனக்குத் தூக்கம் வருது” என்றாள் சுபா.

“யேய் யேய் குட்டி, சொல்லும்மா ஒருவாட்டி, கண்ணுல்ல” என்றாள் மேரி கட்டிலில் உட்கார்ந்துகொண்டு.

“ம்மா அங்கிட்டுப் போய்டு, உனக்கெல்லாம் அது புரியாது, எத்தனதரம்தான் சொல்றது” என்றாள் திரும்பாமல்.

“அப்பன்னே என்ன முட்டாங்குறியா” என்றாள் மேரி பரிதாபமாக.

“ஆமாம் நீ முட்டாள்தான்” என்றாள் சுபா கண்களை மூடிக்கொண்டே வேடிக்கையாக.

சிறிது நேரம் அமைதியாக இருந்தது அறை. சுபா மெதுவாகத் திரும்பினாள். எழுந்து உட்கார்ந்தாள். உடலை ஒரு முறுக்கிப் பிழிந்து ஒரு சோம்பல் முறித்தாள். மெதுவாக நகர்ந்து தன்னுடைய தாடையை மேரியின் தோள்கள் மீது வைத்துக்கொண்டாள்.

“ம்மா, அம்மா” என்றாள் மெலிதான குரலில்.

மேரி அமைதியாகத் தலைகுனிந்திருந்தாள். சுபா பின்புறத்தில் இருந்தவாறே மேரியின் இடையைக் கட்டிக்கொண்டு அவளின் கண்ணங்களில் ஒரு முத்தமிட்டாள். மேரி அவள் முத்தத்திற்குக் கண்ணத்தைக் கொடுத்தவாறே அவளுடைய வலதுகையால் சுபாவின் தலையை மெதுவாக வருடினாள். அம்மாவின் வருடல் எப்போதும் அவளுக்குக் கூடு அடையும் ஆசுவாசம். அதில் கொஞ்சம் லயித்திருந்தாள்.

“ம்ம்ம் சரி கொண்டா, அது என்ன சொல்லித் தரறேன்”

அம்மாவிடம் கதைகேட்கும் மழலைப்போல் சுபாவை ஓட்டிக்கொண்டு உட்கார்ந்து ஓவியத்தைப் பார்த்தாள் மேரி. ஒட்டிக்கொண்ட அம்மாவைப் பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டு,

“இது abstract painting, அப்படின்னா என்னன்னு சொல்லு பாப்போம்”

சுபாவின் முகத்தைப் பார்த்து யோசித்தவாறே “தெரியல குட்டிம்மா” என்றாள் மேரி சிரிப்பை அடக்கிக்கொண்டு.

சுபா மெதுவாகச் சிரித்துக்கொண்டு,

“அதாவது பாக்கறவங்க அவங்களுடைய மனநிலைப்படி அனுபவத்தின்படி அவங்களா ஒரு படத்தைக் காட்சிபடுத்திப்பாங்கன்னு எளிமையாச் சொல்லலாம்”

“ஓ ஓ”

“இத பார்க்கும்போது உனக்கு என்ன தோனுது சொல்லு”

“ம்ம்ம்ம் ஒரு மரம், இது கை, அதுக்குக் கீழ இன்னொரு கை மாதிரி இருக்கு, ம்ம் குழந்தை கை மாதிரி. அப்புறம் பெரிய கைய சுத்தி நாய்ங்க, நடுவுல ஒரு பெரிய புள்ளி பெட்டி மாதிரி” என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

சுபாவிற்குக் கொஞ்சம் ஆச்சரியத்துடன்,

“ம்ம் பரவாயில்லையே” என்றாள்

மேரிக்குப் பெருமை தாங்கவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு,

“இப்ப நீ சொல்லு இது என்னதுன்னு”

“இந்த ஓவியத்திற்கு நான் வெச்சி இருக்கிற ‘தீம்’ இயேசுவின் கை.”

மேரிக்கு முகம் ஆச்சரிய குறி ஆனது.

“இயேசுவின் கையா?” என்று ஓவியத்தை உற்று நோக்கினாள்.

“ஆமா சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் கை. நடுவில பெட்டி மாதிரி சொன்னயே அதுதான் ஆணி. அந்த ஆணிய நல்ல பாரு சீட்டு கட்டுல இருக்க எல்லா சிம்பலும் இருக்கும். கோமாளிக்கூட இருப்பான், கைய சுத்தி ஓடறது நாய் இல்ல, இந்தக் கையிலிருந்து தப்பிச்சுப்போற நிறைய கைகள். அதெல்லாம் அந்தப் பச்சை மரத்தைத் தேடித் தப்பிச்சு ஓடுது. இயேசுவோட கையப் பிடிச்சிட்டு இருக்கே அந்தச் சின்னக் குழந்தையின் கை அதுதான் என்னோட கை… நான்தான் அந்தக் கையில ஆணி அடிச்சி அதல மாட்டிட்டு இருக்க எல்லா உயிரையும் தப்பிச்சிப் பறக்கவிடுறன்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுபாவின் கண்களில் நீர் கட்டியது.

மேரி அமைதியான குரலில் எழுந்துவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டு,

“குட்டிம்மா ஆண்டவர அப்படில்லாம் பேசக்கூடாதுமா, அது ரொம்பத் தப்பும்மா”

என்றாள் கண்ணீரோடு.

“அப்ப அவரு எனக்குப் பண்ணதெல்லாம் நியாயமா!, நீ விட்டுட்டுப் போன அன்னைக்கு நான் எப்படி அழுதன்; அத அவரு கேட்டாரா. அம்மா வேணும் அம்மா வேணும்ன்னு இராத்திரி முழுசா அழுதான். அவரு மூனாவது நாள் உயிர்தெழுந்து அப்பாவ பார்த்திட்டு வரும்போது அம்மாவையும் சேர்த்துக்கூட்டிக்கிட்டு வருவாருன்னு மெர்லின் சித்தி சொல்லுச்சி, நீ வருவ வருவன்னு பார்த்திட்டே இருந்தன் நீ வரல அதன் அவர் கைய ஆணி அடிச்சி வெச்சியிருக்கன். இப்ப அவரு அவங்க அப்பாகிட்ட போகமுடியாதுல. நீ எங்கூடவே இருப்பல” என்று அழுதுகொண்டே மேரியில் தோளில் சாய்ந்துகொண்டாள். மேரி கண்களில் நீர் வழிய மெல்ல சுபாவின் தலையை வருடிவிட்டு மறைந்துபோனாள். சுபாவிற்கு இப்போது அந்த நினைவுகளால் கண்ணீர் வந்தது. இல்லாத அம்மாவிற்கு ஓவியத்தை விளக்கும் நிகழ்வு முன்னெல்லாம் அடிக்கடி நிகழும். சமிப காலத்தில் அவள் ஓவியம் தீட்டுவதுமில்லை அம்மா வருவதுமில்லை.

எதிரில் இருக்கும் படத்தில் இன்னும் அவள் பார்வை நிலைத்திருந்தது. உடல் அடித்துப்போட்டது போல் இருந்தது. எழுந்து அமர்ந்தாள். கட்டிலை விட்டு இறங்கி அலைபேசியை எடுத்து ‘ஆன்’ செய்தாள். திங்கட்கிழமை 11 மணி என்று காட்டியது. ஆபிஸில் இருந்து அழைத்திருப்பார்கள் ‘சுவிட்ச் ஆப்’ என்றதும் அவர்களுக்குப் புரிந்திருக்கும். சுபாவை ஒரு தேசந்திரியாகத்தான் அவள் அலுவகத்தில் நினைத்தார்கள். வந்தால் சம்பளம் போடுவார்கள். இல்லையென்றால் என்னவென்றெல்லாம் கேட்கமாட்டார்கள்.

பதினைந்து வருடம் காலமாக ஒரே அலுவலகம்தான். சுபாவின் வாழ்க்கையில் அவள் வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் எம்.டி.க்குத் தெரியும். சுபா சொல்லமாட்டாள். முதல் முறையாகச் சுபாவின் மாமியார்தான் அவளின் அம்மாவின் இறப்பு முதல் இன்று வரை நடந்த விஷயங்களைச் சொன்னாள். தனக்குத் தெரிந்த மருத்துவர்களைப் பரிந்துரைத்தார். இதெல்லாம் சுபாவிற்குத் தெரியாது. சேர்ந்தார்போல் 5நாள் விடுப்பு எடுத்தாலும் என்ன என்று கேட்கமாட்டார். அடுத்த மூன்றுநாட்களில் பத்துநாள் வேலையையும் சேர்த்து முடித்துவிடுவாள். அலுவகத்தில் அவள் முகத்தில் சிரிப்பில்லாமல் பார்க்கமுடியாது. சின்னச் சின்ன விஷயத்திற்குகூடச் சத்தமிட்டுச் சிரிப்பாள். தான் சோகமானவள் என்று ஒரு நொடிகூட யாரும் கணித்துவிடக் கூடாது என்ற பிரக்ஞையோடு சிரிப்பு முகத்தை இழுத்துப் போர்த்துக்கொள்ளுவாள்.

இதுவரை எந்த விடுமுறையும் இல்லாமல் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. சனிக்கிழமை நடந்த சம்பவம் இவள் பழந்நினைவுகளைக் கிண்டிவிட்டது போல் இருந்தது. குறிப்பாக அவள் சொன்ன வார்த்தை, அதை அவள் வேண்டுமென்று சொல்லவில்லை; எதேச்சையாகதான் சொன்னாள் என்று அறிவுக்கு உரைத்தாளும் மனம் மூடியை எட்டி உதைத்துக்கொண்டு வெளிவரும் பால்போலப் பொங்கிவிடுகிறது. அலைபேசியைக் கீழே வைத்துவிட்டு ஓவிய அறையைப் பார்த்தாள்.

மறுபடியும் அந்த நிகழ்வு அவள் நினைவுக்கு வந்தது. பல்லவி வேலைக்கு வந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தது. சுபாவின் அலைபேசியில் இருக்கும் ஓவியத்தைப் பார்த்துவிட்டு “அக்கா இதை நீங்களா வரைஞ்சீங்க” என்ற வியப்புடன் கேட்டாள்.

“ம்ம் எஸ்”  – என்று புருவத்தைத் தூக்கிக் கொண்டு உதட்டை உள்ளிழுத்து பிதுக்கியவாறு கூறினாள்.

“அக்கா சான்ஸே இல்ல, செம்மய இருக்கு உங்கள மாதிரியே. நான் மட்டும் பையனா பொறந்திருந்தா உங்களயே கட்டிக்கிட்டு இருப்பன்” என்றாள் பூரிப்புடன்.

“ம்ம்ம்” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு,

“எனக்கு என்னடீ வயசுன்னு நினைச்சுட்டு இருக்க”

என்றாள் சுபா கணினியைப் பார்த்துக்கொண்டே.

“என்னவிட இரண்டு வயசு பெரியவங்களா இருப்பிங்க” என்றாள்.

“உனக்கென்ன வயசு”

“இருபத்து மூணுக்கா”

“எனக்கு முப்பத்து ஏழு வயசு ஆகுதுடி” என்றாள் சிரித்துக்கொண்டு.

“கல்யாணம் ஆயிடுச்சா” என்றாள் வெள்ளந்தியாக.

“அதெல்லாம் ஆகிடுச்சி நீ ரொம்ப அலையாத” என்று கூறினாள் பல்லவிக்குப் பக்கத்தில் இருந்த கவிதா.

“ம்ம்” என்று வேடிக்கையான பெருமூச்சு விட்டு,

“அவரு ரொம்ப லக்கி, எனக்குதான் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி” என்றாள் சுபாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.

சுபாவின் சிரித்த முகம் மெல்லச் சுருங்கியது. சுதாரித்துக்கொண்டு மீண்டும் அந்தச் சிரிப்பு முகத்தில் வரவழைக்க நினைக்கும் போதே அடுத்த கேள்வியைக் கேட்டாள் பல்லவி.

“எத்தன பசங்க அக்கா” என்றாள் ஆர்வமாக.

இப்போது சுருங்கிய முகத்தை நிமிர்த்த முயற்சிக்கவில்லை. இதைக் கவனித்துவிட்ட பல்லவி தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டோம் என்று புரிந்துகொண்டு

“குழந்தையெல்லாம் பெத்துக்காதிங்க அக்கா, அப்பதான் நீங்க இப்ப இருக்க மாதிரியே அழக இருப்பீங்க க்கா“ என்று எதையோ உளறி வைத்தாள் பதற்றமும் சிரிப்பும் கலந்தபடி.

சுபா சட்டென்று இரண்டு கைகளையும் தலையில் வைத்தாள். மெதுவாக நெற்றியைத் தடவி விட்டு அலைபேசியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே போய்விட்டாள். அவசரப்பட்டு எதையோ பேசி சுபாவைக் காயப்படுத்திவிட்டோம் என்று பல்லவிக்கு அழுகையாக வந்தது. என்னவோ காரணம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்து ஓவிய அறைக்குள் நுழைந்ததுவரை அவளுக்குக் காட்சியாக வந்து போனது.

இன்னும் அவள் ஓவிய அறையை வெறித்துக் கொண்டுதானிருந்தாள். அதன் உள்ள போவதற்கு அவளுக்கு அச்சமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. உள்ள அம்மா இருப்பாளா! என்று சந்தோஷமும் துக்கமும் கலந்த உணர்வில் கதவைத் திறந்து உள்ளே போனாள். அவள் கண்கள் ஆச்சரியத்தில் ஆழந்தன. வழக்கத்திற்கு மாறான ஓவியம் அவள் கண்ணில் தென்பட்டது. இதுபோல் அவள் வரைவதே கிடையாது. தன்னுடைய எண்ணங்களை வண்ணங்களுக்குப் பின்னால் ஒளித்துவைக்கும் முறையைதான் எப்போதுமே எழுதுவாள். இது வித்தியாமாக நேர்தன்மைகொண்டாதாக இருப்பது அவளுக்கு ஆச்சரியம்.

அந்த ஓவியம் இரண்டு பாகமாக இருந்தது. முதல் பகுதி முழுவதும் இருளாக இருந்தது. அதில் ஒரு பட்டுப் போன மரம். அந்த மரத்தின் ஒடிந்து போன கிளைகளில் ஒரு நீண்ட பாம்பு நீண்டு போகிறது. அந்தப் பாம்பு முகம் ஒரு ஊதா நிறப் பூவாக இருக்கிறது. அந்த மரத்தை அருகில் ஒரு வேலி. ஒரு ஓட்டையில் ஒரு ஆள் நுழையாலம் என்பது போன்ற ஒரு வேலி. மரத்தில் இருந்த ஒரு ஊதாப்பூ வேலியைத் தாண்டி வெளியே வருகிறது. அந்த வேலிக்கு அருகில் ஒரு சாலை நீள்கிறது ஒரு சைக்கிளின் பின் சக்கரம் வரைச் சென்று அந்தப் பாகம் முடிகிறது. இது இரவு காட்சியாக இருக்கிறது. சைக்களின் மையத்திலிருந்து பகல் காட்சி ஆரம்பிக்கிறது. சைக்கிளின் முன் ஒரு கூடை. அதில் ஒரு குழந்தையின் ‘ஸ்கூல் பேக்’. கொஞ்சம் முன்னே குச்சி வடிவத்தில் ஒரு பெண் விரிந்த கூந்தலோடு நிலாவைப் பார்த்தவாறே நிற்கிறாள். வெள்ளைநிறச் சட்டையும் சாம்பல் நிறக் குட்டைப் பாவாடையும் அணிந்திருக்கிறது அந்தக் குச்சிப்பெண். அந்தக் குச்சிப்பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு சின்னப் குச்சிப்பெண் ‘பிங்க்’ நிற கவுன் போட்டுக்கொண்டு அவள் கையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள். அதைப் பார்த்தக்கொண்டே முன்னே நகர்ந்தவள் திடீரென்று இரண்டு கைகளையும் வாயை மூடியவாறு தேம்ப ஆரம்பித்தாள். சரியாக அந்தக் குழந்தையின் தலையின் மீது ஒரு துளி கருப்பு வண்ணம் தெளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு துளி அந்த ஓவியத்தைவிடப் பெரிதுபோல் இருந்தது அவளுக்கு. அந்த ஒரு புள்ளி யாருடைய உயிரையோ குடிக்கிறது. அந்த ஓவியத்தைக் கிழித்துவிட நினைத்தாலும் அவளால் முடியவில்லை. தன்னுடைய ஆவி முழுவதும் உருட்டி ஆணி முனையில் வைத்து அறைவது போல் இருந்தது. துடித்தாள். பின் இருந்து சுபாவின் அம்மா அவளைத் தொட்டாள். சுபா சட்டென்று அவள் தோளில் சாய்ந்து கதறத் தொடங்கினாள். மேரி அந்த ஓவியத்தைப் பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்லுவது என்று புரியாமல் சுபாவோடு சேர்ந்து அழுதாள். “அம்மா உனக்கு அந்தப் புள்ளி தெரியுதாமா?, பார்த்தியாமா எல்லாம் போச்சும்மா, எனக்கு மட்டும் ஏன்ம்மா இப்படி நடக்குது?” என்று தேம்பத் தொடங்கினாள். வெளியே தன்னுடைய மாமியாரிடம் பேசும் நித்யாவின் சத்தம் கேட்டது. மேரி தன் மகளின் தலையை மெதுவாக வருடிவிட்டு மறைந்தாள். சுபா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அமைதியாய் அந்த ஓவியத்தைப் பார்த்தாள்.

நித்யா … முதன்முதல் எதிர்த்த வீட்டில் குடிவரும்போது அவள் பார்த்த பார்வை…பிங்க் நிற டாப்பும், கருப்புப் புள்ளி பூ போட்ட வெந்நிற மினி ஸ்கெர்ட்டும் போட்டுக்கொண்டு அவள் ஒவ்வொரு பொருளையும் தூக்கிக் கொண்டு உள்ளே போகும்போதெல்லாம் சுபாவைப் பார்த்துவிட்டுப் போனாள். சுபாவிற்கு அது ஒரு விபரீதமான பார்வையாகத் தெரிந்தாலும் ஓரத்தில் ஒரு சிறு கிலுகிலுப்பு இருந்தது.

“நான் பையனா இருந்தா உங்களதான் கல்யாணம் பண்ணியிருப்பன்” என்று சுபாவிடம் நிறைய பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி சொல்லும்போதெல்லாம் உள்ளூர ஒரு சந்தோஷம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டாள். தான் அழகு என்று பீற்றிக்கொள்ளவும் மாட்டாள். நித்யாவின் அந்தப் பார்வை எப்படியாவது அந்த வசனத்தை இவள் வாயில் வரவழைத்துவிட வேண்டும் என்று மனம் அவளை அறியாமலயே நினைத்துக்கொண்டது. சுபா உள்ளே போவதும் வருவதும் வெளியே அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டு நிற்பதும் என்று இருந்தாள். நித்யா வெளியே வந்தபோதெல்லாம் சுபாவின் கண்களைச் சந்திக்காமல் போகவில்லை.

இரண்டுபேருமே பார்த்துக்கொண்டார்களே தவிர புன்னகையோ மற்றச் சமிக்கையோ செய்யவில்லை. ஆனால் ஏதோ தெரிந்தவர்கள் ஊடலில் இருப்பதுபோன்ற பார்வை பரிமாற்றம் நடந்துக்கொண்டிருந்தது. சுபா வேலைக்குக் கிளிம்பிச் சாப்பிட்டுவிட்டுக் காபி டம்பளருடன் வெளியே நின்று நித்யாவைப் பார்த்தாள். நித்யா ஒரு நொடி பார்த்துவிட்டுச் சட்டென்று கண்ணடித்துவிட்டுப் புருவத்தைத் தூக்கி என்ன என்பதுபோலக் கேட்டாள். சுபாவிற்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. “இத்துணுன்டு இருந்துகிட்டுச் சேட்டைய பார்த்தயா” என்று மனதிற்குள் சிரித்தவாறே கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டாள். பேருந்தில் போகும்போது நித்யாவை நினைத்துக்கொண்டே போனாள். ஒரு ஜாடையில் மேரி போல் இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அதே சுருட்டை முடி, சிவந்த முத்தமிடுவதற்காகவே செய்யப்பட்டது போன்ற கண்ணங்கள்… “சரியான வாலா இருப்பா போல” என்று என்னவோ ஓடியது மனதிற்குள். அன்றைய நாளெல்லாம் கூடுதல் சந்தோஷம்தான் ஆபிஸில். வீடு திரும்பும் போது எதிர்வீட்டைப் பார்த்துக்கொண்டே வந்தாள் சுபா. நித்யா வெளியே இருக்க க் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே வந்தாள். ஆனால் பார்வை அவளைத் தேடியது. அவள் வெளியே இல்லை என்று செருப்பை அவிழ்த்துவிட்டு உள்ளே பார்த்தவளுக்கு அதிர்ச்சி. நித்யா தன்னுடைய மாமியாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். இவளைப் பார்த்து லேசான கண்சிமிட்டல். சுபா பையை மேஜை மீது வைத்துவிட்டுச் சமையலறையில் சென்று நீர் எடுத்துக்குடித்தாள்.

“ஆண்டி இவங்கதான் உங்க பொண்ணா, எந்த ஸ்கூல் ஆண்டி” என்றாள் நித்யா நக்கலாக.

“ஏய் வாலு” என்று சொல்லிவிட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்த சுபாவைப் பார்த்து,

“எதிர்த்த வீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்காங்க, பேரு நித்யா, எம்.ஏ. இங்கிலிஷ் படிக்கிறாளாம், வாய் தெரிந்த மூடவே மாட்டறா” என்று சிரித்துக்கொண்டே சொல்லி முடித்து எழுந்து சமையலறைக்குள் போனாள் மாமியார்.

“ஓ” என்று நித்யாவின் விழிகளை நோக்கியவாறே தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

நித்யா காலையில் செய்ததுபோலவே கண்ணடித்துப் புருவத்தைத் தூக்கினாள். சுபா சிரித்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள். இப்படி ஆரம்பித்து இவர்கள் நட்பு நெருக்கம் கொண்டு truth or dare விளையாட்டில் முடிவுக்கு வந்தது.

நித்யா அந்த விளையாட்டில் சுபாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டாள். பதற்றமாகச் சுபா அவளை விலக்கிவிட்டுத் திட்டி அனுப்பிவிட்டாள். தன்னைவிடச் சிறுவயது பெண்ணைத் தவறாக வழிநடத்திவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி அதன்பிறகு நித்யாவிடம் பேச எத்தனிக்கவில்லை. சுபா எவ்வளவுதான் தள்ளிச் சென்றாலும் நித்யா நெருங்கி நெருங்கி வந்துகொண்டே இருப்பாள். இவள் சம்பந்தமே இல்லாமல் அவளைத் திட்டியும்கூட அவள் எதுவுமே நடக்காதது போல் திரும்ப வந்துபேசுவாள். புறாவின் குரல் போல ஒருவித நடுக்கத்துடன் அணுகுவாள். அதைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும் என்ன காரணத்தாலோ அவளுடைய அன்பைத் தவிர்க்கவே நினைத்தாள் சுபா. அவளுடைய வாழ்க்கையைத் திசை திருப்பிவிடக் கூடாது என்று பிடிவாதமாய்ப் பேசாமல் இருந்தாள்.

இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. அதற்காகத் தேடி வந்திருப்பாள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அவள் பின்னே வந்துவிட்டாள். சுபாவிற்குப் பதட்டமாக இருந்தது. நித்யா உள்ள வந்து அவள் அருகில் நின்றாள்.

“அக்கா இப்ப எப்படிக்கா இருக்கு உடம்பு” என்று அவள் கண்களைப் பார்த்துக்கேட்டாள்.

சுபா ஒரு நொடி அதைப் பார்த்துவிட்டு

“ம்ம் பரவாயில்லை” என்று கூறிக்கொண்டே அவள் பார்வையிலிருந்து தப்பித்துக் கட்டிலில் வந்து உட்கார்ந்துகொண்டாள். நித்யா அந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு,

“புது ஓவியமாக்கா, ஆஹா சூப்பரா இருக்குக்கா” அது என்ன இருட்டற பக்க சூரியனும், வெளிச்சம் இருக்கற பக்கம் நிலாவும் இருக்கு, அது ஊதா பூ வேலிக்கு வெளியே, அந்தக் குழந்தை என்று வாயெடுத்தவள் திரும்பி சுபாவின் அருகில் வந்தமர்ந்து

“படம் நல்லா போட்டு இருக்கிங்க” என்று சொன்னாள்.

“நிஜமாவா அந்தப் புள்ளிதான் ஓவியத்த கெடுத்துருச்சே” என்றாள் சோர்வாக.

“எந்தப் புள்ளி” என்றாள் நித்யா

“அதான் அந்தக் குழந்தை தலைக்கு மேல் இருக்கிற புள்ளி” என்றாள் சுபா.

“அப்படி ஏதும் புள்ளி தெரிலயே, ஒண்ணுமே இல்லயே அங்க”

“நல்லா பாரு தெரியும்” என்றவுடன் நித்யா அருகில் போய்ப் பார்த்துவிட்டு வந்து “அப்படி ஏதுமில்லேயே” என்றாள்

“அப்படியா உனக்கு ஏதும் தெரிலயா” என்றாள் மகிழ்ச்சியுடன்

“இல்லையே” என்றவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள் சுபா. அப்படியே அவள் கண்ணத்தைக் கரங்களில் ஏந்தி நித்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள். நித்யா கண்களை மூடிக்கொண்டு அதை வாங்கிகொண்டாள். நித்யாவின் கண்களில் நீர் துளிர்திருந்தது.

“சாரி” என்றாள் நடுங்கும் குரலில். இப்போது சுபாவின் கண்களிலும் நீர் பொங்கியது.

“அந்த மாத்திரையை எடு நித்யா”என்றாள் சுபா

அவள் காட்டிய திசையில் இருந்த மாத்திரை டாப்பவில் இருந்து ஒரு மாத்திரையே எடுத்துத் தண்ணீர் கூஜாவை எடுத்துக்கொடுத்தாள். சுபா அந்த மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொண்டு மெதுவாகப் படுக்கச் சாய்ந்தாள். தண்ணீர் கூஜாவை வைத்துவிட்டுத் திரும்பி சுபாவின் அருகில் வந்து மெதுவாக அவள் தலையை வருடினாள் நித்யா. வருடியவாறே சுபாவின் இதழில் மெல்லிய முத்தமிட்டாள். இப்போது சுபா நித்யாவின் பார்வையிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை. நித்யாவின் வருடல் மேரியின் வருடல் போல் இருந்தது. சுபா மெதுவாகக் கண்களை மூடினாள்…

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button