1. இரவுச் சாலை
இரவை மிதித்துக்கொண்டு
நடப்பவனின் பாதங்களில்
மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென
சூரியன் ஒளிந்திருக்கிறது
அஸ்தமனமான பிறகும்
ஒரு மாடு கழுத்தை மடித்தபடி
தூங்கிக்கொண்டிருக்கிறது
இன்னொரு மாடு
நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது
இவ்விரண்டு மாடுகளின்
தூக்கத்தைக் கலைக்கிறது
நின்று கொண்டு சிறுநீர் பெய்யும்
இன்னொரு மாட்டின்
சிறுநீர்ச் சப்தம்
இரவை மிதித்தபடி நடந்து செல்பவனை
நாயொன்று கண்டு
குரைக்க ஆரம்பித்ததில்
இரவுச் சாலையோர மரத்திலிருந்து
இலை ஒன்று உதிர்கிறது
யாருக்கும் புலப்படாமல்
உதிர்ந்த இலை உருள்கிறது
இந்த வீதி மொத்தமும் தனதென்று.
***
2. வெளிச்சம் வேறுபடுகிறது
மின்சாரம் போன இரவில்
ஒருவன் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறான்
கழுத்தில் துருத்திய எலும்புகள்
கன்னத்தில் மழிக்கப்படாத
நான்கைந்து நாட்களின் ரோமங்கள்
ஒரு ஓரத்தில் நாடாக்கட்டில்
இன்னொரு ஓரத்தில்
இய்யச் சட்டியை ஏந்தி நிற்கும்
ஒற்றை அடுப்பு
காரைபெயர்ந்த இடத்தில்
அடிக்கப்பட்ட ஆணியில்
தொங்கிக்கொண்டிருக்கும்
சாயம்போன ஒற்றைச் சட்டை
சற்றுமுன் உறிஞ்சி முடித்து வீசப்பட்ட பீடித்துண்டு
மின்சாரம் போன இரவில்
இன்னொருவன் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறான்
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
கழுத்தில் மின்னும் தங்கச் சங்கிலி
அறையின் ஒரு ஓரத்தில்
கருப்பு வெள்ளைப் பற்களோடு
சிரித்துக்கொண்டிருக்கும் பியானோ
அறையின் இன்னொரு ஓரத்தில்
மதுப்போத்தல்கள் நிரம்பிய
குளிர்சாதனப் பெட்டி
திரைச்சீலையணிந்த சன்னலை ஒட்டிய
கண்ணாடி மேசையில்
சற்று முன் டெலிவரி செய்யப்பட்ட
பிரபல அசைவ உணவுக்கடையின்
பெயர் தாங்கிய
மணம் கமழும் ஆட்டிறைச்சி
இரண்டு வீட்டிலும்
ஒரே அளவோடு ஒரே வெளிச்சத்தோடு
ஒரே நிறச் சுடரோடு
எரிந்துகொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி.
***
3. நீ யார்..?
யாரோ தயாரித்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்கள்
யாரோ நெய்த ஆடையை
யாரோ உடுத்துகிறார்கள்
யாரோ கட்டிய வீட்டில்
யாரோ குடியிருக்கிறார்கள்
யாரோ ஓட்டிக்கொண்டிருக்கும் பேருந்தில்
யாரோ பயணிக்கிறார்கள்
யாரோ எழுதிய புத்தகத்தை
யாரோ வாசிக்கிறார்கள்
யாரோ புட்டியில் அடைத்த நீரை
யாரோ விலைகொடுத்து வாங்கி
தாகம் தீர்க்க அருந்துகிறார்கள்
யாரோ கறந்த பாலை
யாரோ குழந்தைக்குப் புகட்டுகிறார்கள்
உறவுகள் நீர்த்துப்போன உலகில்
யாரோக்களே எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்
உறவுகள் அர்த்தமிழந்துபோன உலகில்
நீயும் நானும் உறவு அல்ல
நீ யாரோ நான் யாரோ.
***
4. ரகசியம்
நான் ரகசியமானவன்
ரகசியங்கள் நிறையப் பெற்றவன்
ரகசியங்களால் ஆசிர்வதிக்கப்படுபவன்
ரகசியங்களால் பரிகாசிக்கப்படுபவன்
ரகசியங்களால் தாலாட்டப்படுகிறேன்
ரகசியங்களால் அழவைக்கப்படுகிறேன்
ரகசியங்கள்
வெளிச்சத்தை இருளை
மழையை வெயிலை
பாலையை பசுமையை
உள்ளுக்குள் நிரப்புவதும் அழிப்பதுவுமாய்
ரகசியங்கள் காற்றைப் போல
கண்ணுக்குத் தெரிவதில்லை
எல்லா ரகசியங்களையும்
சொல்லிவிட ஆசைதான்
ஆனால் அவை ரகசியங்கள்
ரகசியமாகவே இருக்கட்டும்
*****