சிறுகதைகள்

வாசனை – பா. ராஜா

சிறுகதை | வாசகசாலை

வித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான்.

பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக,  இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர்.

அன்று நல்ல மழை பெய்தது. புதிதாய்க் குடித்தனம் வந்த தாயும் மகளும் ஒன்றிரண்டு பொருட்களை இரவல் கேட்டு இவர்களின் வீட்டிற்கு வந்தனர்.

அவனது அப்பாவிற்கு வெளியூரில் இருக்கும் பேக்கரி ஒன்றில் வேலை. வாரம் பத்து நாளைக்கு ஒருமுறை லீவில் வந்து ஓரிரு நாட்கள் இருந்து விட்டுச் செல்வார். இங்கும் அம்மா பையன் இருவர் மட்டும்தான். பவித்ராவும் அவளது அம்மாவும் இவர்களுடன் நெருக்கமாய்ப் பழகவும், அடிக்கடி வருவதும் போவதுமாய்இருந்தனர்.

“ஒருநாள் சாயந்தர நேரத்துல பத்திருவது பிள்ளைங்களுக்குப் பிரைவேட் செல்லித்தரலாண்ணு இருக்கேன். உங்க பையனையும் அனுப்புக்கா” என்றாள் பவித்ராவின் அம்மா.

“ரயில்ரோட்டத் தாண்டி மூணு கிலோ மீட்டர் தள்ளி ஒரு எடத்துக்கு இப்பவும் டியூஷன் போய்க்கிட்டுதான் இருக்கான். போக வரவே ரொம்ப நேரம் ஆவுதுதான், சரி நீங்க ஆரம்பிங்க  வர்ற மாசத்துல இருந்து அனுப்பறேன்கா” இருவரும் ஒருவரை ஒருவர் அக்கா என்றே அழைத்துக் கொண்டனர். பின்பு அவனும் பவித்ராவின் அம்மாவை அப்படியே அழைத்தான்.

ஒரு முறை டியூஷன் சென்றபோது பவித்ரா மட்டும் வீட்டில் இருந்தாள். டியூஷன் படிக்க வேறுபிள்ளைகளும் யாருமில்லை. இவன் வந்ததும் இவனைப் பார்த்து,

“அம்மாக்கு உடம்பு சரியில்லப்பா, ஜொரம். ரெண்டு நாளைக்கு டியூஷன் லீவ்” என்றாள்.

“சரிக்கா” என்று வீட்டிற்குத் திரும்பினான்.

பவித்ராவோடு அவன் பேசிய முதல் வார்த்தை அதுதான். பின்னாளில் நாம் பவித்ராவைக் காதலிக்கின்றோம், அவளைத் தான் கல்யாணமும் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிகத் தீவிரமாய்ச் செயல்பட்டு, அதற்கான சிறுசிறு முஸ்தீப்புகளில் இறங்கும்போதெல்லாம் அக்கா என்றழைத்த அந்த வார்த்தை வந்து வந்து கேலிசெய்யும்.

டியூஷன் என்றில்லாமல் சமயத்தில் வெறுமனேகூட அவர்கள் வீட்டிற்குச் சென்றுவரத் தொடங்கினான். பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்ட பவித்ரா அருகிலிருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்குப் பகுதி நேரமாய் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். அவன் அவர்களின் வீட்டிற்குப் போகும்போது ஒருசமயம் பவித்ரா வீட்டிலிருப்பாள். ஒருசமயம் மெடிக்கல்ஷாப், தையல்கிளாஸ் எனச் சென்றிருப்பாள். பவித்ரா இருந்தால்தான் அங்குச் செல்வது என்றெல்லாம் இல்லை. அவனுக்குத் தோன்றினால் போவான். பவித்ராவின் அம்மா டேப்ரிக்கார்டரில் ஏதேனுமொரு பாடல் கேட்டபடியே சமையல் வேலை, மற்ற இதர வேலைகள் ஏதேனும் செய்து கொண்டிருப்பாள்.

பவித்ராவின் உலகம் மிகவும் அழகுணர்ச்சியாலும், கலாபூர்வத்தினாலும், ரம்மியத்தாலும் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். பவித்ரா அவளுக்கெனச் சிறிய அலமாரி ஒன்றை வைத்திருந்தாள். முதல் அடுக்கில் பாட்டுப்புஸ்தகங்கள் அடுக்கிவைத்திருந்தாள். அதன் பக்கத்தில் அழகுசாதனப் பொருட்கள். ஒன்றிரண்டு கோலப்புத்தகங்கள். குட்டிக்குட்டியாய் ஏதேதோ கலைப்பொருட்கள். அவனுக்கு எப்போதுமே அளவில் சிறியதான பொருட்களின் மீதெல்லாம் மிகுந்த விருப்பமுண்டு. அந்தத் தெருவில், அந்தவீட்டில், அவ்வளவு ஏன் இந்த உலகிலேயே மிகச் சிறந்த இடமாகவும், ரம்மியமான இடமாகவும் அந்த அலமாரி இருந்தது. கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பொம்மையாய் நாம் மாறிவிட்டால் அந்த அலமாரியிலேயே நிரந்தரமாய்த் தங்கிவிடலாம் என்றும் நினைத்தான். அப்போது சிறுநீர் கழிப்பது போல நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுவனது பொம்மை அவனது நிலைப்பாட்டை ஏகத்துக்கும் கிண்டல் செய்தது.

அடிக்கடி அவர்கள் வீட்டிற்குப் போய்வரத் தொடங்கினான். பெரும்பாலும் பவித்ரா இருக்கமாட்டாள். அவனும் அலமாரியில் மானசீகமாய்ச் சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு, பாட்டுப்புஸ்தகங்களில் இருக்கும் காதல்வரிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்துவிட்டுத் திரும்புவான்.

ஓரிருமுறை பவித்ரா வீட்டில் இருந்தால்கூட , என்ன பேசுவது , ஏது பேசுவது என விதிர் விதித்துத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வந்துவிடுவான்.

ஒருமுறை அப்படிச் சென்றிருக்கும்போதுதான் மெடிக்கல்ஷாப் சென்றிருந்தவள் வீடு திரும்பினாள். அன்று வானம் ஏகத்திற்கும் மஞ்சள் நிறமாகவும், அதுவே பின்பு மிகவும் சிவந்த நிறமாகவும் மாறி மாறி எதுவோ போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

வெளிர்நிற பாவாடை தாவணி அவளுக்கு அத்தனை சிறப்பாகப் பொருந்தியிருந்தது. மஞ்சள் வெய்யில் மேலும் அழகூட்டிக் கொண்டிருக்கிறது. செருப்பைக் கழட்டி அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு உள்நுழைந்தாள். அங்கு ஏற்கனவே இரண்டு ஜோடி அழகிய செருப்புகள் அவளுக்கென இருந்தன. அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள் அல்லது அப்படி அவன் நினைத்தான். நினைவில் தித்திப்புக் கூடியது. மெல்ல எழுந்து நழுவப் பார்த்தான். உள்ளிருந்து பவித்ராவின் அம்மா “ காபி போடுறேன் குடிச்சிடுப் போ கண்ணு” என்றாள்.

பழைய மரக்கட்டில் ஒன்றின் நுனியில் இம்சையாய் அமர்ந்து கொண்டிருந்தான். இதயம்வேகவேகமாய்அடித்தது. கட்டிலில் அவனுக்கு ரொம்பவும் பக்கத்திலும் இல்லாமல், ரொம்பவும் தூரத்திலும் இல்லாமல் பவித்ரா அமர்ந்தாள். அய்யோ செத்தோம்டா என்று எகிறித் துடித்தது இதயம். அது போடும் சத்தம் வெளியேயே கேட்டு விடும் போலிருக்கிறது.

“என்ன அய்யா பாட்டுப் புக்கெல்லாம் படிக்கிறார்போல” என்றாள் மெல்ல சிரித்தப்படி.

அவனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வார்த்தையே வரவில்லை. சிரித்தான். மழுப்பினான். உடலை ஒருமாதிரி அஷ்ட கோணலாய் அசைத்தான். நிமிடங்கள் நகர்ந்தன. கனத்தமவுனம் “ஏதாவது பேசேன். ஏன் உம்முன்னு மூஞ்சிய வச்சிட்டிருக்க”?

சாதாரணமான கேள்வி ஒன்றிற்குள் சங்கீதத்தை ஒலிக்க விடும் ஆற்றல் பவித்ராவிடம் இருப்பதாகத் தோன்றியது.

அவனுக்கு என்ன பேசுவது, ஏது பேசுவது என ஒன்றும் புரியவில்லை. ஆனால் தவறியும் ‘க்கா’ போட்டு மட்டும் பேசிவிடக் கூடாதுஎனத் தெளிவாய் இருந்தான். ஏதோ கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்துக் கொண்டவன் போல,

“ ஆங்… அந்தக் கெணத்துல ஒரு ஆமை இருக்குது” என்றான்.

இயல்பாய்ச் சொன்னது போலில்லையே ஏதோ அவசரத்தில் வெடித்த வெடி போலப் பேசிவிட்டேனே. இன்னும் கொஞ்சம் இனிமையாய், சுவாரஸ்யமாய், பீடிகைப்போட்டு, ஆச்சர்யப்படும்படி அல்லவா சொல்லியிருக்கவேண்டும். அப்படியாகச் சொல்லியிருந்தாள் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும், அதை விட்டுவிட்டு இப்படிப் போய்ச் சொதப்பிவிட்டாயே முட்டாள், முட்டாள். உன் காதலுக்கு நீயேதாண்டா எதிரி, கிதிரி, எல்லாம் என்று எண்ணத்தில் ஒரு குரல் எதிரொலித்தது.

“சரி வா போய்ப் பாக்கலாம்” என எழுந்தாள்.

கை காலெல்லாம் லேசாய் நடுங்கினஅவனுக்கு. கிணற்றில் ஆமை இருப்பது உண்மைதான், அவளிடம் பொய் ஏதும் சொல்லவில்லைதான். ஆனால், போய்ப் பார்க்கும்போது அந்த ஆமை தென்பட வேண்டுமே. இல்லையென்றால் நமக்குத்தானே அசிங்கம். ஆமை தெரியாவிட்டால் இனி நான் சொல்லும் எதையும் நம்ப மறுப்பாளே. குழப்பத்துடனும், தயக்கத்துடனும் எழுந்து, கைக்காட்டிய இடத்திலிருந்த கிணற்றை நோக்கி இருவரும் நடந்தனர்.

“ காபி போட்டுட்டிருக்கேன்”

“இரும்மா இங்கதான். இதோ வந்துர்றோம்”

சில மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றடிக்கு வந்தனர். அருகருகே நடந்தபோது மிதக்கும் பரவசத்தை உணர்ந்தான். அந்தப் பரவசத்தை மஞ்சள் வெய்யில் மேலும் மெருகூட்டியது. கிணற்றுத் திட்டிற்கு வந்து மிக நிதானமாய் இருவரும் அருகருகே நெருங்கியபடி தோள்கள் உரச, ஒருசேர எட்டிப் பார்த்தனர். வெய்யில் கிணற்று நீரில் தகதகத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் பவித்ராவிடமிருந்து மஞ்சள் வெய்யிலின் வாசனையைப் போல மிக நிதானமாய் அந்த வாசனை வெளிப்பட்டது. மிகவும் சுகந்தமான , மனதை, எண்ணத்தை, புத்தியை, ஏதோ செய்யத் தூண்டும் ஒருவாசனை.

ஆமையைப் பார்க்கும் ஆவலில் அவளிருக்க வாசனையின் வாலைப் பிடித்து அதன் அடுத்த நுனிக்கு வர முனைந்து கொண்டிருந்தான் அவன்.  வாசனை இந்தப் பிராந்தியத்தையே நிரப்பும் வாசனை. பூவாசமா இல்லை. நறுமண திரவியத்தின் வெளிப்பாடா? இல்லை.  வெய்யிலின் வாசமா? இல்லை. இயற்கையின் வாசமா? இல்லை. இல்லவ இல்லை. அது பவித்ராவின் வாசனை. அந்த வாசனைக்குள்தான் அவள் வசிக்கிறாள். அந்த வாசனைதான் பவித்ரா.

நெடுநேரமாய் எதிர்ப்பார்த்தும் ஆமை வெளிப்படவில்லை. என்னாச்சு குதிச்சி என்னான்னுப் பாரு என்று மட்டும் அவள் சொல்லியிருந்தாள், அவ்வளவுதான் அடுத்த நொடியே குதித்திருப்பான். வாசனையின் மாயம் அப்படி. வாசனையின் வசீகரம் அப்படி.

அப்போது யாரோ ஒரு சிறுவன் அடித்து விரட்டிய கில்லி கிணற்றில் வந்து சொத்தென விழுந்தது. கிணற்றை, மாலைப் பொழுதை, மஞ்சள் வெய்யிலை, எதிர்பார்த்த ஆமையை, வாசனையின் அருகாமையை, அந்தச் சிறிய விளையாட்டுக் கருவி முடிவிற்குக் கொண்டு வந்தது.

வாசனையைப் பற்றி, பவித்ராவைப் பற்றி, அவளைக் காதலிப்பதைப் பற்றி யாரிடமேனும் சொல்லிப் பகிர அவனுக்கு மனது பரபரத்தது. நம்பகமான நண்பனாய் ராம்ஜி தெரிந்தான். அவனிடம்கூட மிகுந்த எச்சரிக்கையாய்க் காதலிப்பதைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் சொன்னான்.

“என்னடா வாசனை, அலமாரி, பாட்டுப் புஸ்தகம்ன்னுகிட்டு, கடைசியா காப்பியாச்சும் கெடச்சதா அதுவும் இல்லியா”? என்றுகேட்டுச் சிரித்தான்.

மனது மேலும் மேலும் அந்த வாசனைக்கு ஏங்கியது. வா என்றால் வருமா. இல்லை வேண்டுமென்றே போய் அருகில் நிற்க முடியுமா. அப்படியே என்றாலும் அவள் கவனிக்காதவாறு தானே வாசனையை உணரமுடியும். அதற்கு அவள் வேறொன்றில் கவனமாக இருந்தால்தானே சாத்தியம். மீண்டும் ஆமையைப் பார்க்கும் ஆர்வம் வருமா? அதுவரைக் காத்திருக்கத்தான் வேண்டுமா?.

மார்கழி மாதம் பிறந்திருந்தது. அதற்கு முன்பே கடுங்குளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. எக்காரணம் கொண்டும் அதிகாலையில் எழாதவன், பவித்ரா அதிகாலையில் கோவிலுக்குச் செல்வதைத் தெரிந்து கொண்டு எழத் தொடங்கியிருந்தான். கோவிலுக்குச் செல்லவென அவள் புடவை கட்டத் தொடங்கியிருந்தாள். அது அவனை வெகுவாய்க் கவர்ந்தது.

அரக்க பரக்க அதிகாலையில் எழுந்து, வாசலில் வந்து நிற்பான். மார்கழியின் பேரழகை அவள் ஒரு தேர்போலத் தெருவில் அழைத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். மெல்ல நகர்ந்த தேர் திரும்ப அரை மணிநேரம் கழித்து மீண்டும் வரும். அதுவரை வாசலிலேயே நிற்பான். எப்போதாவது திரும்பிப் பார்ப்பாள். அன்றைக்கெல்லாம் மிகுந்த உற்சாகம் கொள்வான்.

குளிர், அதிகாலை, சுப்ரபாதப்பாடல், பறவைகளின் கீச்சொலி, வண்ணக்கோலங்கள், அதிகாலையில் பக்திக் கீர்த்தனைகள் பாடியபடி தெருவில் உலாவரும் பஜனைகோஷ்டிகள் என அந்த மார்கழி மிகச் சிறந்த அனுபவத்தையும், பரவசத்தையும் அவனுக்குக் கொடுத்தது. எப்போதும்போல இல்லாமல் இந்த மார்கழியில் பவித்ராவின் முகம் அத்தனை மலர்ச்சியாய் இருந்தது. பவித்ராவின் அம்மாவும் மகளிடம் உண்டாகியிருந்த ஒருவித மாற்றத்தைக் கவனித்திருந்தாள்.

தைப்பொங்கலை எதிர்நோக்கி வியாபாரிகள் தெருமுனையில், கடைவீதியில் என எங்கும் கரும்புகளைக் கட்டுக்கட்டாய்க் குவித்து வைக்கத் தொடங்கியிருந்தனர்.

பவித்ராவிற்குப்  பொங்கல் வாழ்த்து அட்டை ஒன்றை, பாட்டுப் புத்தகம் ஒன்றுடன் சேர்த்து அனுப்ப நினைத்தான். என்ன பாட்டுப் புத்தகம் அனுப்புவது என்ற குழப்பம் அவனை விடாது தொடர்ந்தது.

கடைத் தெருவிற்கு வந்திருந்தான். ஒரு வியாபாரி மாட்டு வண்டி நிறையக் கரும்புகளைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு நினைவில், தெரியாமல் கரும்பின் சோலையை அழுத்தமாய்த் தொட்டுவிட்டான். அதிலிருந்த சிறு சிறு பிசிறுகள் உள்ளங்கையெங்கும் அப்பிக்கொண்டன..  தட்டிவிட இரண்டு கைகளையும் தட்டினான். இரு உள்ளங்கைகளிலும் நிறையப் பிசிறுகள் குத்திக்கொண்டன. ‘ச்சை’ என்றபடி சுருக், சுருக்கென்ற வலியால் கைகளை உதறியபடியே வந்தவன் பவித்ராவின் வீட்டிற்குச் சென்றான்.

பொங்கல் பண்டிகைக்கான கோலப்பொடி தயார் செய்வதிலும், எந்தக் கோலம் இட்டு பண்டிகையை அசத்தலாம் என்று கோலப்புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டும் இருந்தாள் அவள்.

‘நீ வெறும் புள்ளி மாத்திரமே வைத்தால் போதாதா

அசந்து விடுமே பவி என் பண்டிகை’, என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தான். அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. திரும்ப ஒருமுறை பவி என்று சொல்லிப் பார்த்தான், அது திரும்பத் திரும்ப அப்படியே சொல்லிக் கொண்டிருக்கும்படி தூண்டியது.

உள்ளங்கையில் எதையோ சுமக்க முடியாமல் சுமந்து அவதியுறுபவனைப் போலான அவனைப் பார்த்து என்ன என்பது போல் புருவங்கள் சுருக்கிப் பார்வையால் கேட்டாள். ஒரு ஓவியம் எதுவோ அவனிடம் கேட்பது போலிருந்தது. ஏதுமில்லை என்பதாய்த் தலையசைத்தான்.

“வாயத் தொறந்து பேசேன். என்ன ஏதுன்னு” என்றாள்.

பறவைகள் ஒரு சேரச் சிறகடிக்கும் டபடப என்ற ஓசை அவனுள் எழுந்தடங்கியது. தயக்கத்தோடு கைகளைக் காட்டினான். சோகையின் முட்கள் குட்டிக் குட்டியாய் நீட்டிக் கொண்டிருந்தது.

கழுத்தில் மெல்லிய சங்கிலி அணிந்திருந்தாள். அதில் ஊக்கு இருக்கின்றதா எனப் பார்த்தப்படி திரும்பி நின்று அவனுக்கு முதுகைக் காட்டியபடி செயினிலிருந்து ஊக்கினை எடுத்துக்கொண்டு, சமையலறைக்குச் செல்லும் படியில் அமர்ந்து கீழே அவனை அமரச் சொன்னாள்.

“இப்பிடிவா” எனச் சொல்லி கையைத் தொட்டதும் வாசனை ஆரம்பமாயிற்று. அவளது கவனம் முழுக்க பிசிறுகளை நீக்குவதில் இருந்தது. அவன் வாசனையின் வெகு ஆழத்திற்குள் செல்லத் தொடங்கினான். வீடு முழுக்கவே வாசனை நிரம்பியது. அவள் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவனோ முழுக்க முழுக்க வாசனைக்குள் சென்று கொண்டேயிருந்தான். ஒரு மாய லோகத்தில் இருப்பதாய்த் தோன்றியது. பேராசைக்காரன் போல அந்த வாசனையை இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மனது ஓயாமல் கூவியது. நெருக்கத்தின் கதகதப்பில் வாசனையின் வீச்சு வெளி முழுக்க நிரம்பிக்கொண்டிருந்தது.

அதற்கு அடுத்தநாள் மெடிக்கல் ஷாப்பிற்கு வேலைக்குச் சென்ற பவித்ரா வீடு திரும்பவில்லை.

மெடிக்கல் ஷாப்பில் உடன் வேலை செய்யும் ஒருவனைப் பவித்ரா விரும்புவது அவளின் அம்மாவுக்கு முன்பே தெரிய வந்திருந்தது. எதிர்ப்புத் தெரிவித்தாள். சொந்தத்தில் இருக்கும் ஒரு பையனுக்குப் பவித்ராவைத் திருமணம் செய்து வைக்கவே விரும்பினாள்.

ஆனால், பவித்ரா தானாகவே, விரும்பும் ஒருவனுடன் திருமணம் வரைச் செல்வாள் என்று அவளின் அம்மாவே எதிர்பார்க்கவில்லை.

மார்கழி மாதம் முழுக்க அதிகாலையில் கோயிலுக்குச் சென்றதும் திருமணம் குறித்துத் திட்டம் போடத்தான் என்று தெரிந்தது.

தன் கணவர் உயிருடன் இருந்து, அவரின் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும், இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ? பெண் பிள்ளையை நாம்தான் வளர்க்கத் தெரியாமல் வளர்த்து விட்டோமோ? அவர் இருந்திருந்தால் இந்த விஷயத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்? என்று ஏதேதோ கேள்விகள் வளர்ந்து கொண்டே போயின.

பவித்ரா உடன் பணிபுரியும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்ததும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாதத்தின் கீழிருந்த நிலத்தை யாரோசரக்கென உருவியதுபோல நிலைதடுமாறினான்.

உள்ளங்கையில், நினைவில், கிணற்றுத்திட்டில், எங்கும் எதிலும் பவித்ராவின் வாசனையே நிலைகொண்டிருந்தது. அந்த வாசனை அதன் உருவத்தை அவனை வைத்து வரைந்து பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அதன்பின் பவித்ராவின் அம்மாவும் யாருடனும் சரிவரப் பேசுவதில்லை. முகத்திற்கு நேராய் ஒன்றும், முதுகிற்குப் பின் மற்றொன்றும் பேசும் நிறைய மனிதர்களை இக்கால கட்டம் அடையாளம் காட்டியது.

அவனும் பவித்ராவின் வீட்டிற்கு முன்புபோலச் செல்வதில்லை. ஏன் செல்வதில்லை என்று அவனேகூடச் சமயங்களில் யோசித்துப் பார்த்தான். பதில் கிடைக்காத குழப்பநிலை கேள்வியை அந்தரத்திலேயே நிறுத்தியது. இருந்தும் பவித்ரா மீது வெறுப்போ, கோபமோ ஏற்படாதது சமயங்களில் அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

ஆறுமாதங்கள் விரைவாய் ஓடிப்போயிருந்த நிலையில், திடீரென ஒருநாள் , வயிற்றுவலி தாங்காமல் பவித்ரா தூக்குமாட்டிக் கொண்டு இறந்ததாய்ச் செய்தி வந்தது.

பவித்ராவின் அம்மா வாய்விட்டுக் கதறிஅழுதாள். இருக்காது அவள் அப்படியெல்லாம் செய்து கொள்ளக்கூடியவள் அல்ல. புருஷன் வீட்டுக்காரங்கதான் ஏதோ செஞ்சி தூக்கிக்கட்டிட்டாங்க என்று அலறினாள்.

விஷயம் கேள்விப்பட்டதும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏன் எதனால், என்ன காரணம் என ஆராயும் எண்ணம் அவனுக்குத் துளியும் ஏற்பட்டவில்லை.  உலகம் சூனியங்களால் நிரம்பித் ததும்புவதாய்த் தோன்றியது. அவனுக்கான சுவாசக்காற்று வற்றிப்போனது.

கண்ணாடியில் அவனது முகத்தைப் பார்க்கிறான், இயலாமையில் செய்த அவ்வுருண்டை கதறியழுவதற்கும் வக்கற்றுப் போய் விசும்பியது.

பாதங்களில் பெறும் வலிசூழ, உயிர் பிரிந்துவிட்ட அவளை வெறும் உடலாய்ப் பார்ப்பதற்குத் திராணியற்ற மனது பவித்ராவின் வாசனையை அசைபோடுகிறது.

கர்பிணியாய் இருந்த பவித்ராவின் மரணம் குறித்தான மர்மங்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. இரக்கமற்ற இவ்வுலகின் பிணைப்பிலிருந்து தன்னை அவிழ்த்துக் கொண்டுவிட்டாள். மரணத்திற்குப் பின் அவளைப் பற்றி எழும் வதந்திகள் மறுபடியும் அவளைக் கொன்று கொண்டிருப்பதை உணரமுடியாமல், ஒரு மழலையின் முகபாவனையோடு, மிக ஆயாசமாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

இரவின் இருளைக் கழுவ முயலும் விதமாய், உத்திரக்கட்டையில் இருந்து அகற்றிய கயிற்றை எரியூட்டுகிறார்கள். அது கருகும் வாடை எல்லோரையும் இம்சித்தது. ஆனால் அவன் அதில் பவித்ராவின் வாசனையைக் கண்டுணர்ந்தான். அந்த வாசனைக்குப் பவித்ராவின் உருவம் கொடுத்து அதனோடு மனதளவில் பேசத் தொடங்கினான்.

இனி நான் என்ன செய்யவேண்டும். சொல். மவுனம் தொலைத்து என்னோடு  பேசு. உன்னிடமிருந்து எனக்குச் சில சொற்கள் தேவை. மழையின் குளிர்ந்த  தன்மையிலோ அல்லது பிரியங்களால் செய்தவைகளாகவோ அது இல்லாமல், சொடுக்கும் சாட்டை முனையிலிருந்தும்கூட வெளிப்படட்டுமவை.

இதுகாலம் மட்டும் சுடுசொற்களிடம் மட்டுமே அஞ்சியவன் முதல் முறையாய் உன் வாசனை மவுனத்திடம் நடுங்குகிறேன்.

பேசு.  நீள்வடிவில் வெளிப்படும் உன் சொற்களைச் சங்கிலியென உருமாற்றி, மாமரத்தில் ஊஞ்சல் கட்டி அலைவுறும் மனதை அதிலமர்த்தி ஆட்டிவிட்டுச் சாந்தப்படுத்தவோ அல்லது மேலும் அலைவுறச் செய்யவோ உன்னிடமிருந்து எனக்குச் சில சொற்கள் தேவைப்படுகின்றன.

பேசு.  உன் பிரியங்களற்ற, உன் புன்னகைகள் அற்ற, உன் பார்வைகளற்ற உலகுதான் இனி எனக்கானதென்ற குறிப்பைச் சுமந்து வந்திருக்கும் உன் மரணச் செய்தியை எதிர்கொள்ளவியலா நிலையிலிருந்து நிறைய அழுகிறேன். நீயற்ற தனிமையின் துயர் என் தலையைக் கொய்து ஒரு பந்தெனமாற்றிச் சாத்தான்களின் கால்களடியில் கிடத்திவிட்ட பின் வாழ்தலுக்கான  என் நம்பிக்கை நதி பெரும் வறட்சியைக் கண்டிருக்கிறது. எஞ்சியிருந்த ஓர் கடைசித் துளியும் விழியோரமொரு கண்ணீரென அரும்பி என் மதுக்கோப்பையில் சொட்டி விட்டிருக்கிறது.

இவ்விரவை மாய உளியொன்றின் துணைகொண்டு , மாத்திரை அளவுவெட்டி எடுத்து அக்கரு நிறச் சிறு நிலவை நஞ்சென எண்ணி விழுங்கத் துணிகிறேன். நீ உடனற்ற இத்தனித்த வாழ்வினில் நஞ்சையே உண்டால்தான் என்னவென நிறையமுறை தோன்றிபின் அது நிகழாமல் போயிருக்கிறது.

உன் வாசனை நினைவுகளில் ஊடாடும் மனதை எப்படித்தான் திசை திருப்பினாலும்,அத்திசைகளிலெல்லாம் ஓர் மரத்தின் நிழலென, மலரின் மணமென ஏதேனுமோர் வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறாய். மிச்சமிருக்கும் நாட்களைக் கொல்வதே என் முன் விரிக்கப்பட்டிருக்கும் சவாலாயிருக்கிறது.

வாசனையில் கலந்திருக்கும் குளுமை விசும்பிக் கொண்டிருக்கும் உயிரைத் தடவிக் கொடுத்துத் திரும்புகிறது. உன் வாசனைதான் கடலை மிகரம்மியமாய்க் காட்டியது. உன் வாசனை நதியின் பாடல்கள் அனைத்திலும் துயரங்களே சலசலத்து ஓடுகின்றது. தனித்தலையும் நிலவின் பாடல்வரிகளும் நதியின் ததும்பலில் மிதக்கிறது.

பவித்ராவைத் தகனம் செய்திருந்தனர். அதற்கு வெகுஅருகாமையில் இருந்த கருவேலம் முட்கள் நிறைந்த காட்டிற்குள் நின்றுகொண்டு தகனம் செய்யப்பட்ட இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதையிலிருந்து வெளிபட்ட பவித்ராவின் வாசனை வெளியெங்கும் படர்ந்தது. கையெட்டும் தூரத்திலிருந்த முள்செடியில் இருந்து ஒரு முள்ளை உடைத்து இடது கைபெருவிரலில் குத்திக்கொண்டான். ரத்தத்தோடு சேர்ந்து வாசனையும் வெளிப்பட்டது.  இன்னும் ஒருமுறை குத்திக் கொண்டான். வெளியோடு கலப்பதற்கு விரலிலிருந்தும் மெலெழுந்தது வாசனை.

முள்செடியிலேயே கையை வைத்து அழுத்தினான். அந்தப் பீக்காடு முழுக்கவே வாசனை நிரம்பியது. கண்களை மூடி மிக ஆழமாய்ச் சுவாசித்தான். பொங்கல் வாழ்த்து அட்டையும், பாட்டுப்புத்தகமும், வாசனையாய் மாறி அவனது தோளைத் தொடுவது போலிருந்தது.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button