
கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை இறுகி விட்ட நிலையில் மரத்து உடலெங்கும் சிறு அசைவுக்குக் கூட வழியில்லாமல் போனது. பிட்டத்தை நகர்த்தி சில அசைவுகளை உடலுக்குத் தந்து விட்டால் உடலின் கணம் கடுகளாவாவது லேசாகிப் போகும். தசைகள் ஆங்காங்கே பிடித்துக் கொண்டிருப்பது பாறையைச் சுமந்திருப்பது போலவே இருந்தது. பிட்டத்தை நகர்த்த வேண்டுமாயின் கால்கள் தரையைக் கொஞ்சம் அழுத்திட வேண்டும்.ஆனால், அவை ஒத்துழைக்கவில்லை. மரத்துப் போயிருந்தன.எத்தனை மணி நேரமாக நான் இவ்வாறு இருக்கின்றேன் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. நாள்களாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. என் கால்களுக்குக் கயிறு துணை போகாமல் எனது மெல்லிய தாவணி பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்துணி என் கால்களை இறுக்கி மடக்கி அமர்வதற்கு கூட வழியற்றுப் போனது.
வாயை இறுக்கியிருந்த துணி கொஞ்சம் தளர்ந்திருந்திருந்தாலாவது தலைக் கிறுகிறுப்பு குறைந்து போகலாம். இரு உதடுகளுக்கு நடுவில் அமைந்த துணி என் உதடுகளை,வாயைச் சுற்றியிருந்த தசைகளை சிவப்பாக்கிவிட்டிருக்க வேண்டும்.முகத்தின் இறுக்கம் கண்கள் இரண்டையும் பிதுங்கச் செய்து பார்வை மங்கிய நிலைக்குத் தள்ளியது. சதா வழிந்து கொண்டிருக்கும் உமிழ்நீர் தாடையையும் கழுத்தையும் பிசுபிசுக்க வைத்தது. என் நெஞ்சுக்குழியின் நடுவில் ஈரப்பசை இருந்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது விழிகளை உருட்டித் திரட்டி சுற்றும் முற்றும் பார்த்தேன்.எங்கோ ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்தது தெருவிளக்கின், நிலாவின், வீட்டின், கட்டிடத்தின் ஒளியாகத்தான் இருக்க வேண்டும். பலகையைக் கொண்டு சன்னல்கள் யாவும் ஒளி புகா இடங்களாக அமைக்கப்பட்டிருந்தாலும் மரப்பலகைக்கும் கொஞ்சம் கருணை ஒட்டிக் கொண்டிருந்தது.இரு பலகைகளுக்கு நடுவே உருவான சிறு துவாரத்தின் வழி ஒளி என் கண்களுக்கு லேசாகத் தெரிந்தது. துளிர் விடும் அந்த ஒரு தருணம் எனக்குள் ஏதோ இருண்மையின் மீதான அச்சுறுத்தலை சற்று விலக வைத்தது. இருள் இரவை மட்டும்தான் வட்டமிடுவதில்லை. பழகிப் போன இரவு நேரங்களுக்கு மனம் பயத்தை வெளிப்படுத்துவதில்லை.
இருளுக்குள் வலிந்து கொண்டிருக்கும் என் மூச்சுக் காற்றின் ஓசை மட்டுமே என் காதுகளுக்கு கேட்கின்றது. அவ்வோசை அவ்வப்போது எனக்குள் ஓர் அச்சுறுத்தலை உருவாக்கி மறைக்கிறது. மனத்தின் படபடப்பை சுவாசக் காற்று வேகமாக வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தது. இன்னும் எவ்வளவு நேரத்திற்கு? கணக்கிடயியலவில்லை. எனக்குத் தோதாக இருப்பதற்காக முதுகிற்குப் பின்னால் சுவர் இருப்பதாகத் தோன்றவில்லை.அவ்வப்போது அது அசைவது போலவே உணர்ந்தேன்.
சிறுநீரை வெகுநேரமாக அடக்கிக் கொண்டு இருக்கிறேன். வயிறு வலிக்கிறது.வயிற்றுக்கடுப்பு போல் உள்ளது. நேரம் ஆக ஆக வயிறு உப்பி வருவது போலவே தெரிகிறது. ஒரு வினாடி என் கைக்கட்டை மட்டும் அவிழ்த்து விட்டால் சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் வேண்டுமானாலும் கைகளைக் கட்டிக் கொள்கிறேன்.
தொண்டைக்குழியிலிருந்து ஒலியெழுப்ப வாய் அனுமதிக்காத நிலையில் நீளும் இந்த இருளில் பயவுணர்வை கண்களில் மட்டுமே வெளிக்கொணர முடிந்தது. என் உடல் நடுக்கத்தைக் கூட இறுக்கமான இந்த நிலை அனுமதிக்கவில்லை. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றேனா? சில நாள்களாக புலியிடம் சிக்கி நடுக்காட்டில் உட்கார்ந்திருப்பது போல ஒரு கனவு பல முறை என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியிருந்து விட்டால் எப்படியும் சில நிமிடங்களில் விழித்துக் கொள்வேன்.பாக்யா மச்சி என்னை எழுப்பி விடுவாள். அவள் மாடிப்படியின் கீழே நின்று கொண்டு தகரக் கதவை ஓங்கி மூன்றடி அடித்தால் போதும் இந்த கனவுகள் கலைந்து விடும்.
ஏதோவொரு துர்நாற்றம் மூக்கைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது.அத்துர்நாற்றத்தினால் என் மூக்கின் துவாரத்தை மூச்சிரைத்து வயிற்றில் இழுத்துக் கொண்டேன். ஆனால்,எவ்வளவு நேரம்தான் நானும் மூச்சைப் பிடித்துக் கொள்வது? வேறு வழியின்றி மூச்சை அவ்வப்போது வெளியிட்டும் கொண்டேன். இந்த துர்நாற்றம் எனக்குப் பழகிப் போன, நான் அடிக்கடி முகர்ந்த ஒரு நாற்றம்தான்.
நகரத்தின் குப்பைக் கூளங்கள் சந்திக்கும் சங்கமத்தில் குப்பைக் கூளங்களின் துர்நாற்றம் அத்துப்படி. நகராண்மைக் கழகத்தின் குப்பை லோரி மேட்டின் உள்ளே சென்று வெளியே திரும்பியதும் அரை மணி நேரத்திற்குள் குப்பைகளோடு குப்பையாகி விடுவேன். என் உடல் உள்ளே நுழைந்து வெளியாவதற்கு மட்டும் வேலிகளைக் கொஞ்சம் அறுத்திறுப்பேன். மட்கும் குப்பைகள் பெரும்பாலும் துர்நாற்றத்தைக் கொண்டு வரும்.அம்மாவின் கைப்பக்குவத்திற்கு முன் அத்துர்நாற்றம் தோற்று விடும். ஆறேழு நாள்களுக்குக் குப்பென்று வீசும் துர்நாற்றம் அப்பாவின் “தீகா ஊலாரிடம்” ஜெயித்து விடும்.
மலைகள் போன்று உயர்ந்து நிற்கும் மட்காத குப்பைகளைக் கிளறிக் கிளறி விளையாடுவேன். டின்களையும்,போத்தல்களையும் ஒருங்கிணைந்த குப்பைகளிலிருந்து பிரித்திட பொறுமை வேண்டும். கழிவுகளில் கை புகுந்தால் உடைந்த கண்ணாடித் துண்டுகள், சரியாகத் திறக்கப்படாத டின்களின் திறப்பும் கையைக் குத்திய அனுபவங்கள் உண்டு. அம்மாவிடம் சொன்னால் பட்ட காயத்தை விட இன்னும் வலி அதிகமாகி விடும். அதற்கு மூங்கில் கம்புகள் தான் உதவியாக இருக்கும்.
வீட்டின் முன் வாங்கில் அப்பா நழுவிப் போகும் கைலியைச் சரிசெய்ய மீளாதவராய் கிடக்க தொங்கிப் போகும் கால்களும் கைகளும் வழிந்தோடும் சிறுநீரும் உமிழ்நீரும் தரையை அழுக்காக்கிவிடும். பல மணி நேரங்கள் கழித்து அப்பா கண் விழித்தால் கட்டப்பட்டிருக்கும் குட்டிக்கு விழும் அடியால் தெறித்தோட வழியில்லாமல் தண்டனையை அனுபவிக்கும் என் குட்டி. வெள்ளை நிறத்தில் சதையைத் தாண்டிய எலும்போடு குட்டி எப்போதும் என்னுடன் இருப்பான்.
இப்போது என் மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் புதிதான ஒன்றல்ல.எனக்குள் ஊறிப் போன ஒன்றாக உணர முடிகிறது. ஆனால், என் மூக்குத் துவாரத்தில் நுழைவதை நான் விரும்பவில்லை.தென் மாநிலத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் போதுதான் நடுவண் அரசாங்கத்திற்கு ஆத்தோரமான என் வீடும் கண்ணில் பட்டது. எனக்குள் ஊறிக் கிடந்த துர்நாற்றங்களை விலகிச் செல்ல வேண்டிய அவசியம் உருவானபோது மனம் சஞ்சலப்பட்டது, மாற்றத்தை விரும்பவில்லை. மாற்று இடம் சில மைல்களுக்குப் அப்பால் இருந்த சிறு பட்டணம். தொழிற்சாலைகள் அதிகம் இருந்ததால் வெளிநாட்டு ஆண்களின் வாசம் சற்று அதிகமாகவே இருந்தது.
பாக்யா மச்சி கறாரான பேர்வழிதான்.ஆனால், என்னிடத்தில் அவளது பார்வை எனக்குள் ஏதேதோ செய்யும். அப்பா அவளின் ‘‘தீகா ஊலார்” வாடிக்கையாளர். அவள் என்னைத் தன்னுடனே வைத்துக் கொண்டாள். என்னைப் பார்க்க அப்பா தினமும் வருவார்.அவரது பாக்கெட்டிற்குள் நான்கைந்து “தீகா ஊலார்” புகுந்து கொள்ளும்.
உணவுக் கடையில் பீங்கான் மங்கு கழுவினாலும் என் முகத்தில் நறுமணமிக்க பவுடர் ஒட்டிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் பவுடர் குறைந்தாலும் பாக்யா மச்சி பூசி விடுவாள். தான் பயன்படுத்தும் உதட்டுச் சாயம் தாய்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டதாக பீற்றிக் கொள்வாள். எனக்கு மட்டும் அவ்வப்போது பூசி விட்டு “ச்சாந்திக்கன்யா காடிஸ்கூ” என்று கன்னங்களைத் தடவிக் கொடுப்பாள். அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் யார் வந்தாலும் “ஹேய்…மானாலா காடிஸ்கூ…பாங்கிள்….” என்று கைகளுக்கு சவர்க்காரம் போட்டு கழுவிவிட்டு, “கேர்ள்ஸ் பேசன்” வாசனைத் திரவியத்தை பூசி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவாள். என் தோள்களின் மீது கையைப் போட்டுக் கொண்டு.
இப்போது என்னைக் காணாது தேடிக் கொண்டிருப்பாள். எல்லாம் என் தவறுதான். கூட்டல் குறியிட்ட பெரிய காரில் வரும் செங் தவுக்கே வீட்டின் விருந்திற்கு வேலையாளாக போகும்படி கேட்டாள். அங்கேயும் மங்கைத்தான் கழுவ வேண்டுமா என்று பாக்யா மச்சியிடம் கொஞ்சம் விவாதத்தில் இறங்கி விட்டேன். எனக்கும் வாய் நீண்டுதான் போயிருந்தது. வாக்குவாதமாக மாறிக் கொண்டிருந்தது. பாக்யா மச்சியை இழக்க விரும்பாதவளாய் அவள் தன் அறைக்குச் சென்றதும் கோயிலுக்குக் கிளம்பி விட்டேன்.கோயிலுக்குப் போகும் குறுக்கு வழியில் சென்றது வரை மட்டும்தான் ஞாபகம் உள்ளது.
ஏதோ ஆள்நடமாடும் சத்தம் கேட்கிறது.தூரத்திலிருந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக எனதருகில் கேட்பது போலிருந்தது. இரண்டுக்கும் மேற்பட்டவராக இருக்க கூடும். பேச்சொலி மிக அருகில் வந்தபோது இரும்பைப் பிடித்து ஆட்டுவது போலவே சத்தம் கேட்டது. ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு இரும்புக் கதவென்று உணர்ந்து கொண்டேன். திறக்கப்பட்ட கதவிற்குப் பின்னால் வெளிச்சம் ஒளிந்து கொண்டுதான் இருந்தது.லேசான வெளிச்சத்தில் ஐந்து கால்கள் போலத் தெரிந்தன.கை அசைவுகள் ஒருவாறாகக் கொஞ்சம் தெரிந்தன.
எனதருகில் வந்தபோது கண்களை இறுக மூடிக் கொண்டேன்.அவர்கள் பேசிய பாஷை விளங்கவில்லை. பெருத்துப் போயிருந்த வயிற்று வலியைத் தாங்காது கண் விழிப்பதற்குள் என் முகத்திற்கும் திரையிடப்பட்டது. மூச்சிரைக்க சிரமப்பட்டு முரண்டு கொண்டபோதும் லேசாகக்தான் துணி இறுக்கத்திலிருந்து விலகச் செய்தார்கள். இருபுறமும் என் கைகளைத் தாங்கித் தூக்கியபோது அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.துர்நாற்றத்தின் வாடையை அப்போதுதான் என்னவென்று அறிந்தேன்.கண்களில் வழியும் நீரைத் துடைக்க வழியில்லாத எனக்கு அழுக்காறைத் தடுத்திடயியலவில்லை. முட்டிக் கொண்டு வந்த சிறுநீரும் சொட்டும் சொட்டாக வடிய ஆரம்பித்தது. மறுபடியும் ஓர் இருட்டறைக்குள் நுழைக்கப்படுகிறேன்.பாக்யா மச்சியின் முகம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.குட்டியின் முகமும், உருவமும் மீண்டும் கண்முன் வராதா என்கிற ஏக்கத்தோடு மீண்டும் மயங்குகிறேன்.
***
- மச்சி – பாக்யா என்பது சியாம் பெண்ணின் பெயர். மச்சி என்பது மலேசியாவின் தேசிய மொழியில் மலாய் சமூகத்தினரிடையே வயதானப் பெண்களை அழைக்கும் முறை.
- செங் தவுக்கே – செங் என்பது சீனரின் பெயர்.தவுக்கே என்பது முதலாளி என்று பொருள்படும்.
- சந்திக்ன்யா காடிஸ்கூ – என் பொண்ணு எவ்வளவு அழகாக இருக்கிறாள்.
- மானாலா காடிஸ்கூ…பாங்கில் – எங்கே என் பொண்ணைக் காணோம்…கூப்பிடு..
*****