“அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும்.
ஒரே இடத்தில் பருத்தி, பயறு வகைகள், மக்காச் சோளம்னு செழிப்பா வளரக்கூடிய ஆறு குறுக்கம் நிலம் அவளுக்கானது. கணவன் இறந்து பல வருடங்கள் ஆனாலும், தனி ஆளாக நின்று விவசாயத்தைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருபவள். ஒரேயொரு மகன் குருசாமி. பேருக்குத்தான் பிள்ளையே தவிர தாயோடு ஒட்டி வாழாமல் தன் குடும்பமென தனித்து வாழ்பவன்.
சொந்தத்துக்குள்ளாகவே பொண்ணு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் முதல் முதலாக கரிசல்குளத்துக்கு வாக்கப்பட்டு வந்த அசலூர்க்காரி. ஒன்பது கல் பேசரி மூக்குத்தி இரண்டு பக்கமும் ஜொலிக்க, கழுத்து நிறைய நகையோட வந்த பணக்காரி. அல்வாத் துண்டு மாதிரி அத்தனை அழகாகயிருக்கும் சின்ன வயது முகம். செண்பகங்குற அவளோட உண்மையான பெயர் மறைந்து போக, பிறந்த ஊர்ப் பெயரான செக்கப்பட்டியே அவளுக்கும் பேரானது.
“அன்னா பாரு மேலே, சூரியன் மேக்கால எறங்கி எம்புட்டு நேரமாகுது? நாலு மணி ஆச்சா இல்லையானு நீயே பாத்து சொல்லு” – வாய்த்துடுக்கான முத்தம்மாள் எதிர்க் கேள்வியோடு வேப்பமரத்துக் கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த காலியான தூக்கு வாளியினை நோக்கி நடந்தாள்.
“ஆமா, நான் கலெக்டரு பாரு, கைல வாட்சக் கெட்டிட்டு திரியுதேனாக்கும். பெரிய்ய சட்டமணியம் பேசுதா , கூட செத்த நேரம் இருந்து வேலை பாத்தாத்தான் என்னவாம்?” வெட்டிப் போட்ட களைகளை ஒன்று சேர்த்துக் கொண்டே வந்தவள் காலில் முள் குத்திவிட “யாத்தாடி, வாச்சாத்தி கெணக்கா இத்தத் தண்டி முள்ளா? ஷ்ஷ்ஷ்! வாரு பிஞ்சி போச்சேன்னு காலையில செருப்புப் போட்டுட்டு வரலை.. அதுக்கு தண்டனையா?” வலி தாங்க முடியாமல் அதே இடத்தில் கால் பெருவிரலைப் பிடித்தபடியே அமர்ந்தாள் ஆச்சி.
விறுவிறுவென்று பக்கத்தில் வந்த கோமதி “உனக்கு வயசானாலும் ஆசை அடங்குதா பாரு. கூட ஒரு ஆள் வச்சா சம்பளம் குடுக்கனும்னு விசுக்கு, விசுக்குனு ஆட்டிக்கிட்ட வார எங்க கூட. நல்லா வேலை வாங்கத் தெரியுதுல்ல.. செடி செத்தைகளுக்குள்ள பார்த்து நடந்து வரமாட்ட” – குத்திய முள்ளைப் பிடுங்கும் சாக்கில் காரசாரமாகப் பேசினாள் .
கொஞ்ச தூரத்தில் ஆடுகளின் ‘ம்மே.. ம்மே..’ சத்தம் கேட்க வலது கையால் புருவத்திற்கு அணைகட்டி பார்வையைக் கூராக்கிப் பார்த்ததில் ஆளுயரத்திற்கும் மேலான கம்போடு ஆடு மேய்க்கும் பையன் வருவது வெள்ளெழுத்து விழுந்த கண்ணுக்கு பிலுபிலுவென்று தெரிந்தது..
வலியையும் மீறி கோபம் பொங்க, “கெழவன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு வந்துட்டான் பாரு. சரியா வேலை முடிஞ்சி வீட்டுக்குப் போற நேரத்துக்கு வந்து மேயவிடுவான் பயபுள்ள. இன்னைக்கு வரட்டும், அவனை உண்டு இல்லைனு பண்ணிப்புடுதேன். நீங்க போங்கடிகளா” ஏன் சொல்கிறாள் எதுக்குச் சொல்கிறாள் என்று புரியாமல் போனாலும், கடைசியாகப் போகச் சொன்னது மட்டும் காதில் விழ, சிட்டாய்ப் பறந்துவிட்டார்கள் கூலிவேலைக்கு வந்த நான்கு பெண்களும்.
கால் விரலில் ஒழுகும் இரத்தத்தின் மீது, பாதம் மிதிக்கக் கிடந்த கரம்பை மண்ணைத் தூவி அடக்கிவைக்க அழும் குழந்தைக்கு வாயில் பால் பாட்டிலைத் திணித்து அடக்கி வைத்ததுபோல் வடியும் இரத்தம் உடனே நின்று போனது.
அது அவளின் நிலம், தாய் மடியில் தஞ்சமாகும் குழந்தையைப் போல அந்தத் தாய்மண் அவள் வலிக்கு மருந்தாகிப் போனதில் ஆச்சர்யமில்லைதான். விருட்டென்று எழுந்தாள்.
பச்சைக் கலரில் முன் கொசுவம் வைத்து உடுத்தியிருந்த கண்டாங்கிச் சேலையின் முந்தானையை உருவி, தேவையில்லாமல் உதறி மீண்டும் இடுப்பில் செருகிக் கொண்ட போது கிட்டத்தட்ட எதிர்த்து மோதக் காத்திருக்கும் வெள்ளாடு போல விரைப்பாக நின்றாள். “சிறுக்கி மகனே, எங்காட்டுக்குள்ள காலெடுத்து வை, உன்னை வச்சிக்கிடுதேன்” – பல் இல்லாத வாயிலிருந்து விழுந்த சொல் சதக்கு புதக்கென்று நழுவி சத்தத்தைக் குறைத்துக் கொண்டு அவளுக்குப் பக்கத்திலே மட்டும் விழுந்து ஒலித்துக் கொண்டது.
தன்னைச் சண்டைக்குத் தயார்படுத்தும் விதமாக, பிளாஸ்டிக் குடத்தில் அடிமட்டத்திலிருந்தத் தண்ணீரை இரண்டு தடவை சில்வர் தம்ளரில் மோந்து குடித்தாள்.
இதோ நெருங்கிவிட்டான் கோபால் தன் ஆட்டுக்குட்டிகளோடு. ஜிவ்வென்று இரத்தம் சூடேறி கோபமாக பார்ப்பவளை நோக்கி, “என்ன அப்பத்தா, களையெடுப்புக்கு வந்தவுகளையெல்லாம் அனுப்பி வச்சிட்டு நீ என்ன செய்யுதே இன்னமும் ஒத்த ஆளா இங்க நின்னுக்கிட்டு” – அவன் கிழவி மேல் அக்கறைப்பட்டு சொன்ன இந்த வார்த்தைகள் அவளை இன்னும் கொஞ்சம் கடுப்பாக்கியது.
கேள்வி கேட்டவன் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. மறுபக்கமாக திரும்பி மேயும் ஆடுகளை நோட்டம் விட்டுக்கொண்டே
“புதிய வானம்
புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது.”- பாடலைப் பாடியபடி கையிலிருந்த கம்பினை தலைக்கு மேலே கண்டமேனிக்கு சுற்றி, நிலமெல்லாம் அவனுக்கானதென ஆடிப்பாடினான் கோவாலு என்றழைக்கப்படும் என்னும் கோபால்.
முப்பது எண்ணத்திற்கும் மேலாக சம்சாரிகள் வீட்டு ஆடுகளை தினமும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை மேய்த்து வருவது அவனது வேலை. எந்த வீட்டிலாவது ஒரு வீட்டில் இரவுச் சாப்பாடு உறுதியாகிவிடும். அதுதவிர கிடைத்த தினக்கூலியில் மிச்சப் பாட்டைப் பார்த்துக் கொள்பவன். நாளைக்கு சேர்த்து வைக்க வேண்டுமே என்ற பொறுப்பினைத் தலையில் போட்டுக் கொண்டு இன்று தனக்கு கிடைத்திருக்கும் நாளினை கீறல் ஏற்படுத்தத் தெரியாதவன்.
கோவாலுக்கு முன்னால் செல்லும் அத்தனை ஆடுகளும் ஆசிரியருக்குப் பயந்து விவரம் அறிந்து கொள்ளாமல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் ஒண்ணாவது வகுப்பு பள்ளி மாணவர்களைப் போல் வரிசை குலையாமல், அவைகளுக்குள்ளாகவே மெல்லமாக சத்தம் எழுப்பி நடந்து வந்தன.
இவன் கேள்வி கேட்டால் உடனே பதில் சொல்ல வேண்டுமோ என்று பொறுத்திருந்தவள், ஐந்து நிமிடம் கழித்து, “உன்னை மாதிரி களவாணிப் பயககிட்டயிருந்து காப்பாத்தணும்ல, அதான் காவலுக்கு இருக்கேன்” என்றாள் குரலில் ஆங்காரத்தோடு.
“என்ன ஆத்தா, இப்பிடிச் சொல்லிட்டே.. உம் முதலுக்கு என்னைக்கு நான் ஆசைப்பட்டேன்?” – அவள் நிலத்து வரப்பின் மீது நின்று கொண்டு பதிலளித்தான் கோவாலு.
“இன்னும் ஒரு அடி வயலுக்குள்ள கால எடுத்து வச்சேனு வை. கல்லைக் கொண்டு வீசி மண்டைய ஒடைச்சிப் போடுவேன் ஆமா”
“இப்ப எதுக்கு எங்கூட சண்டைக்கு வார நீ?”
“பெரிய்ய்ய நல்லவனாட்டம் பேசாத நீ. ஏம்லே, நேத்து தெக்கடைசியில வெளஞ்சி கிடந்த தட்டாங்காய்க மொத்தத்தையும் உன் ஆட்டைவிட்டு மேயவிட்ட” – களைசொரண்டியைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு காவலுக்கு நிற்கும் கருப்பசாமி போல் கம்பீரமாக எதிர்த்து நின்னு செக்கம்பட்டி ஆச்சி கேட்க.
“ஏ ஆச்சி, அது எம்ம ஆடுகள்ல மேஞ்சது, அவனுக்கென்ன தெரியும்” – வேறொரு குரல் அவளுக்குக் காதில் விழுந்தது. முறைத்து திரும்பியவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான் சொந்தப் பேரன் சுடலையாண்டி.
“நம்ம பிஞ்சையில நம்ம ஆடுதானே மேஞ்சது. இதுக்கு எதுக்கு இப்படி எகிறிட்டு வார” – உரிமையோடு கொஞ்சலையும் சேர்த்திருந்தான் அவன் பேசிய வார்த்தைகளில்.
பதில் ஏதும் பேசவில்லை ஆச்சி.. குடத்தில் மிச்சமிருந்த தண்ணீரால் புகையிலை போட்டிருக்கும் வாயைக் கொப்பளித்து ஒரு ஓரமாகத் துப்பிவிட்டு, விறுவிறுவென்று வீட்டை நோக்கி நடந்தாள்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தைக் காரணம் காட்டி, தன் சுயநலத்துக்காக ஒதுங்கிச் செல்லும் உறவுகளை மன்னிப்பதற்கான மனம் எளிதாக வருவதில்லை. அதுவும் ஏமாற்றிப் பிரிந்தார்களென்றால் காலத்துக்கும் ரணம்தான் தரும். அவர்களை மீண்டும் காணும்போது நம் உணர்வு. இப்படியாகப்பட்ட வலியோடு அங்கிருப்பதைவிட அந்த இடத்தை விட்டு நகருதல் உத்தமம் என்று அறிந்து வைத்தது போல் செக்கம்பட்டி ஆச்சி போய்க் கொண்டிருந்தாள்.
“பார்த்தியா.. ஒன்னையின்னா மட்டும் உங்க ஆச்சி ஒன்னும் சொல்லாமப் போகுது”
“ஏம்லே நீ வேற கடுப்பேத்துற, அது எம்மேலே கோபமாப் போகுது, உனக்குத் தெரியலயா?”
“அப்படியா சொல்ற” ஆச்சி போகும் திசை பார்த்து திரும்பியவனை..
“கோவாலு.. அது போகட்டும்” என்று பேச்சினை வேறு திசை நோக்கித் திருப்பி மேயும் ஆடுகள் மீது அவனின் கவனத்தை வைக்கச் செய்தான் சுடலையாண்டி.
ஆச்சியின் மகன் குருசாமிக்கு திருமணமான புதிது. அவன்தான் கூறுகெட்டவனாட்டம் குடியும் கும்மாளமுமாக இருக்கிறானேயென்று வேறு இடத்தில் பொண்ணு பார்க்கத் தயங்கி, உள்ளூரில் சொந்தத் தம்பி மகளான சிவகாமியை, நாலு சவரன் நகைபோட்டு மருமகளாக்கிக் கொண்டாள் ஆச்சி.
கூலிவேலை செய்யும் தம்பிக்கு வரிசையாக ஐந்தும் பெண்பிள்ளைகள். தம்பிக்கு உதவி செய்ததுபோலவும் ஆனது; தன் மகனுக்கு மனைவி கிடைத்தது போலவும் ஆனதென்று சமாதானப்படுத்திக்கொண்டு ஊரே மெச்சும்படி திருமணம் செய்து வைத்தாள்.
பத்துவரைக்கும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சத்துணவுச் சாப்பாட்டிற்காக படிப்புத் தொடர்ந்த சிவகாமி தக்கி முக்கி பத்துவரை தாண்டிவிட்டாள்.
“எத்தே.. எத்தே..” என்று பம்மி பம்மி பயப்படுவது போல நடித்து, வந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே மாமியாரைக் கைக்குள் போட்டுக் கொண்டாள்.
வருவோர் போவோரிடம் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு மருமகளைப் புகழ்ந்து தள்ளும் ஆச்சியின் கண்களில் பட்டுவிடாதபடிக்கு, ஊரார் பின்புறத் தெரு வழியாக தப்பித்து ஓடத் தொடங்கினர். பின்னே வாய் ஓயாமல் சொன்னதையையே சொல்லிக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் பொறுமை இருக்கும்?
ஒரு வருடத்திற்குள்ளாகப் பேரனைப் பெற்றுக் கொடுத்ததும், அளவிலாத சந்தோஷமாகிப் போனது ஆச்சிக்கு.
மாமியாரின் வரவு செலவு கணக்கு வரைக்கும் தலை எட்டிப் பார்க்கின்ற அளவிற்கு உரிமை எடுத்திருந்தாள் சிவகாமி.
இப்படித்தான் ஒருநாள் தோட்டத்தில் விளைந்திருந்த பொன்னாங்கன்னிக் கீரையை ஊர்க்கதை பேசிக்கொண்டே மாமியாரும் மருமகளும் ஆய்ந்து கொண்டிருந்தார்கள். தாலிகட்டிய கணவனைவிட மாமியாரின் சுருக்குப் பையிலிருந்த பீரோச் சாவிதான் கொள்ளைப் பிரியமாக இருந்தது மருமகளுக்கு.
அங்க சுத்தி இங்க சுத்திப் பேச்சை வளர்த்துக் கொண்டு போனவள், சடக்கென்று குரலைத் தாழ்த்தி “எதுக்குத்தே, பிச்சிப் பிச்சி மூனு பேங்க்குல பணத்தைப் போட்டு வச்சிருக்கீக, அது நல்லதாக்கும்” என்று மெதுவாகக் கேட்டாள்.
“எனக்கென்ன தெரியும் அதைப்பத்தி. என்ன கழுதையோ, உங்க மாமா இருக்கும்போது ஆரம்பிச்ச கணக்கு.. அதுலயிருந்து கொஞ்சம் கொஞ்சமாச் சேரச்சேர, படிச்சவுக யாரையாவது தொணைப் பிடிச்சி என்னால முடிஞ்சதைச் சேர்த்து வச்சிட்டு வாரேன்”
“இனியெதுக்கு யாரும், நானே வாரேன்.. நாளைக்குப் போய் மொத்தமே ஒரே பேங்குல மாத்திப் போட்டுட்டு வருவோமா?”
“அடியாத்தி, உனக்கு அதெல்லாம் தெரியுமா? ஆனா, ஒன்னும் பெரச்சனை வராதே? “
மருமகளை மெச்சிக்கொண்டாலும்,மனதின் ஓரத்தில் சந்தேகம் கரும்புள்ளியாக விழுந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மௌனமாக ஏறிட்டாள் ஆச்சி.
“முன்கூட்டியே ஒருநாள் அவுகளும் நானும் போய் விசாரிச்சிட்டு வரட்டுமாத்தே?” – தன் கணவனையும் வேண்டுமென்றே இந்த விசயத்திற்கு உள்ளே இழுத்துப் போட்டாள்.
“நல்லாக் கெடுத்த போ காரியத்தை.. அம்மைகிட்ட இவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சா, என் கழுத்தை அறுக்கக் கூட அஞ்சாத கிறுக்கன் எம்மகன்”
“சரி சரி புரியுதுத்தே.. நான் மட்டும் வாரேன். இன்னா..” – ஆய்ந்த கீரைகளை அலசி செக்கில் ஆட்டிய கடலெண்ணெய் சூடேற, சிறு பட்டாசாய் வெடித்த கடுகு உளுந்தப் பருப்பிற்குப் பின், வெங்காயம், காய்ந்த மிளகாயோடு நிறைய பூண்டு, சீரகம் சேர்த்து அதோடு பொன்தூவலாக தேய்காய் துருவிப் போட்டும் பொரியல் செய்து ஒரு சிறு பிளேட்டில் சுடச்சுட மாமியாரிடம் நீட்டினாள் சிவகாமி.
அன்று முழுவதும் கவனிப்பு சிறப்பான இருக்க, ரொம்பவே மருகிக் கண்ணீர்விடாத குறையாகப் பூரித்துத்தான் போயிருந்தாள் செக்கம்பட்டி ஆச்சி .
புதன்கிழமை சந்தைக்கு கிளம்புவதாகச் சொல்லி, மறுநாள் இருவரும் பத்துமணிக்கெல்லாம் வீட்டைவிட்டு கிளம்பிப் போனார்கள். வரும்போது பை நிறைய வாங்கி வந்திருந்த காய்கறிகளை, வேண்டுமென்றே கணவன் குருசாமிக்கு தெரியுமாறு வைத்து, சாதாரணமாக அவனைக் கடந்துசென்று அத்தைக்கு கடுங்காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ஒரு மாதம் கழித்து நிலத்தில் உழவு அடிக்க வந்தவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பேங்க்குக்கு பணம் எடுக்கப் போன செக்கம்பட்டி ஆச்சி, வழக்கமாக அவளுக்கு உதவி செய்யும் பெண்ணிடம் “ஐந்தாயிரம் எடுக்கனும்ப்பா” என்பதைச் சொல்ல கொஞ்ச நேரத்தில். “உங்கக் கணக்கில் பணம் எதுவுமில்லையாம் பாட்டி. எவ்வளவு போட்டிருந்தீக? இதுக்கு முன்னாடி எப்போ வந்தீக?” என்று அந்தப்பெண் கேட்டாள்.
“போன மாசம்தானே வந்தேன், மூனு பேங்க்ல தனித்தனியா இருந்த பணத்தையெல்லாம் ஒன்னாக்கி இந்தப் பேங்க்ல போட்டாச்சு அத்தைனு என் மருமக சொன்னாளே” என்று பதில் சொல்ல.
“உங்க பாஸ்புக்கக் கொடுங்க, எவ்வளவுதான் இருக்குன்னு பார்த்துட்டு வாரேன்” என்றவள் சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து “பாட்டி.. வெறும் நூறு ரூபாய்தான் இருக்காம், நாளைக்கு உங்க மருமகளைக் கூட்டிட்டு வாங்க.. என்ன ஏதுனு விவரம் கேட்போம்” என்று சொல்லி நகரப்போனவளின் கைகளைப் பிடித்துக்கொண்டே, படபடத்து மயங்கிச் சரிந்தாள் செக்கம்பட்டி ஆச்சி .
உடனே கேஷியர் வரிசையில் நின்றிருந்த நாலைந்து பேர் ஓடிவந்து கைத்தாங்கலாக தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்துக் காற்றாடிக்கு நேராக அமர வைத்திருந்தார்கள்.
கொஞ்சம் தெளிவானதும், “நல்லாப் பார்த்தியாத்தா, அம்புட்டுத்தான் இருக்கா, இன்னொரு தடவை மேனேசர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் அந்தப் பெண்ணைப் பார்க்க.
“நாளைக்கு மருமகளை கூட்டிட்டு வாங்க பாட்டி, பார்த்துக்கிடுவோம். பயப்படாதீக, ஆட்டோ வரச் சொல்றேன். பத்திரமா வீட்டுக்கு போங்க. சரியா?” – வாசலிருந்த வாட்ச்மேனிடம் விவரம் சொல்லி ஆட்டோ பிடித்து வரச் சொன்னாள் அந்தப் பெண்.
இருவது நிமிடத்தில் வீட்டை அடைந்துவிட, உள்ளிருந்து வேகமாக ஓடிவந்த நாலு வயதுப் பேரன் பொன்ராசு, “ஐ, எங்க அப்பத்தா ஆட்டோவுல வருதே, எம்மா! எப்பா! வாங்க வாங்க இங்க” என்று துள்ளிக் குதித்து ஆட்டோவிற்கு பக்கத்திற்குச் சென்று பாட்டியின் கையைப் பிடித்துப் பெருமையோடு வீட்டுத் திண்ணைவரை சந்தோஷம் தாளாமல் சிரித்துக் கொண்டே அழைத்து வந்தான்.
“நேத்து சாந்திரம் குடிக்கக் காசு கேட்டா ஒத்தப் பைசா எங்கிட்ட இல்லைனு சொல்லிப்புட்டு, இப்போ பகுமானமா ஆட்டோவுல வந்து எறங்குதியாக்கும்” – என்று பாதி போதையில் செருகிய கண்ணோடு தள்ளாடி நடந்து அம்மாவைக் கடந்து வெளியே சென்றுவிட்டான் மகன் குருசாமி.
“நான் கோயிலுக்கு போயிட்டு வரதுக்குள்ளே எங்கத்தே போனீக, தேடித் தவிச்சிப் போயிட்டேன் போங்க” என்று வார்த்தைகள் நிறைய பொய்யன்போடு கொண்டுவந்த சொம்புத் தண்ணீரை மாமியாரிடம் நீட்டினாள்.
“ஏம்புள்ள சிவகாமி இப்படி செஞ்சே? உனக்கு எம்புட்டு வேணும்னு கேட்டாக்க நானே குடுத்துறப் போறேன். எதுக்குடி என்னை நம்ப வச்சி கழுத்தறுத்த?” – மருமகள் முகத்தைப் பாராமலும், ஏந்திக் கொண்டிருந்த தண்ணீர்ச் சொம்பினை வாங்காமலும் வாசலைப் பார்த்தபடி, நெஞ்சு இறுக வார்த்தைகளை தீட்டி அவள் பக்கம் வீசினாள் செக்கம்பட்டி ஆச்சி.
மாமியார் பேரிலிருந்த மொத்தப் பணத்தையும் தன் பேருக்கு மாற்றிக் கொண்ட கதை தெரிந்துவிட்டது போல என்று சுதாரித்தவள், “ஓ.. பேங்க்குக்குப் போனீகளாக்கும்? இப்போ என்ன, எனக்கு உரிமையில்லையா? உங்களுக்கடுத்து எல்லாம் உங்க மகனுக்குத்தானே, நான் வேற உங்க மகன் வேறயா? இருந்துட்டுப் போகட்டுமே எங்கணக்குல, எதுக்குப் பிரிச்சிப் பாக்கீக?” வேண்டுமென்றே மாமியாருக்கு முன்வந்து நின்றாள்.
“இங்காரு, மூஞ்சியில முழிக்காத. இதோடு போச்சு எல்லாம், எனக்கும் சந்தேகம் வரத்தான் செஞ்சது. நானும் நீயும் பேங்குக்கு போன மறுநாளு மினுக்கிக்கிட்டு எங்கேயோ போயிட்டு வந்த. அப்பவே நான் சுதாரிச்சிக்கனும். ஆனால், நம்பித் தொலைச்சிட்டேன்” – பொத்துக்கொண்டு வந்த கண்ணீர் வழிந்த கன்னத்தை துடைத்த அதே முந்தானையில் சினந்து ஒழுகும் மூக்கு நீரையும் வழித்தெடுத்து சுருட்டி இடுப்பில் செருகிக்கொண்டாள் செக்கம்பட்டி ஆச்சி.
“நாளைக்கே உன்னைப் பேங்குக்குக் கூட்டிட்டுப் போய் நீ செஞ்ச போக்கிரித்தனத்தை எல்லாருக்கும் முன்னாடி சொல்லி, ஒன்னைப் போலீசுல கூட பிடிச்சிக் கொடுக்க முடியும்.. ஆனா, நான் அப்படி செய்யப் போறதில்ல. காசு பணத்தைவிட மானம் பெருசுனு வாழ்ந்தவரு எம் புருஷன். அவரு வீட்டு மருமக மாமியாள ஏச்சிப்போட்டானு நாலுபேரு அசிங்கமாப் பேசுனா, அது காலத்துக்கும் சுமந்து திரியுற அவச் சொல்லாயிரும்”
“பின்னே.. என்ன செய்யப் போறீக, ஒங்க மகங்கிட்ட சொல்லி என்னை அத்துவிடப் போறீகளா?”
“அடச் சீ சிறுக்கி, வாயை மூடு பேச்சை வளக்காத, உனக்கும் துட்டுதான் வேணும் அவனுக்கும் துட்டுதானே வேணும்? என்னை ஆளவிடுங்க, எல்லாத்தையும் நீங்களே வச்சி ஆண்டுக்கோங்க. பெத்ததுதான் சரியில்லை. வந்தவ நீயாச்சும் அவனை மாத்தி ஒழுங்காக் குடும்பம் நடத்துவேன்னு பாத்துத்தான் ஒறவுல பொண்ணெடுத்தேன். நீ உன் பேராசைப் புத்தியைக் காமிச்சிட்டேல்ல”
“..”
“நான் இனி ஒன்னும் பேசப்போறதில்லை. கொஞ்சம் பிஞ்சையும் இந்த வீடும் போதும். மத்தது எதுவும் வேணாம்.. நீங்க வச்சிக் காப்பாத்துவீகளோ? இல்லை வித்துத் திம்பீகளோ, என்னைத் தனியா விட்ருங்க”
ஓரிடத்தில் நமக்கு உரிமை இருந்தாலும், ஏமாற்றி அபகரித்தல் எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகமென்பதை தன் செயலால் உணர்த்தியவள், மன்னிப்பைக் கூட உதிர்க்காமல் திமிரெடுத்து முன் நிற்க, கால் மிதிக்கக் கிடந்த நரகலைப் போல அசிங்கமென ஆச்சி உணர்ந்து கொண்டிருந்த அதே நேரம், குருசாமி இன்னும் போதையில் தன்னிலை மறந்து தள்ளாடி வீட்டினுள் வருவது தெரிய, ‘ஓ’வென்று கூப்பாடு போட்டு அழுத சிவகாமி, முழுக் குற்றச்சாட்டையும் மாமியார் மீது சுமத்த, அம்மாவைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனும் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தான்.
இவை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத செக்கம்பட்டி ஆச்சி அதே வீட்டில் தனிச் சமையலுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
ஒரு நாள் திட்டுவதும் மறுநாள் மன்னிப்புக் கேட்பதுமாக மகன் குருசாமி இருந்தாலும் சிவகாமி மட்டும் கொஞ்சமும் மாறாமல், செய்தது தப்பென்றாலும் அவளைக் கொண்டாடவேண்டுமென்று வீராப்போடு இருந்தாள்.
ஒருவகையில் அம்மாவுக்கு நல்லது செய்வதாக நினைத்து தன் பங்குக்கு கிடைத்த இடத்தில் வீட்டைக் கட்டிக் கொண்டு தன் குடும்பமென தனியாகச் சென்றுவிட்டான் குருசாமி.
மகன் தன்னைவிட்டு போனது இன்னும் கொஞ்சம் மனம் பாரமாக இருப்பவளை, அவ்வப்போது இப்படிச் சீண்டிக் கொண்டிருக்கும் பேரனை மட்டும் நிறையவே பிடித்திருந்தது செக்கம்பட்டி ஆச்சிக்கு.
பொய்க் கோபத்தை நிஜக் கோபமாக காட்டும் செக்கம்பட்டி ஆச்சியைப் பற்றி, பேரன் சுடலையாண்டிக்கும் தெரியாமலா இருக்கும்?
பாட்டிக்கும் பேரனுக்குமான கண்ணாமூச்சி விளையாட்டைப் பற்றி கூடவே ஆடுமேய்க்கும் கோவாலுவிடம் கூட சொல்லால் சமாளித்த சுடலை, மனதிற்குள் தனக்கொரு ‘பலே’ போட்டுக் கொண்டான்.
*******
கதையும் கதையின் எழுத்து நடையும் அருமை சகோதரி??????