இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜ் கடந்த மாதம் 9-ம் தேதியுடன் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நாடு முழுக்க அவருக்கான நன்றி நவிலல்கள் அரங்கேறின. சுமார் 23 ஆண்டு காலம் இந்திய அணிக்கு அவர் செய்த பங்களிப்புகள் பெரிதும் கொண்டாடப்பட்டது. தலைப்புச் செய்திகள் அவரது பெயரைத் தாங்கி வந்தன. பல 2k கிட்ஸ்கள் கூட மிதாலி ராஜை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். மகளிர் கிரிக்கெட்டுக்கென தனி IPL போட்டிகள் நடத்த வேண்டுமென பல தேசங்களில் இருந்து குரல்கள் எழும் போதெல்லாம் காதுகளை மூடிக்கொண்டு கடக்கும் பிசிசிஐ அமைப்பின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு மிதாலி இவ்வளவு பெரிய புகழுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
மிதாலி ஏன் இந்தளவு கொண்டாடப்படுகிறார்? மகளிர் கிரிக்கெட் பேட்டிங் சாதனைகளில் கிட்டத்தட்ட அத்தனையும் அவரிடம் தான் இருக்கிறது. இந்திய அணி எப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் நங்கூரம் போட்டுக் காத்தவர் மிதாலி தான். அதிலெல்லாம் மறுப்புகளே இல்லை. ஆனால், மிதாலியின் பங்களிப்பை வெறும் களத்திற்குள் மட்டுமே சுருக்கிப் பார்ப்பது நிச்சயம் அவருக்கான மரியாதையைக் கொடுத்துவிடாது. இளையராஜா ஏன் இந்தளவு கொண்டாடப்படுகிறார் என்று யோசித்திருக்கிறீர்களா? ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த காரணத்துக்காகவா? அல்ல; அக்கால ஆஸ்தான நாயகர்களின் படங்களை எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஓட வைத்ததாலா? இல்லை. இதுதான் காரணங்கள் என்றால் இளையராஜாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதும் அவரும் காணாமல் போயிருக்க வேண்டும்தானே?
ஆர்மோனியத்தை மட்டும் நம்பி களத்திற்கு வந்த இளையராஜா, வந்த சிறிது காலத்திற்குள்ளேயே பல தயாரிப்பாளர்களை தன்னுடைய கார் பின்னால் ஓடி வர வைத்தார். மேல்தட்டு ஆட்களுக்கு என்று மட்டுமே இருந்த இசையை நம் போன்றவர்களிடமும் கொண்டுவந்து சேர்த்தார். இந்திப் பாடல்களுக்கு 144 தடை உத்தரவு போட்டார். இளையராஜா வந்து இந்த சிஸ்டத்தை சரி செய்திரா விட்டால் பள்ளிக்கு கட்டணம் செலுத்தக் கூட முடியாத நிலையில் இருந்து வந்த ரஹ்மான் ஆஸ்கர் வரை சென்றிருப்பது நிச்சயம் ஒரு சதவீதமாவது குறைந்திருக்கும் அல்லவா? இதுதான் மித்தாலியின் கதையும். மிதாலி ராஜ் முதன் முதலில் மகளிர் கிரிக்கெட்டுக்குள் கால் வைக்கும் போது, மகளிர் கிரிக்கெட் பணம் காய்க்கும் மரமாக எல்லாம் இருக்கவில்லை. மகளிர் ஆட்டங்கள் எல்லாம் எப்போதாவதுதான் நடக்கும். தற்போது இருப்பது போல ஆண்டுக்கு இவ்வளவு சம்பளம் என்றும் கிடையாது. ஆட்டங்கள் நடந்தால்தான் காசு. ஆட்டங்கள் என்றால் அதுவும் முன்பு அத்தி பூத்தது போலத்தான். ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன். வெறும் ஓராண்டு காலம் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஹர்திக் பாண்டியாவும், சுமார் 23 ஆண்டு காலம் டெஸ்ட் விளையாடியுள்ள மித்தாலியும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான போட்டிகளில்தான் ஆடியுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்காக இருந்ததே தவிர தொழிலாக எல்லாம் அப்போது இல்லை. இந்த சூழலில் தான் மிதாலி கேப்டன் ஆகிறார். ரஜினி கூறியது போல சிஸ்டம் மிக மிக மோசமாக இருந்தது. மிதாலி ஒன்றும் சூப்பர் உமன் இல்லையே.. போன உடன் எல்லாவற்றையும் மாற்றுவதற்கு. அவருக்கு காலங்கள் தேவைப்பட்டன. 2012-ல் இலங்கையில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் வெளியேறியது. அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை மிதாலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாக நான் கருதுவேன். கிட்டத்தட்ட அண்ணாமலை படத்தில் ரஜினி சவால் விடும் காட்சிக்கு ஒத்தது அது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் ஒரு பத்திரிக்கை பேட்டிக்காக மிதாலி காத்திருந்தார். ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு எந்த ஒரு பத்திரிக்கையாளரும் பேட்டி காண ஆர்வம் தெரிவிக்கவில்லை என்று மிதாலிக்கு கூறப்பட்டது. தொடர் முடிந்த பின்னும் ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே வந்திருந்தார். கொடுமை என்ன என்றால், பல பத்திரிகையாளர் உங்களிடம் கேள்வி கேட்பது போல உங்கள் தலையையும் பார்வையையும் வலது இடது என திருப்பி திருப்பி பதில் சொல்லுங்கள் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. எல்லாக் கேள்வியும் முடிந்த பிறகு, “என்றாவது ஒரு நாள் பெண்கள் கிரிக்கெட் குறித்த நிகழ்வுகளுக்கும் பத்திரிக்கையாளர்கள் நிரம்பி வழிவார்கள்” என்று கூறிக் கொண்டே எழுந்து சென்றார் மிதாலி ராஜ். நிச்சயம் இது ஆருடம் அல்ல. ஒரு சவால். ‘பெண்கள் கிரிக்கெட் எப்படி மாறுகிறது என்று பார்!’ என மிதாலி விட்ட சவால் அது.
ஒரு முறை, “நாளிதழ்களில் ஏதோ ஒரு மூளையில் மகளிர் கிரிக்கெட் குறித்த செய்தி இடம்பெறுவதை நாம் மாற்ற வேண்டும்” எனக் கூறினார் மிதாலி. மாற்றங்கள் மெல்ல நடக்கத் தொடங்கியது. மிடில் ஆர்டரில் தனியாக நின்று எண்ணற்ற முறை இந்திய அணியை தாங்கிப் பிடித்தார் மிதாலி. மகளிர் கிரிக்கெட்டை பின்பற்றுவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரிக்க ஆரம்பித்தது. மந்தனா, ஹார்மன்ப்ரீட், ஜெமிமா போன்ற எத்தனையோ வீராங்கனைகள் தைரியமாக மகளிர் கிரிக்கெட்டுக்குள் கால் வைக்கத் துவங்கினர். WBBL போன்ற பெரிய தொடர்களில் இந்திய வீராங்கனைகளை BCCI பங்கேற்க அனுமதித்தது. இந்திய கிரிக்கெட்டின் தரம் உலகம் முழுக்கத் தெரியத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கும் ஆண்டுக்கு இவ்வளவு உறுதியான சம்பளம் என்ற திட்டத்தை பிசிசிஐ கொண்டு வந்தது.
மகளிர் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர், அதிக போட்டிகளில் ஆடியவர், அதிக ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடியவர் என்ற எல்லா சாதனையையும் மிதாலியிடம் வந்து சேர்ந்தது. ஆனால், இது எல்லாவற்றையும் விட மிதாலியின் பெரிய சாதனை என்ன தெரியுமா? கடந்த 2017-ல் இந்தியா உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்று நாடு திரும்பியது. விமான நிலையத்தில் வீராங்கனைகளால் நகரக்கூட முடியாத அளவு ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். 2012-ல் ஒரே ஒரு பத்திரிகையாளர். 5 வருடத்திற்குள் எண்ணற்ற பத்திரிகை ஆட்களை தனது அணி முன் நிற்க வைத்தார் மிதாலி ராஜ். எந்த மாற்றத்தைக் கொண்டு வர மிதாலி உழைத்தாரோ அந்த மாற்றம் வந்துவிட்டது. மிதாலி சவாலில் வென்று விட்டார்.
தன்னுடைய பாதையில் மிதாலி கடைசி வரை உறுதியாகச் சென்றார். ஒரு முறை உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்? என்ற கேள்விக்கு, இதே போல ‘உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று எந்த ஆணிடமாவது கேட்டுள்ளீர்களா?’ என்று சற்று காட்டமாகக் கேட்டார் மிதாலி. மிதாலியின் எண்ணம் முழுதும் மகளிர் கிரிக்கெட்டையே சுழன்றது கடைசி வரை. தான் எடுத்துக் கொண்ட நோக்கம் ஓரளவு வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியுடனே ஓய்வு பெற்றிருப்பார் மிதாலி ராஜ். வரும் காலத்தில் பெண்கள் கிரிக்கெட்டைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமாக செல்வர், மகளிருக்கான IPL உருவாக்கப்படும், ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும். இந்த எல்லா மாற்றங்களிலும் மிதாலியின் ஒரு துளி வியர்வையாவது நிச்சயம் இருக்கும்.
******