“பேய் வீடு”
மிரட்சியுடன் ஓடி வந்தான் மித்ரன்.
நண்பர்கள் (ஒரே குரலில்): என்னாச்சுடா?
மித்ரன்: டேய் அந்த வீட்டுல பேய் இருக்குதுடா.
அவன் சொன்னதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எல்லோரும் அந்த வீட்டை நோக்கி ஓடினர்.
ஜனனி: நிஜமாவாடா?
மித்ரன்: உண்மையாதான். நான் இப்போ உள்ள போய் பாத்தேனே.
அமுதா: அவன் சும்மா சொல்றான். பேய்லாம் இங்க இல்ல.
மித்ரன்: நான் பொய் சொல்றேனா? முதல்ல நீ உள்ள போய் பாத்தியா?
அமுதா: இல்ல. ஆனா, பேய்னு ஒன்னு கிடையவே கிடையாது.
மித்ரன்: அந்த வீட்டுல இருக்கு. உனக்கு வேணும்னா போய் பாத்துட்டு வா.
ஆதவன், ஜனனி, தீபக், மருதாணி எல்லோரும் அந்த வீட்டை நோக்கி ஓடினர். அதற்குள்ளேயே இன்னும் சிலர் உள்ளே போய் வந்திருந்தனர். எல்லோரும் பயந்து போயிருந்தனர்.
ஜனனி: அம்மு. நான் உள்ள போனேன். படிக்கட்டுல ஏறிக்கிட்டே இருந்தேன். ஆனா, அது முடியவே மாட்டேங்குது! போய்க்கிட்டே இருக்குது.
மருதாணி: என்னக்கா சொல்ற? நிஜமாவா?
ஜனனி: ஆமா மருதாணி. ஏதேதோ சத்தம் வேற கேக்குது.
மருதாணி: அப்போ நெஜமாவே உள்ள பேய் இருக்குதா?
தீபக்: நான் உள்ள போறேன். யாரெல்லாம் வர்றீங்க?
ஜனனி: இன்னொரு தடவ நான் வரலப்பா. எனக்கு பயமா இருக்கு.
ஆதவன், மருதாணி இரண்டு பேரும் வாங்க. உங்க வீட்டுக்குப் போலாம்.
மூவரும் ஆதவன் வீட்டுக்கு சென்றனர். ஆதவன் அம்மா தேங்காய் பர்பி தயார் செய்து கொண்டிருந்தார்.
ஜனனி: ஆண்ட்டி, எனக்கு கொஞ்சம் தண்ணி குடுங்களேன்.
ஆதவன் அம்மா: இங்க வந்து பானையில இருந்து எடுத்துக் குடி.
ஜனனி: சரிங்க ஆண்ட்டி.
ஆதவன் அம்மா: எல்லாருக்கும் விளையாடி டயர்ட் ஆகிட்டீங்களா?
ஜனனி: இல்லைங்க ஆண்ட்டி. அங்க ஒரு பேய் வீடு இருக்கு. அதுக்குள்ள போய்ட்டு வந்து ஒரே பயமா இருக்கு.
ஆதவன் அம்மா: பேய் வீடா? அது எங்க இருக்கு?
ஜனனி: நம்ம தெரு முக்குல ஒரு ப்ளாக் கேட் போட்ட வீடு இருக்கே! அங்கதான் ஆண்ட்டி.
ஆதவன் அம்மா: யார் சொன்னா உனக்கு?
ஜனனி: மித்ரன்தான் சொன்னான்.
ஆதவன் அம்மா: எங்க அவன்?
ஜனனி: தெரியல ஆண்ட்டி. எங்ககிட்ட சொல்லிட்டு எங்கயோ போய்ட்டான்.
ஆதவன் அம்மா: ஓஹோ!
ஜனனி: நம்ம தெருவுல இருக்க எல்லா பசங்களும் அங்கதான் நின்னுட்டு இருக்காங்க.
ஆதவன் அம்மா தேங்காய் பர்பியை கொஞ்சம் கொஞ்சமாகத் தயார் செய்து கொண்டிருந்தார். இனிப்பு கலந்து பாத்திரத்தில் வைத்து தட்டினார்.
ஆதவன்: அம்மா, நான் போய் பாக்கட்டுமா?
ஆதவன் அம்மா: இருங்க. நானும் வரேன் போகலாம்.
மருதாணி: அங்கல்லாம் வேண்டாம்மா. எனக்கு பயமா இருக்கு. அண்ணன் கிட்ட போக வேண்டாம்னு சொல்லுங்க.
ஆதவன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பா. நாம போய் பாத்துட்டு வரலாம்.
மருதாணி: வேண்டாம்னா, பேய்னா ரொம்ப பயங்கரமா இருக்கும்.
ஆதவன் அம்மா: மருதாணி பாப்பா, பேய்னு ஒன்று கிடையவே கிடையாது. முதல்ல நீ எதுக்கும் பயப்பட கூடாது. நாம எல்லாரும் போய் அங்க என்னதான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்.
ஆதவன்: பாத்தியா அம்மாவே சொல்லிட்டாங்க. பயப்படாத பாப்பா. என் கையப் புடிச்சிக்கோ.
மருதாணி: சரிண்ணா.
ஜனனி: ஆண்ட்டி. நீங்க அங்க போறீங்களா?
ஆதவன் அம்மா: ஆமா ஜனனி. தனி காட்டுல தூரமா இருக்குனா கூட பூச்சி எதாவது வந்துரும் அப்படின்னு நாம பயப்படலாம். நமக்கு பக்கத்து வீட்டில் பேய் இருக்குன்னு சொன்னா நம்பலாமா? அங்க என்னதான் இருக்குதுனு பார்ப்போம்.
தேங்காய் பர்பியும் தயாராகி விட்டது. ஆதவன் அம்மா தேங்காய் பர்ப்பியை எடுத்துக்கொண்டு வந்து தெருவில் இருக்கும் எல்லாச் சிறுவர்களுக்கும் கொடுத்தார். கொடுத்துவிட்டு அந்த வீட்டை நோக்கிச் சென்றார். வாசலில் மரியம், மித்ரன், அபி, தீபக், எல்லோரும் நின்று பயந்தபடியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஆதவன் அம்மா: எல்லாரும் என்ன பண்றீங்க?
தீபக்: ஆண்ட்டி இதுக்குள்ள பேய் இருக்கு.
ஆதவன் அம்மா: நீ பாத்தியா?
தீபக்: ஆமாங்க ஆண்ட்டி. இப்பதான் போயிட்டு வந்தேன். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.
ஆதவன் அம்மாவும் அந்த வீட்டிற்குள் சென்றார். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் சில நாட்கள் முன்புதான் காலி செய்திருக்கிறார்கள். கொஞ்சம் குப்பையாக கிடந்தது. பக்கத்து வீட்டில் மோட்டார் போடும் சத்தம், வீடு புழங்கும் சத்தம் போன்றவை கேட்டன. ஒரு மாடி ஏறிய பின்னர், முதல் மாடி வீடு பூட்டிக் கிடந்தது. மற்றபடி அங்கே ஏதுமில்லை. முதல் மாடியே முழுதாக ஏறாமல்தான் எல்லோரும் பேய் இருக்கிறது என்று பயந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆதவன் அம்மா எல்லோரையும் கூப்பிட்டு வீட்டைக் காட்டி விளக்கிக் கூறினார். சரியாக மித்ரன் கீழே வரும் சத்தம் கேட்டது. எல்லோரும் கீழே இறங்கி அவனை துரத்திக் கொண்டு ஓடினர். மித்ரன் கத்தியபடியே ஓடினான்.
“அந்த வீடு இருட்டா இருந்துச்சு. அதனாலதான், பேய் வீடுனு சும்மா அடிச்சுவிட்டேன். எல்லாரும் பயந்தீங்களா? ஹா… ஹா…”
******