மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
கட்டுரை | வாசகசாலை
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு.
இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே போனேன்.
எண்பதுகளில் எழுதத் தொடங்கின காலத்தில் கவிதைகளை அச்சில் பார்ப்பதென்பது தெய்வத்தை நேரில் பார்க்கிற மாதிரிதான். தான் சந்திக்கிற இலக்கிய ஆளுமைகளிடம் இப்போது நீட்டுகிற மாதிரி ஒரு அச்சிட்ட கவிதை நூலைத் தர முடியாது. கையெழுத்தில் எழுதியத் தாளைத்தான் காட்ட முடியும். அக்காலத்தில் எந்த எழுத்து ஆளுமைகளும் நிராகரிக்க மாட்டார்கள். உள்ளம் பொங்க வாங்கி வாசிப்பார்கள். சிலர் எழுதியவரையே வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். ஜோலார்பேட்டைக்கும், வாணியம்பாடிக்கும், திருப்பத்தூருக்கும், வேலூருக்கும் வருகை புரிந்த கே.சி.எஸ்.அருணாசலம், பொன்னடியான், வலம்புரிஜான், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, ஜெயகாந்தன், பொன்னீலன், அப்துல் ரகுமான், அப்துல் காதர், இஃபால் (இம்மூன்று ஆளுமைகளும் வாணியம்பாடியிலேயே அடிக்கடி சந்திப்பேன்). அறிவுமதி, ஈ.ராமதாஸ் அனைவரிடமும் நான் நீட்டியது கவிதை நூலை அல்ல, கவிதைத் தாளைத்தான். அவர்களிடம் தந்துவிட்டு வாசிப்பதைப் பார்த்துக்கொண்டு அருகாமயிலேயே நிற்பேன். அவர்களின் முக பாவங்கள்தான் அந்தக் காலத்து விருதுகள். ‘நீயேதான் நிதானன்’ தாளைப் பார்க்கும்போது அந்த ஞாபகம்தான் வந்தது. பொன்னடியான், வலம்புரிஜான் நல்லக் கவிதைகளென்று தெரிந்தால் வாங்கி வைத்துக் கொள்வார்கள். தாய் பத்திரிகையிலும், முல்லைச்சரம் பத்திரிகையிலும் வெளியாகும்.
தாய் பத்திரிகை எழுத்தாளர் பாலகுமாரனோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. மாவட்டத்திற்கு ஒரு வாசகரை தேர்வு செய்திருந்தனர். வடஆற்காடு மாவட்டம் சார்பாக என்னை அழைத்திருந்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் நிகழ்வு. தாய் பத்திரிகையில் துணையாசிரியராக இருந்த பாபநாசம் குறள்பித்தன் அவர்கள் என்னை வரவேற்றபோது என் பெயரைக் கேட்கவில்லை. ஒரு துண்டுத் தாளைக் கொடுத்து ஏதாவது நான்கு வரி எழுதிக் கொடுங்கள் என்றார். பாலகுமாரன் எழுத்தைக் குறித்து நான்கு வரி எழுதித் கொடுத்தேன். என் கையெழுத்தைப் பார்த்து “நீங்கள்தானே நாராயணி கண்ணகி?” என்று கேட்டார். அதிர்ந்து விட்டேன். ஆனால், அதுதான் நிஜம். ஒருவரின் கையெழுத்துப் போன்று இன்னொருவரின் கையெழுத்து இருக்கவே இருக்காது. கைரேகை வேண்டுமானாலும் ஒருவரின் கைரேகைப் போல் இன்னொருவரின் கைரேகை வந்து விடலாம், கையெழுத்து வரவே வராது. அண்ணாவின் கையெழுத்து வேறு, கலைஞரின் கையெழுத்து வேறு, கண்ணதாசனின் கையெழுத்து வேறு.
இந்தக் கையெழுத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறோம். கவிதையைவிட கையெழுத்து தனித்துவமாகத் தெரிய வேண்டும். குண்டு குண்டாக, அழகாக எழுதுவது கவிஞனுக்கு அழகல்ல, அது பள்ளிப் பிள்ளைகளின் பரீட்சைத் தாள்களைப் போலிருக்கும். எழுத்துகள் ஒவ்வொன்றும் ஓவியம் போல் தீட்டுவோம். மயக்குவோம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்துரு உவப்பாக இருக்கும். கவிஞர் தேவசீமா இந்தத் தொகுப்பிற்காக தேவசீமா என்ற பெயரிலேயே கணினி அச்சுக்காக எழுத்துருவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். நானும் எண்பதுகளில் மற்றவர்களின் கையெழுத்தைவிட தனித்துவமாக தெரிய வேண்டுமென்று எழுத்துகளில் சித்துவேலைகளும், சித்திர வேலைகளும் செய்தது ஞாபகத்தில் வராமல் இல்லை.
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கையெழுத்து இருப்பதைப்போல் அல்லது இருந்ததைப் போல் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான எழுத்துருவை வருங்காலங்களில் உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு கவிஞர் தேவசீமா மட்டுமே… ஆமாம் தேவசீமா மட்டுமே முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மூன்றாவதாக, உலகின் எத்தனை உயர்ந்த எழுத்தாளனாக இருந்தாலும், கவிதையையோ, கதையையோ எழுதும் நேரம் இடைஇடையே வார்த்தைச் சிக்கலில் முக்கும்போது, மூளையும், பேனா முனையும் அமைதியாய் இருக்காது, காலியாக இருக்கும் தாளின் ஓரத்தில் பூவையோ, புல்லையோ, விண்மீன்களையோ, கண்களையோ, மீனையோ, பூனையையோ வரைந்து கொண்டிருக்கும். தேவசீமாவின் இந்தத் தாளின் வடிவமைப்புப் பார்க்கும்போது, கவிதைகளுக்குப் பக்கத்தில் கிறுக்கப்பட்டிருந்த சின்னச்சின்ன ஓவியக் கிறுக்கல்கள் என் எழுத்து நோட்டுகளிலெல்லாம் சீந்துவாரற்று படுக்கையில் முனகிக் கொண்டிருக்கும் ஓவிய மூதாதைகளுக்கு வைத்தியம் பார்த்து கன்னிப் பெண்ணாக்கி விட்ட மாதிரியான இன்பம் உண்டானது. என் பழைய நோட்டுக் கூண்டுகளைத் திறந்து சிட்டுக்கிளிகளைப் பறக்க விட்டேன்.
ஆண்ட்ராய்ட் போன் சட்டைப்பையைப் பட்டா போடுவதற்கு முன்பான காலங்களில், எல்லாக் கவிஞர்களின் சட்டைப்பையிலும் எட்டாய் மடித்த வெள்ளைத்தாள் இருக்கும். பஸ்ஸில் போகும்போது, இரயிலில் போகும்போது, அலுவலகத்தில் இருக்கும்போது ஊற்றெடுக்கும் கவிதைகளை இந்த மடித்து வைத்த தாளில்தான் பிடித்து வைப்பார்கள். வாரம் கழித்தோ, மாதம் கழித்தோ அந்தத் தாளை மேசை மீது விரித்து வைத்து, வாசிக்கும்போது அடடா இந்தக் கவிதையை நாமா எழுதினோம். என்னவொரு சிந்தனையென்று நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம். இந்த ஓரிகாமி வடிவத்தைப் பார்க்கும்போது அந்தப் பழைய கம்பங்கூழின் வாசமும், கருவாட்டு குழம்பின் மணமும் நெஞ்சை நிறைத்தது.
கவியரங்கங்களில் வாசிக்கப் போகும்போது. என் கவிதைத்தாள் இப்படித்தான் இருக்கும். எட்டாய் மடிக்கப்பட்ட தாள். ஒரு முறை கவியரங்கத்திற்கு தலைப்பு ‘கடல்’. நான் மைக்கின் முன் நின்று சட்டைப் பையிலிருந்து எட்டாய் மடித்து வைத்திருந்த தாளை விரிக்கிறேன். பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் கேட்கிறார். “கண்ணகி! கடலையே மடிச்சி ஜோப்பியில போட்டுனு வந்துட்டியா?” என்று. இன்னொரு மாதம் கவியரங்கத் தலைப்பு கரும்பு! “இவன் கரும்புக்கொல்லியை மடிச்சி ஜோப்பில போட்டுனு வந்துருக்காண்டா” என்பார். நீயேதான் நிதானன் கவிதைத் தொகுப்பைப் பார்த்தபோது இந்த ஞாபகங்கள் வாசல் தெளித்தது.
தேவசீமா ஆயிரம் நிதானங்களை இந்தக் குப்பிக்குள் நிரப்பி வைத்துள்ளார். சரி யார் நிதானன்?
இதை வாசிக்கிற அனைவருமே நிதானன் ஆவார்கள். அதுதான் தலைப்பு செய்யும் சித்து வேலை! மாயாஜாலம்! ஜெகமோகம், பூரண லேகியம்.
நீயேதான் நிதானன்
நீ இந்தத் தொகுப்பை கையில் எடுக்கிற கணத்தில் நீயேதான் நிதானன். அத்தனை ஆண்களும்தான் இந்த நிதானன்.
மெழுகுவர்த்தி
உனையறியும் விழைவு
ஒற்றைத்திரியில்
ஏற்றப்பட்டுவிட்டது
சுற்றியுள்ள பனிக்கயிறுகள்
கொடுங்காமமொன்றின்
மென்சாட்சி
படையல்
உனக்கென்ன
சுருட்டு
சாராயம்
கஞ்சா
கெடா
எனக்கு நீ
******