
கலைந்த மேகங்களுக்கிடையே
கலங்கும் வெளிச்சக்கீற்றைப் போல
அமைதியின் மென்னதிர்வுக்குள்ளே
அவிழும் மெல்லிசையைப் போல
தனிமை நேரங்களுக்கிடையே
தழுவும் முள்நினைவுகளைப் போல
விலகலின் உவர் கண்ணீரில்
பெருகும் அவன் இன்புன்னகை
இதுவும் காதலே
அக்காதலுக்குச் சந்திப்புகள்
தேவையிருக்கவில்லை
கொஞ்சும் அளவலாவல்கள்
வேண்டியிருக்கவில்லை
சேர்வோம் என்ற நம்பிக்கைகள்
தேவையிருக்கவில்லை
நானும் என்ற பதில் கூட
வேண்டியிருக்கவில்லை
அது ஆழத்தின் அடிவாரத்தில்
ஆர்ப்பாட்டமில்லா
பச்சைப் புல்வெளியாய்
விரிந்திருக்கிறது.
அதனைப் பார்ப்பாரில்லை
அதனழகை ரசிப்பாரில்லை
இதுவும் காதலே
அக்காதல் புனிதம் இல்லை
களங்கமும் இல்லை
எதுவும் கேட்கவில்லை
எதுவும் விளக்கவுமில்லை
அது காட்டுப்பூவில் வீழ்ந்த
சிறு பனித்துளியாய்
தூய்மையாகவும் வாசமாகவும்
மென்மையாகவும் கலக்கமாகவும்
உறைந்து போயும்
கரைந்துகொண்டே இருந்தது.
அதை என்னவென்று சொல்வதற்குள்
விலகிச்சென்றதைத் துன்பமென்பதா
என்னுள் அவன் தீர்வதற்கு
முடிவில்லா நாட்கள் உள்ளதை
வெறும் பிதற்றலென்பதா
இதுவும் காதலே
தூய்மையின் மடியில்
துயில் எழ வேண்டி
தூரத்தில் விலகியது
அவன் நியாயம்
தூய்மையும் தூரமும்
இரண்டையும் அவனோடு
அவனென அணைத்துக்கொண்டு
காதலில் கலந்தது
அவள் நியாயம்
இருளை விடவும்
அதிதூய்மையானதும்
வெண்மையை விடவும்
அழுக்காகக்கூடியதும்
இங்கு உண்டா?
வானமும் வேரும் இணைந்து
பார்த்தவருண்டா?
வெளிச்சமும் மழையும் போதாதா?
இது வேருக்கு மட்டுமே புரிந்தது
வானுக்கு என்றும் புரிவதில்லை
எனினும் வானம்
பொழிவதை நிறுத்துவதில்லை
இதுவும் காதலே.
*******
தூர்வாரிக்கொண்டே
இருந்தார்கள்
அக்கிணற்றை
சிலநாள் கழித்து அதில்
தண்ணீரும் இல்லை
மண்ணும் இல்லை
இன்றும்
வாரிக்கொண்டிருக்கிறார்கள்
தாகமும் பசியும்
அடக்க அது
வாரிக்கொண்ட
வாழத் துடித்த
அன்பின் எலும்புகளை
திணறுகிறது பாழுங்கிணறு!
*******
விலகிச்செல்வது
எப்படி
என்பதையும்
அவன் விரல்களைப்
பற்றிக் கொண்டே
கற்றுக்கொள்ள
வேண்டியிருக்கிறது!
**********
ஒருவேளை நான்
இறந்துவிட்டால்
என்று ஓர் அலாதிக்
கற்பனை!
முகநூலில்
என் படத்திற்குக் கீழே
அழும் ஒரு சில
R.I.P இமோஜிகளுடன்
உன் பதிவும் அழுவது
போல முகம்
சுருக்கிக் கொண்டிருக்கும்
அவ்வளவுதான்
நான் உனக்கு
இறப்பதும் வேதனை
என இன்று
தோன்றுகிறது!
*********