“வீரத்தால் ஆண்டவன்; சோழத்தின் ஆண்டவன்!” – சோழவேங்கை கரிகாலன் நூல் மதிப்புரை – வித்யா கண்ணன்
கட்டுரை | வாசகசாலை

நாயகன் எவனும் வானிலிருந்து விழுவதில்லை.தன் மண்ணிலிருந்தே முளைக்கிறான். தன் முயற்சியால் விருட்சமாக பேருருக்கொள்கிறான். இதனை மெய்ப்பிக்கும் வகையில சோழத்தின் வித்து கருக்கொண்ட நாள் முதல் மறைந்து வாழ்ந்து, கலைகளில் தேர்ந்து , எவரும் எதிர்நிற்க எண்ணாத , எவரும் எதிர்க்க எண்ணாத மாவீரன் கரிகாலனாக உருக்கொண்டது வரையிலான நிகழ்வுகளை முழுதாக விவரிக்கிறது இந்த நாவலின் முதல் பாகம்
இளஞ்சேட்சென்னியின் காதலில் கரைவது முதல் அவனை வஞ்சகத்தில் பலிகொடுத்து, வெஞ்சினத்தை சினம் முடித்து, வீரத்தையும் மதியூகத்தையும் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு நொடியும் பன்மடங்காக்கிக் கொண்டே ஒளிவீசும் பச்சை மாணிக்கமாக மிளிர்கிறாள் சோழத்து பேரரசி பேரழகி இளவெயினி. பகைவர்கள் காணாமல் தனித்திருந்து மகவைப் பெற்று, பிறந்த நொடியில் சூரியனுக்கு அவனைக் காட்டுவது தொடங்கி அவனை வீரத்தில் வானை நோக்கிப் பாயும் வேங்கையாக வளர்த்தெடுத்து சோழத்தின் அரியணையில் அவனை அமர்த்துவது வரையிலான பெரும்பணி இளவெயினிக்கு.
இளவெயினியின் திட்டங்களோடு இரும்பிடார் போல ஒரு பெருவீரனின் பயிற்சிகளோடு வளவனையும், மற்ற பிள்ளைகளையும் வீரக் கலைகளிலும் , கல்வியிலும் சிறந்தவர்களாக வார்த்தெடுக்கும் களங்களை வாசிக்கும் போது, அங்கே நாமும் ஒரு பிள்ளையாகிவிடவோ அல்லது அதே போல் மீண்டும் ஒரு பிள்ளையை வளர்க்கவோ வரும் ஆசையை தவிர்ப்பது கடினம்.
பாண்டியன் சோழத்திற்கு எதிரான நிலையை எடுக்க அவர் புனைந்திருக்கும் பொற்குலத்தின் கதையும், அங்கே பாண்டிய இளவரசன் நம்பிக்கும் இரும்பிடாருக்குமான அட்டகாசமான போர் உத்திகளும் வரப்போகும் பெரும் போர்களுக்காக கையில் வாளெடுத்துக் கொடுத்து நம்மை போரை வாசிக்கத் தயார் படுத்துகின்றன. கதையை நகர்த்தும் உரையாடல்களும், நிகழ்வுகளை வருணிக்கும் சொல்லாடல்களும், கதைமாந்தர் குணங்களை விளக்கும் காட்சிப்படுத்தும் வரிகளும் கதையின் போக்கில் இணைந்து வரும் பல தத்துவார்த்தமான பஞ்ச் வரிகளும் வெகுவாக ஈர்க்கின்றன.
ம செ , ஸ்யாம் இவர்களின் வண்ண ஓவியங்கள் பாத்திரங்களை நம் கண்முன் நிறுத்தும்படி உள்ளன. 500 பக்கங்களுக்குள் எத்தனை போர் காட்சிகள்! ஆனால், ஒன்று போல் ஒன்றில்லாத காட்சியமைப்பும், ஆயுத வகைகளும் , பொறிகளும் , உத்திகளும் கொண்டு அக்காட்சிகளை வாளால் எழுதி நம் மனதில் பதிய வைக்கிறார் எழுத்தாளர்.
மொத்த கதையோட்டத்தையும் அழகான மொழியால் விவரத்துடன் ஒவ்வொரு களத்தின் தாவரங்கள், ஆயுதங்கள், கலைகள், உணவுப் பழக்கங்கள், இசைக்கருவிகளின் வகைகள், அவை பயன்படும் விதங்கள், போர் முறைகள், படைகளின் வகைகள், களரியின் வகைகள், களமாடும் முறைகள், வாள் வீச்சின் நுட்பங்கள், காதலின் மெல்லுணர்வுகள், காமத்தின் தொடுபுள்ளிகள் அனைத்தையும் கட்டியாளும் எண்ணத்தின் செய் நேர்த்தியையும் தன் எழுத்தில் தமிழின் துணையோடு கொண்டுவந்து வரலாற்று உண்மைகளை அடித்தளமாகி அவற்றை துளியும் சிதைக்காமல் நாம் விரும்பி ஏற்கும்படியான கதைக்களத்தில் இந்த நூல் எழுதப் பட்டுள்ளது.
அமைதியில் கருக்கொண்ட வளவனின் மனதில் அணுவைப் பிளக்கும் ஆற்றலை புகுத்தி எரிமலையாக கரிகாலனாக அவன் வெளிப்படும் கடைசிப் பக்கம் வாசிக்கும்போது அந்த வரலாற்று நாயகன் வீரத்தால் ஆண்டவன்; சோழத்தின் ஆண்டவன் நம் மனதில் நீங்காத இடம் பெற்று விடுகிறான்.
கரிகளை ஒற்றை வீச்சில் சாய்த்து கரிகாலன் என்று பெயர் பெற்று சோழநாடு திரும்பும் ஆயத்தங்களில் விறுவிறுப்போடு வேகமெடுக்கிறது இரண்டாம் பாகம். அத்தோடு வரலாறு கூறும் மற்றொரு நிகழ்வான கரிகாலன் சிறையெடுப்பும் அங்கே தப்பும் முயற்சியில் கால் தீக்கிரையாகும் கதையும் கூட உள்ளது. ஆனாலும் மாவீரனின் பெயருக்கான காரணம் கரிகளைச் சாய்த்ததே என்றே மனம் ஏற்கிறது. கரிகாலன் தன்னை உணர்ந்து எழுச்சி கொள்ளும் அந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் விதம் மிகச்சிறப்பு.
இருளைக்கிழித்து எழுஞாயிறு உதிக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கும் நமக்கு கரிகாலனும் இளவெயினியும் நாடு திரும்பும் கடைசி நிமிடம் வரை எதிரிகளின் தாக்குதல் பெரும் தவிப்பை உண்டாக்குகிறது. மக்களோடு மக்களாக ஆத்தி மாலை சூடி சோழவேந்தனின் வரவேற்பில், வெள்ளணி விழாவில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறது கதையின் விவரிப்பு.
ஒரு தேசத்தை கட்டியாள்வது எத்தனை தந்திரங்களை , மதியூகத்தை , அந்தந்த நேரத்தில் தகுந்த முடிவெடுக்கும் வேகத்தை உள்ளடக்கியது; அடுத்தவர் இடத்திலிருந்தும் ஒரு விஷயத்தை அணுகும் மனதை கொண்டவர் மட்டுமே அதனை சிறப்பாகச் செய்ய முடியும். சோழ தேசம் நீங்கிய நாள் முதல் இளவெயினியும் இரும்பிடரும், சோழத்திற்கு திரும்பியது முதல் கரிகாலனும் முன்வைக்கும் திட்டங்கள் , போர் வியூகங்கள் என எத்தனை கட்டமைப்பில் இந்தப் புனைவு எழுதப்பட்டிருக்கிறது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை!
அரியணை ஏறிய நிமிடம் முதல் போருக்கான ஆயத்தங்கள். வெண்ணியில் போர் என்பதைக்கூட முன்பே முடிவு செய்து விடுகிறாள் இளவெயினி. எதிரிகளை மனதால் கலைத்து விளையாடி கரிகாலன் போர் செய்யும் தருணங்கள் சிலிர்ப்பு.
புரவியில் படைக்கு முன் வந்து நின்று சபதமிட்டு, தாவி யானை மேலேறி கரிகாலன் கம்பீரமாக நிற்கும் அந்த ஒரு காட்சி போதும். அவன் மேல் காதல் கொள்ள! மகர வியூகத்திற்கு பாலிகை வியூகம்; யாளிக்கு சடாலம்; நீராளிக்கு வலம்புரி என்று வியூகங்களை விவரிக்கும் எழுத்தில் களத்திற்குள் நம்மை நிறுத்தி பதட்டத்தை ஏற்றிவிடுகிறார் எழுத்தாளர்.
பெண்களுக்கு இந்தப் புனைவில் அளிக்கப்பட்டிருக்கும் இடமும் திறனும் மிக உயர்வு. இந்தப் பதட்டமான தருணங்களுக்கு இடையேயும் தென்றலாய் பனிமுகிலின் காதலும் , ஆதிராவின் காதலும் கடிதமும் இதம் ஊட்டுகின்றன. சேரன் வடக்கிருப்பதற்கும் , கூட்டுப் படைகள் சிதறுவதற்கும் காரணங்களை கதையின் துவக்கம் முதலே தன் எழுத்தால் கட்டமைத்து உருவாக்கிய விதம் மிகச்சிறப்பு. எத்தனை ஆயுதங்கள், களரிப் பயிற்சி, போர் நுட்பங்கள், வைத்திய முறைகள், தேர் வகைகள், கள்வகைகள் என தகவல் சுரங்கமாக ஒரு நூல்.
எண்ணங்களை எழுத்தில் வடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்து வெண்ணிப்போர் களத்தை காலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது இந்த நூல். சோழவேங்கை மாவீரன் கரிகாலனின் சரித்திரத்தை ஒரு திரைப்படமாக எடுக்க எல்லா அம்சங்களுடன் நிறைந்த ஒரு கையேடு. ‘மரபுகளை உடைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கும் படைப்பு இது’ என்று விஜயாபதிப்பக உரிமையாளர் திரு வேலாயுதம் அவர்கள் சொன்னது நூறு சதம் உண்மையே !!
******