இறுதி ஊர்வலத்தில் சிதறும்
பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில்
கோபங்கொள்ள ஏதுமில்லை
பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை
மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள்
இருள் பூசும் போதெல்லாம்
உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை
நிலவுக்கு
எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின்
மஞ்சள் மினுங்கும் முகத்தைப் பார்த்தபிறகு வெளிவிட ஏனோ
மனம் வரவில்லை.
***
மழை விரியும் அடர்காட்டின்
குளிர்மைக்கு எரியூட்டுகிறது
உன் உள்ளங்கை கணப்பு
என்றோ தொலைந்ததாய் உணர்ந்த
ஒரு இடத்தில் மேல்நோக்கிப் போகிறது என் சூரியன்
தென்னை மரத்தின் மாலை மயங்கங்கள் வலசை போகும்
கடல் கடப்புகள்
மூச்சுக்குத் தவிக்கும் நெரித்தல்களில்
தாழ் திறக்கும் கதவுகள்
மூடிக்கிடக்கும் ஜன்னல்கள்
ஒரே ஒரு வழியனுப்புதலில்
உன் ஒட்டுமொத்தக் குற்றவுணர்வும்
கரைந்துவிடுமல்லவா
போய் வா.
***
மாயக்கரங்களை நீட்டி ஒரு வாக்குறுதி தருகிறாய்
கோயில் கலசத்தில் சிறகடிக்கும்
புறாவின் விழிகளில் பரவும்
ஒரு கடல்
இரவுமழையின் மிச்சமாக நடுங்கும்
சரிந்த கிளையில் உயிர்க்கூடு
மேல்நோக்கி எழுகிறது
இத்தனை நாளாய் நான்
சேமித்த கண்ணீர்.
*******