
அரபு நாடு ஒன்றில் நடக்கும் முதல் உலகக் கால்பந்தாட்டப் போட்டி நவம்பர் 20 ஆம் தேதி அசத்தலாகவும் அமர்களமாகவும் கொஞ்சம் வித்தியாசமாகவும் கத்தாரில் துவங்கியது. கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகக் கால்பந்துப் போட்டிகள் கத்தாரில் நடக்கும் என FIFA அறிவித்தது. அன்றிலிருந்து கத்தார் மீது பல குற்றச்சாட்டுகள், குறைகள் பாயத் துவங்கின. பெரும்பாலான குற்றசாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. இதோ இன்றும் கூட கத்தாரின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பப்படும் போலிச் செய்திகள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘கத்தார் என்பது சின்னஞ்சிறிய நாடு, அதுவும் அரபிய நாடு, இஸ்லாமிய நாடு, எனவே உலகக் கோப்பைப் போட்டி நடத்த அனுமதி வழங்கியது தவறு’ என்றனர் பலர். இன்னும் சிலரோ, ‘இங்கு மனித உரிமைகள் பின்பற்றப்படவில்லை, தொழிலாளர்கள் கொடுமைக்கு உள்ளாகிறார்கள், எந்தவித அடிப்படை உரிமைகளற்றே பெண்களும் மாற்று பாலினத்தவர்களும் வாழ்கிறார்கள், அவர்களுக்கு சம உரிமை கிடையாது’ போன்ற குற்றசாட்டுகளை பரப்பினார்கள். இப்படி புற்றீசல் போலத் தொடர்ந்து அவதூறுகள்.
கத்தார் எரிவாயு வளம் மிகுந்த நாடு. கத்தார் நாட்டு பூர்வகுடிகளின் எண்ணிக்கை கத்தாரில் வாழும் மற்ற நாடுகளைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவு. கத்தார் தனது வளங்களை வைத்து கல்விச் சாலைகள், அருங்காட்சியகங்கள், உயர் மருத்துவக் கட்டமைப்புகள், விளையாட்டு அரங்குகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நலம் போன்றவற்றை கடந்த 20 ஆண்டுகளாக மேம்படுத்தியிருக்கிறது. இன்றும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்வி, கலை, பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தை இம்மக்கள் உருவாக்கியுள்ளார்கள். உலகப் புகழ்பெற்ற அல்ஜசிரா எனும் செய்தி நிறுவனம் இங்குதான் உள்ளது. உயர் கல்வி மேம்பட உலகின் பல சிறந்த பல்கலைக்கழகங்களை வரவழைத்தது கத்தார். மிகச் சிறந்த நூலகங்களை உருவாக்கியுள்ளது. தனது நாட்டைச் சார்ந்தவர்கள் கல்வி பயில எந்தக் குறையும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கென பெரும் பணமும் செலவழித்து வருகிறது. இப்படி பண வளம் மட்டுமல்லாது கல்வியிலும், கலை, ஊடகம் விளையாட்டிலும் முன்னேற வேண்டும் என்கிற முனைப்போடு பயணித்துக் கொண்டிருக்கிறது கத்தார்.
இந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டிக்காக பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது கத்தார். எட்டு புதிய விளையாட்டு அரங்குகள் மற்றும் மெட்ரோ வசதியை உருவாக்கியிருக்கிறது. நவீன நகரங்களில் காணும் அனைத்து வசதிகளையும் உருவாக்கியுள்ளது. அனைத்து விளையாட்டு அரங்குகளும் குளிர்சாதன வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன. இப்படி தனது அதிரடி செயல்பாட்டால் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது கத்தார்.
ஆனாலும் பல எதிர்ப்புகள், போலி செய்தி பரப்புதல் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படியான சூழலில்தான் உலகக் கால்பந்துப் போட்டி துவங்கியது.
பொதுவாக இப்படியான விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில், அந்த தேசத்தின் வரலாறு, பண்பாடு, அறிவியல் துறையில் பங்களிப்புகள் போன்ற பெருமைகளை பறைசாற்றக் கூடிய நிகழ்ச்சிகள் வைத்திருப்பார்கள். “நாங்கள் யார் தெரியுமா!” என்கிற பெருமைப் பீற்றல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்தத் துவக்க விழா முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இரண்டே இரண்டு நபர்களை முக்கியப்படுத்தியே முழு நிகழ்வுகளையும் வடிவமைத்திருந்தார்கள்.
அந்த இருவரில் ஒருவர், Morgan Freeman! அமெரிக்க நடிகர். இவரின் குரல் தனித்துவமானது. ஆப்ரிக்க – அமெரிக்க நடிகர் இவர்.
மற்றோருவர் கத்தார் நாட்டைச் சேர்ந்த சிறுவன், Ghanim Al Muftah! முதுகுத்தண்டு முழுமையாக வளர்ச்சியடையாத முறையில் பிறந்தவர். Caudal Regression Syndrome என்கிற மருத்துவக் குறைபாடு கொண்டவர். மாற்றுத்திறனாளி. You tube, Instagram மூலம் பிரபலமானவர்.
நடிகர் ஃப்ரிமேனுக்கும், சிறுவன் க்யானிமுக்கும் நடக்கும் உரையாடலே துவக்க விழாவின் முக்கிய நிகழ்ச்சி. இருவரின் உரையாடல் பல செய்திகளை உலகுக்குச் சொன்னது. அந்த உரையாடலைக் கட்டமைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது. மாற்றுத்திறனாளியான க்யானிமை முதன்மைப்படுத்தியது, அவனை ஒரு ஆளுமையாகக் காட்டியது எல்லாமே Inclusiveness எனும் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மையை வெளிக்காட்டுவதாக இருந்தது.
அரங்கில் நுழைந்த ஃப்ரிமேன், “இங்கு கொண்டாட்டம், எனவே எல்லோரையும் அழைக்கிறோம் என எனக்கு சத்தம் கேட்டது… எப்பொழுதும் குழப்பங்கள் கொண்ட நிலமாகக் கருதப்பட்ட ஒரு இடத்திலிருந்து இப்படி ஒரு அழைப்பா! எனக்கு இது புதியதாகத் தோன்றியது, அதனால் என்ன ஏதுவென பார்த்துப் போக வந்தேன்” என்றார்.
இதற்குக் கத்தார் சிறுவன், “வாங்க … இங்கு உள்ளே வாங்க” என வரவேற்கிறான்.
“Am I welcome ?” என சந்தேகத் தொனியில் கேட்கிறார் ஃப்ரிமேன்.
“எல்லோரையும் வரவேற்கிறோம். இது அனைவருக்குமான அழைப்பு” என மீண்டும் தன் வரவேற்ப்பை உறுதி செய்கிறான் சிறுவனான க்யானிம்.
“பெரும்பாலும் இப்படியான அழைப்புகளை நாங்கள் நிராகரித்துவிடுகிறோம். அதைத் தவிர்த்துவிட்டு எங்கள் வழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கொள்கிறோம். அதன் விளைவால் உலகம் பிளவுண்டதாக உணர்கிறோம். ஒரே ஒரு வழிமுறைதான், சரியென்றால் இத்தனை தேசங்கள், இத்தனை மொழிகள், விதவிதமான மக்கள், இனக்குடிகள் அனைத்தும் எப்படி ஒன்றிணையும்?”
ஃப்ரிமேனின் இந்தக் கேள்விக்கு கத்தாரி சிறுவனின் பதில்தான் இந்த நிகழ்வின் முக்கியக் கட்டம்.
“மனிதர்கள் தேசங்களாகவும் இனங்களாகவும் சிதறிக் கிடப்பது ஏன் தெரியுமா? நாம் வேற்றுமைகளின் அழகையும் மாறுபாட்டையும் புரிந்துகொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளத்தான். இந்த நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்” என்கிறான் சிறுவன். இதற்கு குரான் வசனம் ஒன்றையும் எடுத்துக்காட்டாகக் கூறுகிறான். ஆனால் இதைச் சொல்லும்பொழுது இது குரான், எங்களுக்கு அல்லா அருளியது எனச் சொல்லாமல், ‘இப்படியான நம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்” எனச் சொல்லியிருப்பது எனக்கு மிகுவும் பிடித்திருந்தது.
மதம் சார்ந்த நம்பிக்கைக்கு ஒரு செக்குலர் டிவிஸ்ட் அளித்திருந்தது ரசிக்கும்படியாக இருந்தது. மதம் கடந்து அனைவருக்குமான வரிகள் இவை என்பதை அருமையாக உணர்த்தியது.
மேலும், “அரபிய நாடோடிகள், அவர்கள் தங்கும் இடத்தில் கூடாரம் போடுவார்கள். அதன் பெயர் Bait-al-Sha’ar. பையீத் அல் ஷார். அதுதான் அவர்களுக்கு வீடு. அந்தக் கூடாரத்துக்குள்தான் உங்களை வரவேற்கிறேன். சகிப்புத்தன்மையுடனும், மற்றவர்களுக்கு மரியாதை அளித்தும் உலகமெனும் பெருங்கூடாரத்தில் நம்மால் ஒன்றிணைந்து வாழ முடியும்” என அந்த உரையாடல் நிகழ்வு முடிவு பெற்றது.
அரபிய பாலைவனத்து நாடோடி வாழ்க்கையின் முக்கியக் கூறான, ‘கூடாரத்தை’ வைத்து அதற்குள் ஒன்றாய் வாழ ஒரே மொழி ஒரே இனமாக இருக்கத் தேவையில்லை, மாறுபாடுகளை ஏற்கும் சகிப்புத்தன்மையும் நம்மை விட மாறுபட்டவர்கள் மீது மரியாதையும் இருந்தால் போதும் எனச் சொல்லி விளக்கியது இன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. மேலும், இந்த நிகழ்வு நடக்கும் விளையாட்டு அரங்கும், ’பாலைவனக் கூடாரம்’ போன்று வடிமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 ஆண்டுகளாக உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அரபிய இஸ்லாமிய வெறுப்புணர்வு உலகெங்கும் பரவியுள்ளது என்பது புரியும். பெரும்பாலும் இவை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ’இவர்கள் இப்படித்தான்’ என்பது போன்ற ஒற்றைத்தன்மைக்குள் ஒரு மதத்தினர் மீது அசைக்க முடியாத பிம்பம் உருவாக்கப்பட்டது. செய்தித்தாள்கள், சினிமாக்கள், டிவி, சமூக ஊடகங்கள் எனப் பலவிதங்களில் இவை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக உருவாகியிருக்கும் இந்தப் போலி பிம்பக் கட்டமைப்பின் தாக்கத்தை இந்தியாவிலும் நாம் உணர்ந்தே வருகிறோம்.
இப்படியான எதிர்மறை பிம்பங்களைக் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கலாம், போராடலாம் அல்லது அதை ஏற்றுக்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம் இப்படியான இரண்டு வழிகள்தான் உண்டு. ஆனால் கத்தார் மூன்றாவதாக புதிய வழியை உருவாக்கியுள்ளது.
அனைத்து சமூகத்தினருக்கும் பயனளிக்கக் கூடிய கல்வி, கலை, ஊடகங்களுடன் தொழில்நுட்ப நிறுவனங்களையும் உருவாக்கினார்கள். மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக அவற்றை மாற்றினார்கள். அதன் மூலம் சமூகத்தில் தாக்கங்களை உருவாக்கி எதிர்மறை பிம்பங்கள் களைய பல முன்னெடுப்புகளை எடுத்தார்கள்.
இப்படியான எதிர்மறை பிம்பக் கட்டுமானங்களை உடைக்க கால்பந்தாட்டப் போட்டியையும் கத்தார் பயன்படுத்தியது என்பதை இந்தத் துவக்க விழா நிகழ்வில் உணர முடிந்தது. அதை மிகவும் கவித்துவமாக முன் வைத்திருந்தது ரசிக்கத்தக்கதாக இருந்தது.
வரலாற்றுப் பெருமைகள், பண்டைய போர்கள், வெற்றிகள், இதிகாசப் பெருமிதங்கள் போன்றவற்றைக் காட்டிலும் தங்களுக்குள் இருக்கும் உன்னதக் கருத்தை, உலகப் பொதுமைக்கான கருத்தை இப்படியான உலகமே உற்று கவனிக்கும் ஒரு விழாவில் கவித்துவமாகச் சொல்லுவதன் மூலம், “வாங்க பழகலாம்” என நேசத்தோடும் அன்போடும் கத்தார் அழைக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
இந்த முன்னெடுப்புகளும் முயற்சிகளும் வெற்றி பெறட்டும். வெவ்வேறு இனங்கள், தேசங்கள், நம்பிக்கைகள், பாலினங்கள், மாற்றுத்திறனாளிகள் இன்னும் பல்வேறு வகையான மக்கள் ஒன்றிணைந்து சகிப்புத்தன்மை பழகி, மரியாதை அளிப்பதன் மூலம் நம்மைப் பிரிக்கும் சக்திகளை ஓரங்கட்டுவோம். இப்படியான விளையாட்டுகள் போன்ற சக்திகளைப் பயன்படுத்தி மக்களை இணைக்கும் ஆக்கப்பூர்வமான காரியங்களை உருவாக்குவோம். பன்முகத்தன்மையைக் கொண்டாட்டமாக உணரச் செய்வோம். அப்படிச் செய்வதன் மூலம் உருவாகும் ஒன்றிணைப்பு உண்மையில் அழகான செயலாகத்தானே இருக்க முடியும்?
*******
மிக அருமையான உண்மையான பகிர்வு. வாழ்த்துக்கள்.