இணைய இதழ்இணைய இதழ் 61சிறுகதைகள்

நிமிர்ந்தவாக்கில் மிதப்பவள் – பத்மகுமாரி

சிறுகதை | வாசகசாலை

“யம்மா… யம்மா….” வானில் விழிக்கத் தொடங்கியிருந்த பறவைகளின் கீச்சொலியோடு சாரதா ஆச்சியின் ஓங்காரமான முனகல் சத்தமும் எங்கள் வீட்டு வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. நேற்று இரவு நான் விடுமுறைக்காக வீடு வந்து சேர்ந்த பொழுது, “ஒழுங்கா சாப்பிடுனா கேட்டாதான. மெலிஞ்சு போய் இருக்கத பாரு. பொம்பளப் புள்ள பூசுனாப்ல இருந்தாதான் கண்ணுக்கு லட்சணமுன்னு சொன்னா காதுல வாங்குனாதான” என்ற வழக்கமான வசவுகளையெல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு, “சாரதா ஆச்சியை நாளைக்கு போய் பார்த்திட்டு வந்திரு” என்றாள் அம்மா. வெளியில் வந்து பார்த்தபொழுது வாசுகி அத்தை வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். இருள் லேசாக கலங்கிக் கலங்கி விலகிக் கொண்டிருந்தது. இவ்வளவு காலையில் ஒரு வீட்டுக்குப் போய் நிற்பது சரியாக இருக்காதென்று வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

விவரம் தெரிந்த வயதிலிருந்து பத்து பதினொரு வயது வரைக்கும் என்னுடைய விடுமுறை நாட்கள் பெரும்பாலும் சாரதா ஆச்சி வீட்டில்தான் கழிந்திருக்கின்றன. “ரெண்டும் ஒட்டி பிறந்ததுக மாதிரில்லா கட்டிகிட்டு திரியுதுக” – நானும், ஆச்சியின் பேத்தி ராகினியும் ஒன்றாக விளையாடித் திரிந்த வயதில் ஆச்சி இப்படிச் சொல்லியிருக்கிறாள். ஆச்சியின் வீட்டுத் திண்ணையில் வரிசையாக கருப்பு வெள்ளை புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் எனக்குத் தெரிந்த முகமாக இருப்பது ஆச்சியும் தாத்தாவும் தான். எதிர்காற்றிற்கு அந்தப் புகைப்படங்கள் அங்கும் இங்குமாக ஆடுகையில் அதில் இருக்கும் ஆச்சியின் முகம் வெளியே வரத் துடிப்பது போல இருக்கும். ஆச்சி எப்பொழுதாவது முக்காலி போட்டு ஏறி ஆச்சியும் தாத்தாவும் ஜோடியாக இருக்கும் அந்தப் படத்தை கையில் எடுத்து வைத்துப் பார்ப்பாள். அந்த நேரத்தில் ஆச்சியின் முகம் வெறுமை படர்ந்து வெளிறிப் போகும். முந்தானையால் படத்தில் ஒட்டியிருக்கும் தூசியைத் துடைத்து விட்டு, எடுத்த இடத்திலேயே மாட்டி வைப்பாள். 

ராகினிக்கு ஆச்சி சொல்லும் சாமி கதைகள், புராணக் கதைகள் ரொம்பவும் பிடிக்கும். என்னையும் வற்புறுத்திக் கேட்க வைப்பாள். கதை சொல்லும் பொழுது ஆச்சியின் கண்கள் எதிரில் இருப்பவர்களின் முகத்தையே பார்க்காமல் கதை மாந்தர்களின் முகத்தை காற்றில் வரைந்து காட்டியபடியே காட்சிக்குக் காட்சி தாவிப் போய் கொண்டிருக்கும். அன்று நானும் ராகினியும் நீ பெரிதா நான் பெரிதா என்று வார்த்தையில் அடித்துக் கொண்டிருந்தோம். 

“எனக்கு வாத்து படம் அழகா வரைய தெரியுமே. உனக்கு தெரியாதுல்ல?”

“நான் தவளை குதிக்கிற மாதிரி அப்படியே வரைவனே”

“உனக்கு பரதநாட்டியம் ஆட வருமா… நான் ‘மார்கழி திங்களல்லவா’ பாட்டுக்கு அப்படியே அதுல வர ஹீரோயின் மாதிரியே ஆடுவேனே” என்று நான் அபிநயம் பிடிக்கிறேன் பேர்வழி என்று கையை காலை அசைத்துக் கொண்டிருந்தேன். “கலையெல்லாம் இருந்தும் கலை இழந்து போச்சு… ஒ….” – எதேச்சையாக முற்றத்திற்கு வந்த ஆச்சி முணுமுணுத்துக் கொண்டே அரிசி கழுவினாள். நானும் ராகினியும் அடுத்த வாக்குவாதத்திற்கு நகர்ந்திருந்தோம். வளர வளர ராகினி ஆச்சி வீட்டிற்கு வருவது குறைந்து போக, நான் அங்கு போவதும் நின்று போய்விட்டது. கடைசியாக எட்டு வருடங்களுக்கு முன்னால் தாத்தா சாவிற்கு போனது. அதோடு ஆச்சியின் வாசல் வருகையும் நின்றுபோக, ஆச்சியைப் பார்ப்பதே மொத்தமாக நின்று போய்விட்டது. கல்லூரி முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருந்த நாட்களின் ஓர் இரவில் அம்மா எதை எதையோ பற்றிப் பேசி கடைசியில் சாரதா ஆச்சியில் வந்து நின்றிருந்தாள். 

“ஆச்சி எப்படி வாழ்ந்த மனுசி தெரியுமா? அந்த காலத்திலேயே நூறு பவுன் நகை, வைர அட்டிகை, ஏழு கோட்டை வெதப்பாடு எல்லாம் போட்டு கட்டிக் கொடுத்தாங்க.”

“அப்படியா” – நான் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருக்க, அம்மா தொடர்ந்தாள்.

“எல்லாம் கொண்டு வந்தும் கல்யாணமாகி அஞ்சு வருஷம் வரைக்கும் ஆச்சிக்கு பிள்ளையே இல்ல. ஆச்சி கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டு இருக்க, தாத்தா ஆச்சியோட தங்கச்சி வைரத்த அஞ்சு மாச வயித்தோட கூட்டிட்டு வந்து நிறுத்திட்டாரு” 

“அப்புறம்?”

“அப்புறமென்ன ஆச்சியே அவங்களுக்கு முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சு வாழ்க்கைய பங்கு போட்டுக் குடுத்தாங்க. அந்த ஆச்சி வந்து ரெண்டாவது மாசத்தில சாரதா ஆச்சி மூணு மாசமா இருக்கிறது தெரிய வந்திருக்கு. எல்லாம் விதி”

“….” 

எனக்கு கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. 

“என்ன விதி? எதுக்கு அப்படி பொறுத்திட்டு போணும். சாரதா ஆச்சி அப்படியே தாத்தாவ வேண்டாம்ன்னு தூக்கிப் போட்டுட்டு இறங்கிப் போயிருக்கணும்”

“உங்கள மாதிரி இல்ல அந்த காலத்து பொம்பளைக. இப்ப எல்லாம் அத்து போட்டுட்டு போறதிலேயேலா நிக்குது. நீ இன்னைக்கு மதியானம் நின்னிய, குசு பெறாத காரியத்துக்கு அந்த பயலுகிட்ட ஒத்தைக்கு ஒத்தை. ஆம்பிள பய கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பான். விட்டுக் கொடுத்து போனா என்னவாம்? தம்பி தான..”

“ஆமா, இப்படி ஆம்பிளைங்களுக்கு நீங்களே கொம்பு சீவி விடுறதாலதான் அவனுங்க இஷ்டத்துக்கு ஆடுறானுங்க.”

“வாழ்க்கைனா முன்னப்பின்ன இருக்கத்தாண்டி செய்யும். பொறுத்துப் போறதுல ஒரு கொறையும் வராது. நான் கல்யாணம் கட்டிட்டு வந்த புதுசில எயித்த வீட்டு செண்பகம் ஆச்சிதான் அவங்க நடையில புடிச்சு இருத்தி வச்சு சாரதா ஆச்சி கதைய சொன்னது. பூமாதேவி மாதிரி சாரதான்னு பெருமையா சொன்னாங்க. அதான் பொறுமைக்கு கிடைக்கிற பரிசு.”

“எனக்கு பூமாதேவி பட்டமெல்லாம் வேணாம். எனக்கு என் பேர சொல்லி என்ன கூப்பிட்டாலே போதும்.”

“உன்கிட்டேலாம் எவன் வாயி குடுப்பான்.” அம்மா புரண்டு எதிர் பக்கம் பார்த்துப் படுத்துக் கொண்டாள். “இங்கரு…பாதிக் கதைய சொல்லிட்டு க்ளைமாக்ஸ் சொல்லாமபோன எப்படி?” அம்மாவின் தோளைப் பிடித்து என் பக்கமாக இழுத்தேன். அம்மா என் பக்கமாகத் திரும்பினாள். ஒன்றும் சொல்லாமல் முறைத்தாள்.

“அப்போ அந்த இன்னொரு ஆச்சி என்ன ஆனாங்க? நான் அந்த வைரம் ஆச்சிய பார்த்ததே இல்லியே..” 

“அந்த ஆச்சி கல்யாணமாகி ஒரு வருஷந்தான் இருந்தாங்க. சாரதா ஆச்சி வீட்டு தாத்தாக்கு பயங்கரமா கோபம் வரும். கோபம் வந்தா கண்ணு மன்னு தெரியாம தூக்கிப் போட்டு மிதிச்சிருவாரு. எனக்கு இது சரிபட்டு வராதுனு பொறந்த வீட்டோட போயிட்டாங்க. நாற்பது வயசிலேயே செத்தும் போயிட்டாங்க”

“வைரம் ஆச்சியும் லேசான ஆளு கிடையாது. நல்லா படம் வரைவாங்களாம். வீணைலாம் ரொம்ப ஜோரா வாசிப்பாங்களாம். ஆளும் பார்க்க அம்சமா இருப்பாங்களாம். செண்பகம் ஆச்சிதான் சொன்னது. நான் கல்யாணம் கட்டி வரும்போதே அவங்க உசுரோட கிடையாது.”

“பாத்தியா அந்த ஆச்சி விவரம். அடி வாங்காமல் எஸ்கேப் ஆயிட்டுல. பொண்ணுன்னா அப்படி இருக்கணும்.”

“என்னடி விவரம். விவரம் இருந்தா தனியாளா நின்னு தனக்குன்னு ஒரு வாழ்க்கை தேடி இருக்கணும். இப்படி அக்கா வாழ்க்கைல வந்து குறுக்க நின்னு, தான் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்திருக்குமா? விவரமாம்ல விவரம்..” அம்மா முணகிக்கொண்டே மீண்டும் எதிர்ப்புறம் திரும்பி படுத்துக் கொண்டாள். 

அன்றைக்கு வாக்குவாதம் பண்ணியதோடு எதையும் யோசிக்காமல் அப்படியே தூங்கிப் போயிருந்தேன். ஆனால், நேற்று வந்தபொழுது சாரதா ஆச்சி படுத்த படுக்கையாக இருக்கிறாள், பார்க்கப் போக வேண்டும் என்பதை அம்மா சொன்ன நேரத்திலிருந்து ஏதேதோ கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. ’ஒருவேளை சாரதா ஆச்சி மாதிரி எது நடந்தாலும் சரி என்று பொறுத்துக் கொள்வது தான் சரியா? இல்லை பெண் சுதந்திரம்னு ஏதேதோ ஆம்பிளைங்க கூட கைகோர்த்து சுத்திக்கிட்ருக்காளே என் ரூம்மேட் லதா, அவ பண்ணுறது சரியா? அவ சொல்ற மாதிரி ஒருவேளை கல்யாணமே ஒரு புல்ஷிட் தானோ? இது ரெண்டுமே இல்லேன்னா? கைநிறைய சம்பளம் வாங்கியும் எந்த மிஸ் அண்டர்ஸ்டான்டிங் வந்தாலும் எனக்கென்ன என் இஷ்டம்ன்னு போகாம அத்தான்கிட்ட பொறுமையா பேசி புரிய வச்சிட்ற ரோகிணி அக்கா சரியா? அப்படி எல்லாத்தையும் சொல்லிகிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு படிக்கணும், வேலைக்குப் போகணும், சம்பாதிக்கணும்?’

“க்கா…” – வாசல் பக்கம் இருந்து வந்த வாசுகி அத்தையின் குரல் என்னை மீட்டது. இரவு முழுதும் சரியாக தூங்காததால் வலி எடுத்த கண்களை ஒருமுறை மூடித் திறந்துக் கொண்டேன். “வரேன் வாசுகி” அம்மா முந்தானை நுனியில் ஈரவிரல்களைத் துடைத்தபடியே நான் உட்கார்ந்திருந்த நாற்காலியைக் கடந்து போனாள். 

“கருவேப்பிலை இருக்காக்கா?”

“இருக்கு வாசுகி. வா உள்ள வா” அம்மா அடுக்களைக்குள் போனாள். 

“வேலை கிடக்குக்கா” முதல் படியில் பாதி கால்களை ஊன்றி மேலேறி வந்த வாசுகி அத்தை என்னை பார்த்துவிட்டாள். “யே… இது யாரு வந்திருக்கா?” குடுகுடுவென்று ஏறி வந்தாள். 

“எப்படி இருக்கீங்கத்தே?” – நான் சிரித்துக் கொண்டே எழுந்து நின்றேன். 

“நல்லா இருக்கேன். எப்ப வந்த மருமவளே? அணக்கம் காட்டாம இருந்திருக்க”

“நேத்து ராத்திரி தான்த்தே வந்தேன்” நான் வாசுகி அத்தை பக்கத்தில் போய் நின்று கொண்டேன். 

“அங்கன ஆச்சிய பாக்க ஒரு எட்டு வரணும்னு தான் சொல்லிகிட்டு இருக்கா” அம்மா ஒரு குத்து கருவேப்பிலையை மதில் மேல் கொண்டு வைத்தாள்.

“ஆச்சி எப்படி இருக்காங்க? ஒரு வாரமா அங்கண தலை காட்டவே நேரமில்ல.”

“வர வர ரொம்ப மோசமா இருக்கு. தண்ணி ஆகாரமும் இறங்க மாட்டேங்குது. ஒருத்தரையும் லேகையும் தெரில. யாரு வந்தாலும் விதுக்கு விதுக்குனு முழிக்கிறாங்க”

“நல்ல மனுசி… கஷ்டப்படாம போய்ட்டா கொள்ளாம்” அம்மா சொன்னாள்.

“ம்ம்…” அத்தை தலையாட்டினாள். நிதானித்து பெருமூச்சு விட்டாள். 

“சரி.. வேலை கிடக்கு. நான் வாரேன்க்கா” வாசுகி அத்தை மதில் மேல் இருந்த கருவேப்பிலை கொத்தை எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தாள். சாயங்காலம் நானும் அம்மாவும் ஆச்சி வீட்டிற்குப் போனபொழுது ஆச்சி கண்ணை மூடி கட்டிலில் நிமிர்ந்த வாக்கில் படுத்திருந்தாள். இரண்டு கைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக மார்பின் மீது இருந்தன. சூம்பிய விரல்கள். சரியான வனப்போடு செய்யப்படாத மண் பொம்மைப் போல உடல் எங்கும் எலும்புகள் துருத்திக் கொண்டு நின்றன. உயிரைத் தவிர எல்லாமே அற்றுப் போயிருந்தது. அந்த அறை முழுவதும் எண்ணெய் வாசனையும் மூத்திர வாசனையும் கலந்த நெடி நிறைந்திருந்தது. வாய் எதோ வார்த்தைகளை முணகிக் கொண்டேயிருந்தது. எங்கள் சத்தம் கேட்டதும் விழித்துப் பார்த்தாள். கருவிழிகள் அங்குமிங்குமாக உருண்டன. நான் ஆச்சியின் நெஞ்சுப் பக்கத்தில் கிடந்த முக்காலியில் போய் உட்கார்ந்தேன். அம்மாவும் அத்தையும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆச்சி கண் ஜாடையிலேயே அருகில் வரச் சொல்லிக் கூப்பிட்டாள். நான் ஆச்சிக்கு அருகில் முகத்தைக் கொண்டு போனேன். 

“திமிரு வேணான்த்தா… துணிச்சல் இருக்கணும்” – வாய் முனகியது. ஆச்சியின் உள்ளங்கை என் உச்சியில் அழுத்திக் கொண்டிருந்தது. 

*******

npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button