கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
தெருவில் விழுந்த
காலைப் பனியின் மேல்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன் பெயர்…
முன்பு ஏதோ கவிஞரும்
எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின்
ஒவ்வொரு பொருளின் மேல்.
உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ
அழிக்க கடினமாக இருக்கும்
பூமி மற்றும் வானத்தின் மேல்
புரட்சியோடு
காதலுக்காகவும் இடம் உண்டு
உன் பெயரின் படுக்கையின் மேல்
தூங்கிக்கொண்டிருக்கிறேன் நான்
உன் பெயரின் கீச்சிடலுடன்
எழுந்திருக்கிறேன் நான்
நான் எங்கு தொட்டாலும்
உன் பெயர் வெளிப்படுகிறது
விழும் இலைகளின்
மேகமூட்டமான நிறங்களில்
பண்டைய குகைகளின்
இருண்ட சுவர்களின் மேல்
இறைச்சிக் கடையின் கதவின் மேல்
ஈரமான நிறங்களின் மேல்
புதிய இரத்தத்தின் மேல்
உழுது கொண்டிருக்கிற வயலின் மேல்
நிலவொளியின் படபடக்கும் சிறகுகளின் மேல்
காபி மற்றும் உப்பின் மேல்
குதிரையின் குளம்பின் மேல்
நர்த்தகியின் நடன முத்திரையின் மேல்
நட்சத்திரங்களின் தோள்களின் மேல்
தேன் மற்றும் விஷத்தின் மேல்
தூக்கத்தின் மேல், மணலின் மேல், வேர்களின் மேல்
கோடாரியின் மேல்,
துப்பாக்கி குண்டின் மேல்
தூக்கு மேடைப் பலகையின் மேல்
பிணவறைக் குளிர் தரையின் மேல்
தகனக் கல்லின் மிருதுவான
முதுகின் மேல்.
மலையாளத்தில் : கே.சச்சிதானந்தன்
ஹிந்தி மொழிபெயர்ப்பு : டாக்டர் வினிதா / சுபாஷ் நிரவ்
தமிழில் : வசந்ததீபன்
***
கடைசி நதி
கடைசி நதியில்
தண்ணீருக்குப் பதிலாக
இரத்தம் பாய்ந்தது
எரிமலைக் குழம்பு போல் கொதித்தது
அதன் தண்ணீரைக் குடித்த
கடைசி ஆட்டுக்குட்டிகள்
அவற்றின் குரல் இல்லாமல் இறந்தன
அதன் மேல் பறந்த பறவைகள்
மயக்கமடைந்து அவை
ஆற்றில் விழுந்தன
கண்ணீரில் நனைந்த முகங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட கடிகாரங்கள்
ஜன்னல்கள் வழியாக விழுந்துகொண்டே இருந்தன.
கடைசி ஆற்றில் ஒரு தாயின் முகம்
இறங்கி மூழ்கிக் கொண்டிருந்தது
ஒரு பையன்
அவளை
படகில் கடந்து கொண்டிருந்தான்
அவன் கையில்
ஒரு மந்திர மணி இருந்தது
அம்மாவிடம் கிடைத்தது கடைசி பரிசு
அவளது நினைவு ஒரு வீடாக இருந்தது
சிரிப்பால் ஒலிக்கும் வீடு
என்ன உனக்கு என்னிடம் பயம் இல்லையா?
சிறுவனிடம் கேட்டது கடைசி நதி
அவன் சொன்னான்,
‘இல்லை‘ .
‘பாதுகாக்கிற என்னை
அவர்கள்
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
எனது முற்பிறவியில்
‘உன்னுடைய அப்பா
கொன்றார் அவர்களை‘
அவர்களுடைய இரத்தம்
என்னுள் ஓடுகிறது;
அவர்களின் கோபம்தான் எனக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறது‘
நதி சொன்னது
கடைசி நதியின் உணர்வு என
பதிலுக்கு சிறுவன் மணியை அடித்தான்
மழை பெய்யத் தொடங்கியது
காதல் நதியை அமைதிப்படுத்துகிறது
அதனது இரத்த அழுத்தம்
நீலமாக மாறிப் போனது
மீன்கள் திரும்பி வந்தன
ஆற்றின் கரையோரங்களில்
மரங்கள் முறிந்து விழ ஆரம்பித்தன
வரவிருக்கும் துளிர்கள்
கடிகாரங்கள் மீண்டும்
இயங்க ஆரம்பிக்கின்றன
இவ்வாறு, மனிதகுலத்தின் வரலாறு தொடங்கியது
அந்த மணி இப்போது ஒலிக்கிறது
குழந்தைகளின் சிரிப்பில்.
மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் : கே. சச்சிதானந்தன்
ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் : வியோமேஷ் சுக்லா
ஹிந்தியில் தமிழில் :வசந்ததீபன்
***
குறிப்பு: கே. சச்சிதானந்தன் 28 மே, 1948, புல்லூட், திருச்சூர், கொச்சி சமஸ்தானத்தில் பிறந்தவர். ஒரு பிரபல இந்தியக் கவிஞரும் விமர்சகருமான இவர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதும் நவீன மலையாளக் கவிதைகளின் முன்னோடி, இரு மொழி இலக்கிய விமர்ச்சகர், நாடக எழுத்தாளர், இதழ் ஆசிரியர், பத்தி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். சாஹித்ய அகாதமி இந்தியன் லிட்ரேச்சர் இதழின் முன்னாள் ஆசிரியராகவும், சாஹித்ய அகாதமியின் முன்னாள் செயலராகவும் பதவி வகித்துள்ளார். சமகால இந்திய இலக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நன்கு அறியப்பட்ட பேச்சாளர் ஆவார். இவர் கேரள இலக்கியத் திருவிழாவின் இயக்குநராக உள்ளார்.
******