பெருந்துணை
குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனிய
புல்லென்றனையால் வளம் கெழு திருநகர்
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங்காடு முன்னியபின்னே
புறநானூறு : 250
திணை: பொதுவியல்
துறை: கையறு நிலை
பாடியவர்: தாயங்கண்ணியார்
குடும்பம், ஊர், நாடு என்ற எந்த ஒரு அமைப்பும் தலைவனை மையமாகக் கொண்டது. மரபுப்படி உலகின் தலைவன் இறைவன். இறை என்ற சொல்லே தந்தையையும், தலைவர்களையும் குறிக்கிறது. இதில் ஆண், பெண் கடந்து யார் தலைமை கொள்கிறார்களோ அவர்களையும் வைக்கலாம். அவர்களின் இழப்பு அந்த அமைப்பை நிலைகுலைய வைக்கிறது. நாம் சமூகமாக வாழத் தொடங்கியதிலிருந்தே தலைவன் என்பது முக்கியமாக கருதுகோள். அதேப்போல காட்டிலும் அனைத்து மிருகங்களும் தங்களுக்கென ஒரு தலைமையின் கீழ்தான் இயங்குகின்றன. இறைவனையும் தந்தை என்றும் சொல்கிறோம். இந்தப்பாடலில் ஒரு வள்ளலின் இழப்பு கையறுநிலையில் பாடப்பட்டுள்ளது. இது பொதுவியல் திணையில் கீழ் வரும் பாடல். அனைத்து திணைகளுக்கும் பொதுவான பாடுபொருள் உள்ள பாடல்கள் பொதுவியல் திணையில் வருகின்றன.
ஒருவரின் இழப்பு என்பது இறப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பிரிவு ஒருவகையான இறப்பு தானே. பிரிவுமே, உடலால் மனத்தால் பிரிதலாக மட்டும் சிலருக்கு இருப்பதில்லை. நினைவால் பிரிதல் என்ற வகையும் உண்டு. வாழ்க்கை ஆயிரம் வாசல்களில் இன்பங்களைக் கொண்டு வருவதைப்போலவே, துயரங்களுக்கும் வழிவிடுகிறது.
எங்களுடைய தந்தைக்கு அல்சைமர். நினைவுத்திறனை படிப்படியாக இழக்கும் நிலை அது. ஒருகட்டத்தில் முற்றிலுமாக நினைவை இழத்தலில் வந்து நிற்கும். அதன் தொடக்க நிலையான இரண்டு ஆண்டுகள் மோசமான காற்று காலத்தில் கடலில் படகு அலைவுறுதல் போன்றதொரு நிலை எங்கள் குடும்பத்தில் இருந்தது. அந்த நோயையும், அய்யாவையும் புரிந்து கொள்ள மருத்துவர்களும்,கற்ற கல்வியும்,அய்யாவின் சொற்களும் எங்களுக்கு உதவின.
வலிய ஆலமரத்தின் கீழே மற்ற மரங்கள் எழ முடிவதில்லை. அதே போலத்தான் எங்களுடைய சூழலில் தன்னுடைய ஆளுமையின் ஔியால் அவர் எங்களை மறைத்திருந்தார். அவர் சொல்லிற்கு தலையாட்டியே பழகிய எங்களுக்கு தலைமைப் பண்பும், முடிவெடுக்கும் திறனும் இல்லாமல் இருந்தது. அவர் ஒவ்வொன்றாக மறக்கத் தொடங்கியதும் இந்த சூழலில் அய்யா என்ன முடிவெடுப்பார் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு முடிவையும் எடுத்தோம். ஒரு கட்டத்தில் சூழலிற்கு ஏற்ப நாங்களே எங்களின் சுயமான முடிவுகளுக்கு மாறினோம். பொருளாதாரம் சார்ந்த இழப்புகள் அதிகமாக இருந்தன. அவரால் ஏதும் பலனில்லை எனும் போது உறவுகளின், மனிதர்களின் நிலை மாறுவதை கவனித்த பின் நாங்களாகவே இந்த வாழ்க்கையில் நாம் எங்கு நிற்க வேண்டும்? இந்த சூழலில் நம் பங்கு என்ன? என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று படிப்படியாக அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டோம். அதே போல அவரைப் புரிந்து கொள்வதும் படிப்படியாக நடந்தது.
ஆனால் நம் தந்தையை நாம் பாதுகாப்பது, நாம் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பது என்பது மனதளவில் அத்தனை எளிதில்லை. அவரை அன்னாந்து பார்த்தே பழகிய கண்களுக்கு குனிந்து பார்ப்பது என்பது முதுதுவலியைப் போன்ற ஒன்று. முதுகெலும்பில் ஏற்படும் வலியைப் போன்று உடலை, மனதைத் தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருப்பது. அல்சைமர் தீவிரமடைந்து ஆறுஆண்டுகள் மேலாகிறது. இன்றைக்கும் வசீகர நேர்மறை ஆளுமையான அவரை குழந்தை எனக் காண மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.
தந்தைகளுக்குப் பிறகு நாம் பொருளாதாரம், நடைமுறைகள் சார்ந்து திடத்தன்மையை நோக்கிச் செல்ல முடியும். அல்லது எத்தனித்துக்கொண்டே இருக்கமுடியும். இந்த விஷயங்களில் யாரும் வீழ்ந்தே கிடப்பதில்லை. ஆனால், வாழ்வில் அதைத்தாண்டிய நுண்ணிய இடங்கள் உண்டு எப்பொழுதும் நான் சொல்வதைப்போல சின்னச்சின்ன விஷயங்களில் உள்ளது அது. பிடித்த தின்பண்டங்களை அதன் பிறகு யாரிடமும் கேட்பதில்லை. தந்தைக்குப் பிறகு அந்த உணர்வு இல்லாமலேயே போய்விடுகிறது. யாரிடமும் குறும்பு செய்ய முடியாது. யாரிடமும் நம் பலகீனங்களை முழுமையாகத் திறந்து வைக்க முடியாது. அதற்கும் மேல் யாராலும் நம் ஆளுமையை புரிந்து கொள்ள முடியாது. கிட்டத்தட்ட ஆத்மாவின் ஒரு பகுதியை இழப்பதுதான் அது.
இந்த நிலையின் முக்கியமான சிக்கல் என்னவென்றால் அவர் இருக்கிறார். அவர் கண்முன்னாலேயே அவர் இல்லாத போது என்னென்ன எதிர்கொள்ள வேண்டுமோ அத்தனையையும் எதிர்கொள்ளும் நிலை. முக்கியமான சிக்கலால் உள்ளம் பதைத்து அவர் முன்பே யாரிடம் கேட்பது என்ற யோசனையில் அமர்ந்திருக்கிறோம். தங்கையின் திருமணத்தின் போது ஒவ்வொரு விஷயத்திற்கும் இது நடந்தது. மாப்பிள்ளை முடிவு செய்தலின் போது அம்மா அவர் அருகிலேயே நின்று கொண்டு யாரிடம் கேட்டு இறுதிச் சொல்லை சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தார். திருமணம் என்ற செயல்திட்டத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், அவளுக்கு குழந்தைகள் பிறந்த போதும் இது தொடர்ந்தது. ஒரு ஆன்ம துணையின் இழப்பை அம்மா அவரின் கண்எதிரில் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். அம்மாவையும் அவர் எங்களைப் போலத்தான் நடத்தினார்.
ஒரு விஷயத்தில் முடிவு எடுத்திருப்போம். அவரிடம் இருந்து ஒரு சொல் வந்தால் அதில் உள்ள அழுத்தம் காணாமல் போகக்கூடும். தந்தை என்பவர் நாம் நடக்கும் தரையில் நாம் உணரும் பிடிமானம் போன்றவரல்லவா. இந்த வாழ்வில் நம் ஆழ்மனம் கொள்ளும் ஆன்மபலம் என்பதே நம் தந்தைகள் கொடையளித்தது தானே .
“செய்ப்பா…என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்,” என்ற சொல் அங்கிருந்து வர வேண்டும். ‘மிஸ் பண்றேன்’ என்று ஒரு வார்த்தை நம்மிடம் உண்டு. அவர் கலகலப்பான மனிதர். கூட்டுக்குடும்ப அழுத்தங்களை மீறி பிள்ளைகளின் குறும்புகளைப் பார்த்து அகம் மலர்ந்து சிரிக்கக்கூடியவர். தினமும் தன் சிரிப்பால் வீட்டின் சூழலை விடுவித்துக் கொண்டே இருப்பார். வீடு அந்த சிரிப்பை எங்கோ காலத்தில் தொலைத்துவிட்டது. இந்த அன்றாடங்களை எல்லாம் கடந்து ஆசிரியர் பணி சார்ந்தும், புத்தக வாசிப்பு சார்ந்தும் சில கிறுக்குத்தனங்கள் இருந்தன. அதன் இருமுகங்கள் நானும் தங்கையும். அவளுக்கு ஆசிரியப்பணியிலும், எனக்கு எழுத்திலும் அந்த கிறுக்குத்தனங்களும், அவற்றுக்கான எத்தனிப்புகளும் உண்டு.
இது போன்ற ஒரு எளிய குடும்பம் என்றாலும், ஒரு சமூகம் என்றாலும், ஒரு அறிவுத்துறை என்றாலும் அடுத்து வரும் மைந்தர்களில் தந்தைகள் நீட்சி கொள்கிறார்கள். தந்தைகளுக்கும் இங்கிருந்து அழிவில்லை என்பதாலேயே தந்தைக்கு மாற்று சொல் இறை.
சென்ற வாரம் அம்மாவின் மருத்துவம் தொடர்பாக மருத்துவமனைக்கு நானும் அம்மாவும் சென்றிருந்தோம். வாரநாள் என்பதால் ஐம்பது, அறுபது வயதிற்கு மேலானவர்களே நிறைந்திருந்தார்கள். அம்மா அடிக்கடி யாரையாவது சுட்டிக்காட்டி, “நம்ம அய்யா வயசுதானே இருக்கும். நல்லா நிதானமா இருக்காருல்ல?”, என்றார். இரண்டு மூன்று முறை திரும்பத்திரும்ப அம்மா சொல்லியபின் முழுக்கூட்டத்தையும் கவனித்தேன். பெரும்பாலானவர்கள் வயோதிக தம்பதிகள் அல்லது வயோதிகத்தினுள் நுழைபவர்கள். அம்மாவின் வயது ஐம்பத்துஆறு. அம்மாவைப் புரிகிறது. ஆனால், என்ன பதில் சொல்வது? இதுதான் இந்தப்பாடல் சொல்லும் கையறு நிலை. பொருளாதாரம், நடைமுறை சிக்கல்களை கையாண்டுவிடலாம். கையறு நிலை என்ற ஒன்று அவற்றைத் தாண்டியது.
வளம் எழும் இந்தத் திருநாட்டில்,
சுவை மிக்க உணவின் ஒலியால்,
இரவலர்கள் திரும்பிச் செல்வதை
தடுக்கும் இவன் வாயில் கதவுகள்.
துன்பத்துடன் வருபவர்களின்
கண்ணீரைத் துடைக்கும்
இந்த பந்தலின் கீழ்,
அவன் மனைவி
தலைமுடி நீக்கப்பட்டு
வளையல்கள் கலையப்பட்டு
புல்லரிசி உணவுண்டு இருக்கிறாள்…
சுவைமிக்க பால் கேட்டு
அடம் செய்யும் அவன் இளம் மைந்தர்கள்,
பின்னே வான் சோறு எடுத்துச்செல்ல,
அவன் தான்மட்டும் தனித்து முன்னே
அந்த பெருங்காட்டிற்கு சென்றுவிட்டான்.
[தன் சிறகின் கீழ் குடும்பத்தைப் பொத்தி வைத்து, நல்லவற்றை மட்டுமே காட்டி பிள்ளைகளை வளர்க்கத் துணியும் இளம் தந்தைகளின் அசட்டுத்தனத்தினால் இன்றும் இப்பாடல் முக்கியத்துவம் பெறுகிறது]
(தொடரும்…)