பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 05 – கிருபாநந்தினி
தொடர் | வாசகசாலை

நார்ட்மேன் பச்சைக்காலி
நாம் முன்னர் பார்த்த உள்ளான் இனங்களைப் போன்றே தோற்றமளிக்கும் பறவை நார்ட்மேன் பச்சைக்காலி. இது மட்டுமல்ல. பெரும்பாலான கடல் பறவைகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படும். நார்ட்மேன் பச்சைக்காலியின் அறிவியல் பெயர் Tringa guttifer. ஆங்கிலப் பெயர் Nordmann’s Greenshank.
இதன் ஆங்கிலப் பெயரில் உள்ள Nordmann என்பதை Alexander von Nordmann (1803–1866) என்பவரின் நினைவாக வைத்துள்ளனர். இவர் 1803 ஆம் ஆண்டு பின்லாந்தில் பிறந்தார். சிறந்த விலங்கியலாளர், மட்டுமல்லாமல் தாவரங்கள், புதைபடிவங்கள், புழுக்கள் ஆகியனவற்றிலும் ஆர்வமுடையவர். பூச்சிகளைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகத்தில் அவற்றைப் பாதுகாக்கும் கியூரேட்டராக பணியாற்றினார். முதன்முதலாக புழுக்கள், கணுக்காளிகள், மீன்கள் போன்ற உயிரினங்களின் கண்களை நுண்ணோக்கியின் மூலம் கவனித்து அதன் தகவல்களை வெளியிட்டார்.
இவர் 1832 ஆம் ஆண்டு உக்ரைன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1834 ஆம் ஆண்டு தாவரவியல் பூங்காவின் இயக்குநராக பொறுப்பேற்ற பிறகு தெற்கு ரசியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்து பல இயற்கை வரலாற்று மாதிரிகளைச் சேகரித்தார். மீண்டும் விலங்கியல் மற்றும் தாவரவியல் பேராசிரியராக இம்பீரியல் அலக்ஷன்டர் பல்கலைக்கழகத்தில் 1849-இல் சேர்ந்தார். ஆனால் 1866 ஆம் ஆண்டே சூன் மாதம் 5 ஆம் தேதி இதய பாதிப்பு காரணமாக இறந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏழு சிற்றினங்களுக்கும், ஒரு பேரினத்துக்கும் இவருடைய பெயரை வைத்துள்ளனர்.
இப்பொழுது Nordmann’s Greenshank பறவையின் வாழ்விடத்துக்கு வருவோம். இனப்பெருக்க காலங்களில் ரசியாவில் மகாடனில் உள்ள ஒகோட்சா மற்றும் காம்சட்கா கடற்கரைகளிலும், சாகலின் தீவிலும் வாழ்கிறது. இடத்தின் பெயர்கள் வாசிக்க கடினமாக இருப்பினும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
காட்டுப் பகுதிகளில் Cajander larch (Larix cajanderi) என்ற புல் வகை நிறைந்த தீவுகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த தாவரம் ரசியாவில் மட்டும் வளர்வதால் அறிவியல் பெயரிலேயே தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். வேறு மொழிகளில் இருக்க வாய்ப்பும் குறைவு.
East Asian–Australasian Flyway என்று சொல்லப்படுகிற கிழக்கு ஆசியா-ஆசுத்திரேலியா வழியை மட்டுமே வலசைப் பாதையாகப் பயன்படுத்துகிறது. ஆதலால் இந்த வழியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நேரடியாக பாதிக்கப்படுமே தவிர மாற்று வழியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
இந்த வழியில் வலசைப் போதலின் போது உணவுக்காகவும், ஓய்வெடுக்கவும் வட மற்றும் தென் கொரியா, கம்போடியா, வியட்னாம், மலேசியா, தாய்லாந்து, மியன்மார், வட மேற்கு இந்தியா, பங்காதேஷ், சுமத்ரா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடலுக்கு அருகில் உள்ள ஈரநிலங்களை (intertidal mudflats) நார்ட்மேன் பச்சைக்காலி பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ரசியாவில் நார்ட்மேன் பச்சைக்காலி வாழ்விடமான Cajander larch புல்வெளிகளில் Rangifer tarandus என்ற மான் இனம் அதிக அளவில் பரவி காணப்படுவதால் புற்கள் குறைந்து வாழ்விடம் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி தொழிற்சாலைகள், எண்ணெய் தொழிற்சாலைகள், அதற்கான குழாய் அமைப்புகள் என 90% வாழ்விடங்கள் அழித்துவிட்டுவிட்டன.
தென் கொரியா கடற்கரை மற்றும் தீவுகளில் 1980 க்கு பிறகு மேம்படுத்துதல் என்ற பெயரில் வாழ்விடங்களை அழித்துவிட்டனர். கடற்கரை மணல், பாறைகளாக மற்றும் தாவரங்கள் நிறைந்த தீவுகளை தற்போது அலங்காரப்படுத்தப்பட்ட கட்டிடங்களாக மாற்றியுள்ளனர்.
மேலும் சீனாவில் அயல் நாட்டு புல்லான Spartina என்ற இனம் ஆக்ரமித்துள்ளது. இப்படி ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கும் இப்பறவை காட்டுத் தீ, மாசுபடுத்துதல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற பிரச்சனைகளை அனைத்து இடங்களிலும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இப்படியாக நார்ட்மேன் பச்சைக்காலியின் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், வலசைப் பாதைகள் என அனைத்தையும் அழிக்கும் பட்டியல் நீள்கிறது.
ஆதலால் இப்பறவை ஆபத்தான பட்டியலில் (Threatened) 1988 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 1994-ல் மிகவும் ஆபத்தான (Endangered) பட்டியலில் சேர்க்கும் அளவிற்கு பறவையின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதன் எண்ணிக்கை உலகளவில் 2001 ஆம் ஆண்டு மொத்தம் 1000-2000 ஆக இருந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு 600 – 1300 பறவைகளாகக் குறைந்துவிட்டன. இந்தியாவில் கல்கத்தா, அசாம், உத்ரகாண்ட், ராஜஸ்தான், கர்நாடகா அகிய மாநிலங்களில் பறவை ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது சில நூறு பறவைகளை பதிவுசெய்துள்ளனர்.
இறுதியாக 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரையில் பாயின்ட் காளிமர் பகுதியிலும், 2002 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியிலும் சனவரி மாதம் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பின்போது பறவை ஆர்வளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பார்த்துள்ளதாக தரவுகள் உள்ளன. அதன் பிறகு இந்தியாவிலேயே யாரும் பார்த்ததாக தரவுகள் இல்லை.
இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற ஏற்கனவே வேட்டை தடுப்பும், அயல் நாட்டு புல் அழிப்பும் செயல்படுத்தியிருப்பினும் இன்னும் அதன் எண்ணிக்கை உயரவில்லை, கவலைக்கிடமான நிலைதான் நீடிக்கிறது.
இப்பறவை சிறு நண்டுகள், சேற்றில் உள்ள புழுக்கள் ஆகியவற்றைப் பிடித்து உண்ணும். இப்பறவை இனம் அழிந்தால் இவற்றின் உணவாக உள்ள இவ்விரு இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இச்செயல் மொத்த சூழலையும் பாதிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இயற்கை சூழலுக்கு தகுந்த வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தியும் இப்பறவையின் வாழ்விடங்களைக் காப்பாற்றலாம்.
(தொடரும்…)