“பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?”
உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா சொல்லியா ஒனக்குத் தெரிய?”..
இயலாமை மீதமுள்ள வேண்டுதல் சொற்றொடரை விழுங்கிக்கொண்டது.
“எத்தன நாளைக்கு இப்டியே….”
“அல்லாவே! போதும் பௌசி”
தாவிவந்து பௌசியின் வாயில் கைவைத்து மூடினாள். அந்தப் பேச்சு தொடர வேண்டாம் என்பதல்ல பஷீராவின் எண்ணம். மச்சிமார்கள் காதில் விழுந்தால் வேறுவிதமாய் இவை திரிக்கப்பட்டுவிடும் என்ற கவலை அவளுக்கு. காதில் விழுவதென்ன, ஒட்டுகேட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் கூட பஷீராவின் பதட்டத்திற்கு காரணம். அந்த அறையில் இருந்த நான்கு சுவர்களுக்கும் ஒட்டுக்கேட்கும் நானூறு காதுகள் உண்டென பஷீராவிற்குத் தெரியும்.
பௌசியா புரிந்துகொண்டிருக்கலாம். தன் வாயை மூடிய விரல்களை சேர்த்தள்ளிக் கொண்டாள். காற்றுக்கும் கண்படாதவாறு பஷீராவின் உள்ளங்கைக்குள் எதையோ வைத்து அழுத்தி இறுக்க மூடிவிட்டாள். அழுத்திய வாகு சுட்டிக்காட்டிச் சுட்டது அவை ரூபாய்தாள்கள் என. பஷீரா இப்போது அதைவிட அதிகமாய் பதறிப் போனாள். உடன் படித்தவள்– ஒன்றாய் வளர்ந்தவள்– உயிர்த்தோழி பௌசியா. அவள் கொடுக்கும் பணத்தை வாங்க ஏன் இத்தனைத் தடுமாற்றம்? கணவன் இறந்து இரண்டாண்டு காலத்தில் பஷீராவின் உள்ளங்கைக்கு இதுபோல் எத்தனையோ முறை தாள்கள் அழுத்தப்பட்டிருக்கும் என்றாலும், உயிர்தோழியின் உதவியை நிராகரிப்பின்றி ஏற்றுக்கொள்வதில் எழுத்தில் சொல்ல முடியாத குமுறல் நிகழவே செய்யும். வெதும்பல்தான் இருதுளி கண்ணீராக பஷீராவின் கன்னத்தில் வடிந்தது போலும். பணத்தை வாங்காமல் மறுத்து விடலாம்தான். சூழல் பஷீராவுக்கு சாதகமானதாக இல்லை. உள்ளங்கைக்குள் திணிக்கப்பட்டது பத்து ரூபாய் தாளில் இரண்டோ மூன்றோ இருந்தாலும் கூட அது பெருந்தேவையினை நிறைவேற்றிவிடும். இயலாமை தன்மானத்தை சமாதனம் செய்தது!
உறவினர் வீட்டிற்கு தயக்கமேதுமின்றிச் செல்வதற்கு ஏதாவது காரணம் இருந்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதாலோ என்னவோ வாகாய் ‘மௌத் விசாரிப்பு’ சம்பிரதாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது இவ்வூர்களில்! நல்ல விஷயத்தைக் குறை கூறுவானேன்! ஆனாலும், இழப்பைத் தவிர்த்து புதியவை எதையும் யோசிக்கச் செய்யாத, இருளை விட்டும் வெளிவர விடாத, தேக்கநிலை அளவுக்கா அது நிகழ்த்தப்படவேண்டும்? இப்போது வரையில் யாரேனும் ஒரு உறவினர் கணவனின் இறப்பை பஷீராவிற்கு நினைவுபடுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். நினைவில் வைத்து இழப்பை எண்ணி வருந்தத்தக்க மரணமா பஷீரா கணவனுடையது ?
இதோ, இரண்டாண்டு கழித்து வெளிநாட்டிலிருந்து வந்தவளான பௌசியா. இன்று மௌத் விசாரிக்க வந்திருக்கிறாள். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வந்திருந்தாலும் மௌத் விசாரிப்பதற்கென்றே வந்திருப்பாள். தவிர்த்துவிட்டால் சொற்கடன் அது… பணக்கடன் வாங்கிவிட்டு அலைக்கழிப்பவன்கூட சொற்கடன் விஷயத்தில் படுகவனம் கொள்வான். பொதுவாகவே வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் இருவகைப் பட்டியல் உண்டு. எந்தந்த உறவினர்க்கு கோடாலி சாப் தைலம், தாவணி–கைலி அன்பளிப்பளிக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் ஒன்று… தாயகம் விட்டு புறப்பட்டதிலிருந்து திரும்ப வந்திருக்கும் கால இடைவெளிக்குள் நடந்த மரண வீடுகளுக்குச் சென்று ஆறுதல்(?!) சொல்லிவிட்டு வருவது இன்னொன்று.
ஆனால், பௌசியாவின் ஆறுதலில் தூய பாசம் இருந்தது! அந்த நம்பிக்கையால்தான் முடிந்தமட்டில் சொல்ல முடிந்த புலம்பல்களை பஷீராவும் கொட்டித்தீர்த்திருந்தாள்.
“இது ஸ்டோர் ரூமா தானே இருந்துச்சு பஷீ?”
“இப்பவும் ஸ்டோர் ரூம்தான்.. நாங்க மூனுபேரும் அப்படிதான் இங்கனக்குள்ள கெடக்கோம்”
பௌசியா சுற்றியும் பார்த்தாள். பேருக்காக ஓடிய பேனும், மெத்தைக்குப் பதில் பாய் விரிக்கப்பட்ட இரும்பு கட்டிலும் மட்டும் அந்த அறையில் புதிதாய் இடம்பெற்றிருந்தது. மற்ற எதிலும் அவள் சிறுவயதில் கண்ணால் பார்த்து பழகிய அறையின் சாயல் ஏதும் மாறவில்லை.
“அடசலா இருக்கு! சன்ன இல்ல! காத்தே இறங்கல… உனக்கு கஷ்ட்டமாயில்லையா?”
“நீ வேற… காலைல எம்புள்ளைக அசந்து தூங்கிட்டிருக்கும்க! எங்கத்தா வந்து பேன் அமத்திட்டுப் போவாங்க. கரண்டு பில்லு கட்டி மாளலையாம். எம்புள்ளைக காத்தில்லாம அவதிப்படுறத பாக்க ஈரக்கொலைய பிச்சு எறிஞ்சாப்ல ஆகும் எனக்கு”
“இன்னும் உங்க வீட்ல யாருமே மாறலல…”
“மாற எங்கின வாய்ப்பு? உங்கத்தா படிக்கலன்னாலும் அந்த காலத்துலையே மலாய் நாட்டுக்கு சம்பாதிக்கப் போனதுனால, அங்கனக்குள்ள பொம்பளைங்கள பாத்து அதே கணக்கா ஒன்ன நல்லா படிக்க வச்சாப்ல. இதுங்க கறிக்கடையே கதின்னு கெடக்குதுக.. அத்தாவும் அப்படிதான், அத்தாவ பாத்து வளர்ற எங்கண்ணமார்களும் அப்டிதான்..இதுங்களோட வாழ்றதுனாலையா இல்ல ரத்தத்துலையே எங்கம்மாவும் அப்படியான்னு தெரியல.. அதும் அப்படிதான் கெடக்கு! நல்ல குடும்பம் எல்லாருக்கும் சுலுவா கெடச்சுடாது போல”
“ஒம்புள்ளைக எங்கே? நாய்த்துக் கெழம லீவுதானே”
“பாத்திம்மாக்கா மருமவளுக்கு சீமந்தம்ல?… அங்கின சாப்ட அனுப்பி வச்சேன். எங்கத்தா கறிக்கடைல மிஞ்சுன எலும்பும் கழுத்துமா கொண்டுவந்து போடுவாரு.. அதுலையும் உருளக்கிழங்கு போட்டு ரெண்டு துண்டுதான் கணக்குப் பண்ணிக் கொடுப்பாங்க. இப்படியே வெஞ்சனம் இல்லாம இருந்தா வளர்ற புள்ளைய ஒடம்பு என்னத்துக்கு ஆவும்?. வெவரம் அறிஞ்சி சாப்ட போவ சங்கடப்பட்ற வரைக்கும் இப்படியே போய் சாப்ட்டு வரட்டும்… “
“கெடைக்கிற காசு உஞ்செலவுக்குப் போவ பசங்களுக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடு யார்க்கும் தெரியாம!”
“அப்டிதான் செய்றேன். அதுக்கும் என்னைய பொல்லாக்காரியா ஆக்கிடுறாளுக இவளுக”
“ஒன்னும் சொல்ற மாறி இல்ல.. கவலப்படாத… பல்லக் கடிச்சுக்கிட்டு மவன ஆளாக்கு. அவன நா வெளிநாட்டுக்கு எடுத்துடுறேன். அவன் தலையெடுத்தா ஒன் நெலம மாறும்”
“நீதான் என் கடைசி நம்பிக்க பௌசியா”
“அல்லாஹ்யிருக்கான்”
“உனக்கு காப்பித்தண்ணி போட்டு கொடுக்கலன்னு நெனச்சுக்காத பௌசி! ஒரு டம்ளர் பாலுக்கும் சண்ட கூட்டிடுவாளுக. இவளுக ஒவ்வொன்னா ஏத்தி ஏத்தி விட்டு அண்ணம்மார்களும் எம்மேல இப்பலாம் கடுசா நிக்கிறானுக”
“அதெல்லாம் வேணாம் பஷீ! என்னப் பத்தி யோசிக்காத. உன்ன நெனச்சாதான் கவலையா இருக்கு! எப்படியிருந்திருக்க வேண்டியவ நீ… படிக்க வச்சிருந்தா இந்நேரம் ஒன்ன நீயே பாத்திருந்திருப்ப”
“சொல்லாத! நா எது நெனச்சாலும் அதுக்கு மாத்தமாதான் ஏதாவது என் தலைல விடியுது. ஒன்ன மாதிரி படிச்சிருந்தா ஏதாவது பொழைக்க வழி தேடியிருப்பேன். அதுக்கும் இவய்ங்க ஒத்துழைக்காம என்னைய குடிகாரனுக்கு கட்டிவச்சு என்னய சீரழிச்சிட்டாப்ல ஆக்கியாச்சு”
“மாப்புளய விசாரிக்காமையா கட்டிக் கொடுத்தாங்க?”
“அதுக்கும் நாந்தான் காரணமாம். ஒழுங்கஞ்சாட்டமா இருந்திருந்தா பொறுத்து கட்டிகொடுத்திருக்கலாம். என்னைக்கு ஓடிப்போவன்னு தெரியாதுன்னுதான் கெடச்சவனுக்கு கட்டிக்கொடுத்தோம்னு அசால்ட்டா சொன்னாரு எங்க அத்தா”
“சொல்றேன்னு தப்பா நெனைக்காத ! சேக்குக்கு கூட தலாக்காகிடுச்சாம்ல… பொண்ணு பாக்குறாகளாம். காலைல அவங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப என் மாமிகாரி சொல்லி நல்ல பொண்ணா மச்சானுக்கு தேடி வைய்யின்னா… எனக்கு ஒன் ஞாபவம்தான் வந்துச்சு. அவனுக்காச்சும் உன்ன இப்ப கட்டிக்கொடுக்கலாம்ல”
பஷீரா விரக்தியால் சிரித்தாள். அதன் தொடர்ச்சிதான் பௌசியா கல்யாணப்பேச்சை ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் , பஷீரா உடனடியாகப் பேச்சை நிறுத்தச் செய்ததும்.
நல்ல தகப்பன், நல்ல கணவன் கிடைக்கப்பெறாதவர்கள் வாழத் தகுதியான உலகம் இதுவல்ல! கணவன் இறப்புக்குப் பின் அவளுக்கு கிட்டிய அனுபவங்கள் அனைத்தும் வன்மங்களின் குவியல். அதனை நினைக்கும்போது குடிகாரனும் சூதாடியுமான கணவனின் தினசரி அடி உதைகள் எவ்வளவோ மேல் என்றே தோன்றியது.
இறுதியாய் பௌசியாவிடம் சொன்னாள், “அவன் இருந்தவரைக்கும் அந்த வாழ்க்க நரகம்னு நெனச்சுட்டிருந்தேன். கூடாட்டம் இருந்தாலும் அந்த வீடு எனக்குன்னு இருந்துச்சு. இங்கின ஒருவா கஞ்சி தொண்டைல இறங்கக் கூட நெஞ்செல்லாம் எனக்கு அழுத்துது”
பேச்சு நீளநீள பௌசியாதான் உடைந்துகொண்டேயிருந்தாள். மனிதர்களின் கஷ்டங்களைக் கேட்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நம் நிம்மதியை ஒட்டுமொத்தமாய் சீர்குலைக்க வல்லது. ஏதாவதொரு வகையில் பஷீராவின் சூழலைத் தன்னால் மாற்ற முடியும் என்ற திருப்தி மட்டும் பௌசியாவை மீட்டுக் கொண்டிருந்தது. தோழியின் துன்பத்தைக் கேட்கும் சக்தி முற்றிலுமாக கைவிட்டுச் சென்றபோது பௌசியா விடைபெற்றுச் சென்றேவிட்டாள்.
ஷேக்கின் அம்மா, தன் மகனிற்கு பெண் பார்க்கச் சொன்னபோதே பௌசியா, பஷீராவின் பேரை பரிந்துரைத்திருந்தால் இப்படியொரு புரட்சிகர திருமணம் இம்மண்ணில் நடக்க சாத்தியமே இல்லை என்பதை பௌசியா விளங்கியிருந்திருப்பாள். பாவம் அவள்! கற்ற கல்வியும் வெளிநாட்டு வாழ்க்கையும் பௌசியாவின் கண்களை அகலப்படுத்தியிருக்கலாம். ஆனால், மண்ணோடும் மக்களோடும் உறவாடிப் பின்னிப் பிணைந்தவர்களின் இதயம் இன்னும் சுருங்கியேதானே இருக்கிறது ? ஏதும் இங்கே மாறியிருக்கவில்லை.
ஷேக் அம்மா எதிர்பார்க்கும் நல்ல வரன் என்பது பார்க்க லட்சணமான, திருமணம் ஆகிடாத பெண். ஷேக்கிற்கு உடனே வரன் கிடைத்துவிடும். இன்னும் நான்காவது முறை அவன் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் அவன் அம்மாவின் எதிர்பார்ப்பு இதுவே. வேறொரு வீட்டுக்கு மருமகளாய் போய்விட்டு வந்தவளை தன் மருமகளாய் ஏற்பதற்கு தடையாய் இருப்பது அதே மண்! அதே மக்கள்! அதே சுருங்கிய இதயம்…அதே குறுகிய பார்வை!
ஷேக்கிற்கு தங்கையொருத்தி இருக்கிறாள். பௌசியா, பஷீரா, அவள் மூவரும் வகுப்புத்தோழிகள். பஷீரா படும் துன்பம் காணச் சகிக்காமல் அவளிடம் பௌசியா பேசிப் பார்த்தாள். விஷயம் கேட்ட மாத்திரத்தில் அவள் பத்திரகாளியாய் உருவெடுத்துவிட்டாள்
“என்ன பேச்சு கொண்டுவர, அறிவா அறிஞ்சு பேசு”
“ஏங் கோபப்படுற”
“எங்கண்ணன் தாலியறுத்தவள எனக்கு மச்சின்னு கூட்டியாந்தா என் மாமியா வீட்ல என்னைய மதிப்பாங்களா?”
“நாமளே இன்னொரு பொண்ணு வாழ்க்கைல இப்படி யோசிக்கலாமா? எனக்கு அண்ணந்தம்பி இருந்திருந்தா இந்நேரம் நானே பேசி அவளக் கட்டி வச்சிருந்திருப்பேன். அதுனால எம் மாமியா வீட்ல எந்த அவமானமும் இல்ல. சொல்லப்போனா இந்த நன்மைக்கு எனக்கு அல்லாஹ்ட்ட கூலிதான் கெடைக்கும்”
“அப்படி டன் கணக்குல கூலி வேணும்னா ஒம்புருசனுக்கு கட்டிக் கொடு!”
கோபத்தில் கொட்டிய வார்த்தை விரசமாய் இருந்தது. அக்கறையில் தூய்மைத்தனம் இருந்தாலும் பௌசியாவால் எப்படி கணவனை தாரை வார்க்க முடியும்? ஊர் கலாச்சாரத்தோடு ஊறிப்போய்விட்டவளிடம் போய் கேட்டது பௌசியாவின் தவறு. ஊர்க்கார பத்திரகாளி தங்கையை விட்டுவிடலாம், முன்னாள் காதலியேயென்றாலும் இரண்டு குழந்தைகளுடன் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க ஷேக்கிற்கும் கூட அவ்வளவு விசாலமான மனமெல்லாம் இல்லை. அப்படியிருந்திருந்தால் காதலித்தவள், கணவனை இழந்ததுமே கருணைக் கொண்டு வாழ்க்கை கொடுத்திருக்க வேண்டுமில்லையா?
பஷீரா கணவன் இறந்தபோது ஷேக்கிற்கு பெண்பார்க்கும் படலம் தொடங்கிய சமயம். அதாவது, எல்லாமுமே ஒத்துழைப்பு நல்கிய காலகட்டம். ஆனால், பஷீரா ‘இத்தா‘ காலம் முடிப்பதற்குள் ஷேக்கின் முதல் திருமணம் முடிந்துவிட்டது. முடிந்த வேகத்தில் தலாக்கில் முடிவுக்கும் வந்திருந்தது. அதன் பின்னும் யாரும் பஷீராவை குறித்து நினைக்கக் கூட இல்லை. சொல்லப்போனால் பஷீராவின் நிர்கதியான இந்த நிலையில் பாதிப் பங்கு ஷேக்கிற்கும் இருந்தது. வீட்டார்க்கு தெரியவந்து, காதல் முடிவுக்கு வந்ததில் ஷேக்கிற்கு எந்த நட்டமும் இல்லை. பஷீராவின் வாழ்க்கைதான் மொத்தமும் தலைகீழாய் மாறிப்போயிருந்தது.
பஷீராவின் பள்ளிப்பருவ காலம்! ஷேக்– பஷீரா காதல் விஷயம் தெரியும் முன்பு வரை எல்லாமே சுமூகம். விறகடுப்பின் சமையற்கூடத்தில் புகையும் கரியும் இருளும் மண்டியிருப்பது போலவே, பஷீராவின் வீடும் வீட்டு ஆண்களுமிருந்தார்கள். இருள் பிரதேசத்து சிதிலமடைந்த கோட்டையில் அவளின் திறமைகள் யாருக்கும் தென்பட வாய்ப்பில்லாமல் போயின. அவளின் குரல் பேரிரைச்சலாய் கசந்தது.
ஆனால், வீட்டைவிட்டு படி தாண்டிவிட்டால் முழுமையான பஷீராவைக் கண்டுவிடலாம். சிறையுடைத்த பறவை தன் விடுதலை எண்ணி வானமெங்கும் வட்டமடித்து மகிழ்ச்சியை பறைசாற்றுவதற்கு நிகரானது அவளின் வெளியுலகம். பஷீராவின் வானத்திற்கும் எல்லை இருந்தது. பள்ளிக்கூடம் என அந்த எல்லைக்கோட்டிற்குப் பெயர். பெண்களின் அறியாமையை விடுவிக்கும் இடமாக மட்டுமா பள்ளிக்கூடங்கள் செயல்படுகிறது? முன்பொருகாலம் அது ஆசுவாசப்படுத்தும் ஆறுதல் மையமாகவும் இருந்து வந்தது. இயந்திரத்திற்குப் பதிலாக பெண்களைப் பயன்படுத்திக்கொண்ட காலகட்டங்களில் ஓய்வெடுக்கும் சொற்ப பருவத்தை பள்ளிக்கூடம் அன்பளித்துக்கொண்டிருந்தது.
பஷீரா படிப்பாளி. படிப்பின் மூலம் அத்தா, அண்ணன் இல்லாத வேறொரு ஊருக்கு தப்பித்துவிடலாம் என அவள் மனதை எது நம்ப வைத்ததோ அதுவே அவளை தேர்ந்த படிப்பாளியாகவும் ஆக்கியிருந்தது. வகுப்பறையில் ராணி ! அவள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்பலை வகுப்பறையை நிரப்பும். எப்போதும் எல்லோரையும் சந்தோஷத்தில் வைக்கும் கலை அவளுக்கு வாய்த்திருந்தது. அதனாலேயே அவள் நின்றால் நடந்தால் அசைந்தால் அவளுடன் நிழலாக வர தோழிகளின் கூட்டம் சூழும் . தோழிகளின் வீடுகளிலும் பஷீராவின் புராணம் சதா ஒலித்துக்கொண்டே இருந்தது.
எப்போதும் வீட்டில் பேசுபொருளாக இருக்கும் தங்கையின் பள்ளித்தோழியை, அந்த புராணங்களில் மயங்கியே காதல் வயப்பட்டான் ஷேக். தன்னை சிறையிலிருந்து கைப்பற்றப்போகும் மீட்பன் இவன் என பஷீராவை நம்ப வைத்து, உடனே காதலை ஏற்றுக்கொள்ள வைத்தது பஷீராவின் வயது.
காதல் வந்தால் என்னாகும் ? அடிக்கடி தோழி வீட்டுக்குப் போகச் சொல்லும். ஆள் இல்லாத தெருமுனையில் நின்று சற்றுநேரம் பேசச் சொல்லும். பாடங்கள் இடம்பெற்ற நோட்டுக்களில் திடீரென காதல் கவிதைகள் முளைக்க அது கடிதங்களாகவும் வடிவம் மாறும். அவ்வாறாக கால் முளைத்த கவிதையொன்று ஷேக் கைக்குச் செல்லும் முன்பே பஷீரா அண்ணன் கையில் அகப்பட்டதில், அகப்பை முதல் விறகுக் கட்டை வரை யாவற்றின் அடிகளையும் பஷீராவின் உடல் ஏந்திக் கொண்டது. மொத்தமும் அதிலிருந்தே மாறத் தொடங்கியது.
எந்த பிரச்சனை வந்தாலும் தீர்க்க வல்ல சர்வ வல்லமையும் பொருந்திய தூய காதலகர்களாக தம்மை கருதிக்கொள்பவர்கள், யாரிடமாவது மாட்டும்வரை அதே நினைப்பிலேயே மிதப்பார்கள். கையும் களவுமாக பிடிபட்டபின், குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து கேள்விகள் கேட்கும்போதே இதுவரை கொண்டிருந்ததெல்லாம் குருட்டுத் தைரியமென புலப்படும். பஷீராவை மீட்டுப்போக ஷேக் வரவில்லை. மாறாக, அத்தா அம்மா விஷம் குடித்துவிடுவதாக தன்னை மிரட்டியதால் அவள் வீட்டுக்கு வந்து விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றான். இல்லை..இல்லை…சமாளித்தான்.
வீட்டு ஆண்கள், பெண்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தை உபயோகித்து முதன்முதலாய் ரத்து செய்யப்பட்டது, பள்ளி சென்று வந்த சலுகை! அதே ஆண்கள் நினைத்திருந்தால் ஷேக்கிற்கே அவளை திருமணம் செய்து வைத்திருக்கலாம். காதலுக்கு புனிதம் கொடுக்க இருவீட்டாருக்கும் சம்மதமில்லை. ஷேக் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட, பஷீரா தினசரி வீட்டாரின் வசைகளோடு நாட்களைக் கடத்தினாள்.
கடத்திய அந்நாட்கள் கொடூரம் மிக்கது! வாசலுக்கு பால் பாக்கெட் எடுக்க வந்தாலும் காதில் கூசும் சொற்களைக் கேட்க வேண்டியிருந்தது தாயிடமிருந்தே! “பால் எடுத்தோமா உள்ள வந்தோமான்னு இருக்கணும். இளிச்சுட்டு நிக்காத”. அடிக்கடி அவள் அலமாரி தணிக்கைக்குட்படுத்தப்பட்டது தந்தையால்! ஒரே ஒருமுறை மட்டும் பெருநாள் தொழுகைக்காக திடலுக்கு வந்தவளின் கண் அசைவுகளைக் கூட கண்காணித்துக்கொண்டு அவளை குற்றவாளிகளாகவே நடத்தினார்கள் அண்ணன்கள். அடுத்த பெருநாளுக்குள்ளாக திருமணம் முடிந்துவிட்டது. காதல் எல்லோருக்கும் வரக்கூடிய உணர்வு! எல்லோரும் கடந்து வரக்கூடிய வயது. ஆனால், தன்னையன்றி வேறொருவர், அதுவும் தன் வீட்டுப்பெண் காதல்வயப்படும்போது அவர்களின் ஒழுக்கத்தை முன்வைத்து வசைப்பாடல் தொடங்குகிறது. அன்றைய நாளில் இதற்கெல்லாம் திருமணம் ஒன்றே விடுதலை!
இந்த இருள் நரகத்தில் இருந்து தப்பி அவள் விழுந்தது நரகல் உலகில். கட்டியவன் படு குடிகாரன்! சூதாடி. இன்னும் என்னன்ன பழக்கம் கொண்டவன் என்பது இறைவனுக்கே வெளிச்சம். இரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்து பெற்றதெல்லாம் பஷீராவின் உரிமையில் இல்லாத விஷயங்கள். காதலுக்காக ஒரே ஒருமுறை அடிகளை ஏந்திய உடம்பு, அதன்பின்னர் தினமும் கணவனால் அனுபவித்து மரத்துப்போகும் நிலைக்குச் சென்றிருந்தது. ஆரம்பத்தில் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கெல்லாம் வந்துகொண்டிருந்தாள். பெற்றவர்களுக்கு தன் மகள் கொடிய மிருகத்தின் வசமே இருந்தாலும், ‘கணவன் வீட்டில் இருக்கிறாள்’ என சொந்தபந்தங்களிடம் சொல்லிக்கொள்வது கௌரவத்தின் தகுதியாக இருந்ததது. அதனால் கணவனிடம் அடிவாங்கி பிறந்தவீட்டிற்கு வந்த வேகத்தில் ஒரு வேளை உணவோடு திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டேயிருந்தாள். அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆன பின்னர் தாய்வீடும் பஷீராவிற்கு அந்நிய தேசத்திற்கு கடல்கடந்து கள்ளத்தோனியில் பயணிப்பதுபோல் படுசிக்கலாகிப் போயிற்று.
ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கணவன் கொடுத்த அடியில் திமிறி எழுந்து சண்டையிட்டு அம்மா வீட்டிற்குச் சென்றிருந்த நேரம். ஒரு வாரத்திற்குள் எவ்வளவு மாற்றம் ! இவள் சுமையாக இருக்கப்போவது புரிய வந்தபோது அண்ணன் மனைவிகளின் நடவடிக்கைகளில் திடீரென கோர வடிவம் குடிகொண்டது. இவையாவும் அத்தா, அம்மாவின் ஆதரவோடுதான் நடந்தேறிக் கொண்டிருக்கிறது என புரியவந்தபோது கட்டப்பையில் துணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு தன் கணவன் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானவளை அதே நிலையில் இத்தாவில் உட்கார வைத்தது இறைவனின் நாட்டம். பஷீராவின் விதிப்படி சொந்தபந்தங்களின் வழக்கத்தைப் பின்பற்றி கணவனின் தற்கொலை கணக்கும் அவள் தலையிலேயே எழுதப்பட்டது.
திரும்பவும் அவள் உலகம் இருள் பிரதேசத்துக்குள் சுருங்கிப் போனது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விஷம் அருந்தி இறந்துபோயிருக்கிறான். ஆனால், பஷீரா அவனை விட்டுச் சென்றதால் துக்கமும் அவமானமும் தாளாமல் விஷம் அருந்திவிட்டதாக யாரோ கதை கட்ட, அதுவே காலத்துக்கும் நிலைபெற்றுவிட்டது. யாரேனும் பாவப்பட்டு அவளைத் திருமணம் செய்வதாக இருந்தாலும் இந்த குற்றப்பத்திரிக்கை ஒன்றே அவர்கள் பின்வாங்க போதுமானதாகிப்போனது.
மீண்டும் ஒரு திருமணத்திற்கு அவள் தயாராக இல்லாததைப் போலவே அத்தா, அண்ணன்களுக்கும் விருப்பம் இல்லை. ஒருமுறை அம்மா சொன்னாள் , “ஒரு புருசனோட வாழ்றதுதான் வாழ்க்க..”. சினிமா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்னவோ.. அதுவன்றி, இறந்த கணவனை நினைத்தே மீத வாழ்க்கையை கழிப்பது புனிதம் என எப்படி மக்கள் தங்கள் கலாச்சாரத்தையே மாற்றியிருப்பார்கள்? பிள்ளைகளை வளர்த்தெடுப்பது மட்டும் தான் தனக்கான விடுதலை என பஷீரா முடிவெடுத்தபோது சகலத்தையும் சகித்து விழுங்கத் தொடங்கிவிட்டாள். சகலத்தையும்!
காலத்திற்கு சக்கரங்கள் இருந்தது. ஆண்டுகளை அவை விரைவுபடுத்தியது.
சொன்னபடியே பௌசியா, பஷீராவின் மகனை வெளிநாட்டுக்கு எடுத்துக்கொண்டாள். மகளை மணமுடித்து கொடுக்கும் வரையில் அத்தா வீட்டில்தான் பஷீரா இருந்தாள். இப்போது மகனையும் கட்டிக்கொடுத்துவிட்டு மருமகள், பேரப்பிள்ளைகளுடன் நகரின் மையப்பகுதியில் அடுக்ககத்தின் 8வது மாடியில் காலம் கழிக்கிறாள் பஷீரா.
கட்டிடத்தை அண்ணாந்து பார்க்கும்போது பௌசியாவிற்குள் அவ்வளவு பெருமிதம்! தன்னால் தன் தோழியின் வாழ்க்கையை மாற்றி உயரத்தில் குடியமர்த்த முடிந்திருக்கிறது! மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக இம்முறை பஷீராவைக் காண வந்திருந்தாள்.
இப்போதும் ஓர் அறைக்குள் தனது வாழ்வை சுருக்கிக்கொண்டவளாகவே பஷீரா இருந்தாள். காலத்தின் சக்கரம் ஆண்டுகளை விரைவுபடுத்தியதில் எது வேண்டுமென்றாலும் மாறியிருக்கலாம். உணவுக்கும் வசிப்பிடத்திற்கும் இன்னொருவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலை கைதிகளுக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள்தண்டனை அல்லவா?
பௌசியா சொன்னாள், “நான் வேணும்னா ஒம்மகன்கிட்ட ஒம்மருமக அதாபு கொடுக்குற விஷயத்தச் சொல்லி கண்டிக்கச் சொல்லவா?”
இப்போதும் பஷீரா, பௌசியாவின் வாயில் கைகுவித்து மூடிவைத்தாள்.
பஷீரா வசிக்கும் அறையின் நாற்சுவரில் இன்றும் 400 காதுகள் அகலாமல் இருந்தன. இம்முறை பஷீராவின் உள்ளங்கைக்குள் திணிக்கப்பட்ட ரூபாய்தாள்கள் பேரன் அடம்பிடித்த புதிய கிரிக்கெட் மட்டைக்கு உதவும்.
***********
சமூகத்தில் பெரும்பாலான பெண்களின் துயரங்களைத் தாங்கி நிற்கும் ஆழமான சிறுகதை.