
இசையைத் தந்த வடிவங்கள்
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.? இப்படியாகத்தானே முதலிரண்டு நாவல்கள் வந்து கொஞ்சம் வருமானத்தையும் நிறையப் பெயரையும் பெற்றுத் தந்தபின், ஃபேஸ்புக்கில் நிறைய நண்பர்கள் கிடைத்ததை அடுத்தடுத்து வந்த புத்தகக் காட்சிகளும், புத்தகங்களும் பன்மடங்காகப் பெருக்கிவிட…. நாலு பேருக்குத் தெரிந்த, அரைகுறைப் பிரபலம் என்றாகி… இப்போது ‘வாசகசாலை’யில் இப்படியொரு தொடர் எழுதும் நிலையை அடைந்திருக்கிறேன்.
இந்த பல‘சரக்கு’க் கடையில் என் எண்ணங்களையும், வித்தியாசமான சில விஷயங்களையும் பகிரலாம் என்று துவங்கிய தொடர், திட்டமிடாமல் நான் பகிரத் துவங்கிய வேலை அனுபவங்களைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு சுயசரிதைத் தொடராக இத்தனை வாரங்களைக் கடந்துவிட்டது. இனி மீண்டும் முதலில் நினைத்தபடி நினைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோருக்கும் பிடித்த இசை என்கிற விஷயத்தை இந்த வாரம் பார்க்கலாம்.
ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலில் என் மனம் இசை ரசனையில் ஈடுபட்டது ஏழு, எட்டு வயதில்தான். என்னுடைய அத்தை வீட்டில் அப்போது ஒரு ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. ஆரம்பக் காலங்களில் வெளியான மாடல் அது. ப்ளேயரில் ரெக்கார்டைப் பொருத்திவிட்டு, ஊசியை அதன்மீது வைத்து, அதன் சைடில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றி விட்டால் ரெகார்டு சுழன்று அது பாடும். வயசுப் பெண்ணைக் கையாள்கிற மாதிரி நிதானமாகத்தான் அந்தக் கைப்பிடியை லயம் பிசகாமல் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால்தான் அது, ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே’ என்று தெளிவாகப் பாடும்.
அந்த வயதில் என்னைப் பொறுத்தவரை லயமாவது, புண்ணாக்காவது… கடகடவென்று படுவேகமாகச் சுற்றித் தொலைப்பேன். ‘எணி எணி பாக மம் இபம் கொடாதே’ என்று விசித்திரமான கீச்சுக் குரலில் அது பாடுவதை ரசித்துச் சிரிப்பேன். அப்படியே லீவரைச் சுற்றாமல் விட்டு விட்டாலோ… நார்மலான குரல் மோடுக்கு வந்து, பிறகு, போதையில் தள்ளாடுகிறவனின் குரலில் ‘எ…ண்…ணி… எ…ண்…ணி… பா…ர்…க்…க…’ என்று இழுத்துப் பாடிக் கொண்டே சென்று நின்று விடும்.
அதையும் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பேன் நான். அத்தை வீட்டுக்காரர்தான் காண்டாகி என்னுடைய புடனியில் ஓங்கித் தட்டி, ‘‘அடேய், இப்டில்லாம் இ(ம்)சை பண்ணிணா அது ரிப்பேராயிடும். அதுவுமில்லாம அதுல இருக்கற ஊசி ரெக்கார்டுல ஸ்க்ராட்ச் பண்ணிரும். ஒழுங்கா ஹேண்டில் பண்றா’ என்பார். அவரல்லவா உடைமைக்காரர்!
“என்னது…? இதுல ஊசி இருக்கா..? எங்கே?” என்று செந்தில், கவுண்டமணியிடம் கேட்கிற மாதிரி நான் கேட்பதற்கு பொறுமையாக விடை சொல்லுவார். “இதோ பாரு… இதான் ஊசி. ரெக்கார்டு சுத்தும்போது தட்டையா சுத்தாம கொஞ்சம் மேடு பள்ளமா சுத்துது பாத்தியா…? அதுல ஊசி உரசறப்ப அதுலருந்து சத்தம் வந்துதான் நமக்கு மியூசிக்கா கேக்குது…”. ஒரு இழவும் புரியாவிடினும், எல்லாம் புரிந்து விட்ட மாதிரி கெத்தாக மண்டையாட்டி வைப்பேன். (அப்பவே பந்தா!)
அதன்பின் என்னுடைய அப்பா மேலுலகப் பயணம் சென்றுவிட, கன்னாபின்னாவென வாழ்க்கை அலைக்கழித்ததில் சில ஆண்டுகள் நோ டைம் டு ஹியர் இசை. பின்னர் சற்று ஸ்டெடியான காலகட்டத்தில் சித்தப்பாவின் வீட்டில் ஒரு ரெக்கார்ட் ப்ளேயரைப் பார்த்தேன். இப்போது விஞ்ஞானம் முன்னேறி, மின்சாரத்தால் அதுவே ஸ்ருதி பிசகாமல் சுற்றுகிற அளவிற்கு முன்னேறியிருந்தது. நானும் சற்றே வளர்ந்து விட்டிருந்ததில் இசையை ரசிக்கிற மனசும் முன்னேறியிருந்தது. இந்தப் ப்ளேயரில் கூடவே ஸ்பீக்கரும் இணைக்கப்பட்டிருந்ததால் பாட்டுக் கேட்டல் என்பதே இனிய அனுபவமாகியிருந்தது அப்போது.
ஆனால் என்ன கொடுமை…! சித்தப்பா வைத்திருந்தது வெகுசில தமிழ் இசைத்தட்டுகளே.. பெரும்பாலும் இந்திப்பட இசைத் தட்டுகளாகவே வைத்திருந்தார். ‘வீ டோண்ட் ஹியர் தமிழ் மியூசிக்… ஒன்லி இந்தி மியூசிக்’ என்று கா.நே. செல்லப்பா நாகேஷின் லேட்டஸ்ட் வர்ஷன் போலத் தோற்றமளித்தார் சித்தப்பா இவனுக்கு. கேட்டுப் பார்த்ததில் ஒரு வரியும் புரியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாய் ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டதில் இசை மனதில் நின்றது. ஆர்.டி.பர்மன் என்கிற பெயர் மனதினுள் நுழைந்தது. எனக்கு மிகப் பிடித்தமானவராகிப் போனார் அந்த இந்தி இசையமைப்பாளர்.
அதுவும் ஓராண்டுதான்… மதுரையிலிருந்து கோவை, விக்கிரவாண்டி என்று அண்ணனின் உத்யோக நிமித்தம் ஊர்களும் பள்ளிகளும் மாற, ரெக்கார்ட் ப்ளேயர் வாழ்க்கையிலிருந்து பிரியாவிடை பெற்றது.
அதன்பின் ஏழெட்டாண்டுகள் கழித்து, நான் ப்ளஸ் டூ படித்த சமயம் என் அண்ணன் அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த டேப்ரெகார்டர் ஒன்றை வாங்கி வந்தார். நேஷனல் பானாஸோனிக் கம்பெனியின் ஒரிஜினல் மோனோ டேப் ரெகார்டர் அது. ஒற்றை ஸ்பீக்கரில் இசையை இரைக்கும். பின்னாளில் வரப்போகிற விஞ்ஞான விந்தைகளை அந்நாளில் ஊகிக்கிற அறிவை நான் படைத்திருக்கவில்லை என்பதால் (‘இப்ப மட்டும் படைச்சிருக்கியா’ன்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது… அடங்குங்க… ஹி… ஹி…) அதை மிகவே ஆச்சரியித்து ரசித்தேன் நான். அப்போதிலிருந்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்கிற காலம் ஆரம்பமானது.
அடுத்த சில ஆண்டுகளில் டபுள் ஸ்பீக்கர்கள் வைத்து ஸ்டீரியோ இசை கேட்கிற வசதியுடன் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பிக்க… மோனோ சவுண்டில் பக்கத்தில் வந்து நின்றிருந்த இளையராஜா ஸ்டீரியோ சவுண்டில் மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டார். என்னா க்ளாரிட்டி… என்னா சவுண்டு…! அதுல பாதி சத்தம் வைச்சாலே அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வர்ற அளவுக்கு சும்மா அதிர்ந்துச்சுல்ல… வீடெங்கும் கேஸட்டுகளாகக் குவியத் துவங்கி, அலமாரிகள் நிரம்பி வழிந்தன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் பாட்டுக் கேட்பதில் இளையராஜாவை மிஞ்சிய சுகானுபவத்தை வழங்கிய ஏ.ஆர்.ரகுமானும் இந்த கேஸட் குவிப்புக்கு ஒரு பெருங்காரணம்.
அதை ரசித்துக் கொண்டிருந்த அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணாவை (பேரறிஞர் அண்ணா இல்லீங்க… என்னோட அண்ணா) அவர் அலுவலகம் சிங்கப்பூருக்கு ஒரு பயிற்சிக்காக அனுப்பி வைத்தது. அவர் வரும்போது அங்கிருந்து ஸோனி நடை மனிதன்-கள் (வாக்மேன்கள்) இரண்டு வாங்கி வந்திருந்தார். ஆஹா… அதில் கேஸட்டைப் போட்டு, இயர்போனினால் ரசித்தபோது… சொர்க்கம்! அத்தனை துல்லிய இசையை அதற்கு முன் நான் வாழ்நாளில் கேட்டதே இல்லை. வெளியுலகச் சத்தம் எதுவும் இடறாமல், நானும் வெளியுலகத்தை சத்தத்தால் இடறாமல் நிம்மதியாகக் கேட்க முடிந்ததில் அத்தனை ஆனந்தம்.
பிற்காலத்தில் இவன் தினமலரில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் ஊர் ஊராக இவனை மாற்றல் செய்து பந்தாடிய சமயங்களில் எல்லாம் வாக்மேன் தான் எனக்கு உற்ற தோழன். மதுரையில் எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடமொன்றில் தேடிப்பிடித்து குட்டி ஸ்பீக்கர்கள் ரெண்டு வாங்கியிருந்தேன் நான். அதை வாக்மேனுடன் இணைத்து இயர்போனுக்கு விடுதலை தந்து மெல்லிய சத்தத்தில் (அந்த ஸ்பீக்கரோட அவுட்புட்டே அவ்ளவ்தான்) இசை கேட்பது எனக்கும் என்னுடைய அறைத் தோழர்களுக்கும் வாடிக்கையாகிப் போனது.
அந்த ரிகார்ட் ப்ளேயர்களும், டேப் ரெகார்டர்களும், வாக்மேனும் இப்போது எங்கே போயின என்றெண்ணி பல சமயம் வியப்பதுண்டு நான். வெறிகொண்டு வாங்கிக் குவித்த கேஸட்டுகள் எல்லாம் ஒரு ஓரமாக ஷெல்ப் நிறையக் குவிந்து கிடப்பதையும், தூசி படிந்து டேப் ரிகார்டர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கையில் பலசமயம் பரிதாப உணர்வு எழும் என் மனதில். ஆனாலும் என்ன செய்வது…?
பணத்தைத் துரத்த வேண்டியிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், கம்ப்யூட்டரும் ஸ்பீக்கர்களும் இணைந்து எம்பி3 இசைதர வீட்டிலும், வெளியில் செல்கிற தருணங்களில்- பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டு அதைத் தவிர மற்ற வேலைகளுக்கெல்லாம் இன்று பயன்படுத்தப்படுகிற – செல்போனுடன் சேர்ந்த இயர்போனும் இசையை மட்டற்ற அளவில் வழங்குகிற சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே அனைவரும் வாழ வேண்டி இருக்கிறது. எனவே, மனமேயில்லாமல் வீட்டிலிருந்த டேப் ரிகார்ட்ரையும், கேஸட்டுகளையும் ஒருசமயம் டிஸ்போஸ் செய்தோம்.
நிதானமாக யோசித்துப் பார்த்தால், ஒரு சமயம் கோலாச்சுகிற விஞ்ஞான சமாச்சாரங்கள் அடுத்தசில ஆண்டுகளில் அதை விஞ்சுகிற ஒன்று வந்தால் காணாமல்தான் போகின்றன. ஒரு காலத்தில் திரைப்படங்களை அவை வெளியான உடனேயே சிடியில் போட்டு விற்கிற வியாபாரம் கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்திருப்பீர்கள். கேஸட்டுகளை வாங்கிக் குவித்ததைப் போல, வீட்டில் டிவிடிக்களை வாங்கிக் குவித்து வைத்திருந்தவர்கள் பலர். இன்று வருகிற லேப்டாப்கள், கம்ப்யூட்டர்களில் சிடி டிரைவ் என்ற ஒன்றே இப்போது கிடையாது. அதேபோல டிவிடிக்கு அவசியமின்றி ஓடிடி ப்ளாட்பார்ம்களும் வந்துவிட்டன. இன்றைய தேதியில் டிவிடி பிசினஸ் டோட்டல் அவுட்.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்களில் ப்ளாப்பி என்றொரு சதுரமான வஸ்துவைப் போட்டுத்தான் தகவல்களைச் சேமிப்போம் என்றும், கம்ப்யூட்டர்களின் அதிகபட்ச மெமரியே 50 எம்பியைத் தாண்டாது என்றும் சொன்னால் இன்றையத் தலைமுறைப் பிள்ளைகள் புருவம் உயர்த்தத்தான் செய்வார்கள். இப்படி அடுத்தடுத்த தலைமுறைகளில் பழையவை கழிந்து புதியவைகள் வாழ்கின்றன. பழையவை நினைவுகளாகவே தங்கிப் போகின்றன. ஏறத்தாழ சமூகமும் அப்படித்தானே. சென்ற தலைமுறையை நினைவுகூரும் இன்றைய தலைமுறை, நாளை அழிந்து நாளையத் தலைமுறையால் நினைவுகூரப்படும்.
தொடர்கிறேன்…