அப்துல் சுக்கூர் வீட்டிலுள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. சம்மர்கிராப்பிய தலை. மீசை இல்லாத மேலுதடு. ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். கைகால் நகங்களை கத்தரித்து நகாசு பண்ணியிருந்தார். இரு காதோரம் நரை பூத்திருந்தது.
சுக்கூர் பாய் ஒரு தொழிலதிபர். அவருடைய வருட டர்ன் ஓவர் ஐந்துகோடி. அவரிடம் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
உதவியாளர் “அஸ்ஸலாமு அலைக்கும்!” எனக்கூறி ஒரு கோப்புடன் வந்து நின்றார்.
“வஅலைக்கும் ஸலாம்!”
“பாய்! ஆடிட்டர் ரிப்போர்ட் கொண்டு வந்திருக்கிறேன். இந்த வருடம் நாம் 20 இலட்சம் ரூபாய் ஜக்காத் தரலாம்..”
கோப்பை வாங்கி ஆழமாக வாசித்தார் சுக்கூர்.
“ஆட்டோ விலை விசாரித்தீர்களா உஸ்மான்?”
“விசாரித்தேன். பிஜியோ ஆப் ஆட்டோ 3.02லட்சம்.. பஜாஜ் ஆட்டோ1.96லட்சம் பாய்!”
“பத்து பஜாஜ் ஆட்டோ இருபது லட்சத்துக்கு வாங்கிருங்க.. பத்து ஏழை முஸ்லிம் வாலிபர்களுக்கு அந்த ஆட்டோக்களை ஜக்காத்தாக கொடுப்போம்!”
அப்துல் சுக்கூர் பாயின் மனைவி சல்மா இடைபுகுந்தாள். “அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வலைக்கும் ஸலாம்!”
“ஜக்காத் யாராருக்கு கொடுக்கப்படவேண்டும் அன்பு கணவரே?’‘
“பக்கீர்களுக்கு – மிஸ்கீன்களுக்கு – புதிதாக இஸ்லாமை தழுவிய ஏழைகளுக்கு -கடனில் மூழ்கி தவிப்போருக்கு – வழிப்போக்கர்களுக்கு – அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோருக்கு- ஜக்காத் நிதி ஊழியர்களுக்கு ஜக்காத் தரலாம்!”
“யார் ஜக்காத் கொடுக்கலாம்?”
“பதினோரு பவுன் நகை அல்லது அதற்கு சமமாக பணம் நாற்பது ஆடு ஐந்து ஒட்டகம் அல்லது அதற்கு சமமான பணம் எப்போதும் கையில் இருந்தால் ஜக்காத் கொடுக்கலாம். ஜக்காத் இரண்டரை சதவீதம். வருடாவருடம் கொடுக்கப்பட வேண்டும்…”’
“ஜக்காத்தை இஸ்லாம் பற்றி நல்ல அபிப்ராயம் உள்ள மாற்றுமத சகோதரர் களுக்கும் வழங்கலாம் என எங்க ஓதரம்மா சொல்லியிருக்காங்க… பத்து பேரில் மூன்று பேர் மாற்றுமத சகோதரர்களாய் இருக்கலாம் தப்பில்லை!”
“எனக்கு இது புதுதகவல். இமாமிடம் கேட்டு செய்கிறேன்!”
“ஜக்காத்தை பெற்றோருக்கு கணவன் மனைவிக்கு மகள்களுக்கு காபிர்களுக்கு கொடுக்ககூடாது. மாற்றாந்தாய் மருமகள் மருமகனுக்கு ஜக்காத் கொடுக்கலாம்!”
“அப்படியா?”
“ஜக்காத் என்றால் தூய்மைபடுத்துதல் என்று பொருள். ஜக்காத் இஸ்லாமிய பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண். ஜக்காத்தை உணவாக கொடுக்கக் கூடாது. ஜக்காத் அல்லாஹ்விடம் வியாபாரம் செய்வது போல. இந்த வியாபாரத்தில் நஷ்டமே வராது. ஜக்காத் கொடுப்பவர் பாபுஸ்ஸதகா எனப்படும் வாசல் வழியே சொர்க்கம் புகுவர்!”
“தலை இருக்க வால் ஆடலாமா சல்மா? அதிக பிரசங்கிதனமாக நீ பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. என் தொழில் விஷயத்தில் நீ தலையிடாதே. உள்ளே போ..”
“தலை போல வாலும் உடலின் ஒரு உறுப்புதானே? தலையின் நன்மைக்காக வால் ஆடினால் தப்பில்லை..”
“சரி மூன்று பிறமத சகோதரர்களுக்கு ஜக்காத்தாய் ஆட்டோ வழங்கிடலாம்.. நீ கிளம்பு…”
“இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கிறது அன்பு கணவரே!”
“இம் பேசு..”
“இரண்டே முக்கியமான கேள்விகள்… ஜக்காத்துக்கு தகுதியான பெண்கள் ஜக்காத் கொடுக்கலாமா இல்லையா? ஜக்காத் கடமையான பெண்கள் அவர்கள் பெயரில் குர்பானி கொடுக்கலாமா இல்லையா?”
“இந்த கேள்விகளை யாருக்காக கேட்கிறாய்?’‘
“எனக்காகக்தான் கேட்கிறேன்… மௌத்தானவர் பெயர்களில் எல்லாம் குர்பானி கொடுக்கிறீர்கள்.. வாழும் தகுதியான பெண்கள் பெயரில் ஏன் குர்பானி கொடுக்கக் கூடாது?”
“நீ ஒரு பணக்கர தொழிலதிபரின் மனைவி.. இந்த தகுதிகள் ஜக்காத் கொடுக்கவும் குர்பானி கொடுக்கவும் போதுமானவையா?”
சிரித்தாள் சல்மா. “முழு பூசணிக்காயை சோத்தில மறைக்க பாக்றீங்களே.. நான் மார்க்க அடிப்படைகளை பின்பற்றும் இல்லத்தரசி. இது என் முதல் அடையாளம். டப்பாக்களில் உணவுகளை அடைத்து வைக்கும் சிறுகுறு தொழிலதிபர் நான் என்பது என் இரண்டாவது அடையாளம்!”
“ரோட்டோரத்தில் இட்லி சுட்டு விக்கும் ஆயா கூட தன்னை சிறுகுறு தொழிலதிபர் என சொல்லிக் கொள்ளலாம்!”
“என் உணவுப்பணியை இழிவுப்படுத்தாதீர்கள். நேர்மையாய் உழைத்து பிழைக்கும் எந்த தொழிலும் கீழானது அல்ல. என்னிடம் ஆதார்கார்டுடன் பேன்கார்டும் உள்ளது. வருடம்தோறும் ஐடி ரிட்டன்ஸ் சமர்ப்பிக்கிறேன். இதோ என் ஆடிட்டர் ரிப்போர்ட்!’‘
“உன் ஆடிட்டர் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”
“இந்த வருடம் நான் 88000ரூபாய் ஜக்காத்தாக கொடுக்கலாம் என்கிறது என் ஆடிட்டர் ரிப்போர்ட்!‘
அப்துல் சுக்கூர் கொஞ்சம் இறங்கி வந்தார்.
“யாருக்கு ஜக்காத் கொடுக்கப் போற?”
“சிங்கர் தையல் இயந்திரம் 4200 ரூபாய். உஷா தையல் இயந்திரம் 8799ரூபாய் பத்து ஏழை பெண்களுக்கு உஷா தையல் இயந்திரம் வாங்கித் தரப்போகிறேன்!’‘
“இந்த மஹல்லால்ல எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. எனக்கு போட்டியா நீ ஜக்காத் கொடுத்தா மக்கள் என்னை இளப்பமாக பாக்க மாட்டாங்க?”
“அப்படி ஏன் பாக்றீங்க? ஜக்காத் கொடுக்க கடமையுள்ள மனைவியை ஜக்காத் கொடுக்க அனுமதிச்ச கணவான்னு உங்களை மஹல்லா மக்கள் பாராட்டவே செய்வாங்க!’‘
“ஒரு வீட்டில் ரெண்டு ஜக்காத்தா?”
“நாளைக்கு உங்க இரண்டு மகள்கள் படிச்சு வேலைக்கு போகும் போது அவங்களும் ஜக்காத் கொடுப்பாங்க. ஒரே வீட்டில் நாலு ஜக்காத்துகள்!”
“கணவனுக்கும் தந்தைக்கும் நிழலாக நிற்க வேண்டும் பெண்கள்..”
“அவரவர் நிழல் அவரவருக்கு..”
“உன்னை பாத்து தகுதியான மஹல்லா பெண்கள் ஜக்காத் கொடுக்க கிளம்பி விட்டால்?”
“நல்ல விஷயம்தானே.. ஏழைகளுக்கு நூறு திசைகளிலிருந்து உதவி கிடைக்கட்டுமே.”
“இப்படி ஒவ்வொன்றிலும் உரிமைக்குரல் எழுப்புனீர்கள் என்றால் இஸ்லாமிய ஆண்களின் கதி அதோகதிதான்..”
“இஸ்லாமிய பெண்கள் சொந்தக்காலில் நிற்கக் கூடாது என்று மார்க்கம் எங்காவது சொல்லியிருக்கிறதா?”
“நீ வழங்க விரும்பும் ஜக்காத்தை நான் என் கையில் வழங்கி விடுகிறேனே..”
“நோ..”
“என்னுடைய சம்பாத்தியத்தில் தானே டப்பா உணவு விற்கிறாய்?”
“இல்லையே என் தந்தை என் திருமணத்தின் போது என் வங்கி கணக்கில் நான்கு லட்சம் டெபாசிட் செய்தார். அந்த பணத்தை ஒன்றரை கோடியாக பெருக்கியுள்ளேன். நான் கொடுக்க போகும் ஜக்காத்தில் உங்கள் ஒரு பைசா கலக்கவில்லை. ‘சல்மா பேக்ட் புட்ஸ்’ என் தனிமனித உழைப்பு. உங்களுக்கு நல்ல மனைவியாக நம் மகள்களுக்கு நல்லதாயாக இருப்பதில் எதாவது குறை வைத்திருக்கிறேனா? நான் உங்கள் மனைவிதான். உங்கள் அடிமையல்ல என்னுடைய நன்மை தீமைகளில் உங்களுக்கு பங்கு கிடையாது. உங்களுடைய நன்மை தீமைகளில் எனக்கு பங்கு கிடையாது. மறுமைநாளில் தனித்தனி கேள்விகணக்கு’‘
“ஓவராக பேசுகிறாய்!”
“குரலை உயரத்தி பேசினேனா? கண்ணியக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தினேனா? மார்க்க விரோதமாய் ஒரு கருத்தை உயர்த்தி பிடித்தேனா?”
“இறுதியாக என்ன கூறுகிறாய்?”
“மார்க்கம் தடுக்காதததை மனிதர்கள் தடுக்காதீர்கள். ஜக்காத் கொடுக்க தகுதியான பெண்கள் ஜக்காத் கொடுக்கட்டும் ஜக்காத் கடமையான பெண்கள் குர்பானி கொடுக்கட்டும்!’‘
உதவியாளர் உஸ்மான் கூவினார் “நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!’‘
-ஹிஜாப் அணிந்த சல்மா பத்து பெண்களுக்கு தையல் இயந்திரங்களை ஜக்காத்தாய் வழங்கினாள். பத்தில் இருவர் பிறமத சகோதரிகள்.
பதினெட்டு கிலோ எடையில் ஒரு செம்மறியாடை பிடித்தாள் சல்மா.
“பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்” என்றபடி கத்தியை ஆட்டின் கழுத்தில் ஓட்டினான் சல்மா.
ஆறுகிலோ இறைச்சியை 24x250 கிராம் பாக்கட்களாக போட்டு ஏழைகளுக்கும் அரைகிலோ பாக்கட் போட்டு இன்னொரு ஆறுகிலோவை உறவினர்களுக்கும் விநியோகித்தாள் சல்மா.
ஜக்காத்தும் குர்பானியும் தகுதியான இஸ்லாமிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என சொல்லுங்கள் யா நிஜாமுதீன் அவுலியா!
********