நியூ யார்க் நகரம்
நமக்குக் கிடைக்கும் வடஅமெரிக்க பிம்பம் ஒரு சில நகரங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இது ஒரு மாபெரும் தேசம். கிழக்குக் கரையில் அட்லாண்டிக் மகா சமுத்திரமும் மேற்குக் கரையில் பசிஃபிக் மகா சமுத்திரமும் இருக்கிறது. இரு கரைகளுக்கு இடையே பல்லாயிரக்கணக்கான கலாசாரங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்வது வேறொரு நாட்டுக்குச் செல்வது போல. இங்கே அந்தளவுக்கு இல்லையென்றாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. குறிப்பாக நியூ யார்க் மாநிலம் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நிலம். எத்தனையோ முறை நியூ யார்க்கின் பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு விருப்பமான நயாகரா அருவி இருப்பது நியூ யார்க்கின் வடக்கு முனை. அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஆனால் நியூ யார்க் நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்து வந்தது. அது கடந்த மே மாதம்தான் நிறைவேறியது.
நியூ யார்க் நகரம் கனவின் பூமி. வடஅமெரிக்காவின் மிக முக்கியமான நகரம். உலகத்தின் பொருளாதாரத் தலைநகரம். ஆக நியூ யார்க் நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் இங்கு வந்ததிலிருந்து தொற்றிக் கொண்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வந்தது. இத்தனைக்கும் நான் முதன்முதலில் வந்திறங்கியது இங்கேதான், ஜே.எஃப்.கே விமான நிலையம். அதுமட்டுமல்லாமல் நியூ ஜெர்சி சென்றபோது பேருந்து நியூ யார்க் நகரத்தைக் கடந்துதான் சென்றது. ஒவ்வொரு முறையும் இந்த நகரத்தை தூரத்திலிருந்து ஏக்கமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நகரத்தைப் பார்வையிடுவது என்பது விமானத்தில் கடந்து செல்வது பேருந்தில் கடந்து செல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். அந்த நகரத்தில் கால் வலிக்க நடந்து தீர்க்க வேண்டும். அப்படியொரு நாள் ஆறு வருடங்களுக்குப் பிறகாகவே எனக்கு அமைந்தது.
அமெரிக்காவின் பெரிய நகரங்களுக்கு செல்லப் பெயர் இருக்கிறது. உதாரணமாக பாஸ்டன் நகரம், ‘அமெரிக்காவின் ஏதேன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பாஸ்டோனியர்கள் பாஸ்டனுக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர், ‘ஹப்’ (The Hub). அதேபோல பிலடெல்ஃபியா, ‘சகோதரத்துவத்தின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதெல்லாவற்றையும் விட சிறந்த எல்லோரும் அறிந்த செல்லப் பெயர், ’பெரிய ஆப்பிள்’ (The Big Apple). அதுதான் நியூ யார்க்கின் செல்லப்பெயர். ஏன் அது பெரிய ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது? 1920ல் ஜான் ஃபிட்ஸ்ஜெரல்ட் என்னும் விளையாட்டுத் துறை சார்ந்த பத்திரிகையாளர் நியூ யார்க் நகரங்களில் அதிகமாக நடந்த குதிரைப் பந்தயங்களில் யாராவது அதிகமான பணத்தை வென்றால் அதை, ’பெரிய ஆப்பிள்’ என்று வர்ணித்தார். பிறகு ஜாஸ் இசைக் கலைஞர்கள் தங்கள் பாடல்களில் நியூ யார்க்கை பெரிய ஆப்பிள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பிறகு அதுவே நியூ யார்க்கின் செல்லப் பெயர் ஆனது. ‘ஒரு மரத்தில் நிறைய ஆப்பிள்கள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு பெரிய ஆப்பிள் மட்டும்தான் நம் கவனத்தைக் கவரும். அதே போலத்தான் நியூ யார்க் நகரமும்’ என்றெல்லாம் பேசி பெரிய ஆப்பிள் என்ற பெயர் நிலைத்தது.
வட அமெரிக்கா ஒரு புதிய நாடு. இதன் வரலாறு நானுறு ஆண்டுகளுக்கு உள்ளாக வந்துவிடும். அதுதான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புதிய நாடு என்பதால் திட்டமிடல்களும் அது சார்ந்த பணிகளும் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக நம் கிராமங்களில் இருக்கும் தெருக்களை எடுத்துக் கொள்வோம். ஒரு கிராமம் உருவாகும் முன்பு பாதைகள் இல்லாத காடுகளாக இருந்திருக்கலாம். பிறகு கால்நடைகள் நடந்து மேய்ந்து ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகி பிறகு காலப் போக்கில் அது விரிந்து தெருக்களாகி வீடுகள் தோன்றி பிறகு சாலைகள் ஆகியிருக்கலாம். அதேபோலத்தான் இங்கேயும் திட்டமிடப்படாத நகரங்களில் இருக்கும் தெருக்கள் பசு மாடுகளின் வழித்தடங்களாகவே உருவாகி காலப் போக்கில் தெருக்களாக நிலைத்துவிட்டன. குறிப்பாக பாஸ்டனின் வடக்கு கரை தெருக்கள் வளைந்தும் நெளிந்தும் அமைந்திருப்பதற்கான காரணம் முற்காலத்தில் இவை பசு மாடுகளின் வழித்தடங்களாக இருந்ததுதான். ஆனால் நியூ யார்க் அப்படியல்ல. சரியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரம். அதேபோல நியூ யார்க் நகரம் மிகப் பெரியது. ஐந்து பெரிய ஊர்களான ப்ராங்ஸ், ப்ரூக்ளின், மேன்ஹாட்டன், க்வின்ஸ் மற்றும் ஸ்டட்டன் ஐலாண்ட் சேர்ந்ததுதான் நியூ யார்க் நகரம். இதில் நமக்குக் காட்டப்படும் நியூ யார்க் நகரம் மேன்ஹாட்டன் நகரம் மட்டும்தான். நான் சென்று வந்ததும் இந்த மேன்ஹாட்டன் நகரத்துக்குத்தான்.
மேன்ஹாட்டன் நகரத்தை ஒரு செவ்வகம் போல நினைவில் வைத்துக் கொள்ளலாம். வடக்கு தெற்காக நீண்டும் கிழக்கு மேற்காக குறுகியும் இருக்கும். கிழக்குப் பக்கம் கிழக்கு நதி (ஈஸ்ட் ரிவர்) மேற்கில் ஹட்சன் நதி. இந்த நதியில்தான் செஸ்லி சலின்பர்கர் இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு விமானத்தை இறக்கினார். உயரத்தில் இது நிகழ்ந்திருந்தால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள் ஆனால் ஹட்சன் நதியில் இறக்கியதால் அனைவரும் உயிர் பிழைத்தனர். இதை அடிப்படையாக வைத்து கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய திரைப்படம் தான், ‘ஸாலி’. ஹட்சன் நதியின் மறுகரையில் நியூ ஜெர்ஸி மாநிலம் தொடங்குகிறது. தெற்கு எல்லை அட்லாண்டிக் பெருங்கடல். அதேபோல வடக்கு மேற்காகச் செல்லும் சாலைகள் அனைத்தும் அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு மேற்காக இருப்பவை தெருக்கள் (street). எல்லாமே ஒரு வழிப் பாதை. இந்த விவரங்களை வைத்துக்கொண்டு நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். இதைப் பற்றி புரிதல் இல்லாமல் நியூ யார்க் மேன்ஹாட்டனில் பயணிப்பது மிகச் சிரமமான காரியம். அதே போல GPS மட்டும் நம்பி பயணித்தாலும் சிக்கல்தான். உயர்ந்த கட்டிடங்கள் இருப்பதால் அவ்வப்போது GPS சரியாக வேலை செய்யாது.
மேன்ஹாட்டன் முன்று பிரிவுகளாக இருக்கிறது. வடக்குப் பகுதி அப்டவுன். தென் முனை டௌண்டவுன். மத்திய பகுதி மிடில்டவுன். இதில் அப்டவுன் குடியிருப்புப் பகுதி. டௌண்டவுன் வர்த்தக நிறுவனங்களின் பகுதி. இங்கேதான் வால் ஸ்ட்ரீட் மற்றும் உலகப் புகழ்பெற்ற காளையின் சிலை அமைந்திருக்கிறது. மிடில்டவுன் கேளிக்கைகளின் நகரம். ப்ராட்வே அமைந்திருப்பது இங்கேதான். நமக்கு ஹாலிவுட் மட்டும்தான் தெரியுமல்லவா? ஆனால் ஹாலிவுட்டுக்கு நிகராக புகழ் பெற்றது ப்ராட்வே மியூசிக்கல்ஸ். ஹாலிவுட்டில் புகழ் பெற்ற பலரும் ப்ராட்வே மியூசிக்கல்களில் பங்கேற்றவர்கள்தான். அதே போல ரேடியோ சிட்டி ஹால் அமைந்திருப்பதும் மிடில்டவுனில்தான்.
மேன்ஹாட்டனுக்கு ரயிலில் சென்றிருந்தேன். பென்ஸ்டேஷனிலிருந்து வெளிவந்ததிலிருந்து அன்னாந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். இப்படி அன்னாந்து பார்த்துக்கொண்டு நிறைய பேர் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் சுற்றுலாப் பயணிகள் என்பதை நியூ யார்க் வாசிகள் எளிதில் கணித்துவிடுவார்கள்.
நியூ யார்க் என்றால் வழக்கமாகச் செல்லும் சுதந்திர தேவியின் சிலைக்கு நான் செல்லவில்லை. ஒருநாள் மட்டுமே எனக்கு வாய்த்தது. எனவே நான் சென்ற இடங்கள் மிகக் குறைவு. முதலில் ராக்கஃபெல்லர் செண்டருக்குச் சென்று அதன் உச்சியிலிருந்து எல்லா இடங்களையும் பார்த்தேன். ராக்கஃபெல்லர் சென்டர் மிடில்டவுனில் இருந்ததால் அதன் உச்சியிலிருந்து கிடைக்கும் காட்சி அற்புதமாக இருக்கும். நியூ யார்க் நகரத்தை அதிலும் குறிப்பாக மேன்ஹாட்டன் பகுதியைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், ’கான்க்ரீட் காடு’ என்று வர்ணிப்பார்கள். ஆனால் யாருமே அப்டவுனில் அமைந்திருக்கும் செண்ட்ரல் பார்க் குறித்துப் பேசுவதில்லை. ராக்கஃபெல்லர் உச்சியிலிருந்து நான் முதலில் பார்த்தது செண்ட்ரல் பார்க் பகுதியைத்தான். இவ்வளவு பரபரப்பான நகரத்தில் இப்படியொரு கானகத்தை எப்படி பராமரிக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தான். ராக்கஃபெல்லர் உச்சியிலிருந்து நேர் கீழே இன்னொரு பிரம்மாண்டம் புனித பேட்ரிக் கத்தீட்ரல். ராக்கஃபெல்லரிலிருந்து நேராக அந்த பிரம்மாண்ட தேவாலயத்துக்குள் சென்றேன். தேவாலயம் என்பதைத் தாண்டி அது ஒரு அருங்காட்சியகம் போன்றே இருந்தது. அதன் பிறகு நேராக உலக வர்த்தக மையம். அந்த அனுபவங்களை விரிவாக எழுதுகிறேன். அங்கிருந்து ஒரு சிற்றுண்டி முடித்துவிட்டு டைம்ஸ்கொயர். நியூ யார்க் சென்றவர்கள் டைம்ஸ்கொயர் செல்லாமல் வருவதில்லை. உலகத்தின் அத்தனை நாடுகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே கூடியிருந்தார்கள். பொதுவாக நம் மீது சுமத்தப்படும் அடையாளங்களின் பெயரால் நம்மால் சில விஷயங்களைச் செய்ய முடியாது. ஆனால் அவ்வடையாளங்கள் தொலைந்து போகும் சமயங்களில் விடுதலை உணர்வு பிறக்கும். உதாரணமாக எனக்கு ஆடத் தெரியாது. யார் என்னை வற்புறுத்தினாலும் என்னால் ஆட இயலாது. ஆனால் மது அருந்தும் சமயங்களில் ஆடியிருக்கிறேன். அதுவும் தத்துவம் பயின்ற சமயம் உடனிருந்த ஆதிவாசி நண்பர்களுடன் ஹடியா என்ற பானம் அருந்திவிட்டு இரவெல்லாம் ஆடியிருக்கிறேன். நியூ யார்க்கின் டைம்ஸ்கொயர் நம் அடையாளங்களைத் தொலைக்கும் இடம். நான் ஒரு சிறு குழந்தையைப் போல அங்கு ஸ்பைடர் மேன் சூப்பர் மேன் வேடமிட்டு நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். டைம்ஸ்கொயரில் நேரம் போவதே தெரியாது. பிறகு அங்கிருந்து மீண்டும் ரயிலேறி இரவோடு இரவாக மீண்டும் பாஸ்டன் வந்துவிட்டேன்.
நியூ யார்க் வாசிகளுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் நினைவில் வைத்திருக்கும் நாள் செப்டம்பர் பதினொன்று (9/11 என்று சுருக்கமாக சொல்வார்கள்). இந்த கோர சம்பவத்தைப் பற்றி பலருக்கு மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. இருந்தாலும் மனிதத்துக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்கள் கண்டனத்துக்கு உரியதே. நியூ யார்க் மென்ஹாட்டன் மீது நடந்த தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அதன் மீட்புப்பணியில் ஈடுபட்ட பலருக்கு இப்போது புற்று நோய்களும் மன நலம் சார்ந்த பிரச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கிறது. இரண்டு வர்த்தக கோபுரங்களுக்கு பதிலாக ஒற்றைக் கோபுரம் நிற்கிறது. அதன் உள்ளே சென்று வருவதே மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. முன்பிருந்த கோபுரங்களின் அடித்தளங்கள் இப்போது நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. அந்தத் தாகுதல்களில் இறந்தவர்களின் பெயர்கள் அங்கே நினைகூரப்படுகின்றன. புனித பேட்ரிக் பேராலயத்துக்கு நிகரான வணக்கங்களையும் மரியாதையையும் செலுத்திவிட்டு வந்தேன். செப்டம்பர் தாக்குதல் பற்றியும் அந்த சமயத்தில் நியூ யார்க் மேன்ஹாட்டனில் நிகழ்ந்தவை குறித்தும் அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல நியூ யார்க் நகரம் ஒரு கனவின் நகரம். மனிதர்களின் அசாத்திய உழைப்பையும் திறமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நகரம். அதனால்தான் அது பல கோடி மக்களைத் தன் பக்கம் ஈர்த்த வண்ணமிருக்கிறது. நான் மீண்டும் நியூ யார்க் நகரத்துக்குச் செல்ல வேண்டும். அது ஒன்றும் இயலாத காரியமல்ல. ஆனாலும் வேலைப் பளு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதையெல்லாம் மீறி ஒருநாள் திட்டமிடாமல் நியூ யார்க் சென்று அந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
(தொடரும்…)