என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன்
அழுக்குகள் இல்லை
யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம்
எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன்
அன்பைப் பெருகச் செய்கிறேன்
என் கணகளை அகல விரித்து
இவ்வுலகைப் பார்க்கிறேன்
வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது
எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது
நீ மீண்டும் பிறந்துவிட்டாயென்று
அடிக்கடி கூறுகிறது அக்குரல்
வெற்றிடங்கள்
குண்டும் குழியுமான நினைவுப் பள்ளங்கள்
காலத்தின் வலி நிறைந்த வடுக்கள் என நிறைந்திருக்கிறதென் ஆன்மப் பெட்டகம்
மீண்டும் மீண்டும் அதை சுத்தப்படுத்துகிறேன்
கருணையில்லாத இந்த உலகத்தை நான் எதற்காக
இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்?
என் கால்களில் விலங்கிட்டது யார்?
கேள்விகளுக்குள் கேள்வியாக எனக்குள் எழும் எண்ணங்களை
என்ன செய்வது?
சுதந்திரமான காற்றை சுவாசித்து
என் சிறகுகளை விரிக்க
ஏதோ தடுக்கிறது
நிச்சயம் அது நானில்லை
உலுத்துவிட்ட பாசக்கயிறுகள்…
***
காலையின் வெயில்
மாலை நேரத்து மழையோடும் சேர்ந்து மல்லுக்கட்டி
இருளுக்குள் ஒளியைத் தேடி
கனவின் நிழலைக் கைப்பிடித்து
பொழுதுகளின் மீது
திணிக்கப்பட்ட
கடமைகளோடு
நிகழ்ந்து முடிகின்றன
அன்றாடங்கள்
அவசரங்கள் நியதிகளற்ற
பொறுப்புகளைச்
சுமந்து
தினம் தினம்
பிரசவித்து
உறைந்து அடங்குகின்றன
இரவின் துளிகள்
ஆசை விதைகள்
வேர்விட்டு
விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி
நிற்கையில்
நிலையாமையின் விளக்கத்தைச்
சொல்கின்றன
எதிர்கால முடிச்சை அவிழ்க்கத் தெரியாத மனங்கள்
தனக்குத்தானே
காலாவதியாக்கிக் கொள்கின்றன உண்மைகளை.
********