வட்டப் பாதை
நிகழ்ந்துவிட்ட தருணங்களி்ன் மேல்
இனியும் பொழிய மழை இல்லை
பொய்க் காரணங்கள்
புடம் செய்யும் தந்திரங்களின் உவப்பில்
நீர்க்குமிழிகளை உடையச் செய்கிறது
கடந்து வந்த காற்று
வண்ணத் துகள் பார்க்கத் தந்த
அக்கண நேரப் பிரிகை
பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும்
வளைவில் சந்திப்போம்
மழை புரிய
மனம் அறிந்து சிலிர்க்கிறது
நடை
****
தூசியின் படலம்
அந்தவொரு நாள் கனவாக இருக்கவேண்டுமென்றே
விரும்புகிறேன்
காட்சிக்குப் பஞ்சமற்று விரியும்
கானக வழிகளை
பரிசாகத் தருகிறது இரவுத் தூக்கம்
விழிகளைத் தலைகீழாய்த் தொங்கவிட்டபடி
இமை மரத்தில் ஊஞ்சலாடும்
இலக்கணங்கள் எழுதிக் குவிக்கும் அர்த்தங்கள்
வெளிச்சமற்றவை
அவை விரித்துப் போடும்
நிழல் மடிப்பில் தங்கிக்கொண்டிருக்கிற
பூஞ்சைகள்
திருப்பித் தருகிற அர்த்தம்
திரும்ப வழியற்ற பாதைகளுக்குச் சொந்தமானவை
தட்ட வேண்டும்
திறக்கும் விழிக்குள்
திறவா கனவாகும் அவ்வொரு நாளை.
****
பூஞ்சை மனம்
எலும்பற்ற நாவில் சுழன்றாடுகிற கணக்கை
அறிந்துகொள்ளும் முன்னேயே
விடைபெறுகிறேன்
ஒரு குற்ற உணர்ச்சிதான் இலக்கெனில்
இடம்
பொருள்
நிலை
காலம்
எல்லாம் செயல் விளக்கம்
அட
கடந்து போ என்கிறது மனம்
மண்டியிடும் தருணம் மடித்துத் தந்த
அந்த உள்ளூறும் ஈரத்தை
எடுத்துக் களைகிறேன்
ஒரு தொட்டிக் கனத்தில்
முட்டி முளைக்கிறது போன்சாய்
அள்ளி எடுக்கும் கைக்கு
தோதான வனமாக…
****
ஓட்டம்
இது வேண்டும்தான்
என்பது போலிருக்கிறது
கனவிலும் வேண்டாதது
கையடக்கத் தனிமையின் மேல்
கடல் வரைந்துகொண்ட இரு கரம்
கடத்தி வந்திருக்கிறது
ஆளற்ற படகை
துடுப்புகள்
அலைகள்
காற்று வளைத்துக் கொள்கிறது
இருப்பெனும் பாய்மரம் இழுத்துக் கட்டும் திசையில்
இயங்குகிற வழியாகிறது
கனவெனும் மிச்சப் பிழை.
*******