தனித்தனியாகவும்
கூட்டங்களாகவும்
சிதறிக் கிடக்கின்றது சொல்வெளி
சிலவற்றின் அடர்த்தியிலும்
அர்த்தங்களில்லை
ஒவ்வொன்றாகக் கோர்த்தெடுத்தாலும்
திக்கித் திணறி
மனப்பாறையில்
முட்டிமோதும் காற்றாய்ப் பயனற்றுப் போகின்றன
மயிலின் இறகுகளால் சாமரம் வீசிக்கொள்ளும்
கோழிகளுக்கு
சொல் பொருள் ஏதுமற்ற பெருவெளியே
சொர்கமாகிவிடுகின்றது
கானலில் நீரைத் தேடியலையும் வேர்கள்
எத்தனை காலங்கள் உயிர்த்துவிடப் போகின்றன?
****
எங்கும்
சூழ்ந்திருக்கின்றன மனித முகங்கள்
கூட்டமாகவும்
தனித்தனியாகவும்
வாகனங்களிலும்
நடந்துமென்று
பறந்தவெளியெங்கும் நிறைந்திருக்கின்றன
சில உற்று நோக்குகின்றன
சில சோர்வைக் கொட்டுகின்றன
சில வெளிச்சத்தைக் கண்டு கூசுகின்றன
சில இருளைக் கண்டு பயம் கொள்கின்றன
சில அறிவின் மீட்சியில்
அலைபாய்கின்றன
ஏதோவொன்றிற்காக வாழ்தல் வரமென்று
இயல்பைத் தொலைத்துக்கொள்ளும் முகங்கள்
மலிந்துவிட்டதால்
இந்த உலகம்
துன்பத்தை மட்டுமே
துய்த்துக்கொள்ள
யாருமறியா
சூழ்ச்சிகளை விழுங்கும் கூடுகள்மட்டும்
எச்சமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
****
அறத்தின் அசரீரி
காற்றில் சலசலக்க
கேள்விகள் அனல் வீசுகின்றன
மந்தைகளுக்குள்ளே
பொய்மையான
நரிகளும்
முலாம் பூசப்பட்ட கொம்புகளோடு உலா வருகின்றன
மௌனத் தவம் கலைய
பூபாளம் இசைக்க வேண்டுமென்றால்
முன்னேற்றம்
முழுமை
கேள்விகளற்றப் பெருவெளியை
நோக்கி
உயரப் பறத்தலென்பது கனவின் நீட்சி மட்டுமே.
******