மரங்களின் வழியே காற்று நுழைந்து காட்டை அசைக்கும் காட்சியை பறவைப் பார்வையில் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. வாழ்வின் ஏதோ சில நொடியாவது நாம் ஒரு பறவையாக மாறி விண்ணில் கரைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றா மனிதர் குறைவே. பறவைக் கோணம் அளிக்கும் காட்சியனுபவம் எல்லோரும் ஏங்கும் ஒன்று. நீரில் மிதக்கும் வனமொன்று அசையும் காட்சியை தொலைவிலிருந்து கண்டபோது அழகிய நடனமென தோன்றியது. காற்றின் இசை. மரங்களின் நடனம். சுற்றிலும் எத்தனை பேர் நின்றிருந்தாலும் அந்த இசையை, நடனத்தை ஒற்றைப் பார்வையாளனாய் ரசித்தேன். நின்று கொண்டிருந்தது பிச்சாவரத்தில் உள்ள உயரமான காட்சிக் கோபுரம். எதிரே அசையாத கடலென நீர், அதன் மேலே பச்சை அலைகளென மரக்கூட்டம். இடையே ஊடாடும் படகுகள். அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மக்கள் கூட்டம்.
தீபாவளி மறுநாள் சொந்த ஊரில் இதுவரை இருந்ததில்லை. அந்த நாள் நண்பர்களுக்கானது. அன்றைய தினம் விடியும் போது, ஏதோ ஒரு திசையில் செல்லும் வழியில் உள்ள ஊரின் சிறிய டீக்கடையில் அமர்ந்து சூடான தேநீருடன் குளிரை ரசித்துக் கொண்டிருப்போம். இல்லையெனில் மலைப்பாதை மேலே ஏறிக்கொண்டிருப்போம். அதே போல் பொங்கல் விடுமுறையிலும் கிளம்பி விடுவோம். வருடத்தின் பிற மாதங்களில் எத்தனைப் பயணங்கள் சென்றாலும் இந்த இரு சமயங்களில் செல்வது என்பது எப்போதும் மறக்கவியலாத ஒன்றாகவே இருக்கிறது.
திருச்சியிலிருந்து கிளம்பியபோது காலை எட்டு மணி. தீபாவளி மறுநாள் என்பதால் டோல்கேட்டில் நிறைய கடைகள் மூடியிருக்க, திறந்திருந்த ஓர் உணவகத்தில் இரண்டு ஊத்தப்பத்துடன் காலை உணவை முடித்துக் கொண்டு காரைக் கிளப்பினோம். திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக சிதம்பரம் வரை செல்லும் புதிதாக போடப்பட்ட நெடுஞ்சாலையில் பயணித்து, சிதம்பரத்தை அடைந்தோம். சிறிய தேநீர் இடைவேளைக்குப் பின் கிள்ளை என்ற ஊரின் வழியே பயணித்து பிச்சாவரம் படகுக் குழாமைச் சென்றடைந்தோம்.
காரை விட்டு இறங்குவதற்கு முன்னரே நம் கைகளில் விசிட்டிங் கார்டுகளைத் திணிக்கின்றனர் அங்கே உள்ள உணவு விடுதிகளின் விளம்பரப் பிரதிநிதிகள். வீட்டு முறை சமையலில் சுவையான கடல் உணவுகள் என்ற சொற்களுடன் பல்வேறு பொறித்த, வறுத்த மீன்களின் படங்கள் அதில் அச்சாகியிருந்தது. இரண்டு பெரிய காட்சி கோபுரங்கள் கண்களுக்குத் தெரிய, சுற்றிலும் வண்ணமயமான உடைகளில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள். தீபாவளியின் ஜொலிப்பு அவர்களின் முகங்களில் இன்னும் எஞ்சியிருந்தது. இலக்கின்றி அசைந்தும் நகர்ந்தும் கொண்டிருந்தனர். தலையை உயர்த்திப் பார்த்த போது நீர்ப்பரப்பு ஒன்று அசையாமல் நின்றுக் கொண்டிருந்தது. படகுகள் சொற்களுக்குத் தவமிருக்கும் கவிஞனைப் போல் காத்திருந்தன. ஒலிப்பெருக்கியில் எழுந்த அறிவிப்புகள் காற்றில் கலந்து கரைந்து போய்க் கொண்டிருந்தது.
துடுப்புப் படகில் ஒரு மணி நேரம் சுற்றிவர நால்வருக்கு நானூறு, அறுவருக்கு அறுநூறு என இரண்டு வகைக் கட்டணங்கள். இயந்திரப் படகில் எட்டு பேருக்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என கட்டணச் சுவரொட்டிப் பார்த்துவிட்டு, துடுப்புப் படகில் செல்வோமென பயணச்சீட்டு வாங்க நீண்ட வரிசையில் சென்று இணைந்து கொண்டேன். ஒன்றரை மணி நேரம் காத்திருந்து, டிக்கெட் வாங்கியபோது மணி ஒன்றாகியிருந்தது. வாங்கிய பயணச்சீட்டைப் பதிவு செய்து எங்களுக்கான வரிசை எண்ணைப் பெற்றுக் கொண்டு, திரையில் மினுங்கிய எண்ணைப் பார்த்தபோது மேற்கொண்டு ஒன்றரை மணி நேரம் ஆகுமெனத் தோன்றியது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நடுப்பகல் நேர வெப்பத்தைக் குளுமையாக்கிக் கொண்டிருந்தன.
மதிய உணவுக்கான நொடிகள் வயிற்றில் ஓடத்தொடங்கியது. உணவுக்காக சென்றால் வரிசை எண் தாண்டிவிடுமா? அல்லது இங்கேயே காத்திருக்கலாமா என்ற குழப்பத்தால், எதிரே நிற்கும் காட்சி கோபுரத்தைக் கண்டுவிட்டு இங்கேயே காத்திருக்கலாமென்று முடிவெடுத்தோம். இருபது பேருக்கும் மேலே நின்று ரசிக்க வேண்டிய காட்சி கோபுரத்தில், கட்டிடம் வலுவிழந்துவிட்டது என ஒரு முறைக்கு ஐந்து பேரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். கால் மணி நேரம் காத்திருந்து நால்வருக்கு இருபது ரூபாயென அனுமதிக் கட்டணம் செலுத்தி, நால்வர் மட்டும் சுழன்று ஏறும் படிக்கட்டுகளில், மெல்ல கால் பதித்து ஏறி உச்சியை அடைந்தோம்.
குளிர்ச்சியான காற்று முகத்தில் வீச எதிரே பெரும் பச்சை நிற பரப்பொன்று அசைந்தபடி கிடந்தது. தொலைவில் இலைகளை அசைத்த காற்று அங்கிருந்து கிளம்பி வந்து நம்மை மோதுவதை உணர முடிந்தது. பார்வைப் பரப்பின் எல்லை வரை விரிந்திருந்த நீர்ப்பரப்பில் மோட்டார் படகுகள் நீரைக் கிழித்தபடி வேகமாகக் குறுக்கேச் செல்கையில், மென்மையாய் முத்தமிட்டபடியே ஊர்ந்து செல்கின்றன துடுப்புப் படகுகள். காட்சிக் கோபுரத்தின் சன்னல் சட்டங்கள் வழியே காணும் போது அழகான புகைப்படம் நம் முன்னே அசைந்து கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
கீழிறங்கி வந்து பார்த்தபோது அரை மணி நேரம் கடந்திருக்க, அதே வரிசை எண்ணில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சாப்பிட்டு வந்துவிடுவோம் என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கியபோது மழைத் தூறல் முகத்தை நனைக்க ஆரம்பித்தது. ஷியாம் கடல் மீன் உணவகத்தின் வாசலில் களிநண்டுகள் உயிருடன் கண்ணாடிப் பெட்டியில் முண்டிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம். சுவையான மடவை மீன் குழம்புடன் அளவில்லாத முழு சாப்பாடு, அதோடு தொட்டுக்கொள்ள வறுத்த மத்தி, கானங்கத்தை மீன்களென வாங்கி, திருப்தியாக சாப்பிட்டோம். பலவகை மீன்களை நம்மிடம் காட்டி தேர்வு செய்யச் சொல்லி பின்பு அதை வறுத்துத் தருகிறார்கள். வெளியே மழை வலுத்து பெய்து கொண்டிருந்தது.
படகுத்துறையை அணுகிய போது திரையில் எண்கள், எங்கள் வரிசை எண்ணைத் தாண்டிச் சென்றிருந்தன. அவசரமாகச் சென்று, எங்களுக்கான படகு எண்ணைக் கேட்டுப் பெற்று, வழங்கிய பாதுகாப்பு உடையை அணிந்துக்கொண்டு படகுகளை நெருங்கினோம். மரப்பாலத்தில் கால் வைத்தவுடன் ஒருவர் தடுத்து நிறுத்தி, வனத்துறை நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். நாம் செல்லப் போவது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறைக்கு தலைக்கு பத்து ரூபாய் வீதம் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. சுற்றுலாத் துறைக்கும் வனத்துறைக்கும் இடையே நான்கடிகளே இருந்தன. செலுத்திய பின் படகில் ஏறிக்கொண்டோம்.
துடுப்புகள் சீராக இயங்கிக் கரையை விட்டு வெளியேத் தள்ளத் தொடங்க, எதிரே மரங்கள் எங்களை நோக்கி வரத் தொடங்கியது. கலங்கிய பழுப்பு நிறத்தில் அசையாத தண்ணீர் துடுப்பின் இயக்கத்தால் மெல்லிய சலனத்தைக் காட்டியது. கரையின் சத்தங்கள் மயங்கி துடுப்பு நீரைத் துழாவும் ஓசை மட்டுமே கேட்கத் தொடங்கியபோது, காட்டின் விலா வழியே நுழையத் தொடங்கியிருந்தது படகு. மீண்டுமொரு மென்மையான தூறல் எங்களை நனைக்க முற்பட்டது.
சிறு தீவுகள் சூழ்ந்த சேரும் சகதியால் ஆன வனப்பகுதி. இடையே படகுகள் ஓட பெரிய வாய்க்கால்கள் போல இடைவெளிகள். இருபுறமும் அடர்ந்த மரங்கள். கல்லூரியில் படித்தபோது உவர் சதுப்பு நிலக் காடுகள் குறித்தும் அதில் வளரும் தாவரங்களின் பண்புகள் பற்றியும் அறிந்திருந்தாலும், இதுவரை நேரில் காண்பதற்கு வாய்ப்பு வரவில்லை. இதோ இப்போது என் எதிரில், கரும்பச்சை நிற மினுங்கும் இலைகள் அடர்த்தியாய் மரம் முழுக்க தளைத்திருக்க, பிற தாவரங்கள் வாழவியலாத உவர்நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளை இத்தாவரங்கள் பெற்றுள்ளன. மரங்களை உரசும் அண்மையில் படகு நகர்கிறது. இலைகள் அவ்வப்போது நம் தலை மீது உரசுகின்றன. ஒவ்வொரு மரமும் நூறு குச்சிகள் போன்ற கைகளால் தண்ணீரிலிருந்து சற்று உயரத்தில் தூக்கிப் பிடித்துள்ளது போல நிற்கின்றன. அந்த கைகளுக்கு முட்டு வேர்கள் எனப் பெயர்.
மரங்களில் முருங்கைக் காய்கள் தொங்குவது போல இரண்டு சாண் நீளத்தில் பச்சை நிற காய்கள் நிறையக் காய்த்துத் தொங்குகின்றன. உண்மையில் அவை காய்கள் அல்ல. முளை வேர்கள். உவர் சதுப்பு நிலத் தாவரங்களில் முக்கியமான ஒரு தகவமைப்பு கனிக்குள் விதை முளைத்தல். கனிகள் முதிர்ந்தவுடன் கீழே விழுந்தால் அவை தண்ணீரில் மூழ்கி அழுகிப் போய்விடும் வாய்ப்பு அதிகம் என்பதால், கனியானது மரத்தோடு இணைந்திருக்கும் போதே விதை முளைக்கத் தொடங்கிவிடுகிறது. விதையிலிருந்து பச்சை நிற முளைவேர் கூரான நுனியுடன் வெளிவந்து காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன. தாய்த் தாவரத்திலிருந்து கனி விடுபடும்போது முளைவேர் வானிலிருந்து எறிந்த கூர்முனை ஈட்டியைப் போல தண்ணீரில் பாய்ந்து சேற்றில் சொருகிக் கொள்கிறது. பின் வளரத் தொடங்கித் தாவரத்தின் சந்ததிகள் பரவுகின்றன. வானில் முளைக்கின்ற விதைகளைக் கொண்ட தாவரங்கள். மரத்தின் தாவரவியல் பெயர் அவிசீனியா என்று படகுக்காரர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யம் கொண்டேன்.
படகு மேலும் உள்ளே நகர்ந்து இதுதான் எல்லை என்பது போல ஒரு இடத்தில் தேங்கி வளைந்து நின்றது. இருபது நிமிடங்கள் மட்டுமே ஆகியிருக்க, படகு ஓட்டுபவர் எங்கள் முகங்களை சில நொடிகள் பார்த்தார். பேசத் தொடங்கினார்.
“இதோட திரும்பிருவோம். உள்ளுக்குள்ள தசாவதாரம், துப்பறிவாளன் படம்லாம் சூட்டிங் எடுத்த இடம் இருக்கு. பார்க்குறிங்களா?” என்றார்.
“எவ்வளவு?” என்றேன் நான்.
“ஐந்நூறு ரூபாய் கொடுங்க, நாலு பேரு இருக்கீங்க” என்றார்.
இப்போது நாங்கள் எங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“கொஞ்சம் குறைச்சிக்க கூடாதா?” என்றேன்.
“வழக்கமா இதான் வாங்குறது. உள்ள நல்லா இருக்கும். கஷ்டப்பட்டு துடுப்பு போடுறோம். அதான். இன்னும் ஒரு கிலோமீட்டர் கூட்டிப் போறேன் வாங்க!” என்றார்.
“இனிமே இங்க திரும்ப வருவோமா தெரியாது. முழுசா போய் பார்த்துருவோம்” என்றபடி, போகலாம் என்று தலையசைத்தேன். படகு எல்லையைத் தாண்டி நீந்தத் தொடங்கியது. கம்பர்ட் கொசு விரட்டி ஊதுபத்தி ஒன்றினைக் கொளுத்தி, “உள்ள கொசு ரொம்ப இருக்கும்.” என்று எங்கள் கையில் கொடுத்தார்.
இதுவரை அகன்ற பாதையில் வந்த வழி, கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டே போனது. இரண்டு பக்கமும் மரங்கள் நம்மை நெருங்கி வரும்படி நீர் வழி குறுகிச் சென்று பச்சை நிறக் குகைக்குள் நுழைந்து கொண்டது படகு. மேலே இலைகளால் மறைக்கப்பட்ட கூரை. முட்டுவேர்கள் தலையை முட்டத் தயாராய் தொங்கிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கவனம் பிசகினாலும், படம் எடுக்கும் போது செல்பேசியை தட்டி விடும் அளவிற்கு தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன குச்சிகள். சொன்னது போலவே கொசுக்கள் ரீங்காரம் நம் காதுகளில் கேட்க, வெறும் அமைதி மட்டுமே அதிர்ந்து கொண்டு, பெருகிக் கிடந்தது. ஒரு படகு மட்டுமே செல்லமுடியும் என்றளவிற்கு குறுகலான குகைப் போன்ற பாதையில் சென்றது எங்கள் படகு. துடுப்பை நீருக்குள் ஊன்றி படகை நகர்த்திக் கொண்டு போனார்.
சுவாச வேர்கள் என்றொரு தகவமைப்பை இங்கே வாழும் ரைசோபோரா போன்ற தாவரங்கள் பெற்றுள்ளன. தரைக்கு மேலே வளர்ந்து நிற்கும் சிறிய மெல்லிய குச்சி போன்ற வேர்கள். எதிர் புவி நாட்டம் கொண்ட வேர்களில் சுவாசத் துளைகள் காணப்படுகின்றன. சுவாச வேர்களில் ஒன்றைப் பிடுங்கிப் பார்த்தபோது, சிறிய முகப்பரு போன்ற புடைப்புகள் அந்த வேரில் சிதறிக் காணப்பட்டது. இவை மூலம்தான் தண்ணீருக்குள் புதைந்துள்ள வேர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் செல்கிறது.
பாதையில் நிழல் பெருகி இருள் சூழ்ந்து கொண்டே வர தலைக்கு மேலே வானம் மறைந்து போனது. அமைதியின் குகைக்குள் படகு அமிழ்ந்து கொண்டே செல்ல, அதைக் கலைக்க அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் அங்கே வாழும் நரிகள், நீர்நாய்கள் பற்றியும் அவை பெருகிக் கிடக்கும் களி நண்டுகளைப் பிடித்துத் தின்று வாழ்கின்றன என்பதை அறிந்து கொண்டோம். அலையாத்தி காடுகள் என அழைக்கப்படும் இவ்வனப்பகுதி சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. மீன்கள், மெல்லுடலிகள், நண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், இங்கே செழுமையாக வாழ்கின்றன. வலசைப் பறவைகள் கூடுகள் கட்டி வாழ்வதற்கு ஏற்ற பகுதி இது. அவற்றைப் பார்க்க எங்களுக்கு வாய்க்கவில்லை. சில கொக்குகளைத் தவிர வேறேதும் காணக் கிடைக்கவில்லை.
சிறிது தூரத்திற்கு பின் படகைத் திருப்பி, வழியில் எதிரே வந்த படகோடு ஓரத்தில் இடித்து, நகர்ந்து முன்னேறி, பெருவழியில் இணைந்து கரையை நோக்கித் திரும்பினோம். வாங்கிய பயணச்சீட்டு அனுமதிக்கும் அறுபது நிமிட நேரத்திற்குள் மீண்டும் படகுத் துறையில் எங்களை சேர்ப்பித்து விட்டார்.
கரையை அடைந்தவுடன் திரும்பி, அவ்வனத்தைப் பார்த்தேன். நீரில் பிரதிபலித்த வானில், கருமேகங்கள் விலகிக் கொண்டிருந்தன. பச்சை நிறம் விலகாமல் அசைந்து கொண்டிருந்தது. இந்த உப்பு நீர் ஊறிய சதுப்பு நிலத்தில் வாழ்வதற்கு, எப்படியெல்லாம் இந்தத் தாவரங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும்போது, உலகத்தை சிறிதும் தொந்தரவு செய்யாமல் வாழ்வதற்கு ஏற்ற உயிரினங்கள் தாவரங்கள் மட்டுமே எனத் தோன்றுகிறது. மனிதர்களாகிய நாம்தான், நம்மை மாற்றிக் கொள்ளாமல் இயற்கையையும் இந்த பூமியையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து சிதைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
*******