ஒரு காலத்தில் ஊரே மங்கம்மா சாலை செங்கல் திட்டு அய்யனார் கோயிலை ஒட்டித்தான் அமைந்திருந்தது. அப்போதெல்லாம் சுற்று வட்டாரத்தில் யார் வீடு கட்ட செங்கல் ஏற்றி அந்த வழியே சென்றாலும் அந்த அய்யனார் கோயிலில் ஒரு கல்லாவது போட்டு விட்டுப் போக வேண்டும் என்று ஒரு நியமம். அதனால் கோயிலருகே செங்கல்கள் நிறையக் கிடக்கும். உண்மையில் அந்தக் கோயிலைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தவர்களின் யோசனையே அது என்று சொல்பவர்களும் உண்டு. ஒரு சித்திரை மாசப் பௌர்ணமி அன்று அய்யனாருக்கும் அவரைச் சுற்றியுள்ள பரிவார தேவதைகளுக்கும் புதிய பீடங்கள் கட்டி எழுப்பி, ஒரு மண்டலம் மந்திரம் உருவேற்றிப் பூசை போடுகையில் ஒரு சாமியாடிக்கு உக்கிரமாக அருள் வந்து `சித்திரபுத்திர நயினாருக்கு ஒரு சன்னதி வச்சு சுத்தி மதிலு எழுப்ப வேண்டும்,’ என்று வாக்குச் சொன்னாராம். “அடுத்த சித்திரா பௌர்ணைக்குள்ள அப்படியே செஞ்சிருதோம்,” என்று ஊர்ப்பெரியவர்கள் உறுதி சொன்ன பிறகே சாமி மலையேறியதாம். அதன் பிரகாரம் மதில் எழுப்ப நிறைய செங்கல் தேவைப்படவே யார் வீடு கட்டினாலும், அய்யனாரைக் கடந்து போகிற ஒரு வண்டி நடைக்கு பத்து செங்கல் கொண்டு வந்து போட வேண்டும் என்று சுத்துப்பட்டி ஊர்களில் கட்டுப்பாடு விதிக்கவே அடுக்கடுக்காய் செங்கல்கள் சேர்ந்தது. அப்படித்தான் கையில் ஏடும் எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திர நயினாருக்குச் சிலை செய்து, பீடமும் அமைத்துப் பிற்பாடு மதிலும் கட்டிப் பூசைகளும் விமரிசையாய் நடக்க ஆரம்பித்ததாம்.
செங்கல் போடாமல் போகிறவர்களின் வீட்டு வேலைகள் தாமதப்பட்டதாகப் பேச்சுகள் கிளம்பி, ‘பத்துக்குப் பதினொண்ணாவே போட்ருவோம்’ன்னு நிறையவே செங்கல் சேர்ந்து போனது. நாளா வட்டத்தில் பத்து செங்கல்கள் என்பதெல்லாம் தேய்ந்து போய் விட்டது. ஆனாலும், ஒரு செங்கல் அரைச் செங்கலாவது போடும் பழக்கம் நிற்கவில்லை. அப்படிப் போட்ட செங்கல்கள் திட்டுத் திட்டாக குவிந்து கிடக்க செங்கல்திட்டு அய்யனார் என்று புதுப்பெயரும் வந்தது.
எப்போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. பக்கத்து ஊரில் மில்கள், டவுணுக்குப் போகக் குறுக்குச் சாலை, பஸ்.. லாரி போக்குவரத்து, சினிமாக் கொட்டகை என்றெல்லாம் வந்து, மங்கம்மா சாலையிலிருந்து விலகி புது ரோடு ஒன்று முளைத்து ஊரே தள்ளிப் போய் விட்டது. அநேகப் பக்கத்து ஊர்களிலும் ஒரு காலத்தில் மரமும் நிழலும் மண்டபங்களுமாக இருந்த மங்கம்மா சாலைகள் ஊரை விட்டு விலகி மறைவுக்குள் போய் விட்டன.
செங்கல் திட்டு அய்யனாரும் தனிமைக்குள் போய் விட்டார். கூடவே சித்திர புத்திர நயினாரும். சித்திரா பௌர்ணைக்குத்தான் அங்கே விசேஷக் கூட்டம் வரும். அங்குள்ள பல பீடங்களும் சிலைகளும், சித்திர புத்திர நயினார் சிலையையும் ராசு வேளாருடைய அப்பா பரமசிவ வேளார், தாத்தா அய்யனு வேளார் என்று பல தலைமுறையினரும் செய்தவை. அதில் ஒரு அம்மன் பீடம்தான் பாம்பாலம்மன் பீடம். அதற்கு ஆடிப் பௌர்ணமிக்குப் பூசை முறை செய்யும் பாத்தியதையும் அந்த வேளார் குடும்பத்துக்கே உண்டு. அவ்வப்போது எல்லாப் பீடங்களும் புதுப்பிக்கப்படும் போதெல்லாம் ராசு வேளார் குடும்பத்துக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்காது. அதனால் சித்ரா பௌர்ணமி தோறும் நயினார் நோன்புக்குத் தவறாமல் வேளார் குடும்பம் வந்து மரியாதை ஏற்றுக் கும்பிட்டுப் போவது தவறாது.
ஒவ்வொரு முறையும் வலதி தனக்கு ஒரு ஆண்பிள்ளை வேண்டும் என்று கேட்கத் தவற மாட்டாள். அப்படி ஆம்பிளைப் பிள்ளை பொறந்தா அதை உன் கோயிலுக்கே விட்டுருதேன்னு கூட வேண்டிக் கொள்வாள். ராசு வேளார் கூட, “அது எப்படி கோயிலுக்குன்னு விடுவே, அது என்ன ஆனை, குதிரை மாதிரியா. அப்படியே ஏதாவது உருவம் செஞ்சு வைக்கேன்னு வேண்டிக்கோ. அழகா ஒரு ஆண் பிள்ளை உருவம் செஞ்சு வீட்டில் இருந்தே பால்க்குடம் சுமக்கிற மாதிரி கொட்டு முழக்கோடு சுமந்து வந்து கோயிலில் வச்சுட்டுப் போவோம்,” என்பார். “அவரு குடுக்கட்டும். நான் எப்படி விடுதேன்னு பாருமே,” என்பாள். ஆனால், உள்ளுக்குள் ஒரு பயமும் வரும். “விடறதுன்ன்னா, அவன் நீங்க செய்யற மாதிரி பூசையெல்லாம் செய்வான், வேணும்ன்னா மாசாமாசம் பௌர்ணமிக்கு வந்து, பொங்கல் வச்சு பூசை செய்வான்” என்று வாய் தவறிச் சொன்னதை அழித்து விடுபவள் போலச் சொல்வாள். அப்படிக் கிண்டலும் கேலியுமாய்ப் பேசிப் பேசி வலதி கர்ப்பமும் தரித்தாள்.
******
அன்றைக்குத் திருக்கார்த்தியல். சூரியன் மழைக்கு முந்திய முறுகலுடன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. காய்ந்து கொண்டிருக்கும் அந்த அகல் விளக்குகளை இனிமேல் சூளையில் வைத்துப் பிரயோசனமில்லை. இன்றைக்குச் சாயந்திரம் டவுண் பெரிய கோயிலில் கார்த்தியல் சொக்கப்பனை. அரைப்பனை உயரத்துக்குப் பெருசா செய்து வைத்து கொளுத்துவார்கள். அன்றைக்கு மார்க்கெட் பஜார், பொரி மூட்டையும், வெல்லச் சிப்பங்களும் பூமாலைகளுமாகக் களை கட்டியிருக்கும். அது பொங்கலோ, தீபாவளியோ, கார்த்தியலோ விசேஷம் நெருங்க நெருங்கத்தான் மக்கள் கையில் காசு சேரும், கடைகளில் கூட்டமும் அள்ளும். பஜாரே நெறிபறியாகக் கிடக்கும். அதற்கு ஊடாக இடம் பார்த்துக் கடை விரித்து, வியாபாரம் செய்ய இரண்டு பெட்டி கிளியாஞ்சட்டிகளை எடுத்துக் கொண்டு ராசு வேளாரும் மகள் அஞ்சலையும் போய் விட்டார்கள். கார்த்தியல் கழிந்து விட்டால் இந்த விளக்குகளைச் சீந்துவார் யார்?
இனிமேல் விளக்குகள் அப்படியொன்றும் விற்காது. வெயில் முறுகல் திடீரென்று குறைந்து மழைக்கு வேறு இருட்டிக் கொண்டு வருகிறது. கார்த்திகை மாசத்து மழை வந்தாலும் வரும், வராமலேயே “விளக்கிட்டோ மழை கிழக்கிட்டோன்னு’’ கிழக்கு நோக்கி போனாலும் போய் விடும். ‘இன்னும் சூளையில் வைத்து வேகாத நன்றாக உலர்ந்திருந்த இந்த விளக்குகளைச், ‘செய்யப் பட்ட பாடு என்ன.. மண்ணு மிதிக்கறதுக்கு அஞ்சலை செஞ்ச அலப்பரை என்ன.. அது எல்லாம் மழையில் கரைஞ்சு போவானேன்’ என்று எடுத்து குடிசைக்குள் வைக்க முயன்றாள் வலதி.
குனிய முடியாமல் வயிறு கஷ்டப்படுத்தியது. வயிற்றுக்குள் உருண்டு கொண்டு வரும் ஜீவனைப் பார்த்தால் ஆம்பிளை மாதிரித்தான் தெரிகிறது. ரொம்ப சேட்டைக்காரனா வருவான் என்று சமீபமாக வரும் நினைப்பு இப்பொழுதும் வந்தது. அந்த நினைப்பு ஒரு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூடவே ரொம்பச் சேட்டைக்காரனா வந்து விட்டால் தன்னாலோ வேளாராலோ கண்டிச்சு வளர்க்க முடியுமா தெரியவில்லை. அவளுக்காவது கட்டுப்படுபவனாக இருக்கலாம். வேளாரின் எல்லாருக்கும் அடங்கிப் போகிற குணத்திற்கு அவரையே `உண்டுக்கிட்டு வாய்யா’ என்று சொல்கிறவனாக இருந்து விட்டால் சங்கடம் என்றும் நினைத்துக் கொள்வாள்.
பிள்ளத்தாய்ச்சியாய் இருந்திராவிட்டால் அவளும் ஒரு கூடை கிளியாஞ்சட்டிகளை எடுத்துக் கொண்டு நாலு தெருக்காடுகளுக்குப் போய், காசுக்கு விற்காவிட்டாலும் மாகாணிப்படியோ அரை மாகாணிப்படியோ கொஞ்சம் கொஞ்சமாய் எண்ணெய்க்கு விற்று அரைப்படி ஒரு படி, சமயத்தில் ரெண்டு பக்கா நல்லெண்ணெய் கூடத் தேற்றியிருப்பாள். ஆனால், இந்தப் பயல் அதற்கு வழி வைக்கவில்லை இந்த வருடம்.
ஆண்பிள்ளை வேண்டுமென்று வலதி ஏங்காத நாள் கிடையாது. வேளார் கூட, ‘ஆணுன்னா என்ன பெண்ணுன்னா என்ன வயித்துப் பாரம் கழிஞ்சா சரிதான்’ என்று சொல்லுவார். அதற்கு வலதி, “ஆமா, நீங்கதான் அநேகத்தைக் கண்டுட்டிய, வயிறும் பாரமும், புள்ளைப் பேறும் எனக்குத்தானே, உங்களுக்கு என்ன இந்தக் கை வண்டிய இழுத்துக்கிட்டுப் போய் குளத்துல இருந்து மண்ணைச் சுமக்கிற பாரமும், சட்டி பானைகளை சந்தைக்கு வண்டியில ஏத்திச் சுமக்கிற பாரமும்தானே?”.
“எம்மா அதுவும் பாரம்தானே,” என்று சொல்ல நினைத்தாலும் அடக்கிக் கொள்வார் வேளார். அவர் சுபாவம் அப்படி. அப்படியே பதிலுக்குப் பேசணும் என்கிற அளவுக்குக் கோபம் வந்தால், ஏதாவது யானை குதிரை என்று சிறிதாகச் சிலை செய்ய உட்கார்ந்து விடுவார். அதெல்லாம் சூளைக்குப் பாரமாய் வெந்து ஓரமாக உட்கார்ந்திருக்கும். யாராவது அபூர்வமாக வந்து, ‘கோயிலுக்கு அய்யனார் குதிரை செஞ்சு வைக்கறேன்னு யானை செஞ்சு வைக்கறேன்னு நேர்த்திக்கடன் இருக்கு’ என்று கேட்டால். ரெண்டு நாள் தவணை கேட்டு வர்ணம் தீட்டிக் கொடுப்பார். அவசரமென்றால் அப்படியே சாம்பிராணி தூபம் காட்டியோ, ஒரு பத்தி கொளுத்தித் தீவாரணை காட்டியோ கொடுத்து விடுவார்.
அவர் சின்னப் பையனாக இருக்கையிலேயே அவரது அப்பாவுடன் பெரிய பெரிய அய்யனார் சிலைகளைச் சுடுமண் சிற்பமாகவே நிறைய கோயில்களுக்குச் செய்திருக்கிறார். அப்பாவுடன் ‘ஒடப்பிறந்தவர்கள்’ எல்லாம் அப்போது கூட இருந்து அவ்வளவு ஒத்துமையாய் தொழில் செய்தார்கள். அது தொழில் மட்டும் என்றில்லை அதில் பக்தியும் மரியாதையும் ஈடுபாடும் இருந்தது. இப்போது சுடுமண் சிலை செய்யத் தோதுவாய் கையாள் யாரும் இல்லை. வேலை தெரிந்த எல்லாரும் சுதை வேலைகளுக்குப் போய் விட்டார்கள். இப்போது அதற்குத்தான் கிராக்கி. அது சுடுமண் சிலையை விடப் பல காலம் நிலைத்தும் இருக்கும்.
சித்திர புத்திர நயினார் நோன்பு அன்றுதான் வலதிக்கு வலி கண்டது. அன்றைக்கு அய்யனார் கோயிலில் பூசைகள் தடபுடலாக நடக்கும்.பாம்பாலம்மன் பீடத்திற்குப் பூசை முறைக்கு ராசு வேளார் போக வேண்டும். ஆனால், அங்கே போயிருக்கும் போது பிள்ளை பிறந்து விட்டால் சூதகத் தீட்டு ஆகி விடக் கூடாதெயென்று மற்ற பீடங்களுக்குப் பூசை செய்பவரையே பாம்பாலம்மனுக்கும் செய்யச் சொல்லி விட்டார். ஆனால், மனசு அங்கும் இங்குமாக அலை பாய்ந்தது. எதிர் பார்த்த மாதிரியே நிலா உதிக்கவும் பையன் பொறந்துட்டான். அதனால சித்திர புத்திரன் என்று பேர் வைக்கணும் என்று வலதிக்கு ஆசை. அய்யனாரப்பன்னு பேர் வைக்கணும்ன் என்று ராசு வேளாருக்கு ஆசை. ரெண்டும் ஒண்ணுதானேன்னு அஞ்சலை பிரச்னையை முடித்து சித்திர புத்திரன் என்றே பெயர் வைத்தார் ராசு. ஆனால், அஞ்சலை அவனை சித்திரை என்று செல்லமாக அழைத்த பெயரே நிலைத்து விட்டது. அன்றோடு பாம்பாலம்மனுக்கு பூசை செய்வதும் ஏனோ விட்டுப் போனது. ‘அஞ்சு தலை நாகம் குடையேந்த அந்த அம்மனும்தான் அவ்வளவு அழகா இருக்கும். நாக தோஷம் உள்ளவங்க அதுக்குப் பூசை செஞ்சு விசேஷமாக் கும்பிடுவாங்க.’ என்று நினைத்துக் கொள்வார்.
பதினாறு விசேஷம் கழிஞ்ச கையோட செங்கல்திட்டுக்குப் போய் பிரமாதமாக மூணு அடுப்பு பொங்கல் வைத்து, ரெண்டு வகைக் கறி வைத்துப் பெரிய படையலே போட்டாள் வலதி. அவள் பயந்தது போல சித்திரை சேட்டைக்காரனாக வளரவில்லை. ஆனால், பள்ளிக்கூடம் போகாமல் அப்பாவுடனேயே குளத்துக்குப் போகவும், சூளை போடவும் தென்னங்கூந்தல் சுமக்கவுமாகக் கழித்தான். பள்ளிக்கூடமும் போவான்.. வாரத்தில் மூன்று நாள் போவான். பள்ளிக்கூடத்தில் இருந்து கொண்டே ரோட்டைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஏதாவது தெரிந்த வண்டி போனால் அது எங்கே போகிறதென்று ஓடிப் போய் விசாரித்து வருவான். குளத்துக்கு மண் எடுக்கப் போகிறோம் என்றால் நானும் வருகிறேன் என்று போய் விடுவான். வாத்தியார் கேட்டால், ‘எங்க அப்பா கூப்பிட்டாக, போனேன்’ என்பான். அப்பா, `நான் கூப்பிடவில்லை’ என்று என்னைக்கு மறுத்துச் சொல்ல? ஏதாவது வண்டி அய்யனார் கோயிலுக்குப் போகிறது என்றால் அட்டியே கிடையாது. கொண்டாட்டமாய்த் தொற்றி ஏறிக் கொள்வான்.
அஞ்சலைதான் அவன் அடிக்கடிக் கோயிலுக்குப் போவதைக் கண்டு அம்மாவிடம் சொன்னாள். அப்போதுதான் வலதிக்கு சட்டென்று உரைத்தது. வேளாரிடம் மெதுவாக, “ சித்திரை பையன் பொறந்ததுக்கு கோயிலுக்கு `முருவம்’ செஞ்சு வைக்கிறேன்னு சொன்னேரே.. அதைக் காலாகாலத்துல செய்யுமே,” என்று சொன்னாள். வேளாரும், ‘சரி’ என்றார். ஆனால், ஏனோ நேரமே வாய்க்கவில்லை. அதற்கு ஏற்றாற் போல வேளாருக்கு செங்கல்திட்டு அய்யனார் கோயிலில், வேட்டைக்குப் போகிற அய்யனார் மாதிரி பெரிய சிலையொன்று செய்யச் சொல்லி வேலை ஒன்று வந்தது. சுதை வேலையாகச் செய்யச் சொன்னார்கள். அது ஒன்றும் பெரிய காரியமில்லை ஒத்தாசைக்கு ஆட்கள் கொஞ்சம் தேவை. அஞ்சலையைக் கட்டிக் கொடுத்த இடத்திலிருந்து சிலர் மூலம் விசாரித்து அவள் இரண்டு ஆட்களை அழைத்து வந்தாள். மூன்றாவதாகச் சித்திரை சேர்ந்து கொண்டான். அதில் வலதிக்கு அவ்வளவாய் பிடித்தம் இல்லை என்றாலும் ராசு வேளாருக்குப் பெரிய மகிழ்ச்சி.
கொஞ்ச நாட்களாகவே ஊரில் செழிப்பு காணப்படவில்லை.பயிர் பச்சை அழிவு, நோய் நொடி. கோயிலுக்கு வருகிறவர்களும் குறைந்து கோயிலைச் சுற்றிக் காடு மண்ட ஆரம்பித்திருந்தது. கோயில் பக்கத்தில் உள்ள அருமையான பரந்து விரிந்த சுனை நீரின் மேலும் குவளை மூடிக் கிடந்தது. அதன் தண்ணீர் அப்படி ஒரு இனிப்புடன் இருக்கும். ஊரின் நிலையை எண்ணி, ஊர்ப்பெரியவர்கள் அவசரமாகக் கூடி ஒரு சேவல் தீர்த்து வைத்து, அய்யனார் பீடத்தின் முன் சிறியதாய் ஒரு பூசை போட்டு அருள் வாக்கு கேட்டார்கள். வழிபாடு குறைந்ததுதான் காரணம் என்று வாக்கு வந்தது. வழிபட வருகிறவர்களை இழுப்பதற்கு அய்யனார் வேட்டைக்குப் போவது போல பெரியதாகச் சிலை ஒன்று செய்து வைத்து திருப்பணி வேலைகளும் செய்து பெரிதாய் ஊர் சாட்டி வரி பிரித்துக் கொடை விழா வைக்கலாம் என்று முடிவானது.
ஏற்கெனவே கொஞ்சம் வருமானம் உள்ள கோயில்தான். அதனால் உடனடியாக வேலைகளை ஆரம்பிக்கச் சொன்னார்கள். ராசு வேளாரும் முதலில் திட்டுக்களாகக் கிடந்த செங்கல்களை பிரயோசனப்படுத்த முடிவு செய்து அதன் மீது படர்ந்திருக்கும் செடிகொடிகளை அகற்றி எடுத்துத் தரம் பிரிக்கச் சொன்னார். அதிலேயே அவரை ஊர்க்காரர்களுக்குப் மீண்டும் பிடித்துப் போயிற்று. 27 அடி உயரம் நிர்ணயித்துக் கொண்டு புதிதாக வந்தவர்களின் யோசனைப்படி கம்பிகளை வளைத்து அதில் செங்கல்களை ஒட்டி சிலையைச் செய்ய ஆரம்பித்தார். கால் தூக்கியபடி நிற்கும் குதிரையின் குளம்புகளை ஒற்றைப் பூதந்தாங்கி இரண்டு கைகளிலும் தாங்கிக் கொண்டு நிற்பது போல அமைத்தார். பூதம் தாங்கியின் உயரத்தை மனசுக்குள் சித்திரையின் உயரம் எனக் கற்பித்துக் கொண்டார். அதற்கு ஒரு பீடம் அமைத்தால் உயரம் சரியாக இருக்குமென்று பீடம் அமைத்துக் கொண்டார்.
பூதம் தாங்கியாக சித்திரையை நினைத்ததும், அவனுக்காக உருவம் செய்து வைக்க வேண்டும் என்பதுவும் நினைப்புக்கு வந்தது. மனம் நினைத்ததுதானே கையிலும் வரும். பூதம் தாங்கியின் கொடுவாய் மீசையைக் கழித்து விட்டால் அது சித்திரை போலவேதான் இருக்கும். பூதம் தாங்கியின் இடுப்பைச் சுற்றி சங்கிலி பூதத்தாருக்கு இருப்பது போலவே ஒரு நாகப்பாம்பு தன்னைத்தானே முடிந்து கொண்டு இருப்பது போல வைத்தார். சிற்பம் மளமளவென்று உயர்ந்து வந்தது. வேலை ஒப்புக் கொண்ட நாள் தொடங்கியே விரதமாய் இருக்க ஆரம்பித்து விட்டார். ஆரம்பித்த பின் வீட்டுக்கே போகவில்லை.
பாதி நாட்களில் சித்திரையும் கூடவே தங்குவேன் என்று பிடிவாதம் பிடித்தான். ‘எனக்கு மட்டும் விரதம் கிடையாதா, நானும் வீட்டுக்குப் போகக் கூடாது’ என்று வாதிட்டான். ‘நீ சிறு பையன். உனக்கு இந்த விரதமெல்லாம் கிடையாது’ என்று சொன்னதும் சில நாட்கள் வீட்டுக்குப் போனான். மற்ற நாட்களில், சிலையைச் சுற்றி நல்ல தென்னங்கிடுகளைக் கொண்டு முப்பது அடி உயரத்திற்கும் மறைத்திருந்ததற்குள் போய் தூங்குபவன் போல நடித்து விடுவான்.
அப்பா தூங்கினதும் உயரமாய்த் தொங்கவிடப்பட்ட லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் கண் திறக்காத அய்யனார் கம்பீரமாய் நிற்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பான். பூதந்தாங்கியின் இடுப்பைச் சுற்றியிருக்கும் பாம்புதான் அவனுக்குச் சற்று பயமாக இருந்தது. அவ்வளவு தத்ரூபமான முடிச்சு. யாரோ உடன் வேலை பார்க்கும் சித்தப்பா, ராசு வேளாரிடம் கேட்டதற்குக் கூட, `வடக்கேயெல்லாம் விநாயகர் வயிற்றைச் சுற்றியே நாகம் இருக்கிறது, நம்ம ஊர்லயும் சங்கிலி பூதத்தாருக்கு உண்டுமே,’ என்றார் ராசு வேளார்.
குதிரை மேல் கம்பீரமாய் சாட்டையுடன் வீற்றிருக்கும் அய்யனாருக்கும், அவர் குதிரையின் காலடிகளைத் தாங்கும் பூதந்தாங்கிக்கும் கண் திறக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்தார் ராசு வேளார். பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துத் தயாராகி, சித்திரையையும் குளித்துத் தயாராகு என்று சொல்லிவிட்டு, நவதானியங்கள் பரப்பி மத்தியில் கலசம் வைத்துப் பூசை செய்து சிலையில் அய்யனாரப்பனை வந்து குடியேறுமாறு மனமுருக வேண்டிக் கொண்டார். கண் திறந்ததும் அய்யனார் தன் முகத்தையே முதலில் பார்க்கப் பெரிய கண்ணாடி ஏற்பாடு செய்து வைத்திருந்தார். மறைப்புக்கு வெளியே அய்யனார் பார்க்க, பசுமாடு, வாழ்வரசிப் பெண்கள், கன்னிப்பெண்கள், கரும்பு, நெல்லுக்கதிர், பழவகைகள், தர்மகர்த்தா முன் நிற்க பின்னால் ஊர்ப்பெரியவர்கள் சிலர் மட்டும் என எல்லாமும் எல்லோரும் தயார் நிலையில் இருக்கக் கண்களைப் பய பக்தியோடு எழுத ஆரம்பித்தார் ராசு வேளார். முதலில் பூதந்தாங்கிக்கும் அப்புறமாக அய்யனாருக்கும் கண்கள் திறந்தார்.
வெளியே வாழ்வரசிகள் மத்தியில் வலதியும் குளித்து முழுகித் தலையில் கொள்ளைப்பூவும் நெற்றியில் திருநீறும் குங்குமமாக நின்றாள். கண் திறக்கும் முன்னும், திறந்த பின்னும் வேளாரே தூப தீபங்களை எல்லாம் காட்டினார். கற்பூரத்தை ஏற்றிக் கொண்டு, கண்ணாடி காண்பித்து, பெரிய மணியை ஒலித்து மறைப்பை நீக்கியதும் அய்யனார் முதலில் பார்க்க வேண்டியவைகளை எல்லாம் பார்த்தார். குழுமியிருந்த அனைவரும் பயபக்தியுடன் ஓங்காரமாய்க் குலவையிட்டு அய்யனாரைப் பார்த்தார்கள். வலதிக்குக் குலவை தொண்டைக்குள்ளேயே அமிழ்ந்து போக கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ‘என்னமா செஞ்சிருக்காரு நம்ம வேளார்’ என்று பெருமிதம், அதை மீறி பக்தி. கண்ணீரைத் துடைக்காமலே கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
அய்யனார் அழகைப் பார்த்துக் கண்கள் கீழே இறங்கி வருகையில், பார்வை தூக்கிய கால்களுடன் அய்யனாரப்பனின் வெள்ளைக் குதிரையைத் தரிசித்து, அதன் கருப்புக் குளம்புகளைக் கைகளை உயர்த்தி தாங்கிக் கொண்டிருக்கும் பூதந்தாங்கியில் நிலைத்தது. அதன் கொடு வாய் மீசைக்குள் அழகாகச் சித்திரையே நிற்பதாக ஒரு நிமிடத்தில் பிடிபட்டு விட்டது வலதிக்கு. `ஆஹா, அய்யனாரே தன் கூட சித்திரை இருக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டார் போல,’ என்று தோன்றியது. அந்த நினைவு வந்ததும்தான் எங்கே சித்திரையை மட்டும் காணோம் என்று தேடினாள். எல்லோரும் கூட்டமாக வேளாரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். பட்டுக்கரை வைத்து நெய்த சோமனும், வல்லாட்டும், மாலையுமாக அவருக்குப் போர்த்தி பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழங்களுடன் பேசிய தொகைக்கு அதிகமாகப் பணமும் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வெட்கமும் பணிவுமாக அதை வாங்கியபடி, தலையை வணங்கி எல்லாரையும் கும்பிட்டுக் கொண்டிருந்தார். தாம்பாளத்தை வாங்கிக் கொள்ள வலதியைக் கண்சாடை காட்டி அருகே அழைத்தார்.
வலதி மெதுவாக அருகே போய், தாம்பாளத்தை வாங்கிக் கொண்டே, “ஏங்க வேளாரே, சித்திரையை எங்கே,’’ என்று கேட்டாள். “ஆமா, குளிச்சிட்டு வான்னு சொன்னேன், இன்னுமா வரலை?,” என்றார் வேளார். அவருடன் வேலை பார்த்தவர்களிடம், “எப்பா தம்பிகளா, எம் மகன் சித்திரையப் பார்த்தீங்களா, குளிச்சிட்டு வரச் சொன்னேன், சுனைக்குப் போயிட்டானா பாருங்கப்பா,” என்றார். அவர் வயிற்றுக்குள் ஏதோ பெரிய மேகம் போலப் பயம் திரண்டது. “இங்கேயே கோயில் கிணத்தில் குளின்னு சொன்னா கேக்க மாட்டான், கொஞ்சம் பாருங்கப்பா,” என்றார்.
வலதிக்கு என்னவோ போலிருந்தது. தாம்பாளத்தை அய்யனார் சிலை முன்னால் வைத்து விட்டு, பூதந்தாங்கியின் காலடியில் கண்கள் சொருக உட்கார்ந்தாள். யாரோ, “ஆமா, சுனை கிட்டத்தான் இடுப்புத் துண்டு ஈரம் காயாமக் கிடக்கான், வாயில் நுரையா இருக்கு, வயித்துப் பக்கம் கடித்தடம் மாதிரித் தெரியுது.” என்பது கிணற்றுக்குளிருந்து கேட்பது போலக் கேட்டது. வலதியின் கண்கள் பூதந்தாங்கியின் முகத்தில் நிலைத்து உறைந்தது. சொருகும் கண்களில் அதன் வயிற்றில் முடிச்சிட்டிருந்த நாகம் மூச்சு விட முடியாமல் நெளிவது போலவும் தெரிந்தது.
*******