1
பென்சில் மர்மம்
பென்சில்
கரைவது வரை
நீ வரைந்திருக்கிறாயா
நான்தான் எழுதியிருக்கிறேனா
பாதி
அல்லது கால்வாசி
வரைதான்
பென்சிலைப் பார்த்த ஞாபகம்
அதன் பின்
அவை
எங்கே போகின்றன
என்ன
ஆகின்றன
பெரும்
மர்மம்
வெறும்
கறுப்பு மொட்டாகி
தானாகக்
கரைந்துகொண்டே வந்து
ஒரு புள்ளியென
ஒளிர்ந்து
மறைகின்றன.
2
காலம் கையில்
ஓர் அம்பைத் தந்தது
சீவிச் சீவிச் சீவிக்
கூர்மையாக்கினேன்
கூரேறியேறி
கரைந்ததது.
3
காலை விழித்து
நேரம் பார்த்து
தாமதத்தை
நொந்தேன்
சேவல் உடனே
கூவிச் சொன்னது
இதோ
இப்போதுதான் விடிகிறது
வெயிலைக்
குறைத்துக்கொண்டு
சூரியனும் சொன்னது
இப்போதுதான்
இப்போதுதான்
ஹாயாக
ஒரு சுற்று சுற்றி
நடனத்துடன்
எழுந்தது பென்சில்.
4
சில காட்சிகளில்
சில பகுதிகளை மட்டும்
எடுத்துவிடலாம்
காற்றை
உருவிவிட்டால்
காகமும் மரமும்
பேசிவிடும்
நீர்
இல்லையெனில்
படகு சூரியனிடம்
போய்விடும்
முலை
அற்ற பெண்ணை
படையினர்
கொல்ல மட்டும் செய்வர்
சில காட்சிகளில்
சில பகுதிகளை மட்டும்
அகற்றிவிட்டால்
தேர்ந்த படத்தொகுப்பாளனை
கடவுள்
பணிக்கு அமர்த்திக்கொள்ளட்டும்
ஒரு நல்ல படம் பார்த்த
திருப்தி கிட்டும்.
5
நாளை
என் குழந்தை பிறந்துவிடும்
சொர்க்கத்தின் மணத்தோடு
பிறந்து வரும்
ஒரு சின்னூண்டு புள்ளியாய்
ஒரு பொட்டுத்
தங்கக் கம்மல் திருக்காய்
ஒரேயொரு குட்டிப் புள்ளியை
என் வாசலில்
வைத்துவிடுவார்
கடவுள்
அழகான கோலம்
உருவாகும் நாளும்
ஒரு துளி
தருவார்
ஓயாத
குளிரோடு
ஒரு அனல்
ஒளிரும்
தீராத
கதகதப்போடு
பதார்த்தம் ஒன்றை
ஒன்றே ஒன்றெனத் தருவார்
அட்சய[ பாத்திரத்தில் வைத்து.
6
(அ)
எண்ணிக்கொண்டே
படியில் ஏறும்போது
படியில் ஏறுவது
கஷ்டமாகத் தெரிகிறது
பாடிக்கொண்டே
படியில் ஏறும்போது
படியில் ஏறுவது
கொஞ்சம் இலகுவாகிறது
நடந்துகொண்டே
மறதியாய் –
படியில் ஏறுவதே
தெரியாமல்
ஏறிவிட்டபோது
தெரிகிறது
படியே தெரியாதது.
(ஆ)
ஏன் எனது நாள்
இப்படியே போகிறது
விடிகிறது கழிகிறது
விடிகிறது கழிகிறது
டிக் டிக் கடிகாரமே
ஏன் உன் முட்கள்
இப்படியே நகர்கின்றன
ஒருநாள் கேட்டேன்
டிக் டிக் தாளத்தை
அசையும் ராகத்தை
கண்டேன்
விடியல் ஒளியை
கடக்கும் இசையை
கவிதையை.
******
கொஞ்சம் நல்லா எழுது தம்பி.. மூத்தோர் புகழ்வதில் ஏமாந்து விடாதே..