1. புகைப்படமும் பிம்பமும்
பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்
புகைப்படத்தை
ஓளியில் பூட்டினேன்
வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில்
படமும் பிம்பமும் நிஜமல்ல
நிழலும் அல்ல
இரண்டும் நானுமல்ல
படத்தில் சிரித்ததில்லை
எப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களை
அடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டு
பயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டு
போலிப் புன்னகையைப் பூசியபடி
ஆனால்
பிம்பத்தில் தெரிவதோ மகிழ்ச்சி பூத்த ராணி
அப்போது
கைகளில் நாடக பாவனை
சுழன்று தெறிக்கும் நொடிநேர நடனங்கள்
ஆழச் சிரிக்கும் அபிநயனங்கள்
படத்தில் எப்போதும் ஏதோ ஒன்று குறையும்
முகப்பூச்சோ துப்பட்டாவோ
பிம்பத்திடம் குறை கண்டதில்லை
பிம்பத்தைப் பார்த்து எப்போதும் மயங்குவேன்
படத்தைப் பார்த்து பிறர் அன்புறுவர்
படத்துக்கும் பிம்பத்துக்கும்
ஓரே ஒரு வித்தியாசம்
பிம்பத்தில்
முன் நெற்றியில் தவழ்ந்து சிரிக்கும் வெள்ளிகளுக்கு
இருள் பூசி அழகூட்ட மட்டும் முடிவதில்லை.
(சுகுமாரனுக்கு…)
*******
2. ஆடி பிம்பம்
அ. ஆண் கண்ணாடி
உன் சுகந்த குளியல் வெம்மை
முழுதாய் மறைத்துவிட்டது
என் கண்ணாடியின் கண்களை
அதன் உலகம் இருண்டது
என்னைக் காணா முடியாது பித்துப் பிடிக்குமே என்று அரண்டது
பின்னர் குளிக்க வந்த நான்
என்னை அதில் காண முடியாது தவித்தேன்
நீர் திரையைக் கை கொண்டு விலக்கினேன்
அது ஒரு ராஜ குமாரனின் முகம் போலானது
அந்தப் பேரழகன் முகத்துள்
பொதிந்திருந்த அழகியை உற்றுப் பார்த்தான்
நான் நாணத் தொடங்கினேன்
“ஆகா பேரழகே” என்று வாய் பிளந்தான்
திடுக்கிட்டு கைகளால் என்னைப் போர்த்திக் கொண்டேன்
நான் வரைந்தபோது
அவன் வாயை இறுக மூடித்தானே இருந்தது
நீராலான ஓவியம்
தன்னைத் தானே மீண்டும் வரையுமோ?
“உனக்காக நான் என் ராஜ்ஜியத்தைத் தருகிறேன்”
தன் கிரீடத்தைக் கழற்றி நீட்டினான்
நான் பயந்து போய்
விரைந்து உடல் துவட்டி உடுத்தி
அங்கிருந்து வெளியேறினேன்
மறந்தும் கண்ணாடியை மறுபடி பார்க்கவில்லை.
ஆ. பெண் கண்ணாடி
உன் சுகந்தக் குளியலின் ஆடையின்மை கண்டு
என் கண்ணாடி நாணி
நீராடை போர்த்தி
தன் கண்ணை மறைத்துக் கொண்டது.
பின்னர் குளிக்க வந்த நான்
என்னை அதில் காண முடியாது தவித்தேன்
நீர்த்திரையை கை கொண்டு விலக்கினேன்
அது கண்ணாடி முகம் போலானது
அதில் பூரண வெட்கம் பொலிந்து கொண்டிருந்தது
“என்னில் வரையாதே”
அது கெஞ்சிக் கொஞ்சியது
தன் கை கொண்டு என்னை மறைத்தது
“ஓ கண்ணாடியே என் முன் என்ன வெட்கம்?”
மறுபடி நாணம் பூத்த ஆடிமுகம் சொன்னது
“ஆணழகன் ஒருவனைக் கண்டேன்
நான் பெண்ணாய்த் திறந்து கொண்டேன்
இனி பெண் நிர்வாணத்தைக் காணப் பொறுமையில்லை”
கோபம் கொண்டு விரைந்து துவட்டி உடுத்தி
குளியலறைக் கதவை அறைந்து மூடினேன்.
*********
3. எனது கருப்பும் வெள்ளையும்
மார்கழி மாதம்
விடுமுறைக்கு வேறு ஊர் போவது
நீண்ட தூக்கத்திற்குப் பின்னர்
சோம்பலாக எழுவது
மிதமான சுடுதண்ணீரில்
குளிப்பது போலொரு
சுகானுபவம் வெறெதுவும் உண்டா?
குளிப்பதற்கும் சற்று நேரத்துக்கு
முன்
துவைத்தலசித் தொங்க விட்டிருந்த
எனது ஆடைகளிலிருந்து சொட்டிய நீரை
சேகரித்த நெகிழி வாளி
நித்திய தாளகதியில்
இசைத்தது ஒரு ராகத்தை
குளித்து முடித்த பின்னர்
குழாய் மீட்டியது
வீணையின் நாதத்தை
அல்லது
விசிலடித்தது என்று சொல்லலாம்
பின்னால் திரும்பிய இடத்தில்
ஆளயுரக் கண்ணாடி
அய்யோ, எனது கருமையையும் வெண்மையையும்
இத்தனை நேரம் இந்த இசை இங்கிதமே இல்லாமல்
பார்த்துக் கொண்டிருந்ததேயெனத்
திடுக்கிட்டுப் போனேன்.
********