நீளமான பாம்பின்
உடல் வளைவுகளைப் போல்
இருந்ததந்த கண்காட்சி அரங்கு
பாம்பின் தோல் செதில்களாகப் பளபளத்து மின்னிக் கொண்டிருந்தன
அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்
ஒவ்வொரு செதிலாய்ப் பிரித்தெடுத்துச் செல்பவர்களைப் பற்றிக் கவலையின்றி
தின்ற அயற்சியில்
புரண்டு கொண்டிருந்த பாம்பு
கண்காட்சி முடிந்ததும்
தன் தோலுறித்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடும்
உள்ளே வந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அதன் தலை
எப்போதும் போல் சுருண்ட உடலுக்கடியில்
இல்லாத தலையாகவே இருக்கட்டும்.
****
கண்காட்சியின் வாசலில் நின்றபடி தன் தோழனுடன் மொபைலில் பேசிக்கொண்டே
முன்னேறுவதும் பின் நகர்வதுமாக
நடந்து கொண்டிருந்தாள்
கல்லூரியை, ‘கட்’ அடித்துவிட்டு வந்திருந்த இளநங்கை
இன்னும் எவ்வளவு நேரம்தான்
இப்படியே செய்து கொண்டிருப்பாய் என்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு பார்த்தபடியிருந்தது கண்காட்சி வாயில்.
****
குழந்தைகளுக்கான புத்தகங்களை எப்போதும் போல பெற்றோரே
வாங்கிக் கொண்டிருந்தனர்
பெரியவர்களுக்கான புத்தகங்களை இன்னும் வாங்க முடியாத குழந்தைகளுக்காக
ஒரு ஸ்டால் கூட இல்லை.
****
கண்காட்சிக்கு வந்தவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அலங்காரக் கழிவறையினுள்ளிருந்து வெளியேறிய வயசாளியிடமிருந்துதான்
வளர்ந்து கிளைவிட்டு நிற்கிறது
சகிப்புத்தன்மை.
****
ஆண்டாண்டு காலமாக நடக்கும் கண்காட்சிக்கு வந்து போகும் நம் கால்களை
எப்படியாவது அடையாளம் கண்டுவிடுகின்றன
ஒவ்வொரு ஆண்டும் வாங்க வேண்டுமென நினைத்து
வாங்காமல் விட்ட புத்தகங்கள்
இந்த முறை அவற்றை நோக்கிச்
சென்றபோது
ஏனோ, அவை முன்னிருந்த புத்தகங்களின் பின்னால்
ஒடுங்கிக் கொண்டன
நான் எழுத்தாளரானதைத் தெரிந்து கொண்டனவோ?
****
“இன்னொரு நாள் வந்து
இன்னும் கொஞ்சம் புத்தகங்களை வாங்கி விட வேண்டும்” என்று சொன்ன கணவனிடம் மனைவியும்,
“அப்பா கொஞ்சம் மெதுவா நடங்கப்பா, புத்தகங்களைப் பார்த்துக்கிட்டே போக முடியல” என்று சொன்ன மகளிடம் அப்பாவும்,
“இந்த மாசம் பட்ஜெட்ல கொஞ்சம் துண்டு விழும்! ஆனா பாத்துக்கலாம்?” என்று சொன்ன மனைவியிடம் கணவனும்,
“ஏங்க இந்தப் பதிப்பக ஸ்டால் எங்க இருக்கு?” என்று கேட்ட ஆயிரமாவது நபரிடமும் பொறுமையாகப் பதிலளித்த கடைக்காரரும்,
“எப்போதாங்க என் புத்தகம் ரெடியாகும்?” என்று தொடர்ந்து ஃபோன் செய்தபடியிருந்த எழுத்தாளரிடம் பேசிவிட்டு
“பிரிண்ட் ரெடியாகிருச்சாங்க?” என்று பிரஸ்ஸிடிம் பேசி
“ஐந்து புக்காவது ரெடி பண்ணி கொடுங்க வந்து வாங்கிக்கிறேன்” என்று கெஞ்சி நேரங்காலம் பார்க்காமல் புத்தகம் வாங்க ஓடும் பதிப்பாளரும்
“அப்பா கால் வலிக்குதுப்பா?”,
“அம்மா பசிக்குதும்மா?” என்று பெற்றோரிடம் கொஞ்சி கெஞ்சும் குழந்தைகளையும்
இந்தக் கண்காட்சி
சுமந்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்
எப்போதும் போல
இப்போதும் கூட
கண்காட்சிக்குள்தான் புத்தகங்களுக்காக
எவ்வளவு, ‘பொறுமைகளை’
சேகரிக்க முடிகிறது!
வெளியேறியதும்
பார்க்கிற அத்தனைப் பேருக்கும்
அதிலிருந்து ஒவ்வொன்றைப் பகிர்ந்தளித்திட வேண்டும்.
********
குழந்தைகளுக்கான புத்தகங்களை எப்போதும் போல பெற்றோரே வாங்கிக் கொண்டிருந்தனர் பெரியவர்களுக்கான புத்தகங்களை இன்னும் வாங்க முடியாத குழந்தைகளுக்காக ஒரு ஸ்டால் கூட இல்லை//