கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்
கவிதைகள் | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/03/Picsart_22-03-09_16-40-36-334-780x405.jpg)
ஓர் அறிமுகம் (An Introduction)
அரசியல் தெரியாது எனக்கு.
என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்
பெயரெல்லாம் தெரியும்.
அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்
மாதங்களின் பெயரைப் போலவும்
தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.
நேருவிலிருந்து தொடங்குகிறேன்.
நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.
மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,
இரண்டில் எழுதவும், ஒன்றில் கனவு காணவும் தெரியும்.
ஆங்கிலத்தில் எழுதாதே என்றார்கள்.
அது உன் தாய்மொழியல்ல.
அப்படி என்ன அது?
என்னைத் தனியாய் விட்டால் சுகம்.
விமர்சகனே, நண்பர்களே, விருந்தாளிகளே,
உங்களைத்தான் சொல்கிறேன்.
எனக்குப் பிடித்த எந்த மொழியில் பேசினால் என்ன?
நான் எந்த மொழியில் உறவாடிப் பேசுகிறேனோ
அது என் சொந்தமாகிறது.
அதற்குத் திரிபுகள் இல்லை, இனமில்லை.
என் நெஞ்சில் பிறப்பது எனக்குரியது. எனக்கு மட்டும்.
அது அரைகுறை ஆங்கிலம்தான்,
நானுமே அரைகுறைதான்
ஆனால் அதிலிருக்கும்
உண்மையை நீங்கள் உணரவில்லையா?
மனிதனைத் தாங்கும் ஆன்மாவைப் போல
என் கவிதைகளைத் தாங்குவதும்
என் ஆன்மாதான்.
என் குதூகலத்தை
இசைப்பதைக் கேட்க முடியவில்லையா?
என் மீளாத் தேவைகளையும், என் ஆசைகளையும்
ராகமாக மீட்பதற்கு காக்கையாய் கத்தினாலும்
சிங்கமாய் கர்ஜித்தாலும்
உயிரும் உணர்வும் ஒன்றுதானல்லவா?
நான் குழந்தையாக இருந்தேன்,
கொஞ்சம் உயரமானதும்,
முழங்காலில் மூவிரண்டு
மயிர் துளிர்த்ததும்
என்னைப் பெரியவளென்று சொன்னார்கள்.
பருவத்தில் காதலைத் தவிர
நான் என்ன கேட்டுவிடப் போகிறேன்?
அவர்களோ பதினாறு வயது ஆணோடு
கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி
தனி அறைக்குள் தள்ளித் தாழிட்டார்கள்.
அவன் என்னைத் துன்புறுத்தவில்லை
ஆனால் என் பாவப்பெண் உடலோ
அடிபட்டு கங்கியதாய் வலித்தது.
என் மார்பும், கருப்பையும் கனத்து என்னை அழுத்தியது
பரிதாபமாய் சுருங்கிப் போனேன்.
பிறகு என் தம்பியின் கால்சட்டையைப் போட்டுக் கொண்டு
தலைமுடியை சிறிதாக வெட்டி
பெண்ணுக்குண்டான குணத்தை மறந்தேன்.
புடவை கட்டு, பெண்ணாயிரு, மனைவியாயிரு,
என்று போதித்தார்கள்.
சமைத்துப் பழகு, குடும்பப் பெண்ணாய் கச்சிதம் கொள்,
வேலைக்காரியோடு சண்டையிடு, பழகிக்கொள் என்றார்கள்.
என் சுயம், இவ்வகைகளுக்கெல்லாம் அழுதது.
கண்ணீர் விட்டுக் கூட உட்கார முடியாது,
சரிகைகள் மூடிய ஜன்னலினூடே
வேடிக்கை கூட பார்க்கக் கூடாது.
நான் கமலாவாக இருக்க எண்ணுகிறேன்.
அல்லது பாட்டிக்குச் செல்ல மாதவிக்குட்டியாக
இருப்பது கூட தேவலை.
காலத்தை நம்பி வீணாக நேரமில்லை,
எனக்கென்று ஒரு வாழ்வை நான் தேடிக் கொள்ள வேண்டும்.
கிடைக்காத அன்பிற்காகக் கத்தி அழுவது என்ன தலைவிதி?
ஒருவனைச் சந்தித்தேன், காதலித்தேன்.
அவனுக்கென்று பெயரோ அடையாளமோ
சொல்ல முடியவில்லை என்னால்.
பெண்களை விரும்பும்
எல்லா ஆண்களும்தான் அவன்
என்னைப் போலத்தான்,
அன்பை வேண்டி நிற்கும் எல்லாப் பெண்களைப் போலவும்.
அவனுக்குள் நதியின் பாயும் அவசரம்
எனக்குள் காத்திருக்க முடியாது
கடலின் தனிமை.
எல்லோரிடமும் நீங்கள் யாரென்று
நான் கேட்க,
நீதான் நான் என்ற பதிலே கிடைத்தது.
எனக்கு என்னால்தான்
அன்பு கொடுக்க முடியுமென்று புரிந்தது.
அவ்வாறே என் மயக்க இரவுகளும்
பெயர் தெரியாத ஊர்ப் பயணங்களும்
என்னிடம் நான் சிரித்ததும்
என்னை நானே காதலித்ததும் நிகழ்ந்தது.
சலித்துப் போனது அதுவும்,
என் கழுத்தில் நானே கத்தி வைத்திருக்கிறேன்.
நானொரு பாவி
நானொரு தூய துறவி
அன்று அன்பால் வாழ்ந்தவள்
இன்று அன்பென்றால் என்னவென்று அறியாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் மகிழ்ச்சியாய் இல்லை,
அதை யாரும் எனக்குக் கொடுக்கவும் முடியாது.
நான் வலியிலிருக்கிறேன்,
அதை யாரும் எனக்குக் கொடுக்கவுமில்லை.
என்னை நான்தான் பாடாய்ப் படுத்துகிறேன்!
****
பிறழ்வு (The Freak)
அவன் பேசினான், சூரியக் கறை படிந்த கன்னங்களால்,
இருள் ஒளிந்திருக்கும் குகைவாய் வாயில்தனில்
சொட்டித் தீராத நதியின் பளபளக்கும் பற்களால்.
அவனது கையொன்று எனது முழங்காலில்
முயங்கியிருக்க,
எங்கள் எண்ணங்களோ
அன்பைத் துரத்திப் பிடிக்கும்
பந்தயத்தில் ஓடாடிக் கொண்டிருந்தன;
என்னதான் உலாத்தி அலைந்திடினும்
குழிக்குள் வேகும் மாவு போல
தவிப்பு கிடக்க, ஆசையோ
ஆவி போல் காற்றிலாடி மறைகிறது…
வேகமெடுக்கும் இவனது விரல் நுணிகளைக்
கட்டவிழ்க்க மாட்டானா?
இருப்பை மறக்கும் சுகத்தினை
உடற்பசி ஆறத் தோல்கள் கலந்துறையுமா?
எங்களுக்கு உதவ யாருண்டு?
நெடுங்காலம் வாழ்ந்து
முறிந்த காதலை வாழ்வெங்கும் சுமப்பவர்
எவரேனும் உண்டா?
வெறுமையான இதயம் இங்கே
பொறுத்துப் பார்த்தது;
நிரப்ப யாருமின்றி, மிகுதி தின்று சுருண்டு போன
சர்ப்பத்தின் மெளனத்தை அல்லவா
தானாக நிரப்பிக் கொண்டது?
மனம் வெறி பிடிக்கிறது.
முகத்தைக் காட்டிக் கொடுக்கவிடாமல்
நேரத்தைப் பொறுத்துக் கொண்டு
சிரிப்பைச் சூட நினைக்கையில்
என்னை மிஞ்சி பகட்டாய் கவிகிறது
என் பெருங்காமம்.
******